ஹஜ் வழிகாட்டி

, , No Comments
ஹாஜிகளின் வழிகாட்டி:




ஹஜ்ஜின் தினங்களில் ஹாஜிகள் தாம் நிறைவேற்றப்போகும் ஹஜ்ஜிற்கேற்ப மேற்கொள்ள வேண்டிய சுருக்கமான விவரங்கள்.





நாள்: துல்ஹஜ் 8 க்கு முன்பு


ஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத்



1. மீக்காத்தில் இஹ்ராம் அணிந்ததும் லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்.



2. மக்காவாசிகளும் அங்கு தங்கியிருப்போரும் மீக்காத் வரவேண்டியதில்லை, தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.



3. தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும்.



4. ஸயீ செய்ய வேண்டும். (தவாஃபுக்குப் பிறகு ஸயீ செய்யாமல் உடனே மினாவுக்குச் சென்று விட்டால் தவாஃபுல் இஃபாளாவுக்குப் பின் ஸயீ செய்ய வேண்டும்) துல்ஹஸ் 10 வரை இஹ்ராமுடன் இருக்க வேண்டும்.



காரின் – ஹஜ் கிரான்



1. மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து விட்டு லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று கூறி நிய்யத் செய்ய வேண்டும்.



2. தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும்.



3. ஸயீ செய்ய வேண்டும். இதைப் பிற்படுத்தி தவாஃபுல் இஃபாளாவுக்குப் பிறகும் செய்யலாம். அதுவரை இஹ்ராமில் தடுக்கப்பட்டவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.



முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல்ஹஜ் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்.



2. தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்.



3. ஸயீ செய்ய வேண்டும்.



4. தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும்.



5. இஹ்ராமிலிருந்து விடுபட்டு துல்ஹஜ் 8 ஆம் நாள் வரை காத்திருக்க வேண்டும்.





நாள்: துல்ஹஜ் 8 ஆம் நாள்.




முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத்



மினாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்வு செய்யாமல் அந்தந்த வேளைகளில் – நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் – தொழ

வேண்டும்.



காரின் – ஹஜ் கிரான்



மினாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்வு செய்யாமல் அந்தந்த வேளைகளில் – நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் – தொழ

வேண்டும்.



முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



மினாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்வு செய்யாமல் அந்தந்த வேளைகளில் – நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் – தொழ

வேண்டும்.





நாள்: துல்ஹஜ் 9 ஆம் நாள் அரஃபா தினம்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத், காரின் – ஹஜ் கிரான், முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். அங்கு ளுஹரையும் அஸரையும் ளுஹர் நேரத்திலேயே முற்படுத்தி ஒரு பாங்கு இரு இகாமத்களுடன் இரண்டிரண்டு ரக்அத்துக்களாகச் சுருக்கித் தொழ வேண்டும். மேலும் அரஃபா தினத்தில் இறைவனைத் தியானித்தல், குர்ஆன் ஓதுதல், பிராத்தித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்துவது

சுன்னத்தாகும். துஆவின் போது கிப்லாவை – மலையை அல்ல – முன்னோக்குவதும் நபி (ஸல்) அவர்களைப் போல கைகளை உயர்த்துவதும் சுன்னத்தாகும். அரஃபா தினத்தில் ஹாஜிகள் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதல்ல. அரஃபாப் பெருவெளியிலுள்ள ஓடைப்பகுதி அரஃபாவைச் சேர்ந்ததல்ல, அதில் தங்குவது கூடாது. அரஃபா மலையில் ஏறுவதும் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டதல்ல.



2. சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்குச் செல்ல வேண்டும்.



3. முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிபையும் இஷாவையும் ஒரு பாங்கு இரு இகாமத்துடன் ஜம்வு – கஸ்ராகத் தொழ வேண்டும்.



4. பெரிய ஜமராவில் கல்லெறிவதற்கு ஏழு பொடிக்கற்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை மினாவில் எடுத்தாலும் குற்றமில்லை.



5. முஸ்தலிஃபாவில் இரவு தங்கிவிட்டு அங்கேயே ஃபஜ்ரு தொழுதுவிட்டு பிறகு திக்கு – துஆக்களை அதிகப்படுத்த வேண்டும். நேரம் வெளுக்கும் வரை அதாவது சூரியன் உதிக்கும் முன்பு வரை அல்மஷ்அருல் ஹராமில் நின்று துஆவை

அதிகப்படுத்துவது விரும்பத்தக்கது. பலவீனமானவர்கள் நடுஇரவுக்குப் பின்பு – சந்திரன் மறைந்ததன் பின் புறப்படலாம்.





