சஹாபாக்களை கண்ணால் காணும் பாக்கியம் பெற்ற சிலரின் விபரம்

, , No Comments
1. ஸயீத் முஸய்யயு(ரழி) இவர்கள் உமர்(ரழி) அவர்களின் கிலாபத் ஆட்சியின்போது இரண்டாம் ஆண்டில் மதீனாவில் பிறந்து ஹிஜ்ரி 105ல் காலமானார்கள். இவர்கள் ஸஹாபா பெருமக்களில் உஸ்மான்(ரழி), அன்னை ஆயிஷா(ரழி), அபூஹுரைரா(ரழி), ஜைத்பின்ஸாபித்(ரழி) ஆகியோரிடமிருந்து ஹதீஸ் ஞானம் பெற்றிருக்கிறார்கள்.

2. உர்வாபின் ஜுபைர்(ரழி) இவர்கள் மதீனாவின் பேரறிஞர்களில் ஒருவராகத் திகழ்வதோடு அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் சகோதரியாம் அன்னை அஸ்மா(ரழி) அவர்களின் புதல்வருமாவார்கள். இதன் காரணமாகவே இவர்களின் பெரும்பாலான அறிவிப்புகள் இவர்களின் சிறிய தாயார் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் வாயிலாகவே காணப்படுகின்றது. இது மட்டுமின்றி அபூஹுரைரா(ரழி), ஜைத்பின்ஸாபித்(ரழி) ஆகியோரின் மாணவராக இருந்துள்ளார்கள். ஸாலிஹுபின் கைஸ்(ரழி), இமாம் ஜுஹ்ரி(ரழி) போன்றவர்களின் மாணாக்கர்களில் உள்ளவரேயாவார். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 94.

3. ஸாலிமுபின் அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) இவர்கள் மதீனா நகரின் சட்ட நிபுணர் எழுவரில் ஒருவராவர். குறிப்பாக அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்களிடத்திலும், பொதுவாக அநேக ஸஹாபாக்களிடத்திலும் ஹதீஸ் ஞானம் பெற்றுள்ளார்கள். நாஃபிவு(ரழி), ஜுஹரீ(ரழி) முதலிய பிரபலமான தாபியீன்களும் இவர்களின் மாணாக்கர்களாவர். இவர்கள் ஹிஜ்ரி 160ல் காலமானார்கள்.

4. நாஃபிவு மவ்லா அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) இவர்கள் அப்துல்லாஹ் உமர்(ரழி) அவர்களின் மாணவரும் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் ஆசிரியருமாவார்கள். இவர்களின் வாயிலாக மாலிக்(ரஹ்) அவர்களுக்கு கிடைத்துள்ள குறிப்பிட்டதோர் அறிவிப்புத் தொடருக்கு ஹதீஸ்கலா வல்லுநர்களிடையே "தங்கச் சங்கிலித் தொடர்" என்று பெருமிதமாகப் பேசிக்கொள்ளும் பழக்கமிருக்கிறது. அதாவது, ஒன்றை நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) கூற, அவர்கள் கூறியதாக நாஃபிவு(ரழி) கூற, அவர்கள் கூறியதாக இமாம் மாலிக்(ரஹ்) கூறினார்கள். எனும் அறிவிப்புத் தொடராகும்.

மேலே காணப்படும் அறிவிப்புத் தொடரில் நபி அவர்களுக்கும், மாலிக்(ரஹ்) அவர்களுக்கும் இடையில் இருவர் மட்டுமே காணப்படுகிறார்கள். அந்தளவு நபி அவர்களுக்கு இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் அண்மித்திருப்பதை முன்னிட்டு "தங்கச் சங்கிலித் தொடர்" என சிலாகித்து கூறப்படுகிறது.

5. அபூ உமாமா அன்ஸாரீ(ரழி) இவர்களின் அசல் பெயர் "ஸஃதுபின் ஸஹ்லுபின்ஹனீஃப் அன்ஸாரீ அன்ஸீ" என்பதாகும். எனினும் இவர்கள் மக்களிடையே "அபூ உமாமா அன்ஸாரீ எனும் பெயரால் பிரபல்யமடைந்துள்ளார்கள். இவர்கள் நபி அவர்களின் மரணத்திற்கு இரு வருடங்களுக்கு முன்பே பிறந்தார்கள்.

