printEmail
 
வினவு : சிரப்பு  போலீஸ் ஆஃப் இந்தியா
சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில் ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.

இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.

ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன கதை!

கிம் டேவி, புரூலியா, பீட்டர் ப்ளீச், ஆனந்த மார்க்கம் போன்ற பெயர்களை நீங்கள் மறந்திருக்கலாம்; எனவே ஒரு சிறிய நினைவூட்டல். 1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர். அப்போது அது தேசிய அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆனந்த மார்க்கம் என்கிற தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் இந்த ஆயுத மூட்டைகள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் ஆயுதத்தைப் போட்ட விமானம் திரும்பும் வழியில் மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. சரி. அடுத்து கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் – மன்னிக்கவும். அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தது.
இதற்கிடையே இப்போது திடீர் ஞானோதயம் பெற்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ‘தலைமறைவாக’ இருக்கும் கிம் டேவியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உதார் காட்ட ஆரம்பித்தது சி.பி.ஐ. இதைக் கேள்விப்பட்ட கிம் டேவி, கடந்த மாதம் இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தோன்றி, தான் மறைந்து வாழவில்லையென்றும், பல ஆண்டுகளாக கோபன்ஹேகனில் தான் வாழ்ந்து வருவதாகவும், அங்கே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொண்டும் வெளிப்படையாகவே செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தான் கோபன் ஹேகனில் இருப்பது சி.பி.ஐக்குத் தெரியும் என்றும் அப்படியிருந்தும், சி.பி.ஐ அதிகாரிகள் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தன்னைத் ‘தேடி’ இத்தனை ஆண்டுகளாக உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருந்தாரத்கள் என்று இந்திய துப்பறியும் புலிகளின் டவுசரைக் கிழித்தார்.
இன்னும் ஒரு படி மேலே போய், தான் ஒன்றும் தப்பிக்கவில்லையென்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சி.பி.ஐ தான் என்றும் உண்மையை போட்டு உடைத்தார். ஏனெனில் அப்போது மத்தியிலிருந்த காங்கிரசு அரசு மேற்கு வங்கத்திலிருக்கும் சி.பி.எம் அரசைக் கலைப்பதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்று, திட்டமிட்டே இந்த ஆயுதக் கடத்தலை நடத்தியதாகவும், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடவாமல் மொத்த திட்டமும் சொதப்பலாகி விட்டதால், தன்னை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க பயந்து கொண்டு தான் தன்னை பாதுகாப்பாக தப்ப விட்டனர் என்றும் சொல்கிறார்.
இதற்கு மேல் இவனை விட்டால் மிஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவி விடுவான் என்று முடிவு கட்டிய சி.பி.ஐ, உடனடியாக கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து கைது செய்து அழைத்து வர ஒரு குழுவை அனுப்புகிறது. உடனே உங்களுக்கு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வரும் விஜயகாந்த் நினைவுக்கு வரலாம் – முதலில் அந்தக் கற்பனைகளை எல்லாம் ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இங்கேயிருந்து விமானம் ஏறி இன்னொரு நாட்டுக்கு பயங்கரமான தீவிரவாதியைப் பிடித்து வரப் போன சூரப்புலிகள் போகும் போது அதற்குத் தேவையான வாரன்டை எடுத்துப் போக ‘மறந்து’ விட்டார்களாம். ஏதோ ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன அப்பாவி மாணவன் போல அங்கே டென்மார்க் அதிகாரிகள் முன் பல்லைக் காட்டிக் கொண்டும் பின் மண்டையைச் சொறிந்து கொண்டும் இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.
இதுக்குப் பேசாமல் விஜயகாந்தையே அனுப்பியிருக்கலாம். டென்மார்க் காவல் துறையினரிடம் தமிழில் வாதாடி தீவிரவாதியை மட்டுமல்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அந்த நாட்டு பிரதமரையே கூட தூக்கி வந்திருப்பார். இப்ப பாருங்க வட போச்சு.

ஊரெல்லாம் தேடிவிட்டு தன் தொப்பைக்குக் கீழே குனிந்து பார்க்க மறந்த கதை

சமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.
அவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.
ஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.
தேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
CBI
The Central Bureau of Investigation (CBI) has decided in principle not to file any fresh case from the Liberhan Commission report, which indicted 68 people including BJP stalwarts Atal Behari Vajpayee and LK Advani for demolition of the Babri Masjid.

Recently, a meeting between CBI and Home Ministry officials was held during which the investigating agency said that prima facie there did not seem to be an iota of evidence to register a fresh case in the demolition case as it would not stand the legal scrutiny, officials privy to the meeting said. - The Hindu
நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கூம்புகளின்மீது அமர்ந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணை சமப்படுத்த வேண்டும்: பஜனைக்கு அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்யவேண்டும் - வாஜ்பேயி, லக்னவ் 5.12.1992 (பாபரி மஸ்ஜித் தகர்ப்புக்கு முதல்நாள்).
சி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.
ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
நன்றி : வினவு

நன்றி:சத்யமார்க்கம்


மிஃராஜ் தரும் படிப்பினைகள்...! (பகுதி 2)
மிஃராஜை நினைவு கூரும்போது என்னதான் அந்நாளில் செய்ய வேண்டும் என்கிற கேள்வியோடு முதல் பகுதியை நிறுத்தியிருந்தோம். இதற்கு மிஃராஜின் பொழுது என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்று நபி(ஸல்) கூறும் அச்சம்பவத்தில் தெளிவான வழிகாட்டுதல் உள்ளது.
மிஃராஜின் பொழுது நடந்த முக்கிய சம்பவங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுவோமானால் கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்:
 1. நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமிலிருந்து மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். அங்கு அவர்கள் தலைமையில் நபிமார்களுக்குத் தொழுகை நடக்கின்றது.
 2. நபி(ஸல்) அவர்கள் நபிமார்கள் அனைவரையும் சந்தித்து ஸலாம் கூறி நலம் விசாரிக்கின்றார்கள்.
 3. சுவர்க்கத்தின் மகத்துவம் காட்டப்படுகின்றது.
 4. அனாதைகளின் சொத்தை உண்டவன், வட்டி வாங்கியவன், விபச்சாரம் செய்தவன் இவர்களின் கோர நிலை நரகத்தில் காட்டப்படுகின்றது.
 5. திரும்பும் வழியில், நபி(ஸல்) அவர்களின் தொடர் கோரிக்கைக்குக் செவிகொடுத்து இறைவனால் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்படுகின்றது.

  படிப்பினைகள் என எடுத்துக்கொள்ள வேண்டுமெனில், மேற்கண்ட ஐந்து நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.
  இதில் ஒவ்வொன்றும் ஒரு நீண்ட வழிகாட்டுதலை இச்சமூகத்திற்கு வழங்குகின்றது. அதனை ஒவ்வொன்றாக மிகச் சுருக்கமாக இங்கு காணலாம்.
  • நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமிலிருந்து மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். அங்கு அவர்கள் தலைமையில் நபிமார்களுக்குத் தொழுகை நடக்கின்றது.
  ஒரு பயணத்தின் துவக்கம் எவ்விதம் அமைய வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டலாக மிஃராஜின் துவக்க நிகழ்வான மஸ்ஜித் அல்-அக்ஸாவில் நடந்த இத்தொழுகையினைக் குறிப்பிடலாம். மிஃராஜின் இறுதியில்தான் முஸ்லிம்களுக்கு 5 வேளை தொழுகை கடமையாக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவன் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்கின்றானோ அவன் அந்நோக்கத்தை பெற்றுக் கொள்கின்றான், பிரயாணியின் பிரார்த்தனையை இறைவன் அங்கீகரிக்கின்றான் போன்ற நபி மொழிகளை இங்கு நினைவுகூர்தல் சிறப்பானதாகும்.

  ஒரு பயணத்தின் நோக்கம் பூர்த்தியடைய இறைவணக்கத்தைக் கொண்டு அப்பயணத்தைத் துவங்குதல் சிறப்பானது என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது. அதேவேளை நபி(ஸல்) அவர்களின் இந்த மிஃராஜ் பயணத்தின்போது அனைத்து நபிமார்களுக்கும் தலைமை ஏற்று நபி(ஸல்) அவர்களால் நடத்தப்பட்ட இத்தொழுகை தற்பொழுது உலக முஸ்லிம்களின் கிப்லாவான மஸ்ஜித் அல்-ஹராமில் நடக்காமல், முதல் கிப்லாவான மஸ்ஜித் அல்-அக்ஸாவில் நடந்தது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

  அனைத்து நபிமார்களும் இவ்வுலகில் ஒரே இடத்தில் கூடிய சிறப்பை வல்ல நாயன் ஒரு பள்ளிவாசலுக்கு கொடுக்கின்றான் எனில், அப்பள்ளிவாசல் இறைவனிடத்தில் எத்தகைய சிறப்புக்குரியதாக இருக்கும் என்பதைத் தனியாக கூறிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்பகால முஸ்லிம்களின் (தொழுகையில் முன்னோக்கப்படும் திச) கிப்லாவாக இருந்த பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜித் அல்-அக்ஸாவிலிருந்து கிப்லாவை இன்றைய மஸ்ஜித் அல்-ஹராமிற்கு (கஃபா ஆலயம) இறைவன் மாற்றியது நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையினாலாகும். அதுவரை முஸ்லிம்களாக வேடமிட்டு நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த யூதர்களை மக்களுக்கு அடையாளம் காண்பிக்க அந்தக் கிப்லா மாற்றம் பெருந்துணையாக இருந்தது.

  கிப்லாவாக இருந்த பைத்துல் முகத்தஸ் மாற்றப்பட்டிருப்பினும் இறைவனிடத்தில் அதற்கு இருக்கும் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் தெளிவாக மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு நிகழ்ச்சியாகவே மிஃராஜின் பொழுது நடந்த இத்தொழுகை நிகழ்ச்சியைக் கருத முடிகின்றது.

