புகை மூட்டம்,பூகம்பம்,பெருநெருப்பு இறுதிநாளின் அடையாளம்

, , No Comments
புகை மூட்டம்,பூகம்பம்,பெருநெருப்பு இறுதிநாளின் அடையாளம்




‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5)



யுகமுடிவு நாள் நெருங்கும் போது ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களில் தஜ்ஜால், ஈஸா (அலை), யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆகியோரின் வருகை, அதிசயப்பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது ஆகிய ஐந்து அடையாளங்களை இது வரை கண்டோம். இனி ஏனைய அடையாளங்களைக் காண்போம்.



புகை மூட்டம்



யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் வானத்திலிருந்து புகைப்படலம் இறங்கும். அது சாதாரண புகையாக இருக்காது. மாறாகக் கடுமையான வேதனையளிப்பதாக அந்தப் புகை அமைந்திருக்கும் என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் அறிவிக்கின்றன.



‘வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக்கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும். இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்’ (அல்குர்ஆன் 44:10,11)



உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். மூமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாக புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி மூன்றாவது தஜ்ஜால் என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அபூமாலிக் (ரலி), நூல்: தப்ரானி)



பத்து அடையாளங்களைக் நீங்கள் காணும் வரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) கூறிய ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அந்த பத்து அடையாளங்களில் ஒன்றாக புகை மூட்டத்தையும் நபி (ஸல்) குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் சேர்த்துக் கொள்க!



அப்புகையை காபிர்கள் சுவாசிக்கும் போது அப்புகை அவர்களின் காதுகள் வழியாக வெளியேறும் என்றும், அதனால் அவர்களின் உடல் ஊதிவிடுமென்றும் அவர்களுக்கு அதனால் மிகப்பெரிய வேதனை ஏற்படுமென்றும் இந்த ஆதாரங்கள் கூறுகின்றன.



மூன்று பூகம்பங்கள்



யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவுகளும், பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவர்.



(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)



உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த பூகம்பங்கள் மிகவும் பிரமாண்டமானவையாக அமைந்திருக்கும்.



இம்மூன்று பூகம்பங்களையும் நபி (ஸல்) அவர்கள் மூன்று தனி அடையாளங்களாகக் கூறியுள்ளனர். இம்மூன்றையும் சேர்த்து இது வரை ஒன்பது அடையாங்களை நாம் விளக்கியுள்ளோம்.



பெரு நெருப்பு



எமன் நாட்டில் மிகப்பெரும் நெருப்பு ஏற்பட்டு, அந்நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி மொத்த உலகையும் அந்நெருப்பு சூழ்ந்து கொள்ளும். யாராலும் அணைக்க முடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது ஊரைக் காலி செய்து விட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை விரட்டிச் செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்த இடத்தை அடைவார்கள்.



‘எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின் பால் விரட்டிச் செல்லும் – அது வரை கியாமத் நாள் எற்படாது’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)



யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஒரளவு நாம் அறிந்து கொண்டோம்.



மறுமை நாள் – மகத்தான செய்தி – பற்றி இது போன்ற அடையாளங்களைத் தான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறியிருக்கிறானே தவிர அது எப்போது ஏற்படும் என்பதை எவரும் அறிய முடியாது.



‘அவர்கள் எதைப் பற்றிக் கேட்கின்றனர். மகத்தான செய்தியைப் பற்றியா கேட்கின்றனர். அவ்வாறில்லை. இனி மேல் அவர்கள் அறிவார்கள்’ என்ற வசனம் காபிர்கள் கேட்கும் பல கேள்விகளுக்குப் பதில் கூறுகின்றது. அவற்றில் ஒரு பகுதியை இது வரை கண்டோம். இனி ஏனைய பதில்களைக் காண்போம்.



0 comments:

Post a Comment