அல்-குர்ஆன் பகுதி-2

, , No Comments
Q51) பெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென இறைவன் கூறுகிறான்?

A) “அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்”. (33:59)

Q52) அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?

A) “எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொணடு தீர்ப்பளிக்க வில்லையோ, அவர்கள் நிச்சயமாக காபிர்கள் தாம்” அல் மாயிதா(5:44)

Q53) மார்க்கத்தில் பல பிரிவுகள் குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) “இறைவனின் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் யார் தங்களுக்குள் பிரிவையுண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விடடார்களோ அவர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அத்தகையோருக்கு கடுமையான வேதனையுண்டு” ஆல இம்ரான்(3:105)

Q54) கருக்கலைப்பு, குடும்பக்கட்டுப்பாடு குறித்து இறைவன் கூறுவது என்ன?

A) “வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலைச் செய்யாதீர்கள்: நாமே உங்களுக்கும் ஆகாரமளிக்கின்றோம்: அவர்களுக்கும் அளிப்போம்” அல் அன் ஆம்(6:151) மற்றும் பனீ இஸ்ராயீல்(17:31)

Q55) வானவர்களுக்கு இறக்கைகள் உண்டா?

A) வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு. 35:1 (அல் ஃபாத்திர்)

Q56) ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது?

A) ஆது சமுகத்தாருக்கு. (69:6,7) (அல் ஹாக்கா)

Q57) முஃமினான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது?

A) ‘எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்: இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு’ அந் நூர்(24:23)

Q58) இறைவனால் பெயர் சூட்டப்படட நபிமார்கள் யாவர்?

A) யஹ்யா (அலை). மர்யம்(19:7), ஆல இம்ரான்(3:39) மற்றும் ஈஸா (அலை) (3:45)

Q59) குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வரும் வானவர்கள் பெயர் என்ன?

A) மாலிக் (அலை) அஜ் ஜுக்ருஃப்(43:77) மற்றும் மீக்காயீல் (அலை) அல்பகரா(2:98)

Q60) ஹுதமா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?

A) ஹுதமா-எரிந்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பு: அது உடலில் பட்டதும் இதயங்களில் பாயும்: ஹுமஜா (104-4,5,6,7)

Q61) ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?

A) ஹாவியா-அது சுட்டு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும். அல் காரிஆ(102-8,9,10,11)

Q62) ஜக்கூம் என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?

A) ஜக்கூம்-இது நரகத்தில் உள்ள கள்ளி மரமாகும்: நரகவாசிகளின் விருந்தாகும்: அம்மரம் நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும்: அதன் பாளைகள் சைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும். அஸ் ஸாஃப்ஃபாத்(37:61-66) மற்றும் அத் துகான்(44:43-46), 56:52

Q63) திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய ஆயத்து எது?

A) அல்பகரா(2:282)

Q64) சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்? ஏன்?

A) சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்பவர்களை குர்ஆனில் கூறுகிறான். மேலும் இந்த வசனத்தில் சிலந்திப் பூச்சியின் வீடு வீடுகளில் எல்லாம் மிக மிக பலஹீனமாகயிருப்பதைப் போல், இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்கள் (அவுலியாக்கள், ஷைய்கு மார்கள், பீர் மார்கள், மஸ்தான்கள்) போன்றவர்களும் உங்களுக்கு உதவ முடியாத அளவுக்கு மிக மிக பலஹீனமானவர்களே! என்பதை தெளிவு படுத்துகிறான்.(அன் கபூத்(29:41)

Q65) கழுதைக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?

A) கழுதைக்கு உதாரணமாக, தவ்ராத் வேதம் கொடுக்கப் பெற்றும் அதன்படி நடக்காதவர்களை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். (அல் குர்ஆன் ஜும்ஆ(62:5). மேலும் வெறுக்கத்தக்க குரல் வளம் உடையோருக்கும் கழுதையைஉதாரணமாக கூறுகிறான். (31:19)

Q66) தீமையான செயல் புரிபவர்கள் மரண தருவாயில் பாவ மன்னிப்பு கோருவது குறித்து இறைவன் கூறுவது என்ன?