  இதன் காரணத்தாலேயே அன்றுமுதல் இன்றுவரை ஃபலஸ்தீனத்தில் நிலைகொள்ளும் இறையில்லமான இந்த பைத்துல் முகத்தஸிற்காக ஆயிரமாயிரம் முஃமின்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து வருகின்றனர்.

  இந்தியாவில் 400 ஆண்டு காலப் பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜிதை தகர்த்த சங் பரிவாரத்திற்கு எதிராக இன்று அணி திரண்டு, அதே இடத்தில் பாபரி மஸ்ஜிதை கட்டியெழுப்பவும் மீண்டும் இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்காமல் தடுக்கவும் போராட முன்வந்திருக்கும் இந்திய முஸ்லிம்கள் ஒரு கணம் பைத்துல் முகத்தஸின் இன்றைய நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  ஆரம்பகாலங்களில் உமர்(ரலி) அவர்கள் ஆரம்பித்து, பிற்காலத்தில் ஸலாஹுத்தீன் அய்யூபிவரை பைத்துல் முகத்தஸிற்காக மிகப்பெரும் தியாகங்களைச் செய்தது எதற்காக? இறைவனிடம் இத்துணை மகத்துவமும் சிறப்பும் பெற்ற பைத்துல் முகத்தஸை இறை விரோதிகளிடம் எப்படி விடுவது என்ற ஒரே காரணமன்றி வேறு என்ன இருக்க முடியும்?

  அன்று இஸ்லாத்தின் வீரச் செம்மல்களான இவர்களால் துவங்கப்பட்ட பைத்துல் முகத்தஸிற்கான இவ்வீரப் போராட்டம் இதோ, இன்றைய அதிநவீன நூற்றாண்டிலும் மிக வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. எகிப்திலும், ஃபலஸ்தீனிலும் உள்ள இஸ்லாமிய வீரர்கள் இதனை தீரத்துடன் செய்து வருகின்றனர். மீள்பார்வை இதழில் வெளியான இது தொடர்பான ஒரு கட்டுரையை இவ்விடத்தில் மறுவாசிப்பு செய்வது மெத்தப் பொருத்தமாக இருக்கும.

  ஃபலஸ்தீனை வெற்றிகொள்ளல் இஃக்வான்களின் முடிவுறாத போராட்டம்
  ஃபலஸ்தீன், உலக முஸ்லிம்களின் அகீதாவோடு தொடர்புப்பட்டபூமி.அல்குர் ஆன் அதனை பரக்கத் செய்யப்பட்டது என்கின்றது.நபிமார்களின் அனைவரது போராட்டத்திலும் ஃபலஸ்தீனுக்கு ஒரு முக்கிய இடம் இருந்திருக்கின்றது. உலகை ஆட்சி செய்த அனைத்து சமூகங்களும் ஃபலஸ்தீனை தமது ஆளுகைக்குள் கொண்டுவருவதற்காக கடும் பிரயத்தனங்கள் செய்திருக்கின்றன. ஏனெனில் ஃபலஸ்தீனை தம் கைவசம் வைத்திருக்கும் சமூகம் தான் உலகிற்கு தலைமையினை வழங்கியிருக்கின்றது.

  அந்தவகையில் இஸ்ரா நிகழ்வுடன் ஃபலஸ்தீன் பூமியின் தலைமை நபியவர்களிடம் அல்லாஹ் தஆலாவால் ஒப்படைக்கப்பட்டது. அந்த நம்பிக்கையின் விளைவால்தான் ஃபாலஸ்தீனை நோக்கிய படையெடுப்புகள் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. இறுதியில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஃபலஸ்தீன் முழுமையாக முஸ்லிம்களிடம் வருகிறது.

  இடைக்காலத்தில் சில வருடங்கள் முஸ்லிம்களிடமிருந்து ஃபலஸ்தீன் கிறிஸ்தவர்கள் கைக்கு நகர்ந்திருந்தாலும், ஸலாஹூத்தீன் அய்யூபியின் காரணமாக மீண்டும் ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் கைக்கு வருகிறது. அன்று முதல் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் கைகளில்தான் இருந்திருக்கிறது. 1948 மே மாதம் 15-ம் திகதியுடன் உத்தியோக பூர்வமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டதுடன் பைத்துல்முகத்தஸ் உட்பட ஃபலஸ்தீனின் பெரும்பகுதி முஸ்லிம்களை விட்டுச்செல்கிறது.

  ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் அகீதாவில் ஒரு பகுதி, அது விட்டுக் கொடுக்கப்படக்கூடாது-இஸ்லாமிய உலகின் இதயத்தில் ஒரு யூத நாடு தோன்றிவிடக்கூடாது என்ற ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தவரின் போராட்டம். இன்று வரை தொடரும் போராட்டம். ஃபலஸ்தீன் முழுமையாக மீட்கப்படும் வரை நடைப்பெறப்போகும் போராட்டம்.

  ஃபாலஸ்தீன விவகாரத்தில் இவர்கள் ஆரம்பமுதலே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். 1930 களில் ஃபாலஸ்தீன விவகாரத்திற்கான தனிப்பிரிவு இஃக்வான்களால் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக 1936ம் ஆண்டு புரட்சியில் அமீன் ஹுசைனியுடன் பல இஃக்வான்கள் பங்கு பெற்றனர். தொடர்ந்து, 1938ஆம் ஆண்டு நடைப்பட்ட இஸ்ஸுத்தீன் கஸ்ஸாம் புரட்சியுலும் பல இஃக்வான்கள் கலந்துக்கொண்டனர். பின்னர் ஃபலஸ்தீனுக்குள்ளேயே இருந்து செயல்படும் நோக்கில் 1946 ஆம் ஆண்டு இஃக்வான்களது கிளை ஒன்று ஃபலஸ்தீனில் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக ஜமால் ஹுசைனி என்பவர் நியமிக்கப்பட்டார்.

  மறுபுறத்தில் எகிப்துக்குள்ளே யூதர்களின் நடவடிக்கைகல் பலம் பெறத்தொடங்கின. 1943ஆம் ஆண்டு எகிப்தில் சியோனிச இயக்கத்தின் பிரிவு அரச அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1944ஆம் ஆண்டு அலெக்சாந்திரியாவில் நடைப்பெற்ற அவர்களது மாநாட்டில் சாமாதானத்தில் மூலமோ அல்லது யுத்தத்தின் மூலமோ இஸ்ரேல் உருவாகியே தீரும் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். எகிப்தின் கம்பெனிகளில் 40 வீதமானவறை யூதர்களே தம் வசம் வைத்திருந்தார்கள். இந்த அபாயகரமான நிலையை எதிர்த்து இஃக்வான்கள் மாத்திரமே போர்க்கொடி தூக்கினார்கள்.

  இரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானிய அரசு எகிப்திய யூதக் கம்பெனிகளின் உதவியுடன் ஆயிரக்கணக்கான யூதர்களை ஆயுத ரீதியாக பயிற்றுவித்தது. அப்போது இஃக்வான்கள் மாத்திரமே தமது உரைகள் ஊடாகவும் துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் ஊடாகவும் இந்தக் கம்பெனிகளின் உற்பத்திகளை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். பல மாநாடுகளை நடத்தினார்கள்.அரபுத்தலைவர்களை உசுப்பிவிட்டார்கள்.

  இதன் விளைவாக ஃபலஸ்தீனுக்கான முதலாவது அரபு மாநாடு நடைப்பெற்றது. அதன் விளைவாக அரபு நாடுகளை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டது. எனவே லண்டனில் அரபிகளையும் யூதர்களையும் இணைத்து வட்டமேஜை மாநாட்டை நடத்தினார்கள். அதில் ஃபலஸ்தீனுக்குள்ளே யூதர்கள் மேற்க்கொள்ளும் சிறைப்பிடிப்புகளும் சித்திரவதைகளும் கொலைகளும் நிறுத்தப்படுவதற்கு உத்திரவாதம் தரப்பட்டது. அத்துடன் வெளியிடங்களிலிருந்து யூதர்கள் ஃபலஸ்தீனுக்கு வருவதில் ஒரு வரையறை இடப்பட்டது.

  இதனை யூதர்கள் அங்கீகரிக்கவில்லை. உடனே பிரித்தானியாவை விட்டுவிட்டு அமெரிக்காவிடம் போய் உதவிக்கேட்டார்கள். அதன் விளைவாக, அமெரிக்க-பிரித்தானிய நட்புறவு சபை உருவாக்கப்பட்டு அதன் தீர்மானத்தின் பிரகாரம் உடனடியாக ஒரு லட்சம் யூதர்கள் ஃபலஸ்தீனுக்கு அனுப்பப்பட அனுமதிக்கப்பட்டது. அத்துடன் யூதர்கள் ஃபலஸ்தீன நிலங்களை வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.

  தொடர்ந்தும் 1947 நவம்பர் 29ஆம் திகதி அமெரிக்க, பிரித்தானிய அழுத்தத்தின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபை ஃபலஸ்தீனை இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் தீர்மானத்தை வெளியிட்டது. ஒன்று யூதர்களுக்குரியது.மற்றையது அரபிகளுக்குரியது. இத்தீர்மானத்தை அரபுத்தலைவர்கள் எதிர்த்தார்கள்.

  இஃக்வான்கள் ஒரு பெரும் எதிர்ப்பு மாநாட்டை ஏற்பாடு செய்தார்கள். அதில் சவூதி அரேபியா,எகிப்து,சிரியா,சூடான் போன்ற நாடுகளின் பல அறிஞர்கள் கலந்துக்கொண்டனர். அந்த மாநாட்டில் உரையாற்றிய இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள், "ஃபலஸ்தீனே எமது இரத்தங்கள் உனக்கு அர்ப்பணமாகட்டும், இந்த மேடைமீது நின்று நான் உரத்துச்சொல்கிறேன். இஃக்வான்களில் பத்தாயிரம் பேர் ஃபலஸ்தீனில் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அழைப்பை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்" என்று அறிவிப்புச் செய்தார்கள்.

