மறுமை நாள் பற்றிய கேள்விகள்

, , No Comments
மறுமை நாள் பற்றிய கேள்விகள்




‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 73:4-5)



மறுமை நாளைப்பற்றி மக்கள் எழுப்புகின்ற வினாக்களுக்கு இறைவன் விடையளிக்கத் துவங்குகிறான். விடையை விரிவாக அறிந்து கொள்வதற்கு முன்னால் அவர்களின் வினாக்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.



மகத்தான செய்தியைப் பற்றி – மறுமை நாளைப் பற்றி அவர்கள் கேள்விகள் எழுப்பினார்கள் என்பதை அறிந்தோம் அல்லவா? அந்த கேள்விகள் மூன்று வகையானவையாக இருந்தன.



சில போது மறுமை நாள் எந்த ஆண்டு எந்த மாதம் எந்த நாளில் ஏற்படும் என்று கேள்வி எழுப்பினார்கள்.



சில போது மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாக ஆனபிறகு அவன் திரும்பவும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான் என்பது அறிவுக்கும் பொருந்தவில்லையே! என்று அதன் சாத்தியம் பற்றி சந்தேகம் தெரிவித்தனர்.

சில போது அந்த நாளில் அப்படி என்னதான் நிகழ்ந்து விடப் போகின்றது? ஏனைய நாட்களில் நடவாத என்ன அதிசயம் அந்த நாளில் நிகழப் போகின்றது? என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது.



இந்த மூன்று விதமான கேள்விகளையே மறுமை நாள் பற்றி அவர்கள் எழுப்பி வந்தனர். அவர்கள் அந்த மூன்று விதங்களில் எந்த விதமான கேள்வியை எழுப்பினார்களோ அதற்கேற்ப திருமறை நெடுகிலும் இறைவன் விடையளிக்கிறான்.



அவர்களின் கேள்வி எப்போது நிகழும் என்பதாக இருந்தால் அதற்கு மட்டும் விடையளிப்பான். அது எப்படிச் சாத்தியமாகும் என்பது அவர்களின் கேள்வியானால் அதற்கு மட்டும் விடையளிப்பான். அந்த நாளில் அப்படி என்னதான் நிகழ்ந்துவிடப் போகிறன்றது என்பது அவர்களின் கேள்வியானால் அதற்கு மட்டும் இறைவன் விடையளிப்பான். திருமறை நெடுகிலும் இதைக் காணலாம்.



இந்த அத்தியாத்தின் துவக்கத்தில் அவர்கள் எழுப்பியதாகக் கூறப்படும் கேள்வி, இம்மூன்று வகைகளில் எந்த வகையைச் சேர்ந்தது? காலம் பற்றியதா? சாத்தியம் பற்றியதா? நிகழும் சம்பவங்கள் பற்றியதா? இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.



இந்த அத்தியாயத்தில் இறைவன் அறிவிக்கின்ற விடையைப் பார்க்கும் போது, அந்த மூன்று வகையையும் ஒட்டுமொத்தமாக உள்ளடக்கிய கேள்வியாகவே அதைக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த அத்தியாயத்தில் இம்மூன்று அம்சங்களுக்கும் ஒருசேர இறைவன் விடையளிக்கிறான். மூன்று வகையான கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் விடை கிடைப்பது இந்த அத்தியாயத்தின் தனிச்சிறப்பாகும்.



எப்போது நிகழும்?



மறுமைநாள் எப்போது நிகழும் என்ற கேள்விக்குரிய விடைதான் மேலே காணப்படும் இருவசனங்கள்!



மறுமைநாள் எப்போது ஏற்படும் என்று அவர்கள் கேட்கிறார்கள். அவ்வாறன்று. அதாவது அவர்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. எந்நாளில் அது நிகழும் என்பது முக்கியமானதல்ல. இந்தக் கேள்வியே தவறானதாகும். வெகுவிரைவில் அவர்கள் அறிவார்கள். அதாவது இப்போது அந்த நாள் எதுவென்பதைக் கூறுவதற்கில்லை. அவர்கள் அனுபவப்பூர்வமாக அதைச் சந்தித்து அறியத்தான் போகிறார்கள். இந்தக் கேள்விக்கு இறைவன் அளிக்கக் கூடிய விடை இதுதான்.



உனக்கொரு மகத்தான பரிசுதரப் போகிறேன் என்று கூறும் போது எப்போது தருவீர்கள் என்று கேட்கலாம். அந்தக் கேள்வியில் நியாயமிருக்கிறது. ‘உனக்குச் சரியான தண்டனை தரப் போகிறேன்’ என்று கூறும் போது எந்த ஆண்டு, எந்த மாதம் தரப் போகிறீர்கள் என்று எவரும் கேட்கமாட்டார்கள். மிகப்பெரிய வேதனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவர்கள் அதிலிருந்து தப்பிக்கும் வழியைப் பற்றிக் கேட்பது தான் அறிவுப் பூர்வமானதே தவிர எப்போது அந்த வேதனை எனக்குக் கிடைக்கும் என்று கேட்பதில் எந்தப் பயனும் கிடையாது. அதனால் தான் இந்தக் கேள்வியே தவறு என்கிறான் இறைவன்.



