மூமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிக்கும் இறைவன்

, , No Comments
மூமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிக்கும் இறைவன்




‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18)



நியாயத் தீர்ப்பு நாளில் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை இதுவரை அறிந்தோம். இறைவன் அந்நாளில் விசாரிக்கும் முறை எவ்வாறு இருக்கும்? இதை இனி அறிந்து கொள்வோம்.



விசாரணை மன்றம்



மக்களெல்லாம் வெட்ட வெளியில் ஒன்று கூட்டப்பட்டதும் அவர்களை விசாரிக்க இறைவன் அங்கே வருவான். வானவர்கள் அணியணியாக வருவார்கள். இறைவனது அர்ஷை எட்டு வானர்கள் சுமந்து வருவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.



‘இப்பூமி தூள் தூளாக்கப்பட்டதும் உமது இறைவன் வருவான். வானவர்களும் அணியணியாக வருவார்கள்’ (அல்குர்ஆன் 89:21,22)



சூரில் ஒரே ஒரு முறை ஊதப்பட்டதும், இப்பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாகத் தகர்க்கப்படும் போது அந்நாளில் தான் அந்த (மாபெரும்) நிகழ்ச்சி நடைபெறும். வானம் பிளந்து விடும். அந்நாளில் அது பலவீனப்பட்டதாக இருக்கும். வானவர்கள் வானத்தின் கோடியில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தங்களுக்கு மேல் எட்டு வானவர்கள் சுமந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 69:13-17)



இறைவனின் வருகை எவ்வாறு என்பதை நம்மால் கற்பனை செய்ய இயலாவிட்டாலும் அல்லாஹ் அவ்வாறு கூறுவதால் அப்படியே நம்ப வேண்டும். அவனுக்கே உரிய முறையில் அவன் வருவான் என்றே நம்ப வேண்டும். சுயமாகக் கூறப்படும் எவரது விளக்கத்தையும் நாம் ஏற்கக் கூடாது. எட்டு வானவர்கள் அவனது அர்ஷைச் சுமக்க, ஏனைய வானவர்கள் புடைசூழ வல்ல இறைவன் விசாரணை நடத்துவதற்காக மஹ்ஷர் மைதானத்துக்கு வருவான் என்று நம்புவதே சரியானதாகும்.



அர்ஷில் வீற்றிருக்கும் நிலையில் வல்ல இறைவன் வருவது உவமையாகக் கூறப்பட்டதன்று, நேரடியான பொருளிலேயே கூறப்பட்டது என்பதற்கு மேலும் சில சான்றுகள் உள்ளன.



‘அந்நாளில் சில முகங்கள் செழிப்புடனும் தம் இறைவனைப் பார்த்துக் கொண்டுமிருக்கும்’ (அல்குர்ஆன் 75:22,23)



நபி (ஸல்) அவர்கள் பவுர்ணமி இரவில் நிலவைப் பார்த்தார்கள். அந்த முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனையும் நிச்சயமாகக் காண்பீர்கள் என்று அப்போது கூறினார்கள். (அறிவப்பவர்: ஜரீர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)



‘நிச்சயமாக அல்லாஹ் மூமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிப்பான். (இது மஹ்ஷர் வெளியில் நடக்கும்)’ என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)



மூமின்கள் இறைவனைக் காண்பார்கள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதே அளவு இறைவனின் வருகையும் நிச்சயமானதாகும்.



சந்திரனைப் பார்ப்பது போல நீங்கள் பார்ப்பீர்கள் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் (மற்றொரு அறிவிப்பில்) உயரத்தில் இருக்கும் சந்திரனைக் காண்பதை விட்டும் ஒருவர் மற்றவரைத் தடுக்க முடியாதது போல இறைவனைக் காண்பதையும் ஒருவர் மற்றவருக்குத் தடுக்க முடியாது என்று விளக்கினார்கள்.



மக்கள் நெரிசல் காரணமாக யாரும் யாருக்கும் இறைவனின் திருக்காட்சியைத் தடுக்க முடியாது. அவ்வளவு உயரத்தில் இறைவன் காட்சி தருவான் என்பது நபியவர்களின் இந்த உவமையிலிருந்து தெரியவரும். மற்றொரு ஹதீஸ் இதைத் தெளிவாகவும் விளக்குகின்றது.



இறைவனின் அர்ஷைச் சுமந்துள்ள வானவர்களில் ஒரு வானவர் பற்றிக் கூற எனக்கு அனுமதியளிக் கப்பட்டது. அவ்வானவரின் காதுக்கும் தோள் புஜத்துக்கும் இடையே எழுநூறு ஆண்டுகள் நடக்கும் தொலைவு இருக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது)



காதுக்கும் தோள்புஜத்துக்கும் இடையே இவ்வளவு தொலைவு என்றால் அவ்வானவர்களின் பிரம்மாண்டத் தோற்றத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இத்தகைய பிரமாண்டமான தோற்றம் கொண்ட வானவர்கள் வல்ல இறைவனின் அர்ஷைச் சுமந்து வரும் போது அனைவரும் காணக்கூடிய அளவுக்கு இறைவன் இருப்பான் என்பதை அறியலாம்.



இறைவனைத் தரிசித்தல், வானவர்களின் பிரமாண்டமான தோற்றம் ஆகியவற்றைச் சிந்தித்தால் இறைவனின் வருகை என்பது அதன் நேரடிப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறியலாம்.



இறைவன் வருவதற்கு முன் மக்கள் அனைவரையும் ஒருவானவர் விசாரணை நடைபெறும் இடத்திற்கு அழைப்பார். அவரை மக்கள் அனைவரும் தொடர்வார்கள். அங்கே குறுக்கு வழி ஏதும் இராது. நடந்து செல்லும் காலடி ஓசை தவிர வேறு எந்த ஓசையுமின்றி வாய்பொத்தி அவ்வானவரை மக்கள் தொடர்ந்து செல்வார்கள்.



அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் பற்றிச் செல்வார்கள். அதில் எத்தகைய கோணலும் இருக்காது. மேலும் ரஹ்மானுக்கு (அஞ்சி அவனுக்கு) முன் அனைத்து சப்தங்களும் அடங்கி விடும். காலடி ஓசை தவிர வேறு ஓசை எதனையும் நீர் கேட்க மாட்டீர்! (அல்குர்ஆன் 20:108)



எனவே நபியே அவர்களை அலட்சியப்படுத்தி விடுவீராக. அவர்கள் வெறுக்கக் கூடிய ஒன்றுக்காக (விசாரணைக்காக) அழைப்பாளர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் புதைகுழிகளிலிருந்து அவர்கள் வெளிப்படுவார்கள். அழைப்பாளரிடம் விரைந்து வருவார்கள். இது மிகவும் கஷ்டமான நாள் என்று அக்காபிர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 54:6-8)



பலியாடுகள் போல் அழைப்பாளரைத் தொடர்ந்து அவர்கள் மைதானத்தை அடைந்ததும் வல்ல இறைவன் வருவான், அவர்களை விசாரிப்பான். இறைவன் எவ்வாறு அவர்களை விசாரிப்பான் என்ற விபரங்களையும் அறிந்து கொள்வோம்.

0 comments:

Post a Comment