  மாநாட்டின் நிறைவில் ஃபலஸ்தீனைக் காப்பதற்கான உயர்சபை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் இமாமவர்களும் அங்கத்துவம் வகித்தார்கள். அவர்கள் ஃபலஸ்தீன போரட்டத்திற்கான ஆயுதங்களையும் நிதியையும் திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

  1948ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி இஃக்வான்கள் ஆக்கிரமிக்கும் யூதர்களுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்தார்கள். ஒவ்வொரு அங்கத்தவனும் ஜிஹாதிற்காக தன்னை தயார் படுத்திக் கொள்வதை கடமையாக்கினார்கள். இஃக்வான்களின் இந்த உறுதியைக் கண்ட பல தலைவர்களும் அவர்களுடன் ஒத்துழைக்க முன்வந்தார்கள். எகிப்திய அரசப்படையில் இருந்த பல தளபதிகள் தமது தொழிலை ராஜினாமா செய்துவிட்டு இஃக்வான்களது படையில் வந்து இணைந்துக்கொண்டனர்.

  இஃக்வான்களின் இராணுவ பயிற்சி சிரியாவில் நடைப்பெற்றது.அது முஸ்தபா ஸிபாஈ, உமர் பாஹாவுத்தீன் அல் அமீரி,முஹம்மத் ஹாமித், அப்துல்லாஹ் ஹில்லாக் போன்ற அன்றைய முக்கிய இஃக்வான்களின் தலைவர்களினது மேற்பார்வையில் நடைபெற்றது.உண்மையில் இந்த தலைவர்கள் நேரடியாக யுத்தத்தில் ஆயுதம் ஏந்திப்போராடினார்கள்.

  சிரியாவிலிருந்து வந்த படைக்கு முஸ்தபா ஸிபாஈ தலைமைத் தாங்கினார்கள். ஜோர்தானிலிருந்து வந்த படைக்கு அப்துல் லதீப் அபூகூரஃ தலைமை தாங்கினார்கள். ஈராக்கிலிருந்து வந்த படைக்கு முஹம்மத் மஹ்மூத் ஸவ்வாப் தலைமை தாங்கினார்கள். இவர்கள் தான் அன்றைய நாளில் அந்த நாடுகளில் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களாகவும் காணப்பட்டார்கள்.

  யுத்தம் நடைபெறுகின்றபோது, முஸ்தபா ஸிபாஈ அவர்களை ஏனையவர்கள், அவர் நேரடியாக யுத்தத்தில் ஈடுபடாமல் தலைமையகத்தில் இருந்துகொண்டு மேற்பார்வை செய்தால் போதுமானது என்றார்கள். நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்ட முன் அனுபவங்கள் அவருக்கு குறைவு என்பதே காரணம். ஆனாலும் அதனை மறுதலித்த முஸ்தபா ஸிபாஈ அவர்கள் "நான் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக வேண்டும் என்பதற்காவன்றி வேறு எதற்காகவும் இங்கு வரவில்லை." என்றார்.எனவே அவரும் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டார்.

  உண்மையில் 1948ஆம் ஆண்டு யுத்தத்தில் இஃக்வான்கள் காட்டிய வீரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. மிகக்குறைந்த மனித வளங்களுடனும் மிகக் குறைந்த ஆயுதங்களுடனும்-ஆனால் மிக உயர்ந்த ஈமானுடனும் அவர்கள் போராடினார்கள். எனவே தான் அவர்கள் ஏனையவர்களை விட அதிகமாக சாதித்தார்கள்.

  தபத்86 என்னும் இடத்தை கைப்பற்றுவதற்கான போராட்டம் இடற்கு சான்றாக உள்ளது. எகிப்திய படையினர் 3ஆயிரம் பேருடன் மூன்று நாட்களாக போராடினார்கள். வெற்றி கிடைக்கவில்லை. படைத்தளபதி முஹம்மது நஜீப் என்பவர் கூட போராட்டத்தில் காயப்பட்டார். மூன்றாம் நாள் முடிவில் அவர்கள் இஃக்வான்களிடம் உதவிக்கேட்டார்கள். இஃக்வான்கள் 50 பேரை மாத்திரம் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் படையின் முன்னணியில் நின்று போராடினார்கள். ஒரே நாளில் அந்த இடம் கைப்பற்றப்பட்டது. யூதர்கள் வெருண்டோடினார்கள்.

  1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி திடீரன யுத்த நிறுத்தத்திற்கு அரபுத் தலைவர்கள் உடன்பட்டுவிட்டார்கள். ஃபலஸ்தீனில் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. முஸ்லிம்கள் வெற்றியின் உச்சத்தில் நிற்கின்றபோது முழுமையான வெற்றியை பெறுமுன்னர் ஏன் இந்த யுத்த நிறுத்தம்?

  யூதர்கள் தமக்குத்தேவையான் ஆயுதங்களை வரவழைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த யுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபையைக் கொண்டு வந்தது. இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் விரைந்துச் செயல்பட்டார்கள். அரபுத் தலைவர்களுக்கு இந்த விடையத்தை தெளிவுப்படுத்த முற்பட்டார்கள். விளைவாக யுத்தம் மீண்டும் ஆரம்பித்த போதிலும் அது நீடிக்கவில்லை.

  இரண்டாவது தடவையாகவும் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இந்தத் தடவை யூதர்கள் நவீனகரமான ஆயுதங்களைக் கொண்டு குவித்தார்கள். யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளபோதே அதைப்பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாது, புதிய ஆயுதங்கள் கொடுத்த தைரியத்தில் முஸ்லிம்களைக் கொடூரமாக தாக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம்களுக்கு ஆயுதங்களைக்கொண்டு சேர்ப்பதற்கு அரபுத் தலைவர்களே தடையாக இருந்தார்கள். சில பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் படைகள் பலவந்தமாய் வாபஸ் வாங்க வைக்கப்பட்டன.

  எகிப்திய இஃக்வான்களின் படையினர் மேலகப் பயிற்சி என்ற போர்வையில் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். யூதர்கள் இஃக்வான்களில் கைதாவோரை சராசரி கைதியாக கருதாமல் போர்க் குற்றவாளிகள் என்று கூறி கொடூரமாகக் கொலைச் செய்தார்கள். இறுதியில் இது போன்ற சதிகளின் விளைவாக முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கும் யூதர்களுக்கு முன்னால் தோற்றுப் போனார்கள். ஃபலஸ்தீன் பரிதாபமாய் ஆக்கிரமிக்கும் யூதர்களின் கைகளில் விழுந்தது.

  இந்த யுத்தம்தான், உலகிற்கு இஃக்வான்களின் பலத்தை அறிய வைத்தது. இதன் பின்னர்தான் இமாம் ஹஸனுல் பன்னா கொலை செய்யப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு மேற்குலகம் வந்தது. 1948ஆம் ஆண்டு "ரோஸ் காரீப்" எனும் யூதப்பெண் பத்திரிகையாளர் ஒருவர் "சண்டே மிரர்" எனும் பத்திரிக்கைக்கு எழுதிய ஒரு கட்டுரையில் இஃக்வான்களைப்பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

  "தற்பொழுது இஃவானுல் முஸ்லிமூன் என்னும் ஈர்ப்புமிக்க இந்தப் பெயருக்குப்பின்னால் உள்ள அந்த மனிதர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. தற்போது ஃபலஸ்தீனில் உள்ள யூதர்கள்தான் இவர்களது மிகப்பெரிய எதிரிகள். யூதர்கள்தான் இவர்களது அடிப்படை இலக்கு. மத்திய கிழக்கின் பல நகரங்களில் இதன் அங்கத்தவர்கள் யூதர்களின் சொத்துகளை அழிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் தற்பொழுது பஹ்ரைனிலும் யெமனிலும் யூதர்கள் மீது அத்துமீற ஆயத்தமாகிறார்கள். அவர்கள் தான் அமெரிக்கக் கவுன்சில்களை தாக்கியவர்கள்.

  பகிரங்கமாகவே அரபு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேறவேண்டும் எனக்கேட்டுள்ளனர். ஃபலஸ்தீனிலுள்ள யூத நாடு ஐக்கிய நாடுகள் சபையிடம் எதிர்பார்ப்பது நாட்டை இரண்டாகப் பிரிக்கும் அதன் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் சர்வதேசப் படைகளையல்ல. மாற்றமாக இஃவனுல் முஸ்லிமூன்களை நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் தகுதியான படைகளைத்தான் எதிர்ப்பாக்கிறார்கள். இந்த இயக்கத்தின் பெயரில் இருக்கும் அடிப்படை அபாயத்தை உலகம் அறிந்து கொள்ளவேண்டும்.

  மிக அவசரமாக உலகம் அந்த உண்மையை உணர்ந்துக் கொள்ளவில்லையெனின், ஐரோப்பா இந்த நூற்றாண்டின் கடந்த நாட்களில் நாஸிஸ இயக்கத்திடம் கண்டதை இங்கேயும் காணவேண்டியிருக்கும்.வட அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரையிலும்-துருக்கி முதல் இந்தியாவரையிலும் பரந்த ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஐரோப்பா எதிர்க்கொள்ள வேண்டிவரும்."

