இன்ஷா அல்லாஹ்

, , No Comments
நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்!

அல்லாஹ் நாடினால் தவிர, (முஹம்மதே!) நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைவு கூறுவீராக! எனது இறைவன் இதை விட குறைவான நேரத்தில் இதற்கு வழி காட்டிவிடக் கூடும் என்று கூறுவீராக!’ (அல்குர்ஆன் 18:23,24)

குகை வாசிகளின் வரலாற்றுக்கிடையே மேற்கண்ட கட்டளையையும் இறைவன் பிறப்பிக்கிறான்.

நாளை செய்யப் போவதாகக் கூறும் எந்தக் காரியமானாலும் ‘அல்லாஹ் நாடினால்’ என்பதையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று இவ்விரு வசனங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றன.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உள்ளன.

மனிதர்களிலேயே அல்லாஹ்வின் அன்புக்கு அதிகம் உரித்தானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளோம். இவ்வளவு உயர்ந்த தகுதியில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களேயானாலும் ‘நாளை இதைச் செய்வேன்’ என்று கூறக் கூடாது. அது மிகவும் அற்பமான காரியமானாலும் கூட அவ்வாறு கூறக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் நினைத்ததைச் செய்து விட முடியாது. ஏகத்துவக் கொள்கையின் இரத்தினச் சுருக்கமான சான்றாக இது அமைகின்றது.

திருக்குர்ஆனைப் பற்றியோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் பற்றியோ எந்த அறிவும் இல்லாத ஒரு முஸ்லிம் இந்தச் சொற்றொடரை மட்டும் அறிந்திருந்தால் கூட அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வார்.

அல்லாஹ் நாடினால் தான் எதையும் செய்ய முடியும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) கூற வேண்டுமென்று கட்டளையிடப்பட்டு அவ்வாறு அவர்கள் கூறியும் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் கால் தூசுக்குச் சமமாகாத மகான்கள் மற்றும் பெரியவர்களுக்கு எள்ளளவும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி முந்தைய நபிமார்களுக்கும் வழிமுறையாக்கப்பட்டிருந்தது என்பதை இந்த அத்தியாயத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மூஸா நபியவர்களின் சம்பவம் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறும் போது

அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள் (18:69)
என்று மூஸா நபி கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். முந்தைய நபிமார்களிடம் இந்த வழிமுறை இருந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூறப்பட்ட கட்டளையாக இது இருந்தாலும் இதை நாமும் கடைபிடித்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அல்லாஹ்வின் நாட்டமின்றி எதையும் செய்ய முடியாது எனும் போது மற்றவர்கள் நிச்சயமாக செய்ய முடியாது என்பதிலிருந்து இதை அறியலாம்.

இதை முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்தாலும் இது பற்றி அவர்களிடம் சில அறியாமைகளும் நிலவுகின்றன.

‘இன்ஷா அல்லாஹ் நீங்கள் இதைச் செய்யுங்கள்! இன்ஷா அல்லாஹ் சாப்பிடுங்கள்’ என்பது போல் சிலர் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்துகின்றனர். இது தவறாகும். ஏனெனில் ‘நான் செய்வேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறும் போது தான் இன்ஷா அல்லாஹ் கூறுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். கட்டளையிடும் போதோ பிறர் குறித்துப் பேசும் போதோ இன்ஷா அல்லாஹ் எனக் கூறுவது பொருளற்றதாகும்.

இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ் வர முயல்கிறேன். இன்ஷா அல்லாஹ் செய்தாலும் செய்வேன் என்பன போன்ற சொற்களையும் தமிழக முஸ்லிம்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் இன்ஷா அல்லாஹ் கூறுமாறு கட்டளையிடவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் செய்வேன். நான் செய்பவன். நான் செய்தே தீருவேன் என்றெல்லாம் அடித்துப் பேசும் இடங்களில் தான் இன்ஷா அல்லாஹ் பயன்படுத்துமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான்.

‘பார்க்கலாம்’ என்று நாம் கூறும் போது செய்தாலும் செய்வேன். செய்யாமலும் போவேன் என்ற கருத்து உள்ளடங்கியுள்ளது. இதற்குள்ளேயே அல்லாஹ் நாடினால் என்பதும் மறைந்து நிற்கிறது.

வந்தாலும் வருவேன் என்று நாம் கூறினால், நாம் அடித்துச் சொல்லவில்லை. நான் வரவும் கூடும். வராமல் இருக்கவும் கூடும் என்பது தான் இதன் கருத்து. எனவே இது போன்ற சொற்களைப் பயன்படுத்தும் போது அல்லாஹ் நாடினால் என்று கூறத் தேவையில்லை. கூறுமாறு கட்டளை ஏதும் இல்லை.

