1097. கால் தீனாரை (பொற்காசு) திருடியவரின் கை வெட்டப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி 6790 ஆயிஷா (ரலி).

1098. நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.
புஹாரி : 6797 இப்னு உமர் (ரலி).


1099. அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6783 அபூஹுரைரா (ரலி).
1101. நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும்.

புஹாரி :6830 உமர் (ரலி).
1428. ‘(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை” .

புஹாரி : 223 உம்மு கைஸ் (ரலி).
1443. நபி (ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லும் படி தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக் (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.

புஹாரி : 3307 உம்மு ஷரீக் (ரலி).

1444. ”பல்லி தீங்கிழைக்கக் கூடியது!”ஆனால், ‘அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை!” என்றும் ஆயிஷா (ரலி) கூறினார்.

புஹாரி : 1831 ஆயிஷா (ரலி).
1441. நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (‘தாத் துஃப்யத்தைன்’ என்னும்) பாம்பையும் குட்டையான – அல்லது – சிதைந்த வால் கொண்ட (‘அப்தர்’ எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்” என்று சொல்ல கேட்டேன். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா (ரலி) என்னைக் கூப்பிட்டு ‘அதைக் கொல்லாதீர்கள்” என்றார்கள். நான், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3297-3298 இப்னு உமர் (ரலி).

1442. நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)” எனும் (77 வது) அத்தியாயம் அருளப் பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன்னுடைய புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போதுஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டது” என்று கூறினார்கள்.

புஹாரி : 4930 இப்னு மஸ்ஊது (ரலி).
1445. இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே” என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3019 அபூ ஹுரைரா (ரலி) .
1437. நபி (ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(மங்கலகரமான) நல்ல சொல்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி :5776 அனஸ் (ரலி).
1438. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5754 அபூஹூரைரா (ரலி).

1439. தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5753 இப்னு உமர் (ரலி).

1440. அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2859 ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ (ரலி) .
1462. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றீர்கள் . பிறகு இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அவர் மேலே சென்றார்.பின்னர் வேறொருவர் அதன்பின் நான்காவதாக ஒருவர் அக்கயிற்றைப்பற்ற அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது” என்றார்.அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தைதங்களுக்குஅர்ப்பணம் ஆகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்” என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும்குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்தி விடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப பின்பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்” என்று கூறிவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்” என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)” என்றார்கள்.

புஹாரி : 7046 இப்னுஅப்பாஸ் (ரலி).
1461. ‘கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.

புஹாரி :6993 என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

(அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:”நபி (ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி (ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)” என்று இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)
கனவுகள்.

1456. ”(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தான் இடமிருந்து வருவதாகும். எனவே நீங்கள் வெறுக்கிற ஒரு விஷயத்தைக்(கனவில்)கண்டால் கண் விழிக்கும்போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால் அது அவருக்கு தீங்கிழைக்காது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5747 அபூ கத்தாதா (ரலி) .

1457. (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. இறைநம்பிக்கையாளர் காணும் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். நபித்துவத்தில் அடங்கிய எந்த அம்சமும் பொய்யாகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7017 அபூ ஹுரைரா (ரலி).

1458. இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) .

1459. இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6994 அனஸ் (ரலி).

1460. இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6988 அபூ ஹுரைரா (ரலி).
1488. உஹதுப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களை பார்த்தேன். அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை நிற உடையணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.

புஹாரி : 4054 ஸஆது பின் அபீவக்காஸ் (ரலி).
1591. நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) – அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! – கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி), ‘அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்று சேராது” என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) ஃபாத்திமா (ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். – அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை – (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) – அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். ‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது” என்று கூறினார்கள்.

புஹாரி :3110 அலி பின் ஹூஸைன் (ரலி).
1592. அலீ (ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.

புஹாரி : 3729 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).
1593. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தம் ‘வலப்பக்கத்தில்’ அல்லது ‘இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவரின் துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ, இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், ‘எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!” என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், ‘உங்களின் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, ‘சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார். முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். எனவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்று விடுவேன். எனவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். என்னுடைய பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, ‘ஃபாத்திமா! ‘இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?’ என்று இரகசியமாகக் கேட்டார்கள். (எனவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)

புஹாரி : 6285 ஆயிஷா (ரலி).
1688. ஒரு பெண்மணி தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ‘இவ்வாறு பல பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்” எனக் கூறினார்கள்.

புஹாரி :1418 ஆயிஷா (ரலி).
1689. ”ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1251 அபூஹூரைரா (ரலி).
1690.இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்து விடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்” என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, ‘உங்களில், தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகிற பெண்ணுக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்” என்றார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலுமா?’ என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, ‘ஆம்; இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்” என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள்.

புஹாரி : 7310 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
1691. ‘பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”

புஹாரி : 102 அபூ ஹுரைரா(ரலி) .
1695. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது” என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்)என்று கூறினார்கள்.

புஹாரி : 3208 இப்னு மஸ்ஊத் (ரலி).
1696. ‘அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், ‘யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது ‘அலக்’ (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது’ என்று கூறி வருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 318 அனஸ் (ரலி).
1697. நாங்கள் பகீவுல் கர்கத் (என்னும் பொது) மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலைகுனிந்தவர்களாகத் தம் கைத்தடியால் தரையைக் கீறிக் கொண்டு, ‘உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை. அது தீய நிலையுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை’ எனக் கூறினார்கள். உடனே ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதை நம்பி (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம் விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள் தாமே?’ என்றதும், நபி (ஸல்) அவர்கள், ‘நம்மில் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்கு நற்செயல்கள் செய்வது எளிதாக்கப்படும்; தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்” என்று கூறிவிட்டு, ‘தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகிறவர்…” என்ற (திருக்குர்ஆன் 92:5,6) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

புஹாரி : 1362 அலீ (ரலி).
1698. ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?’ எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் (தெரியும்)” என்றார்கள். அவர் ‘அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘ஒவ்வொருவரும் ‘எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ’ அல்லது ‘எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ’ அதற்காகச் செயல்படுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 6596 இம்ரான் பின் ஹூஸைன் (ரலி).
1699. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்றார்கள்.

புஹாரி :2898 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).
1702. ”ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”பிறகு அபூ ஹுரைரா(ரலி), எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தை ஓதிக்காட்டினார்.

புஹாரி : 1359 அபூஹூரைரா (ரலி).
1703. இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்” எனக் கூறினார்கள்.

புஹாரி :1384 அபூஹூரைரா (ரலி).
1704. இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் ‘அவர்களைப் படைத்த அல்லாஹ், அவர்கள் (உயிருடனிருந்திருந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிந்தவன்” எனக் கூறினார்கள்.

புஹாரி :1383 இப்னுஅப்பாஸ் (ரலி).
1714. அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி).
1709. ‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” .

புஹாரி : 80 அனஸ் (ரலி).
1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7063 அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).
1711. நபி (ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை, கொலை” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 7061 அபூஹுரைரா (ரலி).
1712. ‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 100 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி).
1532. ‘இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை’ என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து ‘கல்லே! என்னுடைய ஆடை!’ என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை’ என்று கூறினார்கள். மூஸா (அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.”அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்” என அபூஹுரைரா (ரலி) கூறினார்.