  இவை யூதப்பெண் எழுத்தாளர் ஒருவரின் வார்த்தைகள். மிகப்பெரிய உண்மைகள் விஷம் கலந்து தரப்பட்டிருக்கின்றன. இந்த உண்மைகள் ஃபலஸ்தீன் விவகாரத்தில் இஃக்வான்களின் பாரிய பங்களிப்புகளுக்கு போதிய சான்றுகளாகும். இஃக்வான்கள் ஒரு பெரும் சக்தி என்பதை அன்றே அங்கீகரித்துவிட்டனர். அவர்களால்தான் ஃபலஸ்தீனும் உலகின் செல்வாக்கும் மேற்குலகிற்கு கிடைக்காமல் போக முடியும் என்றுக் கண்டனர். எனவேதான் இன்று வரைக்கும் மேற்குலகின் பிரதான எதிரியாக அவர்கள் பார்க்கப்படுகின்றனர். அல்லாஹ் அவர்களை வெற்றிபெறச்செய்வானாக.

  நன்றி: மீள்பார்வை மே 2007
  கணினியாக்கம்: சகோ. செய்யது அலி
  வ்வாறு இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகட்டத்திலிருந்து பைத்துல் முகத்தஸ் இஸ்லாமிய உலகோடு பின்னிப் பிணைந்தே காணப்படுகின்றது. முஸ்லிம்களின் இரத்தத்தோடு கலந்த உணர்வு என்று கூறும் அளவிற்கு பைத்துல் முகத்தஸ் இன்று இஸ்லாத்தின் நிலைநிற்பிற்கான முக்கியத்துவம் பெற்றதன் காரணத்தை மிஃராஜின் தொழுகை நிகழ்ச்சி தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
  நபி(ஸல்) அவர்களின் மிஃராஜ் பிரயாணத்தின் மூலம் முஸ்லிம்களுக்குக் கிடைக்க வேண்டிய உணர்வு இவ்வாறிருக்க, இன்று மிஃராஜ் நினைவு கூர்தல் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களுக்கு அப்பிரயாணத்தில் பயன்பட்ட புராக் என்ற யாரும் பார்த்திராத வாகனத்திற்கு ஒரு வினோத உருவம் கொடுத்து, சிறு பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த பொம்மைகள் கிடைக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியைப் போன்று அதனை வீட்டில் சட்டம் போடு மாட்டி வைத்துக் கொண்டு பூரிப்படைவதில் என்ன பிரயோஜனம் இருக்கின்றது? இன்று உலகில் இறைவனிடம் மிகப்பெரும் மதிப்பு வாய்ந்த அந்த இறை இல்லத்திற்காக, நபி(ஸல்) அவர்கள் முதல், இவ்வுலகில் அதற்கு முன்னர் வந்துள்ள அனைத்து நபிமார்களும் ஒருங்கே ஒரே நேரத்தில் கூடித் தொழுத சிறப்பு வாய்ந்த இஸ்லாமிய சமூகத்தின் இதயநாடியான மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்காக ஒரு கூட்டம் முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகம் செய்து கொண்டிருக்கும் வேளையில், கையில் புராக் என்ற பெயரில் ஒரு வினோதப் படத்தை வைத்துக் கொண்டு மிஃராஜ் நினைவு கூர்தல் எனத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மற்றொரு சாராரை நினைத்துப் பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை.

  முஸ்லிம் சமூகத்தின் புராக் என்ற பெயரில் பட ஆராதனைச் செயல்களும், சடங்குகளும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத வணக்கங்களும் யூதர்களின் சூழ்ச்சிகளுக்கு எதிராகக் குடும்பம் குடும்பமாகத் தங்கள் இன்னுயிரை மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்காக ஈந்து கொண்டிருக்கும் அந்த ஷஹீத்களின் போராட்டங்களைக் கேலி செய்வதாகவும் பைத்துல் முகத்திஸை முஸ்லிம்களின் மனங்களிலிருந்து அப்புறப்படுத்த சூழ்ச்சி வலை பின்னும் யூதர்களுக்குத் துணையாகவும் இருக்கும் என்பதை இச்செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் உணர வேண்டும்.
  • நபி(ஸல்) அவர்கள் நபிமார்கள் அனைவரையும் சந்தித்து ஸலாம் கூறி நலம் விசாரிக்கின்றார்கள்.
  மிஃராஜ் பயணத்தின் மற்றுமோர் அரிய படிப்பினையாக நபிமார்களுக்கு ஸலாம் கூறி நலம் விசாரித்த இந்நிகழ்வைக் குறிப்பிடலாம். இவ்விடம், முஃமின்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாவர் ... ”; ஸலாத்தினைக் கொண்டு சமாதானத்தைப் பரப்புங்கள்; நலம் விசாரித்தலும், சலாம் கூறலும் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளாகும் என்பன போன்ற நபிமொழிகள் நினைவு கூரத்தக்கன.
  இறைவனின் அருளுக்குப் பாத்திரமான இஸ்லாமியச் சமூகம் இன்று உலகில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்திற்குமான அடிப்படைத் தவறு இங்கே இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
  சகோதரத்துவத்தைத் தலையாய கடமையை போன்று வலியுறுத்தும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு மூச்சுக்கு முன்னூறு தரம் ஒற்றுமை, சகோதரத்துவம் என வாய், கை வலிக்கப் பேசவும் எழுதவும் செய்யும் இன்றைய இஸ்லாமியத் தலைவர்களிடையே, அவர்கள் ஒரே கொள்கை, கருத்து, சிந்தனையில் இருந்தாலுங்கூட ஒருவொருக்கொருவர் குறைந்தபட்சம் ஸலாம் மட்டுமாவது சொல்லிக் கொள்கின்றார்களா? என்றால் இல்லை என்கிற துர்பாக்கிய நிலையைக் காண்கிறோம்.
  ஒருமுறை சென்னை மண்ணடியில் உள்ள ஒரு பள்ளிவாசலில், துவக்கத்தில் ஒரே சிந்தனையில் ஒரே இடத்தில் பயிற்சி பெற்று, பின்னர் வெவ்வேறு இயக்கங்களாக பரிணமித்த இருபெரும் சமூகத் தலைவர்கள் ஒரு ஜும்ஆ தொழுகையின் பொழுது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுகூட சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சில நல்ல உள்ளங்களின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்ட சம்பவமே. ஆனால், நடந்தது என்ன? தொழுகை முடிந்து இருவரும் வெளியேறும் இடத்தில் ஒருவொருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொண்ட பொழுது குறைந்த பட்சம் ஒரு சலாம் கூட கூறிக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் அவரவர், அவரவர் வழியில் பிரிந்து சென்றனர்.
  இவ்வுலக நன்மையில் மட்டும் நாட்டம் வைத்து, மேடைகளிலும் பத்திரிக்கைகளிலும் சரமாரியாக ஒருவர் மீது ஒருவர் அநாகரிக வசைமாரி பொழிந்து கொண்டு, நாட்டு மக்களின் சொத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் கவனமாக ஒன்று சேர்ந்து போட்டி போடும் அரசியல் கட்சி தலைவர்கள்கூட, நேரில் சந்திக்கும் பொழுது ஒரு மரியாதைக்காகவாது நலம் விசாரித்துக் கொள்கின்றனர். இந்த ஒரு சாதாரண நாகரிகச் செயலைக்கூட முஸ்லிம் இயக்கத் தலைவர்களிடம் காணமுடிவதில்லை. இதுதான் இவர்கள் கற்ற இஸ்லாமிய பழக்க வழக்கங்களா?
  சகோதரர்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக்கூடாது என்பதையும், முதலில் சலாமுக்கு யார் முந்திக் கொள்கின்றார்களோ அவர்களே அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்” என்பதையும் இவர்கள்தாமே இச்சமுதாயத்தைச் சேர்ந்த எளிய மக்களுக்கும் மேடையில் பேசிப் புரிய வைத்தார்கள்?. இப்படிப்பட்டவர்கள் ஒற்றுமை, சகோதரத்துவம் எனக் கூறி யாரை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்?.
  இஸ்லாம் தனது ஒவ்வொரு வழிகாட்டுதலிலும் இது போன்று சகோதரத்துவத்தையும் அதனைப் பேணுவதன் அவசியத்தையும் வலியுறுத்தும் பொழுது, அதனைப் போதித்துச் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் இவ்வாறு ஒவ்வொரு திசையில் சமூகத்தை பிளவுபடுத்திக் கொண்டு இருக்க, சமூகத்தின் ஒரு பகுதி மக்களோ, சகோதரத்துவத்தை வளர்க்கும் விதத்தில் நினைவுகூர வேண்டிய இதுபோன்ற இஸ்லாமிய நிகழ்வுகளில் ஒருவொருக்கொருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி யார் வழிகெட்டவர், யார் நேர்வழி பெற்றவர் என்ற மயிர் பிளக்கும் ஆராய்ச்சி செய்து கொண்டு திரிகின்றனர். மிஃராஜ் பயண நிகழ்ச்சி மனதில் எழும் பொழுதே நபி(ஸல்) அவர்கள் சந்தித்த நபிமார்களுக்கு ஸலாம் கூறி நலம் விசாரித்த சம்பவம் நினைவில் வந்து உடனடியாக, தான் அதுவரை பேசாமல் பிணங்கிக் கொண்டிருக்கும் சகோதரரை அழைத்து நலம் விசாரித்து சலாம் கூற வேண்டாமோ?
  • சுவர்க்கத்தின் மகத்துவம் காட்டப்படுகின்றது.
  நபி(ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் நிகழ்வின் பொழுது ஏழு வானம் கடந்த உடன் முதலில் அவர்களுக்கு சுவர்க்கத்தின் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இது இஸ்லாமிய வழிகாட்டுதலின் சிறப்பான ஓர் அடிப்படையாகும்.
  இஸ்லாம் எதையும் நன்மையிலிருந்தும், நல்ல விஷயங்களிலிருந்தும் ஆரம்பிக்கக் கூறுகின்றது. திருக்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் உற்று நோக்குபவர்களுக்கு இது மிகஎளிதாக விளங்கும். இஸ்லாம் நன்மையை ஏவித் தீமையை தடுக்கக் கூறுகின்றது. அதாவது தீமையைத் தடுத்து விட்டு, நன்மையை ஏவக் கூறவில்லை. ஆனால் தீமையைத் தடுக்கும் பொழுது நன்மைக்கான வழிகாட்டுதலைக் கொடுத்துத் தீமையைத் தடுக்கக் கூறுகின்றது. அதே போன்றே, ஒரு விஷயத்தைக் குறித்து அறிவுரை கூறும் பொழுது முதலில் நல்ல விஷயங்களைப் பேசி அதில் ஆர்வமூட்டிக் கொண்டு பின்னர் தீமைகளையும் தவறுகளையும் குறித்து பட்டியலிட்டு, தீமைகளிலிருந்து விலகாமலிருப்பதால் விளையும் கேடுகளை விவரிக்கின்றது. இது போன்றே சுவர்க்கம் நரகம் விஷயத்திலும் இஸ்லாம் ஒப்பீட்டு விளக்கம் கூறுகின்றது.
  நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலகட்டங்களில் அவர்களின் செயல்திட்டம் முதலில் மக்களை நன்மையை நோக்கி அழைப்பதிலேயே குறியாக இருந்தது. நன்மையை இஸ்லாத்தை நோக்கிய அழைப்பிற்கான அவசியத்தைக் குறித்து விவரிக்கும் பொழுது, இஸ்லாத்தை ஏற்காமல் இருப்பதால் விளையும் தீமைகளை விவரிக்கும் நரகத்திற்குரிய வசனங்கள் இறங்கின. சாதாரணமாகவே ஒருவிஷயத்தைக் குறித்து மக்களிடம் பேசும் பொழுது முதலில் நல்ல விஷயங்களுடன் ஆரம்பிக்கும் பொழுது, அதில் மக்களின் கவனம் முழுமையாக திரும்பும். இந்த வகையில் விண்ணேற்றத்தின்போது நபி(ஸல்) அவர்களுக்கு முதலில் சுவர்க்கத்தின் வளங்கள் காண்பிக்கப்பட்டு, பின்னர் நரகத்தின் கொடுமைகள் காண்பித்துத் தரப்பட்டன.
  சுவர்க்க, நரகக் காட்சிகள் நபி(ஸல்) அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது மிஃராஜ் பயணத்தின் மூலம் இச்சமூகத்திற்கு இறைவன் அறிவித்துக் கொடுக்கும் மிகப்பெரிய அத்தாட்சியாகும். கண்களால் காணாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் சுவர்க்கம், நரகத்தை நம்பி இஸ்லாத்தை ஏற்றிருக்கும் முஸ்லிம்களுக்கும், இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என விட்டேற்றியாக நம்பாமல் இருக்கும் மற்ற மக்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கு நேரில் அவற்றை காண்பித்துக் கொடுத்து அவை எதுவும் பொய்களல்ல; அனைத்தும் உண்மைகளே என ஆணித்தரமாக எடுத்துக்கூறி மக்களை நேர்வழிக்குக் கொண்டுவர இறைவன் செய்த மிகப்பெரும் அற்புதம்தான் இந்நிகழ்ச்சியாகும். அல்லாஹ்வின் தூதரின் சொற்களில் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள், அந்தப் பேரற்புத நிகழ்வுகளைத் தங்கள் நபியின் நாவின் மூலம் இந்நிகழ்வில் நடந்ததையெல்லாம் தங்கள் கண்களால் கண்டனர். அதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் நம்பிக்கையில் அதிகம் உறுதிபடவும், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து கொண்டிருப்பவர்கள் இஸ்லாத்தை உறுதியாக நம்பவும், நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதன் உண்மை நிலையை எடுத்துக் கூறி அதற்குச் சாட்சியாக இருந்து கொண்டு அவர்களை இஸ்லாத்தில் அழைக்கவும் இறைவன் செய்த மகத்தான காரியமே இந்நிகழ்வாகும்.