நாள்: துல்ஹஜ் 10 ஆம் நாள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத்



மினாவை நோக்கிப் புறப்படல் (சூரியன் உதயமாகும் முன்பு)



1. பெரிய ஜமராவில் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி எறிய வேண்டும்.



2. தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும்.



3. இஹ்ராமிலிருந்து விடுபட்டு வேறு ஆடையணிதல் (சிறிய விடுபடுதல்)



4. தவாஃபுல் இஃளாபா (இது – வாஜிப் – முதல் நிலைக் கடமை) செய்தல் இஹ்ராமிலிருந்து முழுமையாக – பெரிய – விடுபடுதல்.



5. தவாஃபுல் இஃபாளாவை 11 ஆம் நாள் அல்லது 12 ஆம் நாள் வரை பிற்படுத்தலாம்

அல்லது தவாஃபுல் விதாவுடன் நிறைவேற்றலாம்.



6. ஸயீ செய்ய வேண்டும், முன்பு செய்ய வில்லையெனில்.



காரின் – ஹஜ் கிரான்



மினாவை நோக்கிப் புறப்படல்



1. பெரிய ஜமராவில் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி எறிய வேண்டும்.



2. குர்பானி கொடுத்தல். இதில் ஹரமில் தங்கியிருப்போர் விதிவிலக்கு

பெறுகின்றனர், அவர்கள் மீது கடமையல்ல.



3. தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும். பெண்கள் விரல்கள் அளவுக்கு குறைத்துக் கொண்டால் போதும்.



4. இஹ்ராமிலிருந்து விடுபட்டு மாற்று ஆடையணிதல்.



5. தவாஃபுல் இஃளாபா செய்தல். ஸயீ செய்தல் முன்பு செய்யவில்லையெனில்.



முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



மினாவை நோக்கிப் புறப்படல்



1. பெரிய ஜமராவில் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி எறிதல்.



2. குர்பானி கொடுத்தல். இதை 13 ஆம் நாள் சூரியன் மறையும் வரை நிறைவேற்றலாம். இதில் ஹரமில் தங்கியிருப்போருக்கு விதிவிலக்கு உள்ளது,

அவர்கள் மீது கடமை இல்லை.



3. தலை முடியை மழித்தல் – குறைத்தல்.



4. இஹ்ராமிலிருந்து விடுபட்டு வேறு ஆடையணிதல்.



5. தவாஃபுல் இஃபாளா செய்தல். ஸயீ செய்தல் முன்பு செய்யவில்லையெனில்.





நாள்: துல்ஹஜ் 11 ஆம் நாள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத், காரின் – ஹஜ் கிரான், முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. 11 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.



2. சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறியது, நடுத்தரமானது, பெரியது என்ற வரிசையில் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் கூறி

எறிய வேண்டும். சிறிய மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த பின்பு துஆ செய்ய வேண்டும்.





நாள்: துல்ஹஜ் 12 ஆம் நாள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத், காரின் – ஹஜ் கிரான், முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. 12 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.



2. சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் சிறியது, நடுத்தரமானது, பெரியது என்ற வரிசையில் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் கூறி எறிதல். சிறிய மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த பின்பு துஆ செய்தல். விரும்பினால் சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து மக்கா சென்று

தவாஃபுல்விதாஃ செய்து விட்டுப் பயணமாகலாம்.





நாள்: துல்ஹஜ் 12 ஆம் நாள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத், காரின் – ஹஜ் கிரான், முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் சிறியது, நடுத்தரமானது, பெரியது என்ற வரிசையில் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் கூறி எறிய வேண்டும். சிறிய மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த பின்பு துஆ செய்ய வேண்டும்.



2. மினாவிலிருந்து மக்கா செல்லல். தவாஃபுல் விதாஃ செய்தல். இது வாஜிபாகும். இதை விட்டால் பலி கொடுக்க வேண்டும். ஆனால் மாதவிடாய் மற்றும் பேற்றுத் தொடக்குள்ள பெண்களுக்கு இது வாஜிபல்ல. பிறகு மக்காவிலிருந்து பயணமாகலாம்.



குறிப்பு: சிறிய விடுபடுதலுக்குப் பின் உடலுறவைத் தவிர மற்ற அனைத்தும் அனுமதிக்கப்பட்டதாகும். தவாஃபுல் இஃபாளாவுக்குப் பின் ஏற்படுவது பெரிய

விடுபடுதல் ஆகும். அதற்குப் பின் உடலுறவு உட்பட அனைத்திற்கும் அனுமதியுண்டு. ஆயினும் இஃப்ராத், கிரான் செய்பவர்கள் ஸயீயை முற்படுத்தியிருந்தால் தான் இந்த அனுமதி. ஆனால் ஹஜ்ஜுத் தமத்துஃ

செய்பவர்கள் ஸயீ செய்த பின்பு தான் பெரிய விடுபடுதலை அடையலாம்.