மிகச்சிறிய குழந்தையாக இருந்ததினால் நபி அவர்களிடமிருந்து நேரிடையாக ஹதீஸ்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இவர்கள் தமது தந்தை ஸஹ்லுபின் ஹனீஃப், மேலும் அபூஸயீதுல்குத்ரீ ஆகியோரிடமிருந்து ஹதீஸ் ஞானம் பெற்று அநேகருக்கு ஹதீஸ் ஆசிரியராக திகழ்ந்தார்கள். ஹிஜ்ரி 100ல் தமது 92ம் வயதில் காலமானார்கள்.

ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் எழுத்துப் பணிகள்

1. ஸஹீஃபத்துஸ்ஸாதிகா (சத்திய ஏடு) இத்தொகுப்பு ஹிஜ்ரி 63ல் காலமான அப்துல்லாஹ்பின் அம்ருப்னுல் ஆஸ்(ரழி) அவர்களால் தொகுக்கப்பட்டது. இவர்களுக்கு நபி அவர்களின் புனிதமான ஹதீஸ்களைத் தொகுத்து நூல் வடிவாக்குவதில் ஆசையும் ஆர்வமும் இருந்து வந்தது.

நபி அவர்கள் வாயிலாக எவற்றை கேட்டார்களோ, அவற்றை உடனே அப்படியே பதிவு செய்து கொள்ளும் பழக்கமுள்ளவர்களாயிருந்தார்கள். இது வகையில் நபி அவர்களே இவர்களுக்கு ஆர்வமூட்டி எழுதச் செய்துள்ளார்கள். (முக்தஸர் ஜாமிவுல் இல்ம்)

"ஸஹீஃபத்துஸ்ஸாதிகா" எனும் இத்தொகுப்பு ஏறத்தாழ 1000 ஹதீஸ்களை கொண்டுள்ளது. நீண்ட காலமாக அது அவர்களின் குடும்பத்தாரால் பாதுகாக்கப்பட்டு வந்து இறுதியாக "முஸ்னத் அஹ்மத்" என்னும் ஹதீஸ் களஞ்சியத்தில் முழுமையாக இணைக்கப்பட்டு அதில் இடம்பெற்று விட்டது.

2. ஸஹீஃபத்துஸ் ஸஹீஹா (முறையான ஏடு)

இது ஹிஜ்ரீ 101ல் காலமான ஹுமாமுப்னுல் முனப்பஹ்(ரஹ்) அவர்களது தொகுப்பு. இவர் அபூஹுரைரா(ரழி) அவர்களின் பிரபல்யமான மாணவர்களில் ஒருவராவர். இவர் தமது மரியாதைக்குறிய ஆசிரியரின் அறிவிப்புகளை ஒட்டு மொத்தமாக ஒன்றில் எழுதி மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார். இவரது கையெழுத்து பிரதிகள் இன்றும் பெர்லின், டமாஸ்கஸ் நகர நூல் நிலையங்களில் பாதுகாப்புடன் இருந்து வருகின்றன.

அத்துடன் இமாம் அஹ்மதுபின் ஹம்பல்(ரஹ்) அவர்களும், தமது பிரபல "முஸ்னத்" எனும் நூலில் அபூஹுரைரா(ரழி) எனும் தலைப்பின் கீழ் இம்முழு ஏட்டினையும் பதிவு செய்து விட்டார்கள். பக்கம் 312 முதல் 318 முடிய இப்பிரதி அபூஹுரைரா(ரழி) அவர்களின் மொத்த அறிவிப்புகளின் ஒரு பகுதியாகும். அதன் பெரும்பாலான அறிவிப்புகள் புகாரி, முஸ்லிம் ஆகியவற்றிலும் இருக்கின்றன. வார்த்தைகள் சற்று முன்பின் இருக்கின்றனவே அன்றி குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமில்லை.