  எனவே இஸ்லாத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தி மேலும் வீரியத்துடன் மக்களிடையே சுவர்க்கம், நரகத்தின் உண்மை நிலையினை விளக்கிக் கூறி இஸ்லாத்தை எடுத்துச் செல்ல ஊக்கம் வழங்கும் இச்சிறப்பு மிகு மிஃராஜ் சம்பவத்தின் பெயரைக் கூறிக் கொண்டு, இஸ்லாம் காட்டித்தராத அனாச்சாரங்களைச் செய்து கொண்டிருப்பது எவ்வகையில் இறைவனிடத்தில் பொருத்தத்திற்குரிய செயலாகும் என்பதை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் சிந்தித்து அவற்றைக் கைவிடவேண்டும்.
  • அனாதைகளின் சொத்தை உண்டவன், வட்டி வாங்கியவன், விபச்சாரம் செய்தவன் இவர்களின் கோர நிலை நரகில் காட்டப்படுகின்றது.
  மக்கள் தங்களுக்குள்ளும் பிறருக்கும் செய்யும் தீமைகளினால் விளையக் கூடிய மிகக் கொடிய தண்டனைகளைக் குறித்து ஆதாரத்துடன் கூறும் வகையில் நபி(ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் நிகழ்வில் காட்டப்பட்ட நரகக்காட்சிகள் அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக அனாதைகளின் சொத்துகளை அநியாயமாக அபகரித்து உண்டவர்கள், மக்களின் உழைப்பை அநியாயமான முறையில் வட்டி மூலம் உண்டவர்கள் மற்றும் விபச்சாரம் செய்து கொண்டிருந்தவர்கள் அனுபவிக்கும் தண்டனைகளை மட்டும் குறிப்பாக எடுத்துக் காட்டியதிலிருந்து இம்மூன்று பாவங்களும் இறைவனிடத்தில் எவ்வளவு வெறுப்புக்குரிய செயல்கள் என்று அறியமுடிகின்றது.

  உண்மையிலேயே இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்று, இறைவனின் மீதும் இறை மார்க்கத்தின் மீதும் அதீத அன்பு வைத்துள்ளவன் ஒருபோதும் இத்தகைய பாவங்களைச் செய்யலாகாது என்பதைத் தனியாக எடுத்துக் கூறி உணர்த்தும் வகையிலும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

  உலகில் இன்று வட்டியின் மூலம் கொழுக்கும் முதலாளிகள் ஒரு பக்கம் பெருகிச் செல்ல, அதனால் வாழ்வதற்கு வசிப்பிடம்கூட இல்லாமல், உண்பதற்கு உணவில்லாத நிலையில், பல குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ளுதல் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது.

  தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், வங்கியிலிருந்து வாங்கிய கடனை அடைக்க இயலாமல் குடும்பத்தோடு மாண்டு போன ஏழை விவசாயிகள் ஏராளம். வட மாநிலம் ஒன்றில் இந்திய வங்கியிலிருந்து வாங்கிய கடனை குறிப்பிட்ட தினத்தில் அடைக்க இயலாமல் வங்கியினர் கொடுத்த கொடும் தொல்லை தாங்க முடியாமல் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட கொடுமையும் நடந்தது. இவ்வாறு இன்று மக்களை ஆளும் அரசாங்கமே வட்டியை ஏழை மக்கள்மீது சுமத்தி அவர்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்து கொண்டு வருகின்றது.

  தன்னைச் சுற்றி ஓர் அநியாயம் நடக்கக்கண்டால் அதனைக் கையால் தடுக்க வேண்டும்; இயலவில்லை எனில் அதனை வாயால் தடுக்க வேண்டும்; அதற்கும் இயவில்லையேல் விட்டு ஒதுங்கி விட வேண்டும்; இது ஈமானின் கடைசி நிலையாகும் என்ற எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களின் கட்டளையை மனதில் ஏற்றிருக்கும் இந்நடுநிலை சமுதாயம், இந்த அநியாயங்களைக் கண்டு எதிர்த்துப் போராடி அவைகளைக் களையவும், அப்பாவிகளைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முனைய வேண்டிய இவ்வுயர்ந்த சமுதாய அங்கங்கள் குறைந்த பட்சம், அப்படிப்பட்ட அநியாயத்திலிருந்து ஒதுங்கி ஈமானின் கடை நிலையிலாவது வாழ்கின்றதா? என்பதை உற்று நோக்கினால் அதிர்ச்சியே மேலோங்குகிறது.

  வட்டியின் கொடுமையையும், அதனால் விளையும் கெடுதியையும் உணர்த்தும் இந்த மிஃராஜ் சம்பவத்தைக் காரணம் வைத்து இஸ்லாம் காட்டித்தராத பல்வேறு சம்பவங்களைச் செய்ய முன்வரும் இஸ்லாமிய சகோதரர்கள், மிஃராஜ் சம்பவம் உண்மையிலேயே தரும் படிப்பினையான வட்டிக்கு எதிராகப் போராடும் சிந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக உழைக்க முன்வரவேண்டும்.
  • திரும்பும் வழியில், நபி(ஸல்) அவர்களின் தொடர் கோரிக்கைக்குச் செவிகொடுத்து இறைவனால் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப் படுகின்றது.
  இச்சம்பவத்தில் இரு விஷயங்கள் இச்சமூகத்திற்கு உணர்த்தப்படுகின்றன. முதலாவது,
  தினசரி 5 வேளைத் தொழுகை கட்டாயக் கடமை என உணர்த்தப்படுகின்றது. அது தினசரி 50 வேளையாக இருந்தது; இறைவனின் மிகப்பெரும் கருணையினால் குறைக்கப்பட்டது என்பதும் தெளிவிக்கப்பட்டுள்ளது.
  இரண்டாவது,
  இறைவனிடம் கேட்பதற்கு எவ்வித வரம்பும் இல்லையெனவும், என்ன கேட்டாலும், எவ்வளவு முறை கேட்டாலும் வாரி வழங்கும் மிகப்பெரும் கொடையாளன், அன்பு உள்ளம் படைத்தவன்தான் இவ்வுலக இறைவன் எனவும், அவ்வாறு கேட்பவர்களுக்கு நிச்சயம் வல்ல நாயன் பதிலளிக்கின்றான் என்பதையும் ஆதாரத்துடனும் இங்குச் சுட்டி உணர்த்தப்படுகின்றது.