புஹாரி : 278 அபூஹுரைரா (ரலி).
1533. உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா (ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா (அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், ‘இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்’ என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, ‘நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையைவைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்” என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா (அலை) ‘இறைவா! அதற்குப் பிறகு?’ எனக் கேட்டதும் அல்லாஹ், ‘பிறகு மரணம் தான்’ என்றான். உடனே மூஸா (அலை) அவர்கள் ‘அப்படியானால் இப்பொழுதே (தயார்)’ எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும் புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா (அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 1339 அபூஹூரைரா (ரலி).
1534. ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், ‘உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், ‘உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி (ஸல்) அவர்கள், ‘மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா (அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

புஹாரி : 2411 அபூஹூரைரா (ரலி).
1535. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘(அந்தத் தோழர்) யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘இவரை நீர் அடித்தீரா?’ என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘இவர் கடைவீதியில், ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், ‘தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். ‘மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

புஹாரி : 2412 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).
1536. ஒருவர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச்சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3416 அபூஹுரைரா (ரலி).
1537. நான் யூனுஸ் இப்னு மத்தாவை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (‘யூனுஸ் இப்னு மத்தா – மத்தாவின் மகன் யூனுஸ்’ என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 3413 இப்னு அப்பாஸ் (ரலி).
1538. (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!” என்று பதிலளித்தார்கள் அதற்கு மக்கள், நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அரபுகளின் (பரம்பரையான) கரங்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3353 அபூ ஹுரைரா(ரலி).
1539. (இறைவனின்) தூதராகிய மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது ‘மக்களில் பேரறிஞர் யார்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறி விட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, ‘இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்’ என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் ‘என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?’என்று கேட்டார்கள். ‘கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்’ என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒருமீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா (அலை) தம் பணியாளரிடம், ‘இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா?’ என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும்வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் ‘பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விட்டேன்’ என்றார். ‘(அட!) அது தானே நாம் தேடி வந்த இடம்’ என்று மூஸா (அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்ந்தவர்களாய் (வந்த வழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது கிள்று அவர்கள் ‘உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது?’ என்று கேட்டார்கள். ‘நான்தான் மூஸா’ என்றார்கள். ‘இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?’ என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்!’ என்று கூறினார்கள். ‘உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?’ என்று கேட்டார்கள். கிள்ரு (அலை) அவர்கள், ‘நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்’ என்று கூறினார்.
அதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!’ என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள். ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது.
அப்போது கிள்று அவர்கள், ‘மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைந்து விடும்’ என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா (அலை) அவர்கள் ‘நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?’ என்று கேட்டார்கள். ‘மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், ‘நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்’ என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திருகி) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் ‘யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?’ என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் ‘மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?’ என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாய்) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்து விட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா (அலை) அவர்கள் ‘நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!’ என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், ‘இதுதான் எனக்கும் உமக்குமிடையே பிரிவினையாகும்’ என்று கூறி விட்டார்கள். ”(இச்சம்பவத்தை) நபி (ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) ‘மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!’ என்று கூறினார்கள்”.

புஹாரி : 122 உபை இப்னு கஹ்ஃப் (ரலி).
1880. நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.

புஹாரி : 6499 ஜூன்துப் (ரலி).
1887. இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6133 அபூ ஹுரைரா(ரலி) .
1888. ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்றார்கள்.

புஹாரி : 2662 அபூபக்ரா (ரலி).
1889. நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண்டிருப்பதையும் அவரை மிகைப்படுத்தி (ஒரேயடியாக உயர்த்திப்) புகழ்ந்து கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே, ‘நீங்கள் அந்த மனிதரின் முதுகை நாசமாக்கி விட்டீர்கள் – அல்லது துண்டித்து விட்டீர்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 2663 அபூ மூஸா (ரலி).
1890. ‘நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது ‘வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!’ என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 246 இப்னு உமர் (ரலி).
1891. நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.)

புஹாரி : 3567 ஆயிஷா (ரலி).
1892. அபூபக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சொன்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, ‘அபூபக்ரே! நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) கூறினார்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து கொள்வோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகி விட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. எனவே, நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன் மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்” என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியது போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே, ‘நீ யாருடைய பணியாள்? இளைஞனே!” என்று கேட்டேன். அவன், ‘மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)” என்று அல்லது மக்காவாசிகளில் ஒருவரின் (பணியாள்) என்று பதிலளித்தான். நான், ‘உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா?’என்று கேட்டேன். அவன், ‘ஆம் (இருக்கிறது)” என்று சொன்னான். நான், ‘நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?’ என்று கேட்டேன். அவன், ‘சரி (கறக்கிறேன்)” என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், ‘(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக் கொள்” என்று சொன்னேன். -அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்: தம் இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ (ரலி) அவர்களை கண்டேன். அவன், உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகத்தை தணித்துக் கொண்டு, உளூச் செய்து கொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும், ஒன்றாக அமைந்து விட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப் பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், ‘பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும் வரை பருகினார்கள். பிறகு, ‘(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (வந்துவிட்டது)” என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா இப்னுமாலிக் தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் முஸ்லிமாகியிருக்கவில்லை.) நான், ‘(எதிரிகள்) நம்மிடம் வந்து சேர்ந்து விட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சுராகாவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே, சுராகாவுடன் அவரின் குதிரை தன் வயிறு வரை பூமியில் புதைந்து விட்டது. அறிவிப்பாளர் ஸுஹைர் இப்னு முஆவியா (ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: ‘பூமியின் ஓர் இறுகிய பகுதியில்” என்று (அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்கள் என) கருதுகிறேன். உடனே சுராகா, ‘நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக கருதுகிறேன். எனவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களை விட்டுத் திசைதிருப்பி விடுவேன்” என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தன்னைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், ‘உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை” என்று கூறலானார். மேலும், (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பியனுப்பிக் கொண்டேயிருந்தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்.

புஹாரி :3615 அல்பராவு பின் ஆஸிஃப் (ரலி).
1881. ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6477 அபூஹுரைரா (ரலி).
1882. உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்து விடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒருவர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதானால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லக் கேட்டேன்” என்றார்கள். மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்துவிழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்” என்று கூறுவார்.

புஹாரி :3267 அபூவாயில் (ரலி).
1883. என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்” என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6069 அபூஹுரைரா (ரலி).
1885. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3289 அபூஹுரைரா (ரலி).
1884. நபி (ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (‘யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக’ என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘இவர் (தும்மியவுடன்) ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 6221 அனஸ் (ரலி).
1782. (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!” என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆகமுடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 08:33, 34) அருளப்பெற்றன.

புஹாரி : 4648 அனஸ் (ரலி).
1784. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.

புஹாரி : 3636 இப்னு மஸ்ஊத் (ரலி).
1785. மக்காவாசிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.

புஹாரி : 3637 அனஸ் (ரலி).
1786. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவு பட்டது.

புஹாரி : 3638 இப்னு அப்பாஸ் (ரலி).
1788. (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘ஆம்”என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை – எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை” என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3334 அனஸ் (ரலி).
1787. மன வேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு ‘யாருமில்லை’ அல்லது ‘ஏதுமில்லை’ மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6099 அபூ மூஸா (ரலி).
1799. சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதை கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால், (படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்” எனும் (திருக்குர்ஆன் 56:30 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4881 அபூஹுரைரா (ரலி).
1800. சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு ஆண்டுகள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6552 ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி).
1801. சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6553 அபூ ஸயீத் (ரலி).
1797. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6487 அபூஹுரைரா (ரலி).
1798. ”எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், ‘மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3244 அபூஹுரைரா (ரலி).
1802. அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி சொர்க்கவாசிகளே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திருப்தி அடைந்தீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகியவற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா? என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன் என்பான். அவர்கள் அதிபதியே! அதை விடச் சிறந்தது எது? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் உங்கள் மீது என் திருப்தியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்பட மாட்டேன் என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6549 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
1805. ‘சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 3327 அபூஹுரைரா (ரலி).
1803. சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)கள் (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கிழக்கு அடிவானில் (தோன்றி), மேற்கு அடிவானில் மறையும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று’ எனக் கூடுதலாக அறிவித்ததை நான் உறுதியாகக் கேட்டேன்.