3. "பஷீருபின் நஹீக்" என்பவரின் தொகுப்பு

இவர்களும் அபூஹுரைரா(ரழி) அவர்களின் மாணவர்களில் ஒருவராவர். இவர் தமது ஆசிரியராம் அபூஹுரைரா(ரழி) அவர்களின் வாயிலாக ஹதீஸ்களைச் செவியேற்று, தாம் பதிவு செய்து கொண்டது மட்டுமின்றி தமது ஆசிரியரை விட்டும் விடை பெறும்போதும் ஒருமுறை அதை நேரில் வாசித்துக் காண்பித்து சரி பார்த்துக் கொண்டார்கள். (ஜாமிவுல் இல்மு, பாகம்1, பக்கம்72, தஹ்தீபுத்தஹ்தீபு, முதலாம் பாகம் பக்கம்470)

4. முஸ்னத் அபூஹுரைரா(ரழி)

இது ஸஹாபாக்களின் காலத்திலேயே எழுதப்பட்ட பிரதியாகும். இதன் நகல் ஒன்று "இரண்டாம் உமர்" என்றழைக்கப்படும் உமருபின் அப்துல் அஜீஸ் அவர்களின் தந்தை அப்துல் அஜீஸ் பின் மர்வான் என்பவரிடத்திலும் இருந்திருக்கிறது. அவர் "கஸீருபின் முர்ரா" என்பவருக்கு பின்வருமாறு எழுதியுள்ளார். ஸஹாபா பெருமக்களின் ஹதீஸ்கள் அனைத்தையும் எனக்கு எழுதி அனுப்பி வையுங்கள், ஆனால் அபூஹுரைரா(ரழி) அவர்களின் ஹதீஸ்களை எழுதி அனுப்பத் தேவையில்லை. ஏனெனில் அவை ஏற்கனவே எழுதப்பட்டு என்னிடம் உள்ளன. (தபகாத் இப்னு ஸஃது பாகம்7, பக்கம்157)

மேலும் "முஸ்னத் அபூஹுரைரா" என்னும் ஓர் பிரதி "இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)" அவர்களது கரத்தால் எழுதப்பட்டுள்ளது. (திர்மிதி விரிவுரை "துஹ்ஃபத்துல் அஹ்லதீ" எனும் நூலின் முகவுரையில் பக்கம்165ல் காணப்படுகிறது.)

5. ஸஹீஃபத்துல் அலி (அலி(ரழி) ஏடுகள்)

இது பற்றி இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் விளக்கத்திலிருந்து பெரிய நூல் தெரிகிறது. ஜகாத் பற்றிய விளக்கம், மதினாவின் புனிதத்தன்மை, ஹஜ்ஜத்துல் வதாவின் குத்பா பேருரை முதலிய இஸ்லாமிய நெறிமுறைகளின் தத்துவங்கள் இதில் நிரம்பி உள்ளன.

6. நபி(ஸல்) அவர்களின் குத்பா பேருரையின் தொகுப்பு

இது மக்கா வெற்றியின்போது அபூஷாஹ் யமனீ(ரழி) அவர்கள் நபி அவர்களிடம் பணிவுடன் கேட்டுக்கொண்டதற்கேற்ப நபி அவர்களும் தமது உபதேசத்தை பிறர் எழுதிக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள். இது ஒருவர் பிறருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து பல விளக்கங்களை கொண்ட பேருரையாகத் திகழ்கின்றது.

7. ஸஹீஃபத்துஜாபிர்(ரழி)

இது ஜாபிர்(ரழி) அவர்களின் கையெழுத்துப்பிரதி "ஜாபிரு பின் அப்துல்லாஹ்" என்னும் அறிவிப்புகளை அவர்களின் மாணவர்களான ஹிஜ்ரீ 110ல் காலமான "லஹபுபின் முனப்பஹ்" என்பவரும் "சுலைமான் பின்கைஸ் லஷ்கரீ" அவர்களும் முன்பு எழுதப்பட்டவாரே தொகுத்துள்ளார்கள். இத்தொகுப்பு ஹஜ்ஜின் கிரிகைகள், ஹஜ்ஜத்து வாதாஉ, குத்பா பேருரைகள் முதலிய அடங்கியுள்ள ஒன்றாகும். (ஸஹீஹ் புகாரி முதலாம் பாகம் பக்கம்30)