  இன்னும் நான் குறைக்கக் கேட்டிருந்தால் வல்ல இறைவன் குறைத்திருப்பான்; ஆனால் இதற்குமேல் குறைத்துக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது; எனவே திரும்பி விட்டேன் என எம்பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை ஐந்து வேளையாகக் குறைத்தாலும் "இதை ஒவ்வொரு நாளின் ஐவேளையும் முறையாகக் கடைபிடிப்பவர்களுக்கு ஐம்பது வேளைத் தொழுகையின் நன்மையளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தும், பிரார்த்தனை செய்வதன் முக்கியத்துவமும், கேட்பவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாத மிகப்பெரும் கொடையாளன் தான் இறைவன் என்பதும் தெளிவாகின்றது.

  ஒருநாளைக்கு 50 முறை என்பதை 5 ஆகக் குறைத்துக் கருணை காட்டிய அந்த இறைவனை மனதார ஏற்றுக் கொண்ட இச்சமூகத்தில் உள்ள ஒரு பெரும் கூட்டத்தினரான மக்களே தொழுகையின் முக்கியத்துவத்தையும், பிரார்த்தனையின் முக்கியத்துவத்தினையும் அறியாமல் இருக்கும் பொழுது அவர்களிடம் இப்புனித மிஃராஜின் சிந்தனையாக, கேட்பவர்களுக்கு வாரி வழங்கும் இறைவனின் மகிமையையும் இஸ்லாத்தின் மகத்துவத்தையும் எடுத்துச் சொல்வது இந்நாளினை நினைவு கூர்வது ஆகாதோ? அதனை விடுத்து இப்புனிதமிகு சம்பவம் நிகழ்ந்த இரவின் பெயரைக் கூறிக் கொண்டே இஸ்லாமும், நபி(ஸல்) அவர்களும் கற்றுத்தராத அனாச்சார செயல்களையும், தஸ்பீஹ் என்ற பெயரில் புதியதொரு தொழுகையையும் நிறைவேற்றுவதும் இரவு முழுவதும் விழித்திருந்து இல்லாத தொழுகையைத் தொழுததனால், கடமையாக்கப்பட்ட ஃபஜ்ருத் தொழுகையைத் தொழாமல் தூங்கி விடுவதும் எத்தகைய கொடிய பாவமான செயல் என்பதை நாம் உணர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும்.

  எனவே மிஃராஜ் என்பது ஏதோ இரவு முழுவதும் விழித்திருந்து இஸ்லாம் காண்பித்துத் தராத செயல்களை செய்வதற்கோ, அனாச்சாரங்களையும் கட்டுக்கதைகளையும் நம்பி அறியாமையில் வீழ்வதற்கானதோ அல்ல. இந்நாளை மனதில் நினைத்தாலே, இறைவனின் மகத்துவமிக்க இல்லமான பைத்துல் முகத்தஸ் கண்முன் வரவேண்டும். அதனை மீட்டெடுப்பதற்காக அன்றுமுதல் இன்றுவரை வீர மரணம் எய்யும் வீரப்போராட்ட சகோதர, சகோதரிகள் நினைவுக்கு வரவேண்டும். இறைவனின் இல்ல மீட்புகான போராட்டத்தில் நம் பங்கு என்ன? என்பதைக் குறித்த சிந்தனையும் திட்டங்களும் மனதில் உதிக்க வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டெடுப்பதற்காக ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டிய அவசியத்தையும் அதனைச் செயல்படுத்துவதற்கான அடிமட்ட கட்டமான ஒருவருக்கொருவர் ஸலாம் கூறி நலம் விசாரிக்கும் எளிய வழிமுறையும் நினைவுக்கு வர வேண்டும். அவ்வாறான ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் சிந்தப்படும் இரத்தத்திற்கு இறை சந்நிதியில் கிடைக்கும் மகத்தான பதவிகளைக் குறித்து நினைவு வரவேண்டும்.
  இவற்றை விடுத்து, சகோதரத்துவ சிந்தையின்றி சமூகத்தை பிளவுபடுத்திக் கொண்டு சென்றாலோ, இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்பட்டாலோ அல்லது வட்டி, விபச்சாரம்,போன்ற ஏனைய பாவமான காரியங்களில் ஈடுபட்டாலோ கிடைக்கும் நரக வேதனையை குறித்து மனதில் பயம் ஏற்பட வேண்டும். அப்படிப்பட்ட நரக வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றி, சுவனத்தின் உயர் அந்தஸ்தையும் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தினைத் தருமாறும் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைத் தொழுகைகளிலும் வல்ல நாயனிடம் இறைஞ்சி துஆச் செய்யவேண்டும்.

  இதுவே நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் எனும் விண்ணேற்ற நிகழ்வின் நினைவுபடுத்தல்களாகவும் படிப்பினையாகவும் முஸ்லிம் சமுதாயத்தால் என்றென்றும் அடையாளப்படுத்தப்பட வேண்டும்!

  தொடர் நிறைவுற்றது.

  நன்றி:சத்யமார்க்கம்
  மிஃராஜ் தரும் படிப்பினைகள்...! (பகுதி 1)
  printEmail
    
  இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாத, மறக்கடிக்க முடியாத திரும்பத் திரும்ப நினைவுகூரப்படும் பல்வேறு தருணங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவற்றில் இறைவனின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான இறை அத்தாட்சிகளில், இன்று இஸ்லாமிய உலகம் நினைவு கூரவேண்டிய ஒரு நிகழ்வுதான் இஸ்ரா எனப்படும் மிஃராஜ் நிகழ்ச்சி.
  உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் இறைவன் புறத்திலிருந்து தமக்கு வழங்கப்பட்ட அத்தாட்சிகளை தத்தம் சமுதாயத்திற்கு காண்பித்து அவர்களை இறைநம்பிக்கையில் உறுதி படுத்தியது போன்று, அகிலத்தின் அருட்கொடையாகிய பெருமானார் நபி(ஸல்) அவர்களுக்கும் தனது அத்தாட்சியை காண்பிப்பதற்காக இறைவன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் துணையுடன் நபி(ஸல்) அவர்களை விண்ணுலகில் கொண்டு சென்று சுற்றிக் காண்பித்த நிகழ்வுதான் மிஃராஜ் எனப்படுகின்றது.


  இஸ்லாம் ஓர் அறிவுப்பூர்வமான மார்க்கமாகும். அதில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும், செய்தியும் இவ்வுலக மக்களை நேர்வழியில் நடத்தவும், இவ்வுலக வாழ்வில் சிறப்பாக எங்ஙனம் செயல்படுவது என்பதை விளக்கவும், நிலையான மறுமை வாழ்வை நல்ல முறையில் அமைத்திட இவ்வுலகில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்தும் மக்களுக்கு போதிப்பதை மட்டுமே முக்கியமான நோக்கமாக கொண்டு உள்ளது. இதன் நிகரற்ற செய்தியைக் கேள்விப்படும் அறியாமையில் உழலும் எவரும் மூடநம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் விட்டொழித்து நிச்சயமாக இந்த அறிவுப்பூர்வமான வழியில் செயல்பட முனைவர்.

  ஆனால், காலச் சூழலின் காரணமாக அரபி மொழியில் பதித்து வைக்கப்பட்டுள்ள இஸ்லாத்தின் அனைத்து வழிமுறைகளும் அவரவர் மொழியில் கிடைக்காத காரணத்தினால், சமூக விடுதலை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நேர்மையான அணுகுமுறை போன்ற வெளிப்புறத்தில் தெரியும் பல்வேறு சிறப்புகளைக் கண்டு அவற்றிற்காக இஸ்லாத்தில் இணைந்த அனேக மாற்று கொள்கை, மாற்று மொழி மக்கள், தங்கள் மனதில் இஸ்லாத்தை ஏந்தினரே தவிர தங்கள் வாழ்வில் அதனைச் செயல்படுத்த முறையான இஸ்லாமியத் திட்டங்கள், விளக்கங்கள் அவரவர் மொழியில் இல்லாத காரணத்தினால் தாங்கள் வாழ்ந்த சூழல், கலாச்சாரங்களுக்கேற்ப இஸ்லாத்தில் தாங்கள் கேள்விப்படும் சம்பவங்களையும், நிகழ்வுகளையும் கற்பனையாகப் புனைந்து சில சடங்கு சம்பிரதாயங்களைப் பேண ஆரம்பித்து விட்டனர்.

  அதன் ஒரு நீட்சியாக இந்த மிஃராஜ் பயண நிகழ்வு தினங்களிலும் தங்கள் கற்பனைகளில் உதித்தவைகளுக்கு ஏற்ப இஸ்லாம் காண்பித்துத் தராத சில செயல்களைப் புனிதம் எனக்கருதி செயல்படுத்தி வருகின்றனர். மிஃராஜ் தினம் என ஒரு குறிப்பிட்ட தினத்தை நிச்சயித்து அன்றைய தினம் இரவு முழுவதும் வணக்கம் என்ற பெயரில் தஸ்பீஹ் போன்ற நபி(ஸல்) அவர்கள் காண்பித்துத் தராத தொழுகைகளைத் தொழுவதும், நபி(ஸல்) அவர்கள் பயணம் சென்ற புராக் வாகனத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து, அதனைப் புனிதமானது எனக் கருதி வீட்டில் மகிமைப்படுத்தி வைப்பது போன்ற செயல்களை முஸ்லிம்களுள் சிலர் செய்து வருகின்றனர்.

