அன்பிற்குரியவர்களே! சொற்ப வாழ்நாளைப் பெற்ற இந்த உம்மத்தினர் குறுகிய நேரத்தில் அதிக நன்மைகளை அடையும் பொருட்டு நம் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல வழிகளை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள், அவைகளுள் அன்னாரின் திருவாயினால் மலர்ந்தருளப்பட்ட சில முத்துக்களை இச்சிறிய கையேட்டில் உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைவதோடு, இதைப் படித்து பயன்பெறுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .நன்மைகள் செய்து நலம்பெற வாழ்த்துக்கள் (மொழிப்பெயர்ப்பாளார்).
1-அல்லாஹுத்தஆலாவை நெருங்கி இருக்க வேண்டுமா?
ஓர் அடியான், எஜமானன் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி இருப்பது அவன் சுஜுதில் இருக்கும்பொழுதே! ஆகவே அதில் அதிகம் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).
2-புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய நன்மையைப் பெறவேண்டுமா?
ரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும், அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் (புகாரி, முஸ்லிம்).
3-சுவனத்தில் ஒரு மாளிகை வேண்டுமா?
அல்லாஹ்விற்காக பள்ளிவாயிலொன்றை கட்டுபவருக்கு சுவனத்தில் அதுபோன்றதை அல்லாஹ் கட்டுவான் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (முஸ்லிம்).
4-அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெறவேண்டுமா?
ஒரு பிடி சாப்பிட்டோ அல்லது ஒரு மிடர் தண்ணீர் குடித்தோ அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய அடியானை அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).
5-உனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா?
பாங்கு, இகாமத்திற்கிடையில் கேட்கப்படும் (துஆ) பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (அபூதாவுத்).
6-வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உமக்கு எழுதப்படவேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பது வருடம் முழுவதும் நோன்பு நோற்பது போன்றதாகும் என நபி (ஸல்) கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).
7-மலை போன்ற நன்மைகள் வேண்டுமா?
மரணித்தவருக்காக தொழுகை நடாத்தும் வரை, அதன் நல்லடக்கத்தில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் (நன்மை) உண்டு. மேலும் அதை அடக்கம் செய்யும் வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு. அல்லாஹ்வின் தூதரே இரண்டு கீராத் என்றால் என்ன? என்று வினவப்பட்டது, பிரமாண்டமான இரு மலைகள் போன்ற (நன்மைகள்) என்று கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).
8-சுவனத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஒன்றாயிருக்க வேண்டுமா?
அநாதையை (வளர்க்க) பொறுப்பேற்பவர் சுவனத்தில் என்னுடன் ஒன்றாயிருப்பார் எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது சுட்டுவிரலுடன் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள் (புகாரி).
9-அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் அல்லது நோன்பிருப்பவர் அல்லது நின்று வணங்குபவர் போன்றோரின் நன்மை வேண்டுமா?
ஏழை, விதவை ஆகியோருக்காக உழைப்பவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் போன்றவறாவார். மேலும் சடைவின்றி நின்று வணங்கி தொடர்ந்து நோன்பிருப்பவர் போன்றுமாவார் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).
10-சுவனத்தில் நீ நுழைவதை பொருமானார் (ஸல்) அவர்கள் பொறுப்பேற்க வேண்டுமா?
இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதை(நாவை)யும் இரு கால்களுக்கிடையிலுள்ளதை(அபத்தை)யும் (தீய செயல்களை விட்டும்) பாதுகாக்க பொறுப்பேற்பவர் சுவனம் செல்ல நான் பொறுப்பேற்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).
11-மரணத்தின் பின்பும் உனது நல்லமல் தொடர்ந்திருக்க வேண்டுமா?
மனிதன் மரணித்ததும் எல்லா நற்கருமங்களும் நின்றுவிடும் மூன்று காரியங்களைத் தவிர எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் (ஸதகத்துல் ஜாரியா எனும்) நன்மை தொடர்ந்திருக்கும் தர்மம், பிரயோஜனமளிக்கும் கல்வி, மரணித்தவருக்காக பிரார்த்திக்கும் பிள்ளை ஆகியவற்றை குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).
12-சுவனப் பொக்கிஷங்களில் ஒன்றை அடைய விரும்புகிறாயா?
லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ் என்பது சுவனப் பொக்கிஷங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).
13-இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா?
இஷாத் தொழுகைய ஜமாஅத்துடன் தொழுதவர், பாதி இரவு நின்று வணங்கியவர் போன்றவராவார். மேலும் சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவர் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).
14-ஒரு நிமிடத்தில் அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை வேண்டுமா?
குல்ஹுவல்லாஹு அஹத் எனும் சூரா அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு ஈடாகுமென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).
15-மீஸானில் (தராசில்) உனது நன்மைப் பகுதி கனக்க வேண்டுமா?
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ ஸுப்ஹானல்லாஹில் அழீம் எனும் இரு வார்த்தைகளும் அல்லாஹ்விற்கு மிக விருப்பத்திற்குரியனவாகவும், நாவிற்கு இலகுவானவையாகவும், மீஸானில் (தராசில்) கனமானவையாகவும் இருக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி).
16-உனது உணவில் அபிவிருத்தி ஏற்படவும், வாழ்நாள் நீடிக்கவும் வேண்டுமா?
உணவில் அபிவிருத்தி ஏற்படவும் வாழ்நாள் நீடிக்கவும் விரும்புபவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் (புகாரி).
17-உன்னை சந்திப்பதை அல்லாஹ் விரும்ப வேண்டுமா?
எவர் அல்லஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் சந்திக்க விரும்புகிறான் (புகாரி).
18-அல்லாஹ் உன்னை பாதுகாக்க வேண்டுமா?
ஸுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றியவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).
19-அதிகமாக இருந்தாலும் உனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ என ஒரு நாளில் நூறு விடுத்தம் கூறுபவரின் பாவங்கள் கடல் நுரையளவு (அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
20-உனக்கும், நரகத்திற்குமிடையில் எழுபதாண்டுகள் தூரம் (இடைவெளி) ஏற்பட வேண்டுமா?
அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பிருப்பவரின் முகத்தை எழுபது ஆண்டுகள் தூரத்திற்கு நரகைவிட்டும் அல்லாஹ் தூரப்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).
21-அல்லாஹுத்தஆலா உன்மீது ஸலவாத்து சொல்ல வேண்டுமா?
என்மீது ஒருமுறை ஸலவாத்து கூறுபவர் மீது அல்லாஹ் பத்துமுறை ஸலவாத்து கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).
22-அல்லாஹுத்தஆலா உன்னை மேன்மைப்படுத்த வேண்டுமா?
அல்லாஹ்விற்காக பணிவுடன் நடப்பவரை அல்லாஹ் மேன்மைப்படுத்துவான் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (முஸ்லிம்).
வெளியீடு: ரவ்ழா தஃவா நிலையம், ரியாத்
0 comments:
Post a Comment