அல் குர்ஆன் வழியில் அறிவியல்..
Post image for மண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்
அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தது வெறும் வீண் விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல.தக்க காரணத்துக்காகவே அன்றி வேறில்லை,என்று பல வசனங்களில் குறிப்பிடுகிறான். வானம், பூமி,சூரியன்,சந்திரன் கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் காரண காரியங்களுடன் படைப்பினங்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,
“இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன. நிச்சயமாக இதிலும் ஆய்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.”
-அல்குர்ஆன்.16:12.
நட்சத்திரங்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்,
“அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக்கொண்டு நீங்கள் தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழி அறிந்து செல்கிறீர்கள் – அறியக்கூடிய மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.” -அல்குர்ஆன்.6:97.
நட்சத்திரங்களை படைத்ததின் ஒரு நோக்கம் இருளில் பயணிப்பவர்கள் வழி அறிந்து கொள்வதற்காக. இருள் சூழ்ந்த இரவுகளில் பயணிப்பதற்கு வழி காட்டியாக ஆதி காலத்திலிருந்தே நட்சத்திரங்கள் திசையை வைத்து பயணப்பாதையை மனிதன் அறிந்து கொள்கிறான். குறிப்பாக நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த கடற்பயணத்தில் அவனுக்கு இரவில் வழி காட்டுவது விண்மீன் விளக்குகளே!
பல கோடிக்கணக்கான நட்சத்திரங்களை வானில் பரப்பி அல்லாஹ் பார்ப்பவர்களுக்கு அலங்காரமாக்கி உள்ளான்.சுமார் 6000 நட்சத்திரங்கள் நம் கண்களால் அடையாளம் காண முடியும். நன்கு பிரகாசமுள்ள 58 நட்சத்திரங்கள் இருப்பிடத்தை அடையாளமாக வைத்து கடலில் மாலுமிகள் கப்பலை செலுத்துகின்றனர். இதனை “Celestial Navigation” என்று அழைக்கிறார்கள்.

இன்றும் அமெரிக்காவில் வருடந்தோறும், வானில் நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தை அட்டவணைப்படுத்தி “Nautical Almanac” என்ற பெயரிலும் இங்கிலாந்தில் “Her Majesty’s Nautical Almanac Office” என்ற வழிகாட்டும் விண்மீன் பஞ்சாங்கத்தை வெளியிடுகிறார்கள். நிலம்,நீர்,ஆகாயம் இம்மூன்றிலும் பயணம் செய்யும் மனிதர்களுக்கு இந்நட்சத்திர வழி காட்டி பெரிதும் பயன்படுகிறது.
இன்றைய நவீன அறிவியலில் வழி அறிவதற்கு GPS போன்ற பல நுட்பமான சாதனங்களை மனிதன் பயன்படுத்தினாலும்,இன்றும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் கப்பல்,விமானப்படைகளில் பயிற்சி பெரும் பைலட்,மற்றும் மாலுமிகள் அடிப்படை நட்சத்திர வழிகாட்டும் (Celestial Navigation Test) தேர்வில் வெற்றி பெறாமல் பணியில் சேரமுடியாது.
Global Positioning System –GPS என்னும் செயற்கைக்கோள் வழி காட்டி சாதனம் எந்நிலையிலும் பழுதாகக்கூடும். அவசர காலங்களில் பயன் தருவது விண்மீன்கள் வழி காட்டுதலே. கடந்த காலங்களில் மனிதனின் பயணம் நீரிலும் நிலத்திலும் மட்டுமே நடந்தது. நவீன மனிதன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் பயணம் செய்கின்றான்.
தரைப்பயணிகளுக்கும் கடல் பயணிகளுக்கும் பகலில் நமது சூரிய நட்சத்திரமும் இரவில் பிரபலமான துருவ நட்சத்திரமும் (Polaris-North Star) வழி காட்டின. இவை இரு பரிமாண பயணம் (2 Dimensional Space) அதாவது இடது/வலது,அல்லது முன்னால்/பின்னால் மட்டுமே செல்லக்கூடியவை. மண்ணிலிருந்து மேலெழும்பி உயரே விண்ணை தாண்டிச்செல்லும் ராக்கெட் விண்வெளி பயணம் முப்பரிமாணத்தில் (3 Dimensional Space) அமைந்துள்ளது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு பாலை வனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்த மனிதர்கள் மத்தியில் இறங்கியதே அல் குர்ஆன் வசனங்கள். மனிதன் விண்ணில் பயணம் செய்வான், சந்திரனில் இறங்குவான் என்று எவரும் கற்பனை கூட செய்திராத காலத்தில் விண்வெளி பயணத்தை பற்றி குர்ஆன் பேசுகிறது. முன்னறிவிக்கிறது ஆர்வமூட்டுகிறது.
“மனித,ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்று விட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும் மிகப்பெரும் பலத்தைகொண்டே தவிர நீங்கள் செல்லமுடியாது.” -அல்குர்ஆன்.55:33.
ஆம்! இன்று வானம்,பூமியின் எல்லையை தாண்டிச்செல்லும் பலத்தை மனிதன் பெற்று விட்டான். பூமியின் ஈர்ப்பு சக்தியை மீறிச் செல்வதற்கு 1 வினாடியில் 11 கி.மீ.வேகம் செல்லக்கூடிய உந்து சக்தி (ராக்கெட்) ஆற்றலை மனிதன் பெற்றுவிட்டான். வானத்தில் வழி அறிவது எப்படி?