  இறைவனிடமிருந்து நன்மையை மட்டுமே எதிர்பார்த்து சகோதரர்களால் அறியாமையில் செய்யப்படும் இச்செயல்கள், நபி(ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஒரே காரணத்திற்காக இஸ்லாத்தின் பார்வையில் மிகப்பெரும் தண்டனைக்குரியவை என்பதை இதனைச் செய்து வருபவர்கள் அறிந்து கொள்ளாத அளவிற்கு அறியாமையில் இருக்கின்றனர். நன்மையை எதிர்பார்த்து செய்யப்படும் செயலுக்கு நன்மை கிடைக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை; அதனால் தீமை விளைவது என்பது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  இஸ்லாத்தைப் பொருத்தவரை இபாதத்-வணக்கம் என்ற முறையில் எச்செயலை செய்வதற்கும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மிக்க அவசியமாகும். நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் புதிதாகப் புனைந்து இஸ்லாத்தில் நுழைக்கப்படும் எந்த ஒரு செயலும் இறைவனால் அங்கீகரிக்கப்படாது. இது இஸ்லாத்தின் சாதாரண அடிப்படையாகும்.

  மேலும், இஸ்லாமிய வரலாற்றில் பதிந்துள்ள ஒவ்வொரு நிகழ்வும் இவ்வுலக மக்களுக்கு மிகப்பெரிய படிப்பினைகளை கொடுக்கும் விதத்தில் இறைவனால் நிகழ்த்தப்பட்ட அத்தாட்சிகளாகும். அவற்றை உற்று நோக்கும் பொழுது இதனை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். மிஃராஜ் என்ற இந்த விண்ணுலகப் பயண நிகழ்விலும் இறைவன் இவ்வுலக மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்குப் பல்வேறு படிப்பினைகளையும் அத்தாட்சிகளையும் வழங்கியுள்ளான்.

  இந்நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் கூறும் பொழுது,

  “(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான்(அல்குர்ஆன் 17:1).

  என்று தெரிவிக்கிறது. இவ்வசனத்திலும் வல்ல நாயன் மிகத் தெளிவாக இந்நிகழ்வு இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பிப்பதற்காகவே நிகழ்த்தப்பட்டது எனக் குறிப்பிடுகின்றான்.

  எனவே, இந்நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாம் தரும் படிப்பினைகள் என்ன என்பதையும், இச்சமூகம் இந்நாட்களில் செய்யும் செயல்களை இஸ்லாம் வலியுறுத்துகின்றதா என்பதையும் இஸ்லாமிய ஒளியில் ஆய்வு செய்து அறிந்து கொள்வது அவசியமாகும்.

  மிஃராஜ் சம்பவத்தைக் குறித்துக் குறிப்பிடும் பொழுது இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

  1. மிராஜ் நிகழ்ந்த தினம்.
  2. மிராஜ் தரும் படிப்பினை.

  ஒவ்வோர் ஆண்டும் ரஜப் மாதம் 27ஆம் தேதி இரவை மிஃராஜ் தினமாகக் கருதி முஸ்லிம்கள் பல்வேறு செயல்களைச் செய்து வருகின்றனர்.

  இஸ்லாத்தைப் பொருத்தவரை, கொண்டாடப்படும் விதத்தில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள தினங்கள் ரமலான் நோன்பை அடுத்து வரும் ஈகைப் பெருநாள் எனும் ஈத்-அல்-ஃபித்ரு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் அல்லது தியாகத் திருநாள் எனும் ஈத்-அல்-அழ்ஹா (பக்ரீத்) ஆகிய இரு தினங்கள் மட்டுமே. இதைத் தவிர வேறு ஒருநாளைக் கொண்டாட வேண்டுமெனில் குறிப்பிடப்படும் அந்த நாள் சரியானதுதானா என்பதற்கு முதலில் ஆதாரம் வேண்டும்.

  மிஃராஜ் தினமாக அனுஷ்டிக்கப்படும் இந்த ரஜப் 27 அன்றுதான் மிஃராஜ் சம்பவம் நிகழ்ந்தது என்பதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை.

  இதனைக் குறித்து விரிவாக....

  பகுதி 2 காணலாம்

  நன்றி:சத்யமார்க்கம்
  மண்ணறை விசாரணை!
  printEmail
  இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
    
  னிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!
  மறுமையின் முன்னோட்டமாக - மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு, மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை என்பது மனிதனின் புலன்களுக்கு எட்டாத் தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம். ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாடு!


  மரணித்தவரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும் அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்த சில செய்திகள் இங்குத் தரப்படுகின்றன.

  இறைவசனங்கள்:

  நமது வசனங்களைப் பொய்யெனக் கொண்டு, அவற்றை விட்டும் பெருமையடிப்பவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம் (அல்குர்ஆன் 7:40).

  இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).
  அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக வாழுங்கள்; இன்னும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார் (அல்குர்ஆன் 22:31).
  திண்ணமாக, (கடுங்காவல் கைதிகளின் ஏடான) ஸிஜ்ஜீனில் தீயோர்களின் விதிப்பதிவு உள்ளது (அல்குர்ஆன் 83:7).

  திண்ணமாக, (மேன்மக்களின் ஏடான) இல்லிய்யீனில் நல்லோர்தம் விதிப்பதிவு உள்ளது (அல்குர்குர் 83:18).

  நபிமொழிகள்:
  அன்ஸாரிகளில் ஒருவரின் (ஜனாஸா) இறுதிக் கடனை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குக் குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக்கொண்டிருந்தார்கள்.

  பின்னர், தமது தலையை உயர்த்தி,
  "அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:

  "இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று, மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம் வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன்
  (பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர், 'தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக' என்பார்.

  அப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று
  (அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர் எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.

  பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்தத் தூய உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னாரின் மகன் இன்னார்' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின்
  (அருகிலிருக்கும் முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள்.

  அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலிருக்கும் இறை நெருக்கம்பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், 'என் அடியானின்
  (வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) இல்லிய்யூன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் மண்ணுக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை(மனிதர்களை)ப் படைத்தேன்; அதற்கே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளியாக்குவேன்' என்று கூறுவான்.

  பின்னர் அவரது உயிர்
  (மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், 'உம்முடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு, 'என் இறைவன் அல்லாஹ்' என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, 'உமது மார்க்கம் எது?' என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'எனது மார்க்கம் இஸ்லாம்' என்று அவர் கூறுவார்.

  பிறகு 'உங்களிடையே அனுப்பப்பட்ட இன்னார் யார்?' என்று
  (என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'அவர் அல்லாஹ்வின் தூதர்' என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் 'அது எப்படி உமக்குத் தெரியும்?' என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், 'நான் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆனைப்) படித்தேன்; அதன் மீது நம்பிக்கை கொண்டேன்; உண்மையென ஏற்றேன்' என்று கூறுவார்.

  உடனே வானிலிருந்து, 'என் அடியார் உண்மை உரைத்தார். எனவே அவருக்குச் சொர்க்கத்தி(ன் விரிப்புகளி)லிருந்து
  (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள், அவருக்காகச் சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். (அவ்வாறே ஏற்பாடுகள் செய்யப்படும்) அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும் அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம் விரிவுபடுத்தப்படும். பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, 'உமக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியொன்றை(ச் சொல்கிறேன்) கேளும்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார்.

  அப்போது அவர், அந்த அழகானவரிடம் 'நீர் யார்? உமது முகம் நன்மையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே' என்று கேட்பார். அதற்கு அந்த அழகர், 'நான்தான் நீர் செய்த நற்செயல்கள்' என்பார். உடனே அவர் 'என் இறைவா! யுக முடிவு
  (நாளை இப்போதே) ஏற்படுத்துவாயாக; நான் என் குடும்பத்தாரிடமும் செல்வத்திடமும் மறுபடியும் போய்ச்சேர வேண்டும்' என்று கூறுவார்.
  (ஏக இறைவனை) மறுதலித்த அடியார் ஒருவர் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்களில் சிலர் வானிலிருந்து இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். 'மாசடைந்த ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பையும் சினத்தையும் நோக்கிப் புறப்படு' என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக்கொண்ட முள்ளை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.

  உயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம்கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள் பெற்று
  (தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள். அப்போது ஒரு பிணத்தின்
  மேற்பரப்பிலிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும். பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்த மாசடைந்த உயிர் யாருடையது?' என்று கேட்பர். அதற்கு அவர்கள், 'இன்னார் மகன் இன்னாருடையது' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது"

  இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்'' எனும் (7:40) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

  "பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், 'அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழ்நிலையில் உள்ள ஸிஜ்ஜீன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்' என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும்" இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள், '...
  அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார்" (அல்குர்ஆன் 22:31) எனும் வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

  "பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமரவைப்பர். பின்னர் அவரிடம், 'உன்னுடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு அவர் 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்று கூறுவார். அவ்விருவரும், 'உனது மார்க்கம் எது?' என்று கேட்பர். அவர், 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்பார். அடுத்து 'உங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இன்னார் யார்?' என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், 'அந்தோ! எனக்கொன்றுமே தெரியாதே!' என்று பதிலளிப்பார்.

  அப்போது வானத்திலிருந்து, 'என் அடியான் பொய்யுரைத்துவிட்டான். எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளிலிருந்து
  (ஒரு விரிப்பை) விரித்துக்கொடுங்கள்; அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்' என்று அறிவிப்பு வரும். நரகத்தின் வெப்பமும் கடும் அனலும் அவரிடம் வரும். அவரை அவரது மண்ணறை(யின் இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவரது விலா எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து, 'உனக்கு வருத்தமளிக்கும் செய்தி செய்தியொன்றைச் சொல்கிறேன் கேள்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்' என்பார். அப்போது அவர், அந்த அவலட்சணமானவரிடம் 'நீர் யார்? உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே!' என்று கேட்பார் அதற்கவர், 'நான்தான் நீ செய்த தீய செயல்கள்' என்பார். உடனே அந்த இறைமறுப்பாளர், 'என் இறைவா! யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்திவிடாதே' என்று கதறுவார்" என்று நபி (ஸல்) விளக்கினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - அஹ்மத் 18063, அபூதாவூத் 4753).

