கேள்வி பதில்

, , No Comments
கேள்வி: சில ஊர்களில் குர்பானி கொடுக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் பங்குவைக்கின்றார்களே! இதற்கு அனுமதி உண்டா? பதில்: அல்லாஹ்வும் அவனது தூதரும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நமக்குக் கற்றுத் தரவில்லை.

கேள்வி: பள்ளிவாசல், மத்ரஸா போன்றவற்றை நிர்வகிப்பவர் எப்படிப்பட்ட தகுதிகள் கொண்டவராக இருக்க வேண்டும்? மதுக்கடை வைத்திருப்பவர்கள், சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் போன்றவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கலாமா?

பதில்: பள்ளிவாசலை நிர்வாகம் செய்வோரின் தகுதிகளை அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான்.

"அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருப்பவர்கள் தான் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய வேண்டும்." (அல்குர்ஆன் 9:18)
இந்த ஒரு வசனம் உங்கள் கேள்வி அனைத்துக்கும் போதுமான பதிலாகும்.

கேள்வி: ஹஜ்ஜுக்குச் செல்வோரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சிலர் ஸலாம் சொல்லி அனுப்புகிறார்களே! ஸஹாபாக்கள் அப்படிச் சொல்லிவிட்டனரா? பதில்: ஹஜ்ஜுக்குச் செல்பரிடம் தனக்காக அங்கே துஆ செய்யும்படி சொல்ல ஆதாரம் உண்டு! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்ராவுக்குச் சென்றபோது தனக்காக துஆ செய்யும்படி கேட்டுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஹாபாக்கள் ஸலாம் சொல்லிவிட்டதாக எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை.

கேள்வி: இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரே இரவில் முழுக் குர்ஆனையும் ஓதித் தொழுவார்கள் என்று ஒரு ஆலிம் பயான் செய்தார்?

பதில்: பச்சைப் பொய்! ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "எவர் மூன்று நாட்களுக்குக் குறைவாக, குர்ஆனை ஓதி முடிக்கின்றாரோ அவர் குர்ஆனைப் புரிந்து கொள்ளவில்லை" என்று கூறியுள்ளனர். இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குர்ஆனைப் புரிந்து கொள்ளாதவர் என்று நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை. கேள்வி: கஃபாவை நோக்கி நாம் காலை நீட்டுவதில்லை. "நீங்கள் ஒரு குறிப்பிட்ட திசைக்கு மட்டும்தான் மரியாதை செய்கிறீர்கள்! அங்கு மட்டும் தான் இறைவன் இருக்கின்றானா?" என்று இந்து நண்பர் ஒருவர் கேட்கிறார். அதற்கு என்ன சொல்வது?

பதில்: கஃபாவை நோக்கி காலை நீட்டக் கூடாது என்று எந்த தடையும் கிடையாது. நீங்கள் விரும்பினால் கஃபாவை நோக்கிக் காலை நீட்டலாம்.

கேள்வி: ஒரு பெண் இறந்த பின் அவருக்காக அவரது மகள் குர்ஆன் ஓதி வருகிறார். அந்தப் பெண் கனவில் தோன்றி "குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விடாதே! அதனால் எனக்கு கம்பளம் விரித்து, கெளரவம் அளிக்கப்படுகிறது" என்று கூறியதாக சொல்லப்படுகின்றதே! அது உண்மையா!

பதில்: கனவில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கனவுகள் மார்க்கத்தில் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

கேள்வி: சிராத்துல் முஸ்தஹீம் என்ற பாலம் பற்றி, கண் முடியை ஏழாகப் பிளந்த அளவு மெல்லியதாக இருக்கும் என்றும் அதன் கீழ் நரகம் இருக்கும் என்றும் சொல்கிறார்களே! அது உண்மையா?

பதில்: உங்களில் எவரும் அந்த நரகத்தைக் கடந்தே ஆக வேண்டும் என்பது திருக்குர்ஆனின் கருத்து. (மர்யம் 71) இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலத்தைக் கடந்து செல்வது என்று விளக்கம் தந்துள்ளனர். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
எவராக இருந்தாலும் "சிராத்" (பாலத்)தைக் கடந்தாக வேண்டும் என்பது குர்ஆன் ஹதீஸிலிருந்து தேளிவாகின்றது. ‘சிராதுல் முஸ்தகீம்’ என்று பெயர் அதற்கு இருப்பதாக நாம் அறிந்தவரை காண முடியவில்லை. முடியை விடவும் ெமல்லியதாக இருக்கும் என்பதற்கும் எவ்வித சஹீஹான ஹதீஸையும் நாம் காணவில்லை.

