ஆதம் அலைஹிஸ்ஸலாம் வரலாறு

, , No Comments
வரலாறு முன்னுரை:

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை களிமண்ணிலிருந்துப் படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான்.

அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தன்னால் படைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை அவனே கற்றுக்கொடுத்தான். பின் அப்பெயர்களை மலக்குமார்களுக்கு விவரிக்குமாறு பணித்தான்.

பிறகு தன்னால் படைக்கப்பெற்ற மலக்குமார்கள் போன்றோர்களை நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சிறம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டான்.

இப்லீஸ் தவிர மற்ற ஏனையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க சிறம் பணிந்தார்கள். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்ட ஆணவத்தால் களிமண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கத்திற்கு சிறம்பணிய மறுத்ததுடன் கியாமத் நாள் வரை அல்லாஹ்விடத்தில் அவகாசமும் வாங்கி வந்தான்.

இனி என் வேலை ஆதமுடைய மக்களை நேரான வழியில் செல்வதை தடுத்து அவர்களுக்கு முன்னும், பின்னும், இடமும், வலமும் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்து வருவேன் என கூறினான்.

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்தே அவர்களது துணைவியர், (ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்தான். இதையே திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு பயந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்: பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)

இப்லீஸ் கூறியவாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வழிக்கெடுக்க நினைத்து, இறைவன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தும், இப்லீஸ், நீங்கள் இந்த கனியை உண்டால் நீங்கள் மலக்குகளாக ஆகிவிடுவீர்கள் அல்லது இந்த சுவனபகுதியிலேயே தங்கிவிடுவீர்கள் என இனியப் பேச்சில் மயங்கி இறைவன் தடுத்திருந்த மரத்தின் கனிகளை தின்றதினால் அவர்களுடைய வெட்கஸ்தலங்கள் வெளிப்பட்டன, அவர்கள் அங்கிருக்கும் இலைகளை எடுத்து மறைத்த வன்னம் இருந்தனர், அப்போது இறைவன் என் கட்டளையை மீறிச் சென்றதால் உங்களை இங்கிருந்து பூமிக்கு அனுப்புகிறேன் அங்கு சில காலம் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்து பிறகு என்னால் எழுப்பப்படுவீர்கள் என கூறி அனுப்பினான்.
இவ்வுலகில் மனித வாழ்வின் துவக்கம் - வானவர்களின் உரையாடல்:

(நபியே!) இன்னும் உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள். அதற்கு இறைவன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (திருக்குர்ஆன் 2:30)
இன்னும் (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாள்ர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான் (திருக்குர்ஆன் 2:31)

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள். (திருக்குர்ஆன் 2:32)

"ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக" என்று (இறைவன்) சொன்னான் அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா! என்று (இறைவன்) கூறினான். (திருக்குர்ஆன் 2:33)

மலக்குகள் - மனிதன் - வேறுபாடு:

இறைவன் கட்டளையை சிறிதும் மாற்றமில்லாமல் அப்படியே செய்யக்கூடியவர்கள் மலக்குமார்கள், ஆனால் மனிதன் போதிய அறிவு பெற்றமையால் தவறிழைக்கக் கூடியவன். எனவே மலக்குகள் அவ்வாறு கேட்டார்கள். மனிதன் தவறிழைத்தாலும் அத்தவறுக்காக செய்யும் பாவமீட்சியை இறைவன் விரும்புகிறான் என்பதை கீழ்காணும் நபிமொழி தெளிவாக உணர்த்துகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எவனின் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் பாவம் செய்யவில்லையாயின், அல்லாஹ் உங்களை போக்கிவிட்டு, பாவம் செய்யும் வேறொரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹுதஆலாவிடம் பிழைப் பொறுப்பு இறைஞ்சுவார்கள். அவர்களுக்கு அவன் மன்னிப்பளிப்பான். (நூல் - முஸ்லீம் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)

இறைவன் ஆதமுக்கு கற்றுக்கொடுத்தான்:

இன்னும், (இறைவன்) எல்லாப் பொருட்களின் பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, கற்றுக்கொடுத்தவற்றை விவரிக்க சொன்னான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுதஆலா, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்த பொழுது அவர்களுக்குக் கூறினான்: களிமண்ணிலிருந்துப் (ஆதமே!) நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தினருக்கு ஸலாம் கூறுவிராக! (அதற்குப் பதிலாக) அவர்கள் உமக்கு வழங்கும் காணிக்கையை செவிமடுப்பீராக! நிச்சயமாக அது உமக்கும், உம் சந்ததியினருக்கும் உரிய காணிக்கையாகும். அதன்படி ஆதம் அலைஹிஸ்ஸலாம, (அம்மலக்குகளின் கூட்டத்தினரிடம் சென்று) "அஸ்ஸலாமு அலைக்கும்", உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டவதாக என்று கூறினார்கள். அதற்கு அம்மலக்குகள், "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி" உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள், "வரஹ்மத்துல்லாஹி" என்ற சொல்லை ஸலாமின் மறுமொழியில் அவர்கள் அதிகப்படுத்தினார்கள். (நூல் - புகாரி, முஸ்லீம் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கற்றுதந்த பாவமீட்சிக்கான பிரார்த்தனை:
அதற்கு அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்". என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 7:23)

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் பூமிக்கு இறக்கப்படுதல்:

(அதற்கு) இறைவன், "இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள். உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" (திருக்குர்ஆன் 7:24) "அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள் அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள் (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்". (திருக்குர்ஆன் 7:25)

ஒரே வழித்தோன்றல்:

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவர்களிலிருந்தே அவர்களுடைய மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான் ஆகவே அல்லாஹுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

களிமண்ணால் படைத்தான்:

இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்ததுப் பற்றி தெளிவாக கூறுகிறான்.
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (திருக்குர்ஆன் 15:26)

(அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (திருக்குர்ஆன் 15:28)
மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜுவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்பட்டார்கள். (நூல்: முஸ்லீம் - அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா)

அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பாகவும், சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்தமுடையோராகவும், சிலர் நடுநிலையிலும் உள்ளனர். (நூல்: அஹ்மத் - அறிவிப்பாளர்: ஆபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு)

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்ட நாள்:
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைந்தார்கள், அன்றுதான் அவர்கள் செர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். (நூல்: முஸ்லிம் - அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)

ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்களே, அப்பாவத்தை உணர்ந்து இறைவனிடத்தில் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்தால் இறைவன் தன் பாவங்களை மன்னித்து நல்வாழ்வினைத் தருவான். நாம் அனைவரும் ஷைத்தானுடைய வலையில் விழுந்துவிடாமல் இறைவன் கட்டளைப்படி, எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த வழியில் சென்று ஈருலக நல்வாழ்வினைப் பெற்று, நல்லடியானாக மர்ணிப்பதற்கு கருணை உள்ள ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

0 comments:

Post a Comment