8. ரிவாயத்து ஆயிஷா சித்திக்கா(ரழி)

இது அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் அறிவிப்புகளின் தொகுப்பாகும். இது அன்னை அவர்களின் மாணவரான உர்வாபின் ஜுபைர்(ரழி) அவர்களால் எழுதப்பட்டது. (தஹ்தீபுத்தஹ்தீபு)

9. அஹாதீஸுப்னு அப்பாஸ்(ரழி)

இது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் அறிவிப்புகளின் மொத்தத் தொகுப்பாகும். இதை ஸயீதுபின் ஜுபைர்(ரஹ்) என்னும் தாபியீன்களைச் சார்ந்த ஒருவர், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் தொகுத்தளித்தபடியே தொகுத்துள்ளார். (தாரமீ)

ஸஹீஃபத்து அனஸிப்னி மாலிக்(ரழி)

இது அனஸ்(ரழி) அவர்களின் கைப்பிரதி ஸயீதுபின் ஹிலால்(ரஹ்) எனும் தாபியீ கூறுகிறார்கள்: ஒரு நாள் அனஸ்(ரழி) அவர்கள் தமது நினைவுச் சின்னமாக கையெழுத்துப் பிரதி ஒன்றை எங்களீடம் எடுத்துக்காட்டினார்கள். இதிலுள்ளவை அனைத்தும் நானே நேரிடையாக நபி அவர்கள் கூற எனது காதுகளால் கேட்டு நானே பதிவு செய்து வைத்தவையாகும். மேலும், நான் இதிலுள்ள அனைத்தையும் நபி அவர்களின் முன்னிலையில் வாசித்துக் காட்டி சரிபார்த்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். (ஸஹீபத்துஹுமாம் பக்கம்84, முஸ்தத்ரக் ஹாக்கிம்)

ரிஸாலத்து ஸமுரத்துபின் ஜுன்துபு(ரழி)

இது ஸமுரத்துபின் ஜுன்துபு(ரழி) அவர்களின் பிரதி. இது அவர்களின் மகனுக்கு அனந்தரப் பொருளாக கிடைத்துள்ளது. ஏராளமான ஹதீஸ்களைக் கொண்டுள்ள மாபெரும் பொக்கிஷப் பேழையாக அமைந்திருக்கிறது.

ஸஹீஃபக்து ஸஃதுபின் உபாதா(ரழி)

இது ஸஹீஃபக்து ஸஃதுபின் உபாதா(ரழி) அவர்களின் ஏடு. இதன் தொகுப்பாளாராகிய இவர்கள்தாம் இஸ்லாத்திற்கு வருமுன்பே எழுத்தறிவில்லாத காலத்திலேயே சிறந்த எழுத்தாளராக இருந்துள்ளார்கள்.

மக்தூபத்து நாஃபிவு(ரழி)

இது நாஃபிவு(ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட கடிதங்கள் அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) அவர்கள் எடுத்துகூற நாஃபிவு(ரஹ்) அவர்கள் இக்கடிதங்களை எழுதியுள்ளார்கள் என்று சுலைமான் பின் ஈஸா அறிவித்துள்ளார்கள். மஆன்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நான் ஒரு சமயம் அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) அவர்களின் மகனார் அப்துர்ரஹ்மான்(ரழி) அவர்களோடிருந்தேன், அப்போதவர்கள் ஒரு நூலை எடுத்து எனக்குக் காட்டி, அப்துல்லாஹ்பின் மஸ்வூத்(ரழி) அவர்கள் தமது கரத்தால் இது எழுதப்பட்டது என்று கூறினார்கள்.

முதலாம் கால கட்டத்தை விட இரண்டாம் காலகட்டத்தில் ஹதீஸ்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்போர் தனது சொந்த அறிவாற்றலுடன் தனது நகரத்திலும் அதனை ஒட்டிய பகுதிவாழ் மார்க்க அறிஞர்களை அணுகி தமது அறிவிப்புகளை எடுத்துக்காட்டி அவற்றை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

0 comments:

Post a Comment