ஜும்ஆ நாள்

, , No Comments
நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள்

"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: திர்மிதி 450


நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்

"இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகழவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414

மறுமை நாள் நிகழக்கூடிய நாள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்”


ஆதாரம்: முஸ்லிம்

ஜுமுஆத் தொழுகை
வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும்.


நேரம்
ஜுமுஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது.

சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 904




நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது. அறிவிப்பவர்: ஸலமா (ரலி)

நூல்கள்: புகாரீ 4168, முஸ்லிம் 1424




ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 940




ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)


நூல்கள்: புகாரீ 939, முஸ்லிம் 1422




ஜும்ஆ தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய சில சுன்னத்தான ஒழுங்கு முறைகள்


ஜுமுஆக்குக் குளிப்பது
ஜுமுஆத் தொழுகைக்காக வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது கட்டாயக் கடமையாகும். தலைக்கு எண்ணெய் மற்றும் நறுமணமும் பூசிக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டும்.

'உங்களில் எவரும் ஜுமுஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 894




'ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்கள்: புகாரீ 895, முஸ்லிம் 1397




பல் துலக்கி, வாசனை திரவியங்களை தடவி, அழகான ஆடையை அணிந்து கொள்வது

இந்த விஷயத்தில் மனிதர்கள் பொடுபோக்காக இருக்கின்றனர். இதற்கு மாற்றமாக திருமண வைபவங்களுக்கும், விழாக்களுக்குமாக அழகான ஆடைகளை அணிந்து செல்லக்கூடிய முஸ்லிம்கள் நபிகளார் காட்டித்தந்த வாராந்திர திருநாளாகிய வெள்ளிக்கிழமை தினத்தில் கவனமின்மையாக இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மெளனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்”


ஆதாரம்: அஹ்மத்




'ஜுமுஆ நாளில் குளித்து விட்டு, இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து, (அங்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல் தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜுமுஆவிற்கும் அடுத்த ஜுமுஆவிற்கும் இடையிலான (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பாரிஸீ (ரலி)

நூல்: புகாரீ 880




ஜுமுஆ பாங்கு
ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 916

உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கைப் போன்றது அல்ல! மக்கள் அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச் சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள ஒரு வீடாகும் (இப்னுமாஜா 1125)

உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பைக் கூட பள்ளிவாசலில் செய்யவில்லை. எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியானதாகும்.

ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே நபிவழியாகும்




வியாபாரத்தை விட்டு விடுதல்
ஜுமுஆ நாள் அன்று தொழுகை நேரத்தில் வியாபாரம் செய்வது கூடாது. பாங்கு சொல்லப்பட்டு விட்டால் உடனடியாகத் தொழுகைக்கு விரைய வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9.




குத்பாவிற்கு முன்பே வருதல்
'ஜுமுஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும், அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ 929, முஸ்லிம் 1416


நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.



எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் நன்மை
யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு,
நூல் : நஸயீ 1381

இதே கருத்தில் அமைந்த பல்வேறு ஹதீஸ்களில் "வாகனத்தில் வராமல்..." என்பதும் சேர்த்து அறிவிக்கப் பட்டுள்ளது.


ஜுமுஆவில் பெண்களும் கலந்து கொள்ளுதல்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளார்கள்.

காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)

நூல்: முஸ்லிம் 1442




ஜுமுஆத் தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்
ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள். 1. பருவ வயதை அடையாதவர்கள். 2.பெண்கள் 3. நோயாளி 4. பயணி

'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல்: அபூதாவூத் 901




குத்பாவின் போது பேசக் கூடாது
ஜுமுஆத் தொழுகையில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவரது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பேசக் கூடாது.

'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு' என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 934, முஸ்லிம் 1404

ஓத வேண்டிய சூராக்கள்

முஸ்லிம் 1451, 1452, 1453



ஜுமுஆவுடைய சுன்னத்
ஜுமுஆத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இமாம் பயான் செய்து கொண்டிருந்தாலும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட வேண்டும்.

ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் 'நீர் தொழுது விட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். '(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: புகாரீ 931, முஸ்லிம் 1449

முஸ்லிம் அறிவிப்பில் கூடுதலாக 'அந்த இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழு!' என்று இடம் பெற்றுள்ளது.




நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆவிற்குப் பின்னர் (வீட்டிற்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1462




'உங்களில் ஒருவர் ஜுமுஆத் தொழுதால் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1457



பாவங்கள் மன்னிக்கப்படல்


"ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: முஸ்லிம் 342, திர்மிதி 198


"ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: முஸ்லிம்

இதே கருத்தில் அபூதாவூத் (939), அஹ்மத் (6707) ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸில், ஒன்றுக்குப் பத்து என்பதற்கு ஆதாரமாக,


"நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்" (அல்குர்ஆன் 6:160)

என்ற வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காட்டியதாக இடம் பெற்றுள்ளது.

"ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 883

முஸ்லிமில் அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் ‘பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், ‘நல்லாடை அணிதல்’ என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.


பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 935


ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்கள்


கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதுதல்

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம்


அதிகமாக ஸலவாத் ஓதுதல்

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்,
நூல்: அபூதாவூத் 883

(குறிப்பு : நமது ஸலவாத், ஸலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. "நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நஸயீயில் 1265வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதிகமாக பிரார்த்தனை செய்ய வேண்டும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 935


ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்

இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.
"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 881


நன்மைகளைப் பறித்து விடும் செயல்கள்

குத்பாவின் போது பேசக் கூடாது
"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடு’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 934


"யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: முஸ்லிம் 1419


''மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.
இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.
மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்இமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.
ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்" என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.''
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: அபூதாவூத் 939


மனிதர்களின் பிடரியை கடந்து செல்வதை விட்டும், தொழுகையாளியை நோவினை செய்வதை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் பிரசங்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் மனிதர்களின் பிடரியை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். உடனே நபியவர்கள் அவரைப் பார்த்து “உக்கார்ந்து விடுங்கள். நிச்சயமாக நீங்கள் அவர்களை நோவினை செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத்
பெரும்பாலும் பள்ளிவாசலுக்கு பிந்திவருபவருக்கே இவ்வாரான சந்தர்ப்பம் நிகழும்.


ஜும்ஆ தொழாதவருடைய நிலை

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
''கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?" என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)" எனக் கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!" என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7:163,166)
இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜும்ஆ தொழுகை நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.


இதயங்கள் இறுகி விடும்

"ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1432)

"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 460)


இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும்

"ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1043)

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக!

0 comments:

Post a Comment