கேள்வி: பாங்கு சொல்லும் போது வீட்டின் முன் வாயிலைத் திறந்து பின்வாயிலை அடைகின்றனர். முன்வாயில் வழியாக ரஹ்மத்துடைய மலக்குகள் வருவார்களாம். பின்வாயில் திறந்திருந்தால் அந்த விழியே அவர்கள் சென்று விடுவார்களாம். அதற்காகத் தான் இந்த முன்னெச்சரிக்கை என்றும் கூறுகின்றனர். சரியா?

பதில்: இதற்கெல்லாம் ஆதாரம் எதுவும் கிடையாது. மலக்குகள் வர, போக இந்த வாசல்கள் எதுவும் தேவை இல்லை. கதவை இறுக்கமாக அடைத்து விட்டால் ‘மலக்குல் மவ்த்’ வரமாட்டார் என்று சொல்லாத வரை சரிதான்.


கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் முஸ்லிம்களா?

பதில்: அபூபக்ருல் கதீப், அபுல் காசிம் சுஹைலீ, ஆபூ அப்துல்லாஹ் குர்துபீ ஆகியோர் "திரும்பவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர் உயிர் கொடுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவினர்" என்பதாக அறிவித்துள்ளனர்.

அதன் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற பலர் ஹதீஸ்கலை வல்லுனர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இது திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்பதில் ஹதீஸ்கலை வல்லுனர்களில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மட்டும் இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் இதை நிலை நிறுத்த முயன்றுள்ளார்கள். ஸஸீஹான ஹதீஸ்களைப் பார்ப்போம். "ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கின்றார்?" என்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நரகில் இருப்பதாக கூறினார்கள். அவர் திரும்பிச் செல்லும்போது அவரை அழைத்து ‘என் தந்தையும், உன் தந்தையும் நரகில்தான் உள்ளனர்’ என்று கூறினாாகள். (முஸ்லிம்)

"என் தாயின் கப்ரை ஜியாரத் செய்ய அல்லாஹ்விடம் அனுமதி வேண்டினேன். அல்லாஹ் அனுமதி அளித்தான். என் தாய்க்காப் பாவமன்னிப்புக் கோர என் இறைவனிடம் அனுமதி கோரினேன். என் இறைவன் மறுத்து விட்டான்" என்பதும் நபிமொழி. (முஸ்லிம்) இவற்றிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் முஸ்லிம்களல்லர் என்பதைத் தெளிவாகப் புரியலாம்.
கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்களை உயிருடன் புதைக்கக் காரணம் என்ன?

பதில்: எல்லா அரபிகளும் பெண்களை உயிருடன் புதைத்துக் கொண்டிருந்ததில்லை. அப்படி இருந்தால் பெண்களே உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்தான் அவ்வாறு செய்துள்ளனர். அவர்களிடம் எத்தகைய சமுதாயக் கொடுமை நடந்ததோ தெரியவில்லை. "என்ன காரணத்திற்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசரிக்கப்படுவாள்" (அல்குர்ஆன் 81:8) என்ற வசனத்திலிருந்து எவ்விதக் காரணமின்றி அறியாமையின் காரணமாகவே அவர்கள் செய்திருக்கக் கூடும் என்று அறிய முடிகின்றது.


பல்வேறு சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தாங்கள் அறியாமைக் காலத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் புதைத்து விட்டதாகச் சொல்லி வருந்தி இருக்கின்றனர். அவர்களெல்லாம் அறியாமையைத் தான் காரணமாகக் காட்டியுள்ளனர்.

பொதுவாகவே மனித இயல்பை உற்று நோக்கினால், பெரும்பாலும் ஆண் குழந்தையை விரும்பும் தன்மையிலும், பெண் குழந்தையை வெறுக்கும் தன்மையிலும் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.

