மறுமையில் தலைகீழாக நடந்து வரும் காபிர்கள்

, , No Comments
மறுமையில் தலைகீழாக நடந்து வரும் காபிர்கள்




‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18)



தலைகீழாக நடந்து வருவர்



நம்பிக்கை கொள்ளாத மக்கள் எழுப்பப்பட்டதும் கால்களால் நடக்காமல் தலையால் நடந்து வருவார்கள். அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை முன் கூட்டியே இது அறிவிப்புக் கொடுக்கும் வகையில் அமையும்.



‘அவர்களைக் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமைகளாகவும் முகம் குப்புற (நடப்பவர்களாக) எழுப்புவோம்’. (அல்குர்ஆன் 17:97)



‘அல்லாஹ்வின் தூதரே! கியாமத் நாளில் எவ்வாறு முகம் குப்புற எழுப்பப்படுவான்’ என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் அவனை இருகால்களால் நடக்க வைத்தவன் கியாமத் நாளில் அவனை முகம் குப்புற நடக்கச் செய்ய சக்தி உள்ளவன் இல்லையா? என்று கேட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)



சிலர் நடந்தவர்களாகவும், சிலர் வாகனத்தில் ஏறியவர்களாகவும், சிலர் முகம் குப்புறவும் மறுமை நாளில் மக்கள் எழுப்பப்படுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: திர்மிதி)



வாகனத்தில் வருவோர் பலவாறாக வருவார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.



‘ஒரு ஒட்டகத்தில் இருவர், ஒரு ஒட்டகத்தில் மூவர், ஒரு ஒட்டகத்தில் நால்வர், ஒரு ஒட்டகத்தில் பதின்மர் என்று (பலவாறாக) வருவார்கள்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)



நீலக்கண்களுடன் நிற்பார்கள்



குருடர்களாக எழுப்பப்படுவோரின் கண்கள் நீலம் படர்ந்ததாகவும், கண்கள் மேல் நோக்கியதாகவும் மறுமையில் நிற்பார்கள்.



(இரண்டாவது) சூர் ஊதப்படும் அந்நாளில் குற்றவாளிகளை நீலம் பூத்த கண்களைக் கொண்டவர்களாக நாம் ஒன்று திரட்டுவோம். (அல்குர்ஆன் 20:102)



அவர்களுக்கு (தண்டனையை) இறைவன் தாமதப்படுத்துவது கண்கள் விறைத்து விடக்கூடிய அந்த நாளுக்காகத் தான். (அல்குர்ஆன் 14:42)



வாக்களிக்கப்பட்ட உண்மை நெருங்கி விட்டது. அப்போது காபிர்களின் கண்கள் நிலை குத்தி நின்று விடும். (அல்குர்ஆன் 21:97)



யாரும் யாருடனும் பேச முடியாது



மண்ணறைகளிலிருந்து எழுப்பப்பட்டவுடன் தாங்கள் தங்கினோம் என்று பேசிக் கொள்வதைத் தவிர எவரும் எவருடனும் பேசிக் கொள்ள மாட்டார்கள்.



நீங்கள் பத்து நாட்களுக்கு மேல் தங்கியதில்லை என்று அவர்கள் தங்களுக்கிடையே இரகசியமாக பேசிக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 20:103)



அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அன்றியும் அவர்கள் செய்வதை பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும். அவர்களின் கால்களும் சாட்சி கூறும். (அல்குர்ஆன் 86:65)



அந்த நாள் வரும் போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது. (அல்குர்ஆன் 11:105)



இது அவர்கள் பேச முடியாத நாள். ஏதேனும் சமாதானம் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 77:35)



அனைத்து சப்தங்களும் (அந்நாளில்) ஒடுங்கிவிடும். காலடிச் சப்தத்தைத் தவிர வேறு எதனையும் நீர் செவியுற மாட்டீர். (அல்குர்ஆன் 20:108)



இவ்வளவு பயங்கரமான அந்த நாளின் விசாரணை எத்தகையதாக இருக்கும் என்பதை பின் வரும் வசனங்களும், நபி மொழிகளும் விளக்கமாகக் கூறுகின்றன.





