தஜ்ஜால் யூத இனத்தைச் சார்ந்தவன்

, , No Comments
தஜ்ஜால் யூத இனத்தைச் சார்ந்தவன்




‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5)



முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு கூறி வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான்.



அவன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க மாட்டான். இஸ்லாத்தின் பால் அழைப்பதாகவும் கூறமாட்டான்.



இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மது)



‘தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே ‘காபிர்’ என்று எழுதப்பட்டிருக்கும். எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து மூமின்களும் அதைப் படிப்பார்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)



அவன் இஸ்லாமிய வட்டத்தில் உள்ளதாக தன்னைக் கூறிக் கொள்ள மாட்டான் என்பதற்கு அவன் செய்யும் வாதமும் சான்றாக உள்ளது.



‘தஜ்ஜால் என்பவன் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவனல்லன்’ என்ற நபிமொழியிலிருந்து அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான் என்பதை அறியலாம்.



இஸ்லாத்தின் பெயரைக் கூறாமல் எவ்வாறு முஸ்லிம்களை வழி கெடுக்க இயலும்? என்று ஐயம் தோன்றலாம்.

தன்னைக் கடவுள் என்று சாதிக்கும் வகையில் அவன் பிரமிப்பூட்டும் அற்புதங்களைச் செய்வான். மிகப் பெரிய நபிமார்களுக்குக் கூட வழங்கப்படாத அற்புதங்கள் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும்.



ஒன்றிரண்டு தந்திர வேலைகளைச் செய்யக் கூடிய முஸ்லிம் அல்லாத – பலரின் வலையில் அப்பாவி முஸ்லிம்கள் அநேகர் விழுந்து ஈமானை இழந்து வருவதை இன்றைக்கு நாம் காண்கிறோம். அவர்களையெல்லாம் விட மிகப் பெரும் அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய தஜ்ஜாலின் வலையில் முஸ்லிம்கள் விழுவது ஆச்சரியத்திற்குரியது அல்ல. அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.



வானத்திற்கு மழை பொழியுமாறு கட்டளையிடுவான், அது மழை பொழியும். முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான், அது (பயிர்களை) முளைப்பிக்கும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) நூல்: முஸ்லிம்)



திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)



தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும் நீக்குவான். இறந்தவர்களையும் உயிர்பிப்பான் மக்களிடம் ‘நானே உங்கள் இறைவன்’ என்பான். யாரேனும் ‘நீ தான் என் இறைவன்’ என்று கூறினால் அவன் சோதனையில் தோற்று விட்டான். ‘அல்லாஹ் தான் என் இறைவன்’ என்று யார் கூறி அதிலேயே மரணித்து விடுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜீன்தம் (ரலி), நூல்கள்: அஹ்மத், தப்ரானி)



இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரேஒரு தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும் தொடர்ந்து செய்ய இயலாது.



ஒரு மனிதனைக் கொன்று அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார். (அஹ்மத்)



அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில் இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சுவர்க்கம் என்பான். இன்னொன்றை நரகம் என்பான். அவன் சுவர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சுவர்க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். மக்கள் பார்க்கும் வகையில் மழை பெய்யும். ‘இதைக் கடவுளைத் தவிர வேறு யாரும் செய்ய முடியுமா? என்று கேட்பான்’ என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: அஹ்மது)



தஜ்ஜாலிடம் தண்ணீரும் நெருப்பும் இருக்கும் மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும். உங்களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில் விழட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)



அவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது வெறும் நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான்.



‘தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான் என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் ஒரு நாள் ஒரு மாதம் போன்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றும் இருக்கும் என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)



இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.



‘மதீனா’ நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழுவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி)



தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ‘ஷாம்’ பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கே தான் அவன் அழிவான் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)



கஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு எழுவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். ஷாம் நாட்டில் உள்ள பலஸ்தீன் நகருக்கு ‘லுத்’ எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா (அலை) இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா (அலை) இப்பூமியில் நேர்மையான தலைவராக சிறந்த நீதிமானாக வாழ்வார்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அஹ்மத்)



மதீனாவுக்கு மட்டுமின்றி மற்றும் மூன்று இடங்களுக்கும் அவனால் செல்ல முடியாது.



அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல்ஹராம், மதீனாவின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் மக்தஸ் ஆகிய நான்கு பள்ளிகளை அவன் நெருங்க முடியாது என்பதும் நபிமொழி. (நூல்: அஹ்மது)



தஜ்ஜாலின் காலத்தை அடையக் கூடியவர்கள் அவனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் நமக்கு இரண்டு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.



தொழுகையில் அத்தஹிய்யாதின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று ‘தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன்’ என்பதாகும். நபியவர்கள் இவ்வாறு கற்றுத் தந்துள்ளதால் ஐங்காலமும் தொழக்கூடியவர்கள், தொழுகையில் இந்தப் பிரார்த்தனையைச் செய்து வருபவர்கள் அவனது மாய ஜாலத்தில் மயங்க மாட்டார்கள். ஈமானை இழக்க மாட்டார்கள். தொழாதவர்களும், தொழுகையில் இந்தப் பிரார்த்தனையைக் கேட்காதவர்களும் தான் தஜ்ஜாலின் பின்னே செல்வார்கள்.



தஜ்ஜாலின் வருகைக்கு முன் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை இது. தஜ்ஜாலை நமது காலத்தில் நாம் அடைந்தால் அவனது அற்புதத்தில் மயங்கி ஈமானைம இழக்காமலிருக்க ‘கஹ்ப்’ அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை நாம் ஓதி வர வேண்டும்.



உங்களில் யாரேனும் அவனை அடைந்தால் கஹ்பு அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)



மிகமுக்கியமான பத்து அடையாளங்களில் தஜ்ஜால் பற்றி ஓரளவு அறிந்து கொண்டோம். இனி ஏனைய அடையாளங்களையும் காண்போம்.

0 comments:

Post a Comment