இதற்கு அறிவு பூர்வமாக எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. அவ்வாறே அன்றைய அரபிகளில் சிலர் செய்து வந்ததற்கும் அறிவு பூர்வமான காரணங்களை வரையறுத்துச் சொல்ல முடியாது. என்ன காரணம் கூறப்பட்டாலும், அது மனிதர்களால் செய்யப்படும் அனுமானமாகத்தான் இருக்குமே தவிர சரியானதென்று உறுதி சொல்ல முடியாது. கேள்வி: வீடுகளில் புறா, முயல் போன்றவை வளர்க்கலாமா? அதனால் முஸீபத் ஏற்படுமாமே!

பதில்: பாங்கோசை கேட்காத இடத்தில் ஒருவன் தனித்துத் தொழுதாலும் பாங்கு சொல்வதே சிறப்பு. "ஒரு மலை உச்சியில் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவர் தொழுகைக்காக பாங்கு சொல்லி பின்னர் தொழுவதைப் பற்றி அல்லாஹ் மலக்குளிடம் புகழ்ந்துரைக்கிறான்" என்று "நஸயீ" யில் ஹதீஸ் உள்ளது. அதுபோல் இகாமத் சொல்வதற்கும் ஹதீஸ் உள்ளது. உங்களின் கடைசி கேள்விக்குத் தனியாக ஒரு கட்டுரை விரைவில் வெளிவரும்.

கேள்வி: "தப்பத் யதா" என்ற சூராவை அடிக்கடி ஓதக் கூடாது என்கிறார்களே! ஏன்?

பதில்: ஏனோ தெரியவில்லை. பரவலாக அப்படிப் பேசிக் கொள்கின்றனர். நாம் அறிந்தவரை அப்படி ஒரு ஹதீஸைக் காணவில்லை. குர்ஆனில் தனக்குத் தெரிந்ததை ஓதும்படிப் பொதுவாகத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.

கேள்வி: பாங்கு சொல்லும் போது நாம் மல ஜலம் கழித்துக் கொண்டோ, பெருந்தொடக்காகவோ, மாதவிலக்காகவோ இருந்தால் பாங்கைக் கேட்கும் போது ஓத வேண்டிய திக்ருகளைச் செய்யலாமா? இந்த நேரங்களில் ஸலாம் கூறலாமா?

பதில்: மல ஜலம் கழிக்கும் போது எந்த திக்ருகளையும் சொல்லக் கூடாது. இரண்டு நபர்கள் மல ஜலம் கழிக்கும் போது பேசிக் கொண்டிருப்பதையே அல்லாஹ் வெறுக்கிறான் என்பது நபி மொழி. (அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா) உலகப் பேச்சுக்களையே பேசக்கூடாது என்னும் போது திக்ருகள் செய்யலாகாது என்பதை எவரும் உணரலாம். மேலும் மலஜலம் கழிக்கும்போது ஸலாம் சொல்லவும் கூடாது.

யாரேனும் ஸலாம் சொன்னால் அந்த நேரத்தில் அதற்குப் பதில் சொல்லவும் கூடாது. "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது ஒருவர் ஸலாம் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்குப் பதில் கூறவில்லை" என்ற ஹதீஸ் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்டு ‘நஸயீ’யில் இடம் பெற்றுள்ளது.

பெருந்தொடக்காகவோ, மாதவிடாயாகவோ, இருப்பவர் தொழுவது நோன்பு நோற்பது, தவாபு செய்வது, குர்ஆன் ஒதுவதைத் தவிர மற்ற திக்ருகள் செய்யலாம்; ஸலாம் கூறலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவைகளுக்குத்தான் தடை விதித்துள்ளனர். கேள்வி: ரமலான் மாதத்தில் முழுகுர்ஆனையும் ஓதிக் கேட்டுத் தான் ஆக வேண்டுமா?

27-க்குப் பிறகு உள்ள மூன்று நாட்களில் ‘சபீனா’ என்ற பெயரில் முழு குர்ஆனையும் தராவீஹில் ஓதுகின்றனரே! இதற்கு ஆதாரம் உண்டா? பெருநாள் தொழுகை முடிந்ததும் கபரஸ்தானுக்குச் சென்று பாத்திஹா ஓத வேண்டும் என்கின்றனர். இதற்கும் ஆதாரம் உண்டா? மூன்று கேள்விகளுக்கும், விரிவாக விளக்கமாகப் பதில் தரும்படி கேட்கிறேன்.