புஹாரி : 6555-6556 அபூ ஸயீத் (ரலி).
1804. ”சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கு மிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றவர்களேயாவர்” என பதிலளித்தார்கள்.

புஹாரி : 3256 அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி).
1806. (சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறை நம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3243 (அபூ மூஸா) அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ (ரலி).
1808. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப் படுத்தப்) போதுமானதாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அப்படியல்ல) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்றார்கள்.

புஹாரி : 3265 அபூஹூரைரா (ரலி).
1807. அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் மீது சாந்தி பொழியட்டும்” என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3326 அபூஹுரைரா (ரலி).
1820. நபி (ஸல்) அவர்கள், ‘(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்” எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) இறை வசனத்தை ஓதிவிட்டு, ‘அன்று தம் இரண்டு காதுகளின் பாதிவரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப்போய் விடுவார்” என்று கூறினார்கள்.

புஹாரி : 4938 இப்னு உமர் (ரலி).
1821. மறுமை நாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6532 அபூஹுரைரா (ரலி).
1822. ”உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிறவரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1379 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
1823. ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும்போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, ‘யூதர்கள் அவர்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறினார்கள்.

1824. ”ஒர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப்பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீகெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான். ”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1374 அனஸ் (ரலி).
1825. கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரண்டு வானவர்களைக்) கொண்டு வரப்படும் (கேள்வி கேட்கப்படும்); பிறகு (அவர்களிடம்) அந்த இறைநம்பிக்கையாளர், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” என சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ் ‘நம்பிக்கை கொள்கிறவர்களை இவ்வுலக சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்” (திருக்குர்ஆன் 14:27) எனக் குறிப்பிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1369 பராவு இப்னு ஆஸிப் (ரலி).
1826. பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில்; இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, ‘இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?’ என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா (ரஹ்) கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி (ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.

புஹாரி :3976 அபூதல்ஹா (ரலி).
1827. ‘நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) தமக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும்வரை மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ‘(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார்’ என்று அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:08) கூறவில்லையா?’ எனஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும், எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்து விடுவான்’ என்று கூறினார்கள்”.

புஹாரி : 103 இப்னு அபீ முலைக்கா (ரலி).
1828. ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்காக ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7108 இப்னு உமர் (ரலி).
குழப்பங்களும் கியாமநாளின் வருகையும்.
1829. நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது” என்று தம் கட்டைவிரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்.” என்றார்கள்.

புஹாரி : 3346 ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி).
1830. நபி (ஸல்) அவர்கள், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்து விட்டான்” என்று கூறி தம் கையால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக் காட்டினார்கள்.”

புஹாரி : 3347 அபூஹூரைரா (ரலி).
1831. ”ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!” என கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!” என்றார்கள்.

புஹாரி : 2118 ஆயிஷா (ரலி).
1840. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியபடி, அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்” என்று சொல்ல கேட்டேன்.

புஹாரி : 7093 இப்னு உமர் (ரலி).
1841. தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாதவரை மறுமை நாள் வராது. ‘துல்கலஸா’ என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7116 அபூஹுரைரா (ரலி).
1842. ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, ‘அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராதவரை மறுமை நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7115 அபூஹுரைரா (ரலி).
1843. ”அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1596 அபூஹுரைரா (ரலி).
1844. கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3517 அபூஹுரைரா (ரலி).
1845. சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2928 அபூஹுரைரா (ரலி).
1846. (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இந்தக் குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3604 அபூஹூரைரா (ரலி).
1847. (தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்கமாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3027 அபூஹுரைரா (ரலி).
1848. (தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (தற்போதைய ரோமப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அதன் பிறகு சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் இறைவழியில் செலவழிப்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3121 ஜாபிர் இப்னு சமுரா (ரலி).
1849. யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், ஒரு கல்கூட, முஸ
்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு” என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3593 இப்னு உமர் (ரலி).
1850. இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாதவரை இறுதிநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

புஹாரி : 3609 அபூஹுரைரா (ரலி).
1854. நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால்’ என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ‘அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், ‘தஜ்ஜால்’ என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3439 இப்னு உமர் (ரலி).
1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7131 அனஸ் (ரலி).
1856. உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), ‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை ‘இது நெருப்பு’ என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை ‘இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3450 ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).
1857. நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).
1878. (கணவனை இழந்த) பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப்பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5353 அபூஹுரைரா (ரலி).
1886. பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டு விட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார் (ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?’ என்று வினவினார்கள். நான், ஆம் (கேட்டேன்)” என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். ‘நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)” என்று கேட்டேன்.

புஹாரி : 3305 அபூஹூரைரா (ரலி).
"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி
ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் 'ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், கருத்து' எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானதாகத்தானிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை, அதற்குரிய தெளிவான அறிவை அல்லாஹ் நமக்கு வழங்கினாலேயொழிய!

Stephen Covey என்பவர் எழுதிய "The 7 Habits of Highly Effective People" என்ற நூலில் ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்தனர். சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர். வேறு சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலை மிக அமைதியாக இருந்தது.

அப்போது ஒரு நபர் தனது குழந்தைகளுடன் அந்த ரயில் பெட்டியில் ஏறினார். ஸ்டீஃபனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அவர் 'அக்கடா' என அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அவரது குழந்தைகள் அவ்வாறு அமைதியாக உட்காரவில்லை. கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடுவதும், பொருட்களை எறிவதும், இதர பயணிகளின் செய்தித்தாள்களை இழுப்பதுமாக களேபரப் படுத்திக்கொண்டிருந்தார்கள். அமைதியாக இருந்த சூழ்நிலை சடாரென மாறிவிட்டது.

பயணிகள் அனைவருமே எரிச்சலடைந்தனர். 'உச்..உச்' என்று ஒலி எழுப்பினர். ஆனால் அந்த நபரோ ஒன்றுமே நடக்காதது போல கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார். குழந்தைகளை அதட்டவோ கட்டுப்படுத்தவோ அவர் எதுவும் செய்யவில்லை. ஸ்டீஃபனின் பொறுமை எல்லை கடந்தது. இந்த அளவிற்கு பொறுப்பற்றவராக ஒரு தந்தை இருக்க முடியுமா? என்ன மனிதர் இவர்? குழந்தைகளை கொஞ்சம் அதட்டினால் என்ன? இவ்வளவு சத்தமும் காதில் விழாதவரைப் போல கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் இருக்கிறாரே? ஸ்டீஃபனின் மனதில் அந்தத் தந்தையைப் பற்றிய paradigm உருவாகிக் கொண்டிருந்தது. அதற்கு அவர் கண்ணால் காணும் காட்சிகளும், காதில் விழும் சத்தங்களுமே ஆதாரம்!

