Post image for இஸ்லாத்தின் பார்வையில் சோதிடம்
அன்று முதல் இன்று வரை உலகில் எல்லாப் பகுதிகளிலும் கல்வி அறிவு வளர்ச்சி அடைந்து காணப்பட்டாலும் சிலைகளை தெய்வமாக நம்பிக்கை கொண்டுள்ள மக்களிடையில் சோதிடம் சார்ந்த நம்பிக்கையும் பரவலாக காணப்படுகின்றன. இது பல்வேறு தன்மைகளில் காணப்படுகின்றது. இன்று விஞ்ஞான முறைகளை அவதானித்து புவியினதும், உயிரினங்களின் இயற்கை செயற்பாடுகளை அவதானித்து, புவியில் எதிர்காலத்தில் நடைபெற இருப்பதை முன்கூட்டியே கூற முடியும். இதனை யாரும் சோதிடம் என கூறுவதில்லை.
இறைவன் தனது எல்லா படைப்புகளையும் ஒரு கணக்கின்படி இயக்குவதால் இது சாத்தியமாகிறது. இதனை யாரும் மடமை என மறுப்பதில்லை. உதாரணமாக தற்போது காலை ஏழு மணியாயின் இன்னும் 12 மணித்தியாலத்தின் பின் இரவு ஏழு மணியாக இருக்கும் எனலாம். இதனை யாரும் உண்மை என அறிந்ததால் ஆச்சரியமாக நோக்குவதில்லை. பூமி அதிர்வை ஆய்வாளர்கள் முன்கூட்டி கூறும் போதும் அதனை ஏற்கிறோம். ஆனால் மனிதர்களுக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே எந்த ஆய்வு மின்றி கூறுவதை ஏற்பது மடமையாகும். இதனை அல்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் தடை செய்கின்றன.

உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்குர்ஆன் 31:34)
முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி(ஸல்) அவர்களிடம் “”அல்லாஹ் வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்து வந்தோம். சோதிடர்களிடம் சென்று(குறி கேட்டுக்) கொண்டிருந்தோம்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ”சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள். மேலும், ”நாங்கள் பறவையை வைத்து குறி பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று நான் கூறினேன். அதற்கு நபியவர்கள், ”அது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விசயமாகும். இது உங்களை (செயலாற்றுவதிலிருந்து) தடுத்து விட வேண்டாம்” என்று கூறினார்கள். ( முஸ்லிம்: 4484)
நான் நபி(ஸல்) அவர்களிடம், “”அல்லாஹ்வின் தூதரே! சோதிடர்கள் (சில வேளைகளில்) எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகி விடுவதைக் காண்கின்றோமே (அது எப்படி?)” என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ”அது ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்ட உண்மையான சொல்லாகும். அ(ந்த உண்மையான கருத்)தை ஜின் தனது சோதிட நண்பனின் காதில் போட, அதனுடன் அவன் நூறு பொய்களைக் கூட்டி(ச் சொல்லி) விடுகிறான்” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்: 4485)
சோதிடனை நம்பி அறிவை இழக்காது உங்கள் அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுங்கள். முன்னைய இறைத்தூதர்களுக்கு இறக்கி அருளப்பட்ட இறைநெறி நூல்கள் மாசடைந்துள்ளன. இதன் காரணமாகவே நீங்கள் சிலைகளை தெய்வமாக வணங்குகிறீர்கள். இதன் காரணமாகவே புரோகித குருமார்களிடம் உங்கள் அறிவை அடகு வைத்து சோதிடத்தை நம்பி உங்கள் நல்ல கருமங்களைப் பின்போடுகிறீர்கள். மூடப் பழக்கங்களிலிருந்து தவிர்த்து வாழ்வதற்கு ஒரே வழி இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனை அவதானித்து, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேர்வழியின் பக்கம் வந்து விடுவதாகும். அறிவைப் பயன்படுத்திச் சிந்திப்போர் உண்டா? மேலும்
அல்லாஹ் கூறுகிறான்: -
“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. (முஸ்லிம்: 4488)
அன்று நபி தோழர்கள் தனது மார்க்க கட்டளைகளை எப்படி செயற்படுத்தினார்கள் என்பதை சிந்தியுங்கள்.
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு (ஒரு எஜமானுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூ பக்கர்(ரழி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்கர்(ரழி) அவர்கள் சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை அவர்களிடம், “”இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அபூபக்கர்(ரழி) அவர்கள், “”இது என்ன?” என்று கேட்டார்கள். அவன், “”நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்கு குறி சொல்லி வந்தேன்; எனக்கு நன்றாக குறி சொல்லத் தெரியாது. ஆயினும், (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்கு கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்கு கூலியாக கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்” என்று சொன்னான். உடனே அபூபக்கர்(ரழி) அவர்கள் தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியயடுத்து விட்டார்கள். இவ்வாறான சோதிடம் போன்ற மடமையான செயற்பாடுகளை இஸ்லாம் கடுமையாகச் சாடுகின்றது.

நன்றி: read islam.net

M.T.M முஜீபுதீன், இலங்கை