பதில்: ஆதாரம் இல்லாதவைகளுக்கு விரிவாக எப்படிப் பதில் தர முடியும்? நீங்கள் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுக்கும் எவ்வித ஆதாரமும் நாம் காணவில்லை. யார் இப்படிச் செய்கிறார்களோ அவர்களிடம் தான் நீங்கள் ஆதாரம் கேட்க வேண்டும்.

கேள்வி: இறந்து போனவர்களை அடக்கம் செய்துவிட்டு இஷாவிலிருந்து சுபுஹ் வரை மூன்று நாட்கள் குர்ஆன் ஓதுகிறார்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள் காலத்தில் இப்படி நடந்துள்ளதா?

பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலோ, ஸஹாபாக்கள் காலத்திலோ இப்படி நடக்கவில்லை. மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் பிற்காலத்தில் நுழைக்கப்பட்ட பழக்கமே இது. கேள்வி: தாய், தந்தை இவர்களின் கால்களில் விழலாமா? ஆதாரத்துடன் விளக்கம் தரவும்?

பதில்: கூடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கோ, அவர்களின் அன்பு தோழர்களுக்கோ அவர்களின் பிள்ளைகள் இவ்வாறு செய்ததில்லை."தன் சகோதரனையோ, நண்பனையோ , சந்திக்கும் போது அவனுக்காகக் குனிந்து மரியாதை செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது,"கூடாது" என்று கூறினார். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி

குனிந்து செய்யும் மரியாதையைக் கூட ஒரு மனிதனுக்குச் செய்யக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளனர் என்னும் போது நீங்கள் கேட்டது நிச்சயமாகக் கூடாது!

கேள்வி: ‘முபஸ்மிலன், முஹம்திலன், முஸல்லியன், முஸல்லிமா’ என்று சில திருமணப் பத்திரிகைகளில் காணப்படுகின்றதே! அதன் பொருள் என்ன?

பதில்: பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், ஸலவாத் சொல்லித் துவக்குகிறோம் என்று பொருள்
கேள்வி: "இகாமத் சொன்னதும் உடனே எழக்கூடாது; ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று கூறும்போதே எழ வேண்டும்" என்று எங்கள் இமாம் பயான் செய்தார்! சரிதானா?

பதில்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னைக் காணும் வரை நீங்கள் எழ வேண்டாம்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவுது, நஸயீ, திர்மிதீ, அஹ்மத், தாரமீ. இதிலிருந்து, இமாம் தொழ வைக்கின்ற இடத்திற்கு வந்துவிட்டால் நாம் எழ வேண்டும் என்பதை விளங்கலாம்.
கேள்வி: ரமலான் மாதத்தில், மாதவிடாய் வருவதைத் தவிர்ப்பதற்குள்ள மாத்திரைகளைச் சாப்பிட்டு, நோன்பு வைக்க மார்க்கத்தில் உரிமை உண்டா?

பதில்: மாதவிடாய் காரணமாகப் பெண்கள் விடுகின்ற நோன்பைப் பிறகு "களா" செய்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு அதே கூலியை வழங்குவான். (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறிருக்க அல்லாஹ்வும், அவனது தூதரும் வழங்கிய சலுகைகளைப் பயன்படுத்துவதுதான் பெண்கள் செய்யவேண்டியது.

அல்லாஹ்வுடைய சலுகைகளைப் புறக்கணித்து நன்மை என்ற பெயரால் செயற்கை முறைகளைக் கையாள்வது முறையற்றது. பல சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் சலுகைகளைப் பயன்படுத்தாதவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளனர்.

கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 40 வயதிலதான் நபியாக்கப்பட்டார்கள். எனவே 40 வயதில் தான் தாடியும் வைத்திருப்பார்கள். அதுபோல் இளைஞர்கள் தாடி வைக்காமல் இருந்துவிட்டு 40 வயதில் வைத்தால் போதுமல்லவா? தாடி வைப்பது சுன்னத் என்று யார் மூலமாகச் சொல்லப் படுகிறது?ஆதாரம் தேவை.

பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 40 வயதில் தான் தொழுதார்கள் என்று சொல்லி நீங்களும் 40 வயதில் தான் தொழ ஆரம்பிப்பீர்களோ? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 40 வயதில் நபியானாலும் அவர்களின் உத்தரவுகள் பருவமடைந்த ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தும். கேள்வி: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பெண் என்பதால் அவர் சொல்கின்ற 11ரக்அத் பற்றிய ஹதீஸை சேலம் அரபிக்கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பகிரங்கமாக மறுக்கிறார். பெண்களாக இருந்தால் இரு சாட்சிகள் வேண்டும்; ஒரு பெண் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலமாக இஸ்லாத்தின் சுமார் பாதிச் சட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அனைத்தையும் அவர் மறுத்தாலும் மறுக்கலாம். மேலும் அவர் கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தவிர இன்னும் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, உபை இப்னு கஃபு ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் தராவீஹ் 8ரக்அத் என்று அறிவித்துள்ள ஹதீஸ்களை என்ன செய்யப் போகிறாராம்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றைவிடத் தங்களின் மனோ இச்சை அவர்களுக்குப் பெரிதாக தோன்றுகிறது.

கேள்வி: அத்தஹியாயத்தில் ‘அல்லாஹும்மஃபீர்லி வலிவாலிதைய்ய’ என்ற துஆ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தந்ததா?

பதில்: பல்வேறு துஆக்களை அத்தஹியாயத்தில் ஓதும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் நீங்கள் குறிப்பிட்ட துஆவைக் காண முடியவில்லை. (அல்லாஹ் மிக அறிந்தவன்)

கேள்வி: பொது அனுமதி இல்லாத இடங்களில் ஜும்ஆ நடத்தக் கூடாது என்று பல மதரஸாக்கள் பத்வா வழங்குகின்றனவே! இது சரிதானா?

பதில்: சரியில்லை. ஜும்ஆ விஷயத்தில் தேயைற்ற பல நிபந்தனைகளை விதித்துள்ளது சரியானதன்று! அன்றைய முஸ்லிம்(?) மன்னர்கள், தங்கள் ஆட்சி ஜும்ஆ பிரசங்கத்தில் விமர்சிக்கப்படலாம் என்று அஞ்சி, தங்கள் அனுமதி இல்லாமல் ஜும்ஆ நடத்தக் கூடாது என்று சட்டமியற்றினர். அதற்கு அன்றைய அறிஞர்களில் பெரும்பான்மையோர் துணைபோயினர்.

எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகின்றாரோ அவர் மீது ஜும்ஆ கடமையாகும். நோயாளி, பிரயாணி, பெண், சிறுவன், அடிமை ஆகியோர் நீங்கலாக மற்ற அனைவர் மீதும் ஜும்ஆ கடமையாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : தாரகுத்னீ.)ஜும்ஆ ஜமாஅத்துடன் தொழுவது நால்வர் நீங்கலாக அனைவர் மீதும் கடமையாகும். 1) அடிமை. 2) பெண் 3) சிறுவர் 4)நோயாளி என்பதும் நபிமொழி. அறிவிப்பவர் : தாரிக் இப்னு ஷிஹாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது.ஜும்ஆவுக்கு ஆஜராவது கடமையாகும். அறிவிப்பவர் : அன்னை ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : நஸயீ. மேற்கூறிய நபிமொழிகள் உங்களுக்குப் போதுமானதாகும். மனிதர்களின் சொந்த அபிப்பிராயங்களுக்கு நீங்கள் செவி சாய்க்க வேண்டாம்.

கேள்வி: தனியாக ஜும்ஆ நடத்தலாமா? குத்பா எப்படி ஓத வேண்டும்? எத்தனை பேர் வேண்டும்?

பதில்: இதற்கு முன்னால் உள்ள பதிலைப் பாருங்கள்! ஜும்ஆ ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை எழுதியிருக்கின்றோம். தனியாகத் தொழ முடியாது. உங்களுடன் இன்னொருவரைச் சேர்த்துக் கொண்டால் ஜமாஅத்தாகி விடும்.

அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறி இறையச்சத்தை ஏற்படுத்துகின்ற விதமாக, குர்ஆன் ஹதீஸ்களைக் கூறுங்கள்! கொஞ்சம் உயரமான இடத்தில் நின்று கொள்ளுங்கள். இரண்டு குத்பாவுக்கு இடையே சிறிது அமர்ந்து கொள்ளுங்கள். நீங்களே ஜும்ஆ நடத்திடலாம். கேள்வி: ஜும்ஆ தினத்தில் தொழுகை முடிந்து தான் வெளியூர் செல்ல வேண்டும்; அன்று காலையில் எந்த வெளியூருக்கும் செல்லக் கூடாது என்கிறார்களே! சரிதானா?

பாங்கு முடிந்தபின்தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றார்களே! சரிதானா?

பாங்கு சொல்லப்படும் போது வெளியில் செல்லக் கூடாது என்றும், பாங்கு முடிந்தபின் தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றார்கள். அப்படி மீறி நடந்தால் பல வியாதிகள் ஏற்படும் என்கிறார்களே? சரிதானா?

பதில்: ஜும்ஆ கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். சின்னசின்ன காரணங்களுக்காக அதை விட முடியாது. எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே, வெள்ளிக்கிழமையன்று அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு என்பவரை ஒரு சிறு படையுடன் அனுப்பி வைத்துள்ளனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ.
தவிர்க்க இயலாத காரணங்கள் இருந்தால் அன்று வெளியூர் செல்லத் தடை ஏதும் இல்லை. பாங்கு சொல்லப்படும்போது வெளியே செல்லக் கூடாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, பாங்கோசை கேட்டதும் தொழுகைக்காக அவன் புறப்பட்டுச் செல்வதுதான் முறை. வியாதி ஏற்படும் என்பதெல்லாம் நம்பக்கூடாதவை.

கேள்வி: ஆறு நோன்பில் இரண்டு தான் வைத்தேன். இன்னும் நான்கு நோன்பு வைக்கவில்லை. ‘களா’ செய்யலாமா?

பதில்: ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்பது சுன்னத். தவறவிட்டுவிட்டால் ‘களா’ செய்வதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் காணப்படவில்லை.

கேள்வி: பால், வாசனைப் பொருட்கள், பெண்கள் இம்மூன்றும் எனக்கு மிகவும் விருப்பமானவை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு ஆலிம் பயான் செய்தார். அந்த ஹதீஸ் உண்மையானதுதானா? உண்மையானது என்றால் ‘பெண்கள்’ என்று கூறியிருப்பதின் உட்கருத்து என்ன?
பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது இப்படித்தான். "பெண்களும் வாசனைப் பொருட்களும் உலகப் பொருட்களில் எனக்கு விருப்பமுடையதாக்கப்பட்டுள்ளன; என் கண் குளிர்ச்சி தொழுகையில் தான் உண்டு." அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் :நஸயீ .இங்கே பெண்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டது தம் மனைவியரைப் பற்றித்தான். பொதுவாக எந்த ஆண் மகனுக்கும் மனைவியர் விருப்பமுடையவர்களாகத் தானிருப்பார்கள்.

இதில் தவறு எதுவும் கிடையாது. ஒளிவு மறைவில்லாமல் தனது நிலையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப் படுத்துகின்றார்கள்.

மேலும் அந்த ஹதீஸின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். பெண்களும் வாசனைப் பொருட்களும் எனக்கு விருப்பமுடையன என்றாலும் தொழுகையில் தான் கண் குளிர்ச்சியும் மன மகிழ்ச்சியும் உண்டு. நான் விரும்புகின்ற மனைவியரை விடவும் இறைவனுடன் உரையாடும் தொழுகை எனக்கு விருப்பமானது என்பதை இலக்கிய நயத்துடன் சொல்லிக்காட்டுகின்றனர். ‘பால்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாகக் காணமுடியவில்லை. கேள்வி: தர்ஹாவுக்குச் செல்வதைத் தடுக்கும் நீங்கள் கஃபாவில் உண்ண ‘ஹஜருல் அஸ்வத்’தை முத்தமிடுகிறீர்களே! அது ஷிர்க் அல்லவா? என்று என் முஸ்லிம் நண்பரே கேட்கிறாரே! அவருக்கு என்ன பதில் சொல்வது?