பொறுமையிழந்த அவர் அந்த நபரின் தோளை தட்டி, "நண்பரே, உங்கள் குழந்தைகளை கொஞ்சம் அதட்டினால் என்ன? அவர்கள் இங்கிருக்கும் அனைவரையுமே தொந்தரவு செய்கின்றனரே?" என்றார். திடுக்கிட்டு கண்விழித்த அவர், சற்று நேரம் ஒன்றும் புரியாதவரைப் போல பார்த்துவிட்டு, "ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். நான் ஏதாவது செய்ய வேண்டும்தானே? எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளின் தாயான என் மனைவி சிறிது நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் இறந்து விட்டார். நாங்கள் அங்கிருந்துதான் வருகிறோம். இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று என் குழந்தைகளுக்கும் தெரியவில்லை போலிருக்கிறது." என்றார்.

ஸ்டீஃபன் திடுக்கிட்டுப் போனார். அந்தக் கணம் வரை அந்த நபரைப் பற்றி அவர் எழுப்பி வைத்திருந்த paradigm சடாரென நொறுங்கி விழுந்தது. அந்தத் தந்தையின் மீதும் அவரது குழந்தைகள் மீதும் பரிதாபம் தோன்றியது. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியது. அந்தக் குழந்தைகள் இன்னும் கூச்சலிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஸ்டீஃபனுக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

சில கணங்களுக்கு முன்பு வரை அவர் அறியாமலிருந்து அப்போதுதான் அறிந்த ஒரு தகவல் அவரது மனதில் ஏற்பட்டிருந்த மனப்பிம்பத்தை நேரெதிராக மாற்றி விட்டது. இதை Paradigm Shift என்கிறார் ஸ்டீஃபன். ஸ்டீஃபன் அந்த நபரிடம் பேசாமலே இருந்தால், அல்லது அந்த நபர் தனது மனைவி இறந்த செய்தியை இவரிடம் சொல்லாமலே விட்டிருந்தால் என்னவாகி இருக்கும்? ஸ்டீஃபன் மனதில் ஏற்பட்டிருந்த Paradigm அப்படியே நிலைத்திருக்கும்!

இந்த Paradigm, Paradigm Shift எல்லாம் முஸ்லிமல்லாதவர்களுக்கு வேண்டுமானால் புதிய கண்டுபிடிப்பாக இருக்கலாம். திருமறை குர்ஆனின் போதனைகளை மனதில் பதிய வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு இது புதிதானதல்ல.

"மனிதர்களிலேயே அதிகம் அறிந்தவர் யார்?" என்று இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம் வினவப்பட்டபோது அதற்கு அவர்கள் ‘நான்’ என்று பதில் அளித்தார்கள். ‘அல்லாஹ்தான் மிக அறிந்தவன்’ என்று தன் தூதருக்கு உணர்த்த விரும்பிய அல்லாஹ் 'இரு கடல்கள் சங்கமிக்கும் ஓர் இடத்தில் உம்மை விட அதிகம் அறிந்த ஓர் அடியார் இருக்கிறார்' என்று மூஸாவுக்கு வஹி அனுப் பினான்.

அல்லாஹ்விடமிருந்து பிரத்தியேக அருளையும் ஞானத்தையும் பெற்றிருந்த அந்த நல்லடியாரைச் சந்தித்து அவரது அனுமதியுடன் அவரோடு பயணிக்கிறார்கள் மூஸா (அலை) அவர்கள். அந்தப் பயணத்தின்போது அந்த நல்லடியார் செய்த சில செயல்கள் மூஸா (அலை) அவர்களுக்கு விசித்திரமானதாகத் தோன்றுகிறது.

அவர்கள் இருவரையும் சுமந்து சென்ற கப்பலை அந்த நல்லடியார் திடீரெனத் துளை போடத் தொடங்கினார். அதன் உரிமையாளரோ அவ்விருவரையும் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதித்திருந்தார். அதற்காக அவருக்கு கைமாறு செய்வதற்கு நேர் எதிரான செயலில் அவர் இறங்கினார். அவரது செயல், கப்பலில் அமைதியாகப் பயணம் செய்து கொண்டிருந்த மக்களை மூழ்கச் செய்யக் காரணமாகிவிடுமோ என்று நபி மூஸா அவர்களுக்குத் தோன்றியது!

அடுத்ததாக, ஒன்றுமறியா சிறுவன் ஒருவனை அந்த நல்லடியார் கொலை செய்கிறார். அவனோ அவனுடைய தாய் தந்தையரோ மூஸாவுக்கும் அவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்திருக்கவில்லை.

அதற்கும் அடுத்ததாக, ஒரு ஊரில் கீழே விழவிருந்த சுவர் ஒன்றை அந்த நல்லடியார் சரி செய்து நிறுத்துகிறார். அதற்குக் கூலி எதுவும் வாங்கவில்லை. அவ்வூர் மக்கள் அவ்விருவருக்கும் விருந்து அளித்து உபசரிக்கவில்லை. அவர்களின் தகுதி அறிந்து நடந்து கொள்ளவில்லை. இருந்தும் அவர்களுக்கு அவர் உபகாரம் செய்வதுபோல நடந்துக் கொள்கிறார்.

இந்தச் சம்பவங்கள் மூஸா நபிக்கு ஆச்சரியத்தையும் திகிலையும் ஏற்படுத்துகின்றன. பொறுமை இழந்தவர்களாக ஒரு முறைக்குப் பலமுறை ஆட்சேபிக்கவும் கேள்வி கேட்கவும் அவர்களைத் தூண்டுகின்றன.

'என்ன மனிதர் இவர்? உதவி செய்த கப்பலின் உரிமையாளருக்கு கைமாறு செய்வதற்குப் பதிலாக நன்றி கொன்றவராக நடந்துக் கொள்கிறார்? அழகிய அந்தச் சிறுவனிடம் அன்பு செலுத்துவதற்குப் பதிலாக அவனைக் கொன்று விட்டார். ஆனால் எவ்வித உதவியும் செய்யத் தகுதியற்ற அவ்வூர் மக்களின் உடைமைகளைப் பாதுகாக்க ஆவல் கொள்கிறார்?' அந்த நல்லடியாரைப் பற்றி மூஸா (அலை) அவர்களின் மனதில் தோன்றிய மனப்பிம்பங்கள் (Paradigm) இவை!

இறைத்தூதராகிய ரோஷமிக்கவரான மூஸா நபி அவர்களால் இந்த விசித்திரமான நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. “இன்ஷா அல்லாஹ், நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்" என்று தாம் முன்பு அளித்த வாக்குறுதியையும் மறந்து விடுகிறார். தமது மறுப்பையும் ஆட்சேபனையையும் வெளிப்படுத்தி அவசர அவசரமாக அது பற்றி வினா தொடுக்கிறார்: "மிகவும் தீயதொரு செயலை நீர் செய்துவிட்டீரே!" (சூரத்துல் கஹ்ஃப் 74). அதற்கு அந்த நல்லடியார் அளித்த பதில்கள் மூஸா (அலை) அவர்கல் மனதில் ஏற்பட்டிருந்த மனப்பிம்பத்தை உடைத்து 'Paradigm Shift'-ஐ ஏற்படுத்துகிறது.

மூஸா (அலை) அவர்களுக்கோ வேறெவருக்குமோ அளித்திராத ஞானத்தை அந்த நல்லடியாருக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனைக் கொண்டு அந்த மூன்று நடவடிக்கைகளிலும் அவர் நுண்ணறிவோடு மிகச்சரியாகவேதான் செயல்பட்டுள்ளார். உபகாரம் செய்ய வேண்டிய இடத்தில் உபத்திரம் செய்யவில்லை. உபத்திரத்திற்குப் பதில் உபகாரம் செய்திடவில்லை.