அந்த நாள் எப்போது வரும் என்று கேள்வி கேட்ட மக்கள் மட்டுமின்றி இறைத்தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அது எப்போது நிகழும் என்பதை அறிய முடியாது என்று வேறு சில இடங்களில் இறைவன் தெளிவு படுத்துகின்றான்.



‘அவர்கள் உம்மிடம் அந்த நாள் எப்போது வரும் என்று கேட்கின்றனர். ‘அதைப் பற்றிய அறிவு என் இறைவனுக்கே உண்டு. அது நிகழும் நேரம் பற்றி அவனைத்தவிர வேறு எவரும் கூற இயலாது’ என்று நீர் கூறுவீராக! அது வானங்களிலும் பூமியிலும் பெரும்பளுவான சம்பவமாக நிகழும். (எதிர்பாராமல்) திடீரென்று அது உங்களிடம் வரும். நீர் அதுபற்றி அறிந்திருப்பீர்; போலும் என்று (எண்ணி) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு என்று கூறிவிடுவீராக! பெரும் பாலான மனிதர்கள் அறியாதவர்களாக உள்ளனர்’. (அல்குர்ஆன் 7:181)



‘அந்த நாள் எப்போது வரும் என்று உம்மிடம் கேட்கின்றனர் அது பற்றி விளக்கம் உமக்கு எங்கே இருக்கிறது? அதன் முடிவு உம் இறைவனுடன் (அன்றோ) இருக்கின்றது’. (அல்குர்ஆன் 19:42)



நபி நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த மனிதரும் அது எப்போது நிகழும் என்பதை அறிந்திருக்கவில்லை. அது இறைவன் மாத்திரமே அறிந்த ஒரு விஷயமாகும் என்று இவ்வசனங்கள் விளக்குகின்றன.



‘அவர்களைச் சூழ்ந்து கொள்ளக் கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ, அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?’ அல்குர்ஆன் 12:107)



‘வானங்களிலும் பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது. அந்த நாள் பற்றிய விஷயம் கண்மூடித்திறப்பது போன்றோ அல்லது அதைவிடவும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிடும். (அல்குர்ஆன் 16:77)



இந்த வசனங்கள் யாவுமே ‘அவர்கள் வெகுசீக்கிரம் அறிந்து கொள்வார்கள்’ என்பதன் விளக்கமாகவே அமைந்துள்ளதை அறியலாம்.



அந்த நாள் நிச்சயம் வரத்தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாக அனைவருக்கும் அறிவித்து விடலாமே! ஏன் அறிவிக்க மறுக்கிறான் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம்.



இவ்வாறு அந்த நாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க இது அவசியமானதாக இருக்கின்றது.



ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப் போகிறான். ஆயினும் எந்த நாளில் எந்த மாதத்தில் எந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் என்பதை எவருமே அறிய முடியாது.



மரணம் எப்போது வரும் என்பது தெரியாததால் மனிதன் ஓரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும் நேரத்தை ஒருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் எல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான். மரணத்திற்கு சற்றுமுன் பாவமன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணிவிடுவான்.



நல்லவனையும் கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய இயலாமல் போய்விடும். எல்லா மனிதனும் மரணத்திற்கு முதல் நாள்வரை மகாகெட்டவனாக வாழ்ந்து விட்டு ஒரு நாள் மட்டும் எல்லோருக்கும் நல்லவராக வாழ்ந்து விடுவார்கள். நல்லவனையும் கெட்டவனைவும் பிரித்தறிய இந்த ஏற்பாடு அவசியம் என்பது போலவே மறுமை நாளைப் பற்றியும் மறைத்து வைப்பது அவசியமே.



நாம் வாழ்கின்ற போதே அந்த நாள் வந்துவிடுமோ என்ற அச்சம் தான் சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை எல்லாம் செய்து விட்டு கடைசி நேரத்தில் மட்டும் நல்லவனாக ஆகிவிடக் கூடாது என்பதற்கே அந்த நாள் எது என்பதை இறைவன் இரகசியமாக வைத்திருக்கின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறிய முடியும்.



‘நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு (ஆத்மா) மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை நான் இரகசியமாக வைத்திருக்கிறேன்’. (அல்குர்ஆன் 20:15)

ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கேற்ப கூலி வழங்கப் பட வேண்டும் என்பதற்காகவே அதை இரகசியமாக வைத்திருக்கிறான்.



2000 ஆண்டில் அந்த நாள்வரும் என்றால் அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் நேர்மையான வாழ்க்கை நடத்த மாட்டார்கள். நமது காலத்தில் அது வரப்போவதில்லை என்பதால் எப்படியும் நடக்கலாம் என்று அவர்கள் நடந்து விடக்கூடும்.



இதன் காரணமாகவே அந்தநாள் எதுவென்று அவன் அறிவிக்கவில்லை. மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற கேள்விக்கு இறைவன் விடையளிக்கா விட்டாலும் அதற்கான சில அடையாளங்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியுள்ளனர். அதனையும் அறிந்து விட்டு மற்ற இரண்டு கேள்விகளுக்கான விடையைப் பார்ப்போம்.



0 comments:

Post a Comment