A) “இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ‘நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்’ என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். ” 4:18 (அந் நிஸா)

Q67) உங்களுக்கு தெரியாத ஐந்து விஷயங்கள் என்று சூரத்துல் லுக்மான் முலம் இறைவன் குறிப்பிடுபவை எவை?

A) 1) கியாம நாள் 2) மழை இறங்குவது 3) கர்பங்களில் உள்ளவை 4) நாளைய தினம் தான் சம்பாதிப்பதை 5) எந்த பூமியில் தாம் இறப்போம். லுக்மான்(31:34)

Q68) அஸ்ஸப்ஃவுல் மஸானி என அழைக்கப்படும் சூரா எது?

A) நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவிற்கு அஸ்ஸப்ஃவுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனப் பெயரிட்டுள்ளார்கள் (ஆதாரம் :புகாரி)

Q69) குர்ஆனின் இதயம் என சிறப்பிக்கப்பட்ட சூரா எது?

A) சூரத்துல் யாசின் (36 வது அத்தியாயம்)

Q70) பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா?

A) “பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்” அந் நிஸா (4:7)

Q71) தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவர் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?

A) “எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்). தவ்பா (9:34,35)

Q72) லுக்மான (அலை) அவர்கள் தம் புதல்வருக்கு அறிவுரை கூறுகையில் எந்த செயலை செய்தால் அது மிகப்பெரும் அநியாயமாகும் என்று கூறினார்கள்?

A) இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)

Q73) ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் கூறுபவற்றுல் சிலதைக் கூறுக!

A) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக (2:155)

Q74) நன்மையான மற்றும் தீமையான காரியங்களுக்கு சிபாரிசு செய்பவர்களுக்கு கிடைக்கும் கூலி என்ன?

A) எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். (4:85)

Q75) கலந்தாலோசனை செய்வது குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) ஈமான் கொண்ட முஃமின்கள் தங்கள் காரியங்களை தங்களிடையே கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். ஆதாரம் :(42:36-38) மற்றும் 3:159

Q76) கேலி செய்தல் (பரிகாசம் செய்தல், கிண்டல் செய்தல்) குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) கேலி செய்தல் (பரிகசிப்பது, கின்டல் செய்வது) அறிவீனர்களின் செயல். ஆதாரம் : (2:67)

Q77) யஃகூபு (அலை) தம் குமாரர்களுக்கு செய்த வஸிய்யத்து (உபதேசம்) என்ன?

A) ”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.’ யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; ‘எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்’ எனக் கூறினர். (2:132-133)

Q78) ஈஸா (அலை) அவர்களின் சீடர்களான ஹவாரிய்யூன்கள் செய்த பிரார்த்தனை என்ன?

A) “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (3:53)

Q79) பெற்றோருக்காக என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகிறது?

A) இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:24)

Q80) ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள் என எவர்களைக் குறித்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்?

A) எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (7:40)

Q81) நரகத்திற்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

A) “அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்” (15:44)

Q82) சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உவமைகளாக இறைவன் தன் திருமறையில் எதைக் கூறுகின்றான்?

A) அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன அவ்வெள்ளம் நுரையை மேலே சமந்து செல்கிறது (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது இவ்வாறே அல்லாஹ் உமமைகளைக் கூறுகிறான். (13:17)

Q83) இறைவன் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

A) ஷிர்க் (இணைவைத்தல்) (4:116)

Q84) அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் பல்லாயிரக்கணக்கான எதிரிகளால் சுழப்பட்டிருந்த முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

A) முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான். (33:9)

Q85) ஷைத்தான்களின் சகோதரர்கள் என யாரைக் குறித்து குர்ஆன் கூறுகிறது?

A) நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)

Q86) புண்ணியம் என்றால் என்ன என்பதற்கு இறைவன் தன் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?

A) புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும்,
மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (2:177)

Q87) யூனூஸ் நபி (அலை) அவர்கள் மீன் வயிற்றினுள் இருக்கும் போது இறைவனிடம் செய்த பிரார்த்தனையைக் கூறுக.

A) அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து ‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்’ என்று பிரார்த்தித்தார்.