கப்பலில் துளை போட்டு அதன் மூலம் கப்பலின் உரிமையாளருக்கு உபகாரம்தான் செய்தார்கள். அபகரிக்கப்படுவதில் இருந்து கப்பலைப் பாதுகாத்தார்கள். ஏனெனில் அந்தப் பகுதியில் - அந்தக் கரையில் ஓர் அரசன் இருந்தான். குறையேதுமில்லாத நல்ல கப்பல்களையெல்லாம் அபகரித்துக் கொண்டிருந்தான். அதனால்தான் (கப்பலைத் துளைபோட்டு அதனை அபகரிக்காதவாறு பாதுகாத்து) அதன் உரிமையாளரின்
உபகாரத்திற்கும் உதவிக்கும் கைமாறு செய்தார் அந்த நல்லடியார்!

சிறுவனைக் கொலை செய்ததன் மூலம் அவனுடைய தாய் தந்தையருக்கு அவர் உபகாரம் செய்தார். "(அவர் கூறினார்) அந்தச் சிறுவனின் விஷயம் என்னவெனில், அவனுடைய தாய் தந்தையர் இருவரும் நம்பிக்கையாளராக இருந்தனர். அவன் தனது அத்துமீறலாலும் நிராகரிப்பினாலும் அவ்விருவருக்கும் சிரமம் கொடுப்பானோ என்று நாம் அஞ்சினோம். ஆகையால் அவர்களுடைய இறைவன் அச்சிறுவனுக்கு பதிலாக அவனை விடவும் சிறந்த - குடும்ப உறவுகளைப் பேணக்கூடிய பிள்ளைகளை அவர்களுக்கு வழங்கிட வேண்டுமென நாம் விரும்பினோம்" (சூரத்துல் கஹ்ஃப் 80–81)

கீழே விழும் நிலையிலிருந்த "அந்தச் சுவரின் விஷயம் யாதெனில், அது அந்த ஊரிலிருந்த இரு அநாதைச் சிறுவர்களுக்குரியது. அதன் அடியில் அவர்களுக்குரிய புதையல் ஒன்று இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்ல மனிதராக இருந்தார். ஆகவே அவ்விருவரும் தம் வாலிபத்தை அடைய வேண்டும் என்றும் தங்களது புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உம் இறைவன் நாடினான். இது உம் இறைவன் புரிந்த அருளாகும். இவற்றையெல்லாம் எனது அதிகாரத்தின்படி நான் செய்யவில்லை. (அல்லாஹ்வின் ஆணையின் பேரில்தான் செய்தேன்) உம்மால் பொறுமை கொள்ள முடியாதிருந்த விஷயங்களின் உண்மை நிலை இதுதான்" (சூரத்துல் தஹ்ஃப் 82) என அந்த நல்லடியார் விளக்கினார்.

திருமறைக் குர் ஆனின் 'குகை' அத்தியாயத்தில் (சூரா கஹ்ஃப்) கூறப்பட்டிருக்கும் இச்சம்பவத்தின் மூலம் தெரியும் உண்மையாதெனில், இறைத்தூதராகவே இருந்தால்கூட மனித அறிவு என்பது முழுமையானதல்ல. அல்லாஹ் எந்த ஞானத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று நாடுகிறானோ அவருக்கே அதை உரிய நேரத்தில் அளிக்கிறான். அறியாமலிருந்த தத்துவங்கள் வெளிப்படும்பொழுது எத்துணை ஆச்சரியம்! புற வடிவத்திற்கும் யதார்த்த நிலைக்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி! உண்மை இவ்வாறிருக்க, சில மனிதர்கள் தமது அரைகுறை ஞானத்தை வைத்துக்கொண்டு, எல்லாம் அறிந்தவர்கள் போல எப்படித்தான் வாதாடுகிறார்களோ!! தம்மிடம் உள்ள சிற்றறிவைக் கொண்டு பிறரை 'பொய்யர்' 'கள்ளப் பேர்வழி' 'வேஷதாரி' 'போலி' என்றெல்லாம் பழிப்பதற்கு இவர்களுக்கு எங்கிருந்துதான் துணிவு வருகிறதோ!!

இந்த உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காலம் தோறும், ஒவ்வொரு காலத்திலும் காலத்துக்கேற்ப புதிய நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். நாள் தோறும் தனது ஆச்சரியங்களை அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தன்னுடைய இரகசியங்களை அது தொடர்ந்து வெளிப்டுத்திக் கொண்டிருக்கிறது! மனித அறிவிற்கு முடிவே கிடையாது. அறிவின் இறுதிநிலை நமது சக்தியை விட்டும் வெகு தொலைவில் உள்ளது. மனிதர்களில் எல்லாம் அறிந்தவர்கள் என்று எவரும் கிடையாது.

"கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!" (சூரா யூசுப் 76)

satyamargam.com
'நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்.

'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) நூல் - முஸ்லிம்.

'தஜ்ஜால்' எனும் கொடியவனின் வருகையும் நாளை மறுமை நாள் வருவதற்கு முன் அடையாளமாகும். இந்த தஜ்ஜாலின் வருகை, பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், இவனது வருகையை பெரிய விஷயமாக நபி (ஸல்) அவர்கள் கருதுகிறார்கள்.

தவறான அறிமுகம்.

தஜ்ஜால் பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் சில செய்திகள், நம் மனித அறிவுக்கு ஏற்றதாக இல்லை எனக் கருதும் சிலர், 'தஜ்ஜால்' என்பதற்கு 'தீயசக்தி' என்ற அளவில் மட்டுமே பெர் சூட்டுகின்றனர். பிரிட்டிஷார் கையில் உலகத்தின் பாதி இருந்தபோது, பிரிட்டனை சில மவ்லவிகள் 'தஜ்ஜால்' என்று வர்ணித்தனர். இன்னும் சிலரோ அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சில நாட்டுத் தலைவர்களையும் கூட 'தஜ்ஜால்' என்று வர்ணித்தனர்.

இஸ்லாமிய மார்க்கத்தின் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டிருக்கிற சிலர் தங்களின் கற்பனைக் குதிரையில் உதித்த கதைகளை தஜ்ஜாலின் பெயரால் புனைந்து பரப்பி விட்டனர். 'தஜ்ஜாலின் தலை வானத்துக்கும், கால் தரைக்குமாய் இருக்கும் அளவுக்கு வளர்ந்து இருப்பான். கடலின் நீர் அவனது கரண்டைக் காலுக்கும் கீழேதான் இருக்கும். கடலின் மீனைப் பிடித்து, சூரியனில் காட்டிச் சுட்டுத்தின்பான். பனை மரத்தை வேரோடுப் படுங்கி பல் தேய்ப்பான்' என்று அவர்களின் கற்பனைகள் கூறுகின்றன. இவை எதுவும் உண்மை அல்ல!.

சரியான அறிமுகம்

'நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன், ஆனால் தஜ்ஜாலின் வலது கண் திராட்சை போன்று சுருங்கி இருக்கும்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இன்னு மஸ்ஊத் (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

'இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட எந்த ஒரு இறைத்தூதரும் தம் சமுதாயத்தவரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணனை எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அவன் ஒற்றைக் கண்ணன் அல்ல, அவனது இரு கண்களுக்குமிடையே 'இறை மறுப்பாளன்' என எழுதப்பட்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் - புகாரீ 7131.

