லைலத்துல் கத்ர்

, , No Comments
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்

اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

லைலத்துல் கத்ர் இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)நூல்: புகாரி, முஸ்லிம்

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

''எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ‘ஆம்’ நாங்கள் ரமலானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், ‘எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்’ எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்க இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை கண்டேன்’ என்று விடையளித்தார். நூல்: புகாரி

0 comments:

Post a Comment