விண்வெளி வீரர்களுக்கு வழி காட்டுவது யார்? ஆதி மனிதனுக்கு வழி காட்டிய அல்லாஹ் படைத்த நட்சத்திரங்கள்தான் விண்வெளி வீரர்களுக்கும் வழி காட்டுகின்றன. சந்திரனில் காலடி வைத்த அப்போலோ பயணத்திலும் (Apollo Mission) நட்சத்திரத்தை அடையாளமாக வைத்தே (Celestial Navigation) வழி அறிந்தனர்.
விண்வெளி ராக்கெட்டின் முன்பகுதியில் (Star Tracker) “விண்மீன் காட்டி” எனும் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள கேமரா, தொலை தூர நட்சத்திரங்களை நிலையாக நோக்கியவாறு இருக்கும் (Fixed Reference Point) இரு நட்சத்திரத்தின் திசை,தூரம் இவைகளை கணக்கிட்டு ராக்கெட் செல்லும் திசையையும், பூமியிலிருந்து இருக்கும் உயரத்தையும் அறிந்து கொள்வார்கள். இதில் உள்ள கம்ப்யூட்டரில் 50 நட்சத்திரங்களின் அமைவிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவைகளை வழி காட்டியாகக் கொண்டு விண்வெளி ஓடம் பயணிக்கும்.
பூமியிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் செல்லும் அமெரிக்காவின் “TRIDENT” ஏவுகணைகளும் ஒரு நட்சத்திரத்தை நிலையான அடையாளமாக வைத்தே செயல்படுகின்றன. அமெரிக்காவின் அதிவேக உளவு விமானமான SR-71, 11 நட்சத்திரங்களை (பகலிலும்) வழிகாட்டியாக வைத்தே பறக்கின்றன. ரஷ்யாவின் நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இரண்டு நட்சத்திரங்களை வழிகாட்டியாகக்கொண்டே இலக்கை அடைகிறது.
ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையை (Theory of Relativity) அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய 2004 ஏப்ரல் 4 ல் Gravity Probe-B என்னும் செயற்கைகோளை நாஸா ஏவியது. இது பூமியிலிருந்து 400 மைல் உயரத்தில் GYROSCOPE கருவி உதவியுடன் IM-Pegasi என்னும் ( HR 8703) நட்சத்திரத்தை நிலையான அடையாளமாக வைத்து பூமியின் சுழற்சியை ஆய்வு செய்து சார்பியல் கொள்கையை நிரூபித்தது.
விண்வெளியில் பறந்து கொண்டே பிரபஞ்சத்தை ஆய்வு செய்யும் ஹப்பிள் தொலை நோக்கி, (Hubble Space Telescope-HST) தொலைதூர விண்மீன் கூட்டங்களை புகைப்படம் எடுக்க இரண்டு கைடு நட்சத்திரங்களை (Guide Stars) வைத்து தன்னை நிலைப்படுத்திக்கொள்கிறது. இதன் கம்ப்யூட்டர் நினைவகத்தில் சுமார் 20 மில்லியன் விண்மீன்கள் இருப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூமியிலே வசிக்கும் மனிதர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழி காட்டவில்லை.அனைத்து ஜீவராசிகளுக்கும் அல்லாஹ்வுடைய வழி காட்டுதல் உள்ளது.ஏனெனில் மற்ற உயிரினங்களும் நம்மைப்போன்ற ஒரு இனமே! அல்லாஹ்வுடைய படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த சங்கிலித் தொடரின் கண்ணிகளே! அல்லாஹ் கூறுகிறான்.
“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்,தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப்போன்ற இனமேயன்றி வேறில்லை.” அல்குர்ஆன்.6:38.
கடந்த ஜனவரி 24 2013 , BBC யில் வந்த ஒரு ஆய்வுச் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மலத்தை உருட்டிச் செல்லும் வண்டு (Dung Beetle) தன் பொந்திற்கு போகும் பாதையை தொலை தூரத்தில் உள்ள பால்வீதி நட்சத்திர மண்டல (Milky way Galaxy) ஒளியின் மூலம் வழி அறிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Dung beetles guided by Milky Way
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயிரியல் ஆய்வாளர் எரிக் வாரன்ட் ஸ்வீடன் லேன்ட் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். பூச்சிகளின் சிறப்புத் தன்மைகள் குறித்து பல ஆய்வுகள் நடத்தி புகழ்பெற்றவர். இரவில் இரை தேடும் சிறு பூச்சி போன்ற உயிரினங்கள் சந்திரன்,மற்றும் நட்சத்திரங்களை வைத்து வழி அறிவதாக முன்பு கண்டறிந்தார்.
இவரது சமீபத்திய ஆய்வில் சாணத்தை தன் உணவுக்காக உருட்டிச் செல்லும் வண்டு இரவில் தொலை தூர பால் வீதி நட்சத்திர மண்டல (Milky Way Galaxy) ஒளியை வைத்து திசை அறிவதாக அறிவித்தார். செயற்கையான கோளரங்கத்தில் (Planetarium) வைத்து பல்வேறு சோதனை நடத்தியும் இவ்வண்டுகள் மிகச் சரியாக நட்சத்திர மண்டல ஒளியை பின்பற்றி நேர்கோட்டில் சாணத்தை உருட்டிச் சென்றன.
இதுபோல் சில பறவைகள்,விலங்குகள்,ரெயின்டீர் மான்கள்,கடலில் உள்ள சீல் மீன்கள் போன்றவை நட்சத்திரங்களின் ஒளியின் மூலம் தங்கள் திசைகளை வழி அறிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அல்லாஹ் கூறுகிறான்,
“ (வழி காட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.” -அல் குர்ஆன்.16:16.

“(இறைவன்) ஒவ்வொரு படைப்பினங்களுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழி காட்டியிருக்கிறான்.” -அல்குர்ஆன்.20:50.
எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.
thanks to READISLAM.NET