Q88) தீயோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது. ‘ஸிஜ்ஜீன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், ‘அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே’ என்று கூறுகின்றான். அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள். ‘எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது’ என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். (83:7-17)

Q89) நல்லோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) “நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் ‘இல்லிய்யீ’னில் இருக்கிறது. ‘இல்லிய்யுன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும். (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள். நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான(போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். (18-28)

Q90) வட்டி வாங்குபவர்களுக்கான தண்டனை குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) “யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)

Q91) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் இதயத்தில் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என இறைவன் கூறும் வசனம் எது?

A) “எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது” (29:49)

Q92) அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் எந்த ஸஹாபியின் பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டது?

A) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் முழு குர்ஆனையும் எழுத்து வடிவில் தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

அவ்வப்போது அல்லாஹ் இறக்கியருளும் வஹியை நபி (ஸல்) அவர்கள் உடனே எழுதி வைத்துக் கொள்ளுமாறு தம் தோழர்களுக்கு கட்டளையிடுவார்கள். இவ்வாறு இறைச்செய்தியை எழுதுவதற்காக நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலித் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் ஸாபித் பின் கைஸ் (ரலி) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல்பட்டைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டவைகள் நபி(ஸல்) அவர்களின் வீட்டில் வைத்து பாதுகாக்ப்பட்டிருந்தது. அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் முழு குர்ஆனையும் மனனம் செய்திருந்த ஸைத் பின் ஸாபித் (ரலி) பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டு, அவர்கள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றினார்கள். (ஆதாரம் : புகாரி)

Q93) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களால் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்ட முழு குர்ஆன், உஸ்மான் (ரலி) அவர்களால் தற்போதுள்ள அமைப்பில் தொகுக்ப்படும் வரையிலும் யார் யார் பொறுப்பில் இருந்தது?

A) முதலில் அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அது உமர் (ரலி) அவர்களின் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் உமர் (ரலி) அவர்களின் மகளும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) அவர்களிடத்திலும் இருந்தது.

பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹப்ஸா (ரலி) அவர்களிடத்தில் இருந்த அந்த மூலப்பிரதியிலிருந்து பல பிரதிகளைத் தொகுத்து உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவற்றுல் ஒன்று தான் ரஷ்யாவின் தாஸ்கண்ட் நகரத்திலும் மற்றொன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலும் இருக்கும் அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Q94) உஸ்மான் (ரலி) அவர்களால் பல பிரதிகளாக குர்ஆன் தொகுக்ப்படுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் யாவர்?

A) நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல்பட்டைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் எழுதி வைத்து பாதுகாக்கப்பட்ட குர்ஆனை அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக அமைப்பதற்காக பொறுப்பேற்ற ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களே உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் பல பிரதிகளாக குர்ஆன் தொகுக்ப்படுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தலைமை வகித்தார்கள்.

இவருடைய தலைமையிலான இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற நபித்தோழர்கள் அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி), ஸயித் பின் அல் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) போன்றோர்களாவார்கள்.

Q95) ‘குர்ஆனின் தாய்’ என நபி (ஸல்) அவர்களால் பெயரிடப்பட்ட சூரா எது?

A) அல்-பாத்திஹா

Q96) நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவதன் அவசியம் குறித்து குர்ஆன் கூறும் வசனங்களில் மூன்றைக் கூறுக:

A) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் – உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (47:33)

“(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” (59:7)

(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)

Q97) இஸ்லாம் அல்லாத மற்ற மார்க்கங்களைப் பின்பற்றுவது குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

Q98) அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களை (ஷிர்க் செய்பவர்களை) திருமணம் செய்வது குறித்து குர்ஆன் கூறும் அறிவுரை என்ன?

A) (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (2:221)

Q99) ஸலாம் கூறப்பட்டால் அதற்கு பதில் கூறவேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தும் குர்ஆன் வசனம் எது?

A) உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (4:86)

Q100) செய்த தருமங்களைச் சொல்லிக்காட்டுவதற்கு குர்ஆன் கூறும் உவமை என்ன?

A) “நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (2:264)

0 comments:

Post a Comment