உறவு, நட்பு ஆகியவை மறந்து விடும்



இவ்வுலகில் மனிதர்களிடையே நிலவி வந்த நட்பும், உறவும் முற்றாக விடைபெற்று விடும். ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கக் கூடிய நாள்!



அந்த நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் ஓடுவான். அன்றைய தினம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் நிலையைப் பற்றி எண்ணவே சரியாயிருக்கும். (அல்குர்ஆன் 80:34-37)



நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் பயன் தாரத அந்த நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவிடுங்கள். (அல்குர்ஆன் 2:254)



ஆகவே எங்களுக்காக (இன்று) பரிந்து பேசுவோரும், உற்ற நண்பரும் இல்லை. (அல்குர்ஆன் 26:100,101)



இன்றைய தினம் அவனுக்கு எந்த நண்பரும் இல்லை. (அல்குர்ஆன் 69:35)



ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பார்ப்பான் (ஆனாலும்) ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள். குற்றம் புரிந்தவன் அந்த நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காக தன் மக்களையும், மனைவியையும், சகோதரனையும் அவனை அரவணைத்துக் கொண்டிருந்த சுற்றத்தாரையும், இன்னும் பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுத்து (தான் மட்டும்) தப்பித்துக் கொள்ள விரும்புவான். (அல்குர்ஆன் 70:10-14)



யாரும் யாரைப் பற்றியும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு கொடூரமானதாக அந்த நாள் இருக்கும்.



விசாரணை மன்றம்



இந்த பூமி அழிக்கப்பட்டு இன்னொரு பூமி உருவாக்கப்படும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டோம். அந்த பூமியில் தான் விசாரணை நடக்கும். அந்த பூமியின் அமைப்பு பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.



‘சலிக்கப்பட்ட தூய்மைபடுத்தப்பட்ட மாவினால் செய்த ரொட்டியைப் போல் இலேசான வெண்மை நிறம் கொண்ட பூமியில் மக்கள் கியாமத் நாளில் ஒன்று திரட்டப்படுவார்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)



‘பயணத்தின் போது உங்களில் ஒருவர் தமது ரொட்டியை தம் கையில் பிடித்திருப்பது போல் இறைவன் மறுமை நாளில் இப்பூமியை ஒரு ரொட்டியைப் போல் தன் கைக்குள் அடக்குவான்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)



‘இன்னும் இந்தப் பூமி முழுவதும் கியாமத் நாளில் அவனுடைய ஒரு பிடிதான்’ (அல்குர்ஆன் 39:67)



ஒரு மைல் தொலைவில் சூரியன்



இறைவனின் கைப்பிடியில் ரொட்டி போன்றிருக்கும் பூமியின் மேல் சூரியன் நிறுத்தப்படும். பல கோடி மைல்களுக்கப்பால் இப்போது சூரியன் இருப்பது போன்று தூரத்தில் நிறுத்தப்படாது. மாறாக ஒரு மைல் தொலைவு உயரத்தில் சூரியன் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்படும்.



சூரியன் கியாமத் நாளில் மனிதர்களிடமிருந்து ஒரு மைல் உயரத்தில் நெருக்கமாக நிறுத்தப்படும். மக்கள் தம்தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் நிற்பார்கள். சிலருக்கு வியர்வை கரண்டைக்கால்கள் வரை இருக்கும். மற்றும் சிலருக்கு முட்டுக் கால்கள் வரையிலும், இன்னும் சிலருக்கு வாய் வரையிலும் இருக்கும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி), நூல்கள்: முஸ்லிம்)



கியாமத் நாளில் மக்களின் வியர்வை பூமியில் எழுபது முழம் வரை இறங்கும். அவர்களின் காதுகளை அடையும் அளவுக்கு கடிவாளம் இடப்பட்டது போல் இருக்கும் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

0 comments:

Post a Comment