இது அறிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது செய்தியாகும்.

இன்னும் சிலர் உள்ளனர். இவர்கள் மிகப் பெரிய காரியங்களுக்கு மட்டும் இன்ஷா அல்லாஹ் கூறுவார்கள். சிறிய காரியங்களுக்குக் கூற மாட்டார்கள். ‘நாளை பத்தாயிரம் தருகிறேன்’ என்று கூறும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறும் இவர்கள் ‘நாளை பத்து ரூபாய் தருகிறேன்’ எனக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறுவதில்லை.

இது அடிப்படைக் கொள்கையைப் பாதிக்கின்ற மிகவும் மோசமான போக்காகும். பத்தாயிரம் தருவதற்குத் தான் அல்லாஹ்வின் நாட்டம் தேவை. பத்து ரூபாய் தருவதற்கு அவன் நாட்டம் தேவையில்லை. அவன் நாட்டமின்றியே என்னால் தந்து விட முடியும் என்ற எண்ணம் ஊடுறுவி இருப்பதால் தான் இவ்வாறு நடக்கின்றனர்.

இவ்வசனத்தில் இந்தப் போக்கு தடுக்கப்பட்டுள்ளது. ‘லிஷையின்’ ‘எந்த காரியம் பற்றியும்’ நாளை செய்வேன் எனக் கூறாதே என்ற கட்டளையில் பெரிய காரியம் மட்டுமின்றி சிறிய காரியமும் அடங்கும். அற்பமான காரியங்களும் இதனுள் அடங்க வேண்டும் என்பதற்காகவே இச்செயல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது மூன்றாவதாக அறிந்து கொள்ள வேண்டியதாகும்.

எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறு கூற நாம் மறந்து விடலாம். பொதுவாகவே மறதிக்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். ஆயினும் நாம் மறதியாக இன்ஷா அல்லாஹ்வைக் கூறாதிருந்து விட்டோமே என்று நினைவுக்கு வந்தால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்காக வழிமுறையையும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

ஆனால் நமக்குத் தெரிந்து உலகில் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த வழிமுறையைக் கடைப் பிடிப்பதில்லை.

‘ஒரு வாரத்தில் கடனைத் திருப்பித் தருகிறேன்’ என்று நாம் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூற நாம் மறந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். சற்று நேரத்திலோ மறுநாளோ இது நமக்கு நினைவுக்கு வருகிறது. உடனே இறைவனை நினைவு கூர்ந்து இறைவன் ஒரு வாரத்தை விடக் குறைவான காலத்திலேயே கொடுக்கச் செய்யக் கூடும் என்று கூற வேண்டும்.

ஒரு நாளில் தருவதாகக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூறத் தவறிவிட்டு சற்று நேரத்தில் நினைவுக்கு வந்தால் உடனே அல்லாஹ்வை மனதில் நினைத்து ‘என் இறைவன் ஒருநாளை விடவும் குறைவாகவே இதை நிறைவேற்றித் தரக் கூடும்’ என்று கூற வேண்டும்.

இதை 24 வது வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூற வேண்டும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தாலும் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுபவர்கள் கூட இதை நடைமுறைப் படுத்தாமல் இருக்கிறார்கள்.

இது நான்காவதாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

மறதிக்குப் பரிகாரமாக அல்லாஹ் நமக்குக் கற்றுத் தரும் வார்த்தையில் கூட அவன் நம்மீது கருணை மழை பொழிந்திருப்பது ஐந்தாவதாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஒரு வாரத்தில் செய்வதாக ஒரு காரியத்தைப் பற்றி நாம் பேசி விட்டோம். இன்ஷா அல்லாஹ் கூறவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

நாம் வாக்களித்த அந்த நேரத்துக்குள் கொடுக்கலாம்.

அல்லது அந்த நேரம் கடந்த பின் கொடுக்கலாம்.

அல்லது அறவே கொடுக்க முடியாமல் போகலாம்.

அல்லது வாக்களித்ததை விடக் குறைவான நேரத்திலேயே அதைக் கொடுக்கலாம்.

இந்த நான்கில் ஒவ்வொருவரும் நான்காவதையே விரும்புவோம். தேர்வு செய்வோம். மறதியின் காரணமாக இன்ஷா அல்லாஹ் கூறாதவரை மற்ற மூன்று விஷயங்களைக் கூறுமாறு கட்டளையிடாமல் ‘நான் வாக்களித்ததை விட குறைவான காலத்திலேயே என் இறைவனால் முடிக்க முடியும்’ என்று கூறச் செய்கிறான். இதன் மூலம் அடியார்கள் மீது அவன் காட்டும் அளப்பரிய கருணையை அறியலாம்.

0 comments:

Post a Comment