ஊனமடைந்த கண், மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமாக சதைக் கட்டி ஒன்று தொன்படும் என்றும் நபி (ஸல்) கூறி உள்ளனர் : நூல்கள் - முஸ்லிம், அஹ்மத்.

'ஊனமடையாத கண், பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போல் அமைந்திருக்கம்' ( அஹ்மத்).

'அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான், அவனின் உடலமைப்பு கவர்ச்சியாக அமைந்திருக்கும்' (அஹ்மத்).

'சற்று குண்டான உடலுடையவனாக இருப்பான்' (முஸ்லிம்).

'பின்புறத்திலிருந்து பார்த்தால் அவனின் தலைமுடி அலை அலையாய் இருப்பதாகத் தெரியும் (அஹ்மத்).

'பரந்த நெற்றியுடையவனாக இருப்பான்' (பஸ்ஸார்)

'குள்ளமாகவும் கால்கள் இடைவெளி அதிகம் உள்ளவனாகவும் இருப்பான்' (அபூதாவூத்).

தஜ்ஜால் பற்றிய சரியான அறிமுகம் இது. இது அல்லாத எந்த அறிமுகமும் சிலரால் கற்பனை செய்யப்பட்டதே என்பதை கருத்தில் கொள்க! 'அவனின் ஒரு கண் ஊனம், மறுகண் பச்சை நிறக்கல் போல் இருக்கும்' என்பதுதான் அவனது தோற்றத்தில் வித்தியாசமானவை ஆகும்.

தஜ்ஜால் எங்கு உள்ளான்

தஜ்ஜால் இனிமேல் பிறப்பவன் அல்ல. ஏற்கனவே பிறந்தவன் ஆவான். அவன் தற்போதும் இருந்து வருகிறான். இவனை, கிருத்துவராக இருந்து பின்பு இஸ்லாத்தில் இணைந்த தமீமத்தார் (ரலி) அவர்கள் நேரில் ஏதேச்சையாக கண்டுள்ளார்கள். அவனை தான் கண்ட விபரத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் செய்துள்ளனர். தஜ்ஜால் பற்றிய இதர விபரம் அந்த ஹதீஸ் மூலம் நமக்குப் புரிகிறது.

நபி (ஸல்) அவர்களின் (தொழுகைக்கான) அழைப்பாளர் 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' (தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது) என்ற அறிவித்தார். இதைக் கேட்ட நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே மிம்பரில் அமர்ந்தார்கள். 'அனைவரும் தொழுத இடத்திலேயே அமருங்கள்' என்று கூறிவிட்டு 'நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள், 'அல்லாஹ்வும் அவனின் தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களை அச்சுறுத்தவோ ஆர்வமூட்டவோ உங்களை நான் ஒன்று கூட்டவில்லi. தமீமுத்தாரி முன்பு கிருத்தவராக இருந்தார். அவர் வந்து இஸ்லாத்தில் இணைந்து விட்டார். தஜ்ஜால் பற்றி உங்களுக்குச் கூற வந்ததுக்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். (அவர் என்னிடம் கூறியதை நீங்களும் கேளுங்கள்).

லக்ம், ஜுகாம் ஆகிய சமூகத்தில் முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன் (புயல் காரணமாக) ஒரு மாதகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் சமயம் ஒரு தீவில் ஒதுங்கினோம். கப்பலில் வைத்திருந்த சிறு தோணிகள் மூலம் அந்த தீவில் நுழைந்தோம். அப்போது உடல் முழுவதும் மயிர்கள் நிறைந்த ஒரு பிராணி எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் காரணமாக அதன் மலஜலம் பாதைகளை (உறுப்புக்களைக்) கூட அவர்களால் அறிய இயலவில்லை.

அந்தப் பிராணியிடம் அவர்கள், 'உனக்கு ஏற்பட்ட கேடே நீ என்ன பிராணி?' என்று கேட்டனர். 'ஜஸ்ஸாஸா' என்று அது கூறிவிட்டு, 'நீங்கள் இதோ இந்த மடத்தில் உள்ள மனிதனிடம் செல்லுங்கள், அவர் உங்களைக் காண்பதில் ஆர்வம் காட்டுவார்' என்றும் அப்பிராணி கூறியது. அந்த மனிதனின் பெயரையும் கூறியது. அந்தப் பிராணி ஒரு பெண் ஷைத்தானாக இருக்குமோ என்று பயந்தோம்.

நாங்கள் அந்த மடத்தை நோக்கி விரைந்தோம். அங்கு சென்றதும் ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை இதுவைர நாங்கள் பார்த்ததே இல்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும் முட்டுக்கால்களுக்கும் இடையே தலையைச் சேர்த்து கழுத்தில் இரும்பால் கட்டப்பட்டிருந்தான், 'உனக்கு ஏற்பட்ட கேடே! ஏனிந்த நிலை' என்று கேட்டோம்.

அதற்கு அந்த மனிதன் '(எப்படியோ) என்னைப் பற்றி அறிந்து விட்டீர்களே! நீங்கள் யார்? எனக் கூறுங்கள்' என்றான். 'நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் நாங்கள் பயணம் செய்தபோது, ஒரு மாதம் கடல் அலையால் அலைகழிக்கப்பட்டோம். இப்போது தான் இந்த தீவிற்கு வந்தோம். அடர்ந்த மயிர்கள் நிறைந்த ஒரு பிராணியைக் கண்டோம். அது, நான் ஜஸ்ஸாஸா, இந்த மடத்தில் உள்ள மனிதரைப் பாருங்கள்' என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம்' என்று கூறினோம்.

'பைஸான் என்ற இடத்தில் உள்ள பேரீத்தம் மரங்கள் பயனளக்கிறதா? என்று கூறுங்கள்' என அந்த மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்று கூறினோம். அதற்கு அம்மனிதன் 'விரைவில் அங்குள்ள மரங்கள் பயனளிக்காமல் போகலாம்' என்றான். 'சூகர் எனும் நீருற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரை விவசாயத்திற்கு பயன் படுத்துகிறார்களா? என்று கேட்டான். அதற்கு நாங்கள் ' ஆம், தண்ணீர் அதிகமாகவே உள்ளது. அங்குள்ளோர் அத்தண்ணீர் மூலம் விவசாயம் செய்கின்றனர்' என்று கூறினோம்.

'உம்மி சமுதாயத்தில் தோன்றக்கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக்கூறுங்கள்' என அம்மனிதன் கேட்டான். 'அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு, தற்போது மதீனாவில் உள்ளார்' என்று கூறினோம். 'அரபியர்கள் அவருடன் போர் புரிந்தார்களா?' என்று அம்மனிதன் கேட்டான். ஆம் என்றோம். 'போரின் முடிவு எப்படி இருந்தது?' என்று கேட்டான். 'அவர் தன் அருகில் வசித்த அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்' என்று கூறினோம். 'அவருக்கு அவர்கள் கட்டுப்படுவதே சிறந்தது' என்று அவன் கூறினான்.

நான் இப்போது என்னைப் பற்றிக் கூறுகிறேன். நான்தான் தஜ்ஜால். நான் (இங்கிருந்து) வெளிறே வெகு சீக்கிரம் எனக்கு அனுமதி தரப்படலாம். அப்பேது நான் வெளியே வருவேன். பூமி முழுதும் பயணம் செய்வேன். நாற்பது நாட்களில் எந்த ஊரையும் நான் அடையாமல் விட மாட்டேன். மக்கா, மதீனா இரு ஊர்களைத் தவிர. அந்த இரு ஊர்களும் எனக்கு தடுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு வானவர் என்னை எதிர் கொண்டு தடுப்பார். அதன் வழிகள் அனைத்திலும் அதைக் காண்கானிக்கின்ற வானவர்கள் இருப்பர்' என்று அம்மனிதன் கூறினான்.