பதில்: "நீ ஒரு கல் எனக்கு நிச்சயமாகத் தெரியும். உன்னால் நன்மை தீமையைக் கொண்டு வரவோ, தடுக்கவோ இயலாது என்பது எனக்குத் தெரியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிடமாட்டேன்" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லைப் பார்த்துச் சொல்வது போல் நம்மவர்க்குப் புரிய வைத்தார்களே, அதை அவருக்கும் சொல்லுங்கள்! (ஆதார நூல் : புகாரி, முஸ்ரிம், அஹ்மத், தாரமி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் முத்தமிட்டார்கள் என்கிறீர்களா? "ஹஜருல் அஸ்வத்" சுவர்க்கத்திலிருந்து உலகுக்குக் கொண்டுவரப் பட்ட பொருளாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே காரணத்தையும் கூறிவிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நுால்: நஸயீ)

இந்த உலகிலேயே இருக்கின்ற சுவர்க்கத்துப் பொருள் சுவர்க்கத்து மண் கொண்டு கட்டப்பட்டவை அல்ல.) கண் தானம் பற்றிய உங்கள் கேள்விக்கு இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்ஸ கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை?

பதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்க கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.

கேள்வி: அஹ்மது கபீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ‘ரவ்லா’வில் நின்று கொண்டு "கையை நீட்டுங்கள்" என்று கூறியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கையை நீட்டியதாகவும் அதனை அவர்கள் முத்தமிட்டதாகவும் அல்லாஹ் அவர்களுக்கு சுல்தானுல் ஆரிபீன் என்று பட்டம் வழங்கியதாகவும் கூறப்படுகிறதே! உண்மையா?

பதில்: அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அதனைப் பல்லாயிரம் பேர் பார்த்திருப்பார்கள். உலக வரலாற்றில் அதிசய நிகழ்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்!

அஹ்மது கபீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை விடப் பல்லாயிரம் மடங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு வைத்திருந்த அருமை ஸஹாபாக்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குச் சொல்லித் தரவுமில்லை. ஸலாம் சொல்லும்படித்தான் சொல்லிச் சென்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத எதனையும் அஹ்மது கபீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றவர்கள் செய்ய மாட்டார்கள். நல்லவர்கள் பெயரால் இது போன்ற கதைகள் ஏராளம்!

அல்லாஹ் ‘சுல்தானுல் ஆரிபின்’ என்று அஹ்மது கபீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்குப் பட்டம் வழங்கியதாகக் குர்ஆனில் எந்த ஒரு ஆயத்தையும் காண முடியவில்லை. ஹதீஸையும் காணோம். அல்லாஹ் சொல்வதை, குர்ஆன் மூலமும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமும் தான் நாம் அறிய முடியும். கேள்வி: ஆண், பெண் இருபாலரும் சுற்றுலா செல்லலாமா?

நாம் இருட்டில் தொழலாமா?

பெண்கள் கோழி அறுக்கலாமா?

பதில்: ‘ஹிஜாப்’ புக்குரிய சட்டப்படி செல்ல முடியுமென்றால் கணவன், சகோதரன், தந்தை போன்றவர்களுடன் செல்லலாம். அது பெரும்பாலும் சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது.

விளக்கு எதுவும் இல்லாமல் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதிருக்கிறார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள் : புகாரி, முஸ்லிம்) எனவே இருட்டில் தொழலாம்.

ஒரு பெண்மணி காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஆடு மரணத் தறுவாயை நெருங்கியபோது, கூர்மையான ஒரு கல் மூலம் அந்த ஆட்டை அறுத்தாள். பிறகு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைச் சாப்பிடலாமா என்று கேட்டாள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனைச் சாப்பிடும்படி அனுமதி தந்தனர்.அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி. எனவே கோழிஅறுப்பதில் தவறு இல்லை. கேள்வி: சிலர் தொழுது முடிந்ததும், பள்ளியில் இரண்டு அடி முன்னால் நடந்து, பிறகு திரும்புகிறார்களே! ஹதீஸில் இப்படி செய்ய வேண்டும் என்று உள்ளதா?

பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் அருமைத் தோழர்களும் செய்யாத பித்அத்தாகும்.

பதில்கள்: மவ்லவி P ஜைனுல் ஆபிதீன்

0 comments:

Post a Comment