  ஷஹாதத் எனும் கலிமா என்பது வெறும் வாயால் மொழிவது மட்டுமல்ல. தேடுதல் அடிப்படையில் ஏக இறைவனை நெஞ்சாறயேற்று ஓரிறைக் கொள்கையை உறுதியாகப் பற்றிப்பிடித்து நடைமுறைப்படுத்துவதாகும்! இம்மை வாழ்வில் மனிதன் எதில் உறுதியாக இருந்து, கொள்கையளவில் தாம் உறுதி செய்தவற்றை சிந்தனையில் பதிவுசெய்து, இவ்வுலக வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறாரோ அதுவே மரணத்திற்குப் பின்னர் நிகழும் ஆன்ம வாழ்வில் வெளிப்படும்.

  உலக வாழ்க்கையில் அகமொன்று வைத்து, புறமொன்றுப் பேசி சமர்த்தியமாகத் தப்பித்து விடுவதுபோல், மனிதன் மரணித்த பின்னர் மண்ணறை விசாரணையில் அவனது எந்தக் கெட்டிக்காரத்தனமும் எடுபடாது!

  இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு வழிப்பட்டோரை இம்மை, மறுமை ஈருலகத்திலும் உறுதியான வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ் நிலைபெறச் செய்கிறான். ஒருவர் இம்மையில் எந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாரோ அதுவே மண்ணறை விசாரணையிலும் வெளிப்படும்.

  திருக்குர்ஆன் 14:27வது வசனத்தின் கருத்து என்பது கப்ரு விசாரணையைப் பற்றியே அல்லாஹ் குறிப்பிடுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளக்கியுள்ளார்கள்:

  "ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் '(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்' எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - புகாரி 1369, 4699, முஸ்லிம் 5508, 5509, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
  இந்த வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஃபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.
  "உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரைக்கும் இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (நூல்கள் - புகாரி 1379, 3240, 6515. முஸ்லிம் 5500, 5501, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்).

  "ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன், 'அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 1338, 1374. முஸ்லிம் 5505. நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)
  நாடு, மொழி, இனம், நிறம், சாதி, மதம், கொள்கை, சிந்தனை எனப் பலவற்றிலும் வேறுபட்டு வாழும் மனித இனம் "மரணம் என்பது எந்த உயிருக்கும் தவிர்க்க முடியாதது; வந்தே தீருவது" என்பதில் மட்டும் ஒத்த கருத்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக, "மரணத்தை அடுத்து மண்ணறை வாழ்க்கை; இறைவனின் இறுதித் தீர்ப்புக்குப் பின்னர் நிரந்தர வாழ்க்கை" என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. தவிர்க்கவே முடியாத, எந்த நேரமும் நாம் எதிர்கொள்ள வேண்டிய மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ள நாம், அதில் எந்த அளவு உறுதியாய் இருக்கிறோம்? சத்தியமான அந்த வாழ்க்கைக்காக நாம் எந்த வகை தயாரிப்பில் இருக்கிறோம்? எனும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த ஆக்கம் உந்துகோலாக அமையட்டுமாக!

  சரியான பதில்களைக் கூறி மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு
  வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம்; மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்!
  நன்றி:சத்யமார்க்கம்

  மிஃராஜ்

  Post image for மிஃராஜ்


  நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் ”மிஃராஜ்” என அறியப்படுகிறது.

  மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.
  1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)
  2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)
  3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.
  4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.
  5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.
  6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.


  இந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது.

  அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் ‘இஸ்ரா’வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது ‘மிஃராஜ்’ சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.

  இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:

  இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை ‘புராக்’ என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.

  பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது.

  அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள்.

  அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான்.

  அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான்.

  பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

  அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

  பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

  பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

  பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள்.

  ”நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ”எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்”

  என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

  ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

  பிறகு ‘ஸித்ரதுல் முன்தஹ்ா’விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன.

  பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது.

  அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

  அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.

  பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.

  பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள்.

  அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான்.

   ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.

  அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள்.

  மூஸா (அலை)
  ”தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்” என்று கேட்க நபி (ஸல்) ”ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்” என்று கூறினார்கள்.

  மூஸா (அலை) ”நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ”நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே...

  நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள்.

  அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.
  திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற,

   நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான்.

  மூஸா (அலை) நபி (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ”நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன்.

  என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்கள்.

  அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ”நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)

  மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

  இப்னுல் கய்யிம் (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:

  ”நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை” என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை.

  ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.

  தொடர்ந்து இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்:

  அத்தியாயம் நஜ்மில் ‘இறங்கினார், பின்னர் நெருங்கினார்’ என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள்.

  குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. ‘மிஃராஜ்’ தொடர்பான ஹதீஸில் வந்துள்ள ‘தனா ஃபததல்லா’ என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது.

  அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது.

  நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகிலுமாகும்.

  (இத்துடன் இப்னுல் கய்யிமின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1 : 50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2 : 284. முஸ்லிம் 1 : 91-96)

  நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.

  நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ”நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள்.

  நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்” என்று கூறப்பட்டது.

  ஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது.
  இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும்.

  இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்.

  நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, ‘இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்’ என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)

  மாலிக்.

  மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள்.

  அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.

  வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர்.

  ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.

  விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது.

  அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.

  பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள்.

  இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

  நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது.
  அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள்.

  அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள்.

  அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.
  (ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
  இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்:

  காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர்.

  ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள்.

  அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள்.

  நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

  மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை ‘சித்தீக்’ (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

  இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக ”நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

  (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பல்லியியிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.

  (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)

  இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.

  இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (அல்குர்ஆன் 6 : 75)

  நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,

  (இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (அல்குர்ஆன் 20 : 23) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

  நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு ”அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக”
  என்ற காரணத்தைக் கூறுகிறான்.

  இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால் அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது.

  உலகத்தின் எவ்வளவு பெரிய சக்தியாயினும் சரி. அது கொசுவின் இறக்கைக்குச் சமமாகவே அவர்களிடம் இருந்தது. சிரமங்களும் துன்பங்களும் எவ்வளவுதான் அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

  இப்பயணத்தில் மறைந்திருக்கும் ஞானங்களையும் இரகசியங்களையும் மார்க்க சட்டங்களின் இரகசியங்களை பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம்.

  எனினும், இப்பயணத்தில் பல உண்மைகளும் யதார்த்தங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்:

  இந்த வானுலக பயண சம்பவத்தைப் பற்றி மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 17:1லில் மட்டும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

  இந்த ஒரு வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில் இந்தக் குர்ஆன்தான் மிகச் சரியான வழிகாட்டுகின்றது என்று கூறுகிறான்.

  இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி, இவற்றுக்கிடையில் என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம். ஆம்! உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. அதன் விளக்கமாவது:

  முஹம்மது (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை வகித்தனர். ஆனால், அவர்கள் செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர்.

  எனவே, அவர்களிடமிருந்து அந்தத் தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப்போகின்றான். நபி இப்றாஹ்ீம் (அலை) அவர்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்களான மக்காவையும், ஃபலஸ்தீனையும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கின்றான்;

  மோசடி, குற்றம், வரம்பு மீறுதல் ஆகியவற்றையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட சமூகத்திடமிருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத்தை பறித்து நன்மைகளையே நோக்கமாகக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ் அருள இருக்கின்றான் என்பதை நபி (ஸல்) அவர்களை மக்காவிஇருந்து பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்ச்சி உறுதி செய்தது.

  மக்காவின் தெருக்களிலும் மலை ஓரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டு கண்ணியமிழந்து சுற்றி வரும் ஒருவருக்கு இந்தத் தலைமைத்துவம் எப்படிக் கிடைக்கும்? அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முதல் கட்டமான இந்த சிரமமான காலம் வெகு விரைவில் முடிந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய காலக்கட்டம் தொடரப்போகிறது என்பதையே நபி (ஸல்) அவர்களின் இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது.

  இதையே பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன. அவ்வசனங்களில் அல்லாஹ் இணைவைப்பவர்களை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்கிறான்.

  ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.

  நூஹுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவையில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17 : 16, 17)

  இது நாள்வரை நிராகரிப்போருக்கு அவகாசம் தரப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த அநீதிகளை அல்லாஹ் பொறுத்து வந்தான். ஆனால், இனியும் அவர்கள் இத்தகைய தவறுகளிலிருந்து விலகாவிட்டால் அல்லாஹ் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான் என்ற எச்சரிக்கை மேற்கூறிய வசனத்திலிருந்து தெரியவருகின்றது.

  இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கு அடிப்படையான கொள்கைகள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறான்.

  முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது அவர்களது சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையெல்லாம் அல்லாஹ் கூறுவது போன்றே இருக்கின்றது. மேலும், வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மையத்தையும் அல்லாஹ் தர இருக்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

  இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயண நிகழ்ச்சி மக்கா வாழ்க்கையின் இறுதியில் நடைபெற்றது. இதுவே ஏற்றமான, சரியான சொல் என்று நாம் கூறுகிறோம். அகபாவில் நடைபெற்ற முதல் ஒப்பந்தத்திற்கு முன் அல்லது முதலாவது இரண்டாவது ஒப்பந்தங்களுக்கிடையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

  நூல்:ரஹீக், தாருல் ஹுதா

  THANKS TO:READISLAM