இவ்வாறு தமீமுத்தாரீ (ரலி) தன்னிடம் கூறியதாகக் கூறிய நபி (ஸல்) அவர்கள் தம் கைத்தடியை மிம்பரில் தட்டிவிட்டு, 'இது (மதீனா) தூய்மையான நகரம், தூய்மையான நகரம்' என்று கூறினார்கள். 'இதே செய்தியை நான் உங்களிடம் கூறி இருக்கிறேன் தானே' என்று மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதும், மக்கள் 'ஆம்' என்று பதில் கூறினர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் சிரியா நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். இல்லை, இல்லை! அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பாளர் : பாத்திமா பின்த் கைஸ் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜால் என்பவனை பார்த்தோரில் முக்கியமானவர், தமீமத்தாரி (ரலி) அவர்கள் ஆவார். அவர்களும் கூட கடல் பயணத்தின் போது, புயலால் திசை மாறி, ஒரு தீவுக்கு ஒதுங்கியதால் அது எந்தப் பகுதி என்பதை சரிவர புரிந்து கொள்ள இயலாததால் குறிப்பிட்ட இடம் பற்றி அவர்களால் கூற இயலவில்லை. இதனால் தான் நபி (ஸல்) அவர்களும் கூட தமீமுத்தரி (ரலி) அவர்களின் தகவல் அடிப்படையில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று அறிவிக்கிறார்கள். அவன் இருக்கும் இடம் இதுதான் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், ஒரு கடல்கரைத் தீவில் அவன் இருக்கிறான் என்பது மட்டும் உறுதியாகிறது.

தஜ்ஜால் ஒரு காஃபிர்

தங்களை நபி என்று வாதிடுவோர் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, அவர்களை 'தஜ்ஜால்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். எனவே இந்த தஜ்ஜாலை அவர்களில் ஒருவனாக கருதிவிடக் கூடாது.

பொதுவாக முஸ்லிம்களை வழிகெடுக்கும் பணியில் ஈடுபடுவோரில் ஒரு சாரார் தங்களையும் முஸ்லிம் என்று கூறிக் கொண்டே வழிகெடுப்பர். மற்றொரு சாராரோ தங்களை முஸ்லிம் எனக் கூறாமல் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். நபி என்று கூறி வழிகெடுத்த தஜ்ஜால்கள் (பொய்யர்கள்) முதல் வகையினர். இந்த தஜ்ஜாலோ இதில் இரண்டாம் வகையினரைச் சேர்ந்தவன்.

'தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே 'காஃபிர்' என்று எழுதப்பட்டிருக்கும். எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து மூஃமின்களும் அதைப் படிப்பார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்-முஸ்லிம்.

'இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் - அஹ்மத்.

தஜ்ஜால் இயற்கையிலேயே காஃபிர். யூதன் என்பதே சரி! தங்களை நபி என்று வாதிடுவோரை 'தஜ்ஜால்' எனக்குறிப்பிடுவது, அவனைப் போல் இவர்கள் குழப்பவாதிகளாகவும், பொய்யர்களாகவும் இருந்ததுதான். எனவே அவர்களில் ஒருவனாக இவனைக் கருதக் கூடாது.

தஜ்ஜால் தன்னைக் கடவுள் எனக் கூறுவான்

'தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும், நீக்குவான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். மக்களிடம் 'நானே கடவுள்' என்பான். நீதான் என் கடவுள் என்று ஒருவர் கூறினால், அவன் சோதனையில் தோற்றவனாவான். 'அல்லாஹ் தான் என் இறைவன்' என்று ஒருவர் கூறி, அதிலேயே அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டவர் ஆவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) நூல்கள்-அஹ்மத், தப்ரானி.

தன்னை கடவுள் எனக்கூறியும், கடவுளாக ஏற்க வேண்டும் என்று கூறியும் தஜ்ஜாலின் குழப்ப நிலைத் தொடரும்.

தஜ்ஜாலின் மாயா ஜாலங்கள்

'வானத்திற்கு மழை பொழியுமாறு கட்டளையிடுவான், மழை பொழியும். பூமியை நோக்கி விளையச் செய்! என்பான், அது பயிர்களை முளைக்க வைக்கும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

கட்டுடல் உடைய ஓர் இளைஞனை அழைப்பான், அவனை இரண்டு துண்டுகளாக வாளால் வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான், உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்'

'ஒரு மனிதனைக் கொன்று அவன் உயிர்ப்பிப்பான், மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்சாரீ நபித் தோழர் நூல்-அஹ்மத்.

அவனைப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிகவும் வறுமையின் பிடியில் இருக்கும்போது, அவனிடம் மலைபோல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான், இன்னென்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் எனக் கூறும் நதி, உண்மையில் நரகமாகும், அவன் நரகம் என்று கூறும் நதியோ சொர்க்கமாகும். மழை பொழிந்திட வானத்திற்கு கட்டளையிட்டதும், மக்கள் பார்க்கும் போதே மேகம் மழை பொழியும். 'இதைக் கடவுளைத் தவிர வேறுயாரும் செய்ய முடியுமா?' என்று கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் நூல் அஹ்மத்.

இப்படி பல அற்புதங்களைச் செய்யும் இவனின் வலையில் முஸ்லிம்களும் வீழ்வர். சாதாரணமாக முஸ்லிமல்லாத ஒருவன் வந்து ஒரு அற்புதம் செய்து காட்டினால் ஈமானை இழந்து விடும் முஸ்லிம்களும் உண்டு. இவ்வாறு இருக்க பல அற்புதங்கள் செய்யும் தஜ்ஜாலை சில முஸ்லிம்களும் நம்புவர் என்பதில் ஆச்சரியம் இல்லையே!.

தஜ்ஜாலை புறக்கணிப்போர் நிலை

'...பின்னர் மக்களிடம் வருவான் (தன்னை கடவுள் என ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள் ஏற்க மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில் (அவனை ஏற்க மறுத்த) மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து நிற்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜாலை ஏற்க மறுத்துப் புறக்கணிப்போர், அவனை ஏற்க மறுத்து விட்டால், தங்களின் சொத்தை இழக்க வேண்டியது வரும். இந்த நிலையை ஏற்படுத்துவதும் அவன்தான்.

தஜ்ஜாலிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை

'தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ, அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதை நெருப்பு என்று காண்கிறார்களோ, அது சுவை மிகுந்த குளிர்ந்த தண்ணீராகும். உங்களில் ஒருவர் இந்த நிலையை அடைந்தால், நெருப்பு எனக் காண்பதில் விழட்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹுதைபா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

தஜ்ஜால் வாழும் காலம்

தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் இருப்பான்? என்று நாங்கள் கேட்போது, 'நாற்பது நாட்கள் இருப்பான். ஒரு நாள், ஒரு வருடம் போன்றும், மற்ற நாட்கள் சாதாரண நாட்கள் போன்றும் இருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; - முஸ்லிம், திர்மீதி.

தஜ்ஜால் போக இயலாத ஊர்கள்

'மதினா நகருக்கு தஜ்ஜால் பற்றிய பயம் தேவை இல்லை. அன்றைய நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவு வாயில் (பாதைகள்) இருக்கும். ஓவ்வொரு பாதையின் நுழைவாயிலிலும் இரண்டு (வானவர்கள்) இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ பக்ரா (ரலி) நூல் - புகாரீ.

'அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களுக்கும் அவன் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளிவாசல், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவால்களையும் அவனால் நெருங்க இயலாது' என்று நபி (ஸல்) கூறினார்கள் (அஹ்மத்).

தஜ்ஜாலிடமிருந்து தப்பிக்க...

தஜ்ஜால் ஏற்படுத்தும் குழப்ப நிலைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றி, ஈமானையும், பாதுகாத்திட இரண்டு வழிகளை நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைக் காணும் மக்களுக்காக கற்றுத் தருகிறார்கள்.

(1) அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கை விட்டும் பாதுகாப்புத் தேட நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

'அல்லாஹூம்ம இன்னீ அஊதுபிக்க மின்ஃபித்னதித்தஜ்ஜால் (இறைவனா! தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). தொழுகையில் இதைத் தொடர்ந்து ஓதிப் பிராத்திக்கும் எவரும் தஜ்ஜால் பின்னே போக மாட்டார்கள். தொழாதவர்களும், தங்களின் பிரார்த்தனையில் இதைக் கேட்காதவர்களும் தஜ்ஜாலின் மாயா ஜாலங்களில் மயங்கி ஈமானை இழப்பார்கள். அவன் பின்னே அவனை ஏற்றுக் செல்வார்கள்.

(2) உங்களில் ஒருவர் தஜ்ஜாலை அடைந்தால், 'கஹ்பு' அத்தியாயத்தின் ஆரம்ப பகுதியை ஓதிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; - முஸ்லிம், திர்மீதி.

இந்த இரண்டு வழிகள் மூலமே தஜ்ஜாலின் மாயாஜாலக் குழப்பங்களில் இருந்து தப்பிக்க இயலும்.

தஜ்ஜால் கொல்லப்படும் இடம்

தஜ்ஜால் கீழ் திசையிலிருந்து மதீனாவை குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை 'ஷாம்' பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

கஸ்பஹான் பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் 'லுத்' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.

ஒற்றைக் கண்ணனான, காஃபிர் என நெற்றில் எழுதப்பட்டுள்ள தஜ்ஜால் மக்களிடையே வந்து, சில மாயாஜாலச் செயல்களில் ஈடுபட்டு, நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்து மக்களை வழிகெடுக்கும் படியான செயலில் ஈடுபடுவான் என்பது, மறுமை நாள்வரும் முன் நடக்கக்கூடிய செயலாகும்.

தஜ்ஜாலின் வருகை மூலம் மறுமை நாள் மிக மிக ... அருகில் வந்து விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மறுமை நாளின் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறியவற்றில் பல நடந்து முடிந்து விட்டது போல், இதுவும் நடக்கும் என்ற உண்மையை நம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்றும் எவரும் தங்கள் பிரச்சாரத்தை பெண்களிடமிருந்தே துவங்குகின்றனர். தங்கள் மீது பெண்களுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சில போலி விளம்பரங்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் கூறிப் பெண்களை நம்ப வைக்கின்றனர். இதே வழிமுறையைத் தான் தஜ்ஜாலும் கையாளுவான். அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். ஒரு குடும்பத்தில் மார்க்கத்தைச் சரியாக விளங்கிக் கொண்ட ஆண்கள் பலர் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள், தர்ஹாக்களுக்குச் செல்வதையோ, அனாச்சாரங்கள் புரிவதையோ பிரச்சாரம் செய்தாலும் கூட தடுத்து நிறுத்த முடிவதில்லை. இதே நிலைதான் தஜ்ஜால் வரும்போதும் நிகழும்.

'பமிரிகனாத் என்னும் இந்த உவர் நிலங்களுக்கு தஜ்ஜால் புறப்பட்டு வருவான். அப்போது அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எந்த அளவுக்கெனில், (அன்று) ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, தாய், மகள், சகோதரி, மாமி ஆகியோரிடம் சென்று அவர்கள் தஜ்ஜாலைப் பின்பற்றிச் சென்றுவிடக் கூடாது என அஞ்சி, அவர்களைக் கயிற்றினால் கட்டி வைப்பான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் - அஹ்மத்.

அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையில்லாத ஆண்கள், பெண்கள் மற்றும் நயவஞ்சகர்கள் அனைவரும் தஜ்ஜாலின் அற்புதங்களில் மதி மயங்கி, தங்கள் ஈமானை இழந்து அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எனினும், ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தஜ்ஜாலைப் பின் பற்றுவார்கள் என்று இந்த நபி மொழி கூறுவதால், பெண்கள் கூடுதலான எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும். தஜ்ஜாலின் சோதனையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடிய வண்ணம் இருக்க வேண்டும்.

தஜ்ஜாலை பெண்களே அதிகம் பின்பற்றுவர். கிறித்தவ வேதமான பைபிள் மற்றும் இந்து வேதங்களிலும் தஜ்ஜால் பற்றி குறிப்பு காணப்படுகிறது.

19-(5) ஈஸா நபியின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அடையாளமாவார். அதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்... (அல்குர்ஆன் - 43:61).

'எனது உயிரை தன் iயில் வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா), உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார், சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார், ஜிஸ்யா வரியை நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவருமே இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

மறுமை நாள் வரும் முன், 'வர உள்ளது' என்பதை தெரிவிக்கும் அடையாளமாக ஈஸா நபி (அலை) அவர்களின் வருகையும் இருக்கும். ஈஸா நபி என்றால் யார்? நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் வந்த ஈஸா நபியா? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அவர் வருவாரா? இது சாத்தியமாகுமா? என்ற கேள்விகள் எழவே செய்யும்.

'ஈஸா (அலை) அவர்கள் மறுமைநாளின் அடையாளமாவார்' என்ற இறைவனின் அறிவிப்பை பலமுறை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த வாசகம், ஈஸா நபியின் வருகைக்கு முன் வந்த 'தவ்ராத்' வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அல்லது அவர்களுக்கே வழங்கப்பட்ட 'இன்ஜீல்' வேதத்தில் கூறப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் வந்து சென்றபின் இனியும் வருவார் என்றே குர்ஆன் கூறுகிறது. எனவே, ஏதோ ஒரு ஈஸா அல்ல முன்பு வந்த நபியான ஈஸாதான் மீண்டும் வருவார் என்பதே உண்மை. இதனால் தான் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக ஈஸா நபியின் வருகையும் அமைந்துள்ளது.

இன்னும் மர்யமின் மகனும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை. அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்கு குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இதுபற்றிய சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான) அறிவு அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னலவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமைமிக்கவன். மிக ஞானமுடையவன் ஆவான் - (அல்குர்ஆன் : 4:157,158).

'அவரை அவர்கள் கொல்லவில்லை' என அல்லாஹ் அறிவிப்பதின் மூலம் அவர்கள் கொல்லப்படவில்லை என்பதோடு 'உயிருடன் உள்ளார்' என்பதும் விளங்கும். 'உயிருடன் எங்கே உள்ளர்கள்?' என்ற கேள்வியும் வரக்கூடாது என்பதற்காக தன்னிடம் உயர்த்திக் கொண்டான் என்றும் அல்லாஹ் கூறி விட்டான், அதாவது, ஈஸா நபி (அல) அவர்கள் 'உயிருடன் வானில் உள்ளார்' என்பது மேற்கண்ட வசனம் மூலம் உறுதியாகிறது.