நினைவூட்டல்: ஹஜ்ஜின் நாட்கள் துஆ, குர்ஆன் ஓதுதல், பிரச்சாரம் ஆகியவற்றிற்கான

சந்தர்ப்பமாகும். எனவே வீணான பேச்சுக்கள் – தர்க்கங்களிலிருந்து விடுபட்டு நல்லறங்களில் ஈடுபட வேண்டும். (பார்க்க அல்குர்ஆன் 2:197)



ஹஜ்ஜின் (ருக்னுகள்) முதல் நிலைக்கடமைகள் நான்கு. அவை:



1. இஹ்ராம் அணிதல் (நிய்யத்): இது ஹஜ்ஜின் காரியங்களில் நுழைவதற்கான நிய்யத்தாகும்.



2. அரஃபாவில் தங்குதல்.



3. தவாஃபுல் இஃபாளா.



4. ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே ஸயீ செய்தல்



மேற்கண்ட முதல்நிலைக் கடமை(ருக்னு)களில் எதையேனும் ஒன்றை ஒருவன் விட்டு விட்டால் விடுபட்டதை நிறைவேற்றாமல் அவனுடைய ஹஜ் நிறைவேறாது.



ஹஜ்ஜின் (வாஜிபுகள்) இரண்டாம் நிலைக்கடமைகள்



1. மீக்காத்தில் இஹ்ராம் அணிதல்.



2. அரஃபாவில் இரவு வரை தங்குதல்.



3. முஸ்தலிபாவில் அரஃபா தினத்தில் இரவு தங்குதல்.



4. மினாவில் இரவு தங்குதல்.



5. 11, 12, 13 ஆம் தினங்களில் கல்லெறிதல்.



6. தவாஃபுல் விதாஃ.



7. தலைமுடியை மழித்தல் – குறைத்தல்.



இந்த வாஜிபுகளில் எதையேனும் ஒருவன் விட்டால் அவன் ஹரமிற்குள் ஒரு பிராணியைப் பலியிட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும், அவன் உண்ணக் கூடாது.



ஹஜ்ஜின் சுன்னத்கள்:



இவற்றில் எதையேனும் விட்டால் எந்தக் குற்றமுமில்லை:



1. இஹ்ராமின் போது குளித்தல்.



2. ஆண்கள் வெண்ணிறத்தில் இஹ்ராம் அணிதல்.



3. தல்பியாவை உரத்துக் கூறுதல்.



4. அரஃபா தின இரவில் மினாவில் தங்குதல்.



5. ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்.



6. இள்திபா (உம்ராவுடைய தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழால் கொண்டு வந்து இடது தோளில் போடுவது)



7. உம்ராவுடைய தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் முதல் மூன்று சுற்றுக்களில் சற்று விரைந்து செல்லல்.



8. ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் செய்தல்.



இஹ்ராமில் தடுக்கப்பட்டவை பதினொன்று. அவை:



1. முடியை வெட்டுவது.



2. நகங்களைக் களைதல்.



3. ஆண்கள் தலையை மறைத்தல்.



4. ஆண்கள் தையலாடை அணிதல்.



5. வாசனைத் திரவியம் உபயோகித்தல்.



6. பெண்கள் கையுறைகள் அணிதல்.



7. பெண்கள் முகமூடி அணிதல்.



இந்த ஏழு காரியங்களில் எதேனுமொன்றை ஒருவன் மறந்தோ அறியாமையிலோ செய்தால் அவன்

மீது எந்தக் குற்றமுமில்லை, வேண்டுமென்றே செய்தால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.



8. தரைவாழ் விலங்குகளை வேட்டையாடுதல் அல்லது அதற்கு உதவுதல் அதை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு விரட்டுதல். அதை வேண்டுமென்றே கொலை செய்தால் அதற்குச் சமமான பரிகாரம் தேட வேண்டும்.



9. மனைவியை இச்சையுடன் கட்டியணைத்தல் – இனவுறுப்புகளல்லாத பகுதிகளில் தொடுவது, முத்தமிடுவதைப் போல. இதனல் விந்து வெளிப்பட்டால் ஹஜ்ஜிற்குப் பாதகமில்லை. ஆனால் ஓர் ஒட்டகத்தைப் பலியிட வேண்டும்.



10. தனக்காவோ பிறருக்காவோ திருமண ஒப்பந்தம் செய்தல். இதை செய்தாலும் பரிகாரமொன்றுமில்லை.



11. இனவுறுப்புகளில் உறவுகொள்ளல். இது முதல் விடுபடுதலுக்கு முன்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறாது, மற்ற காரியங்களை முழுமைப்படுத்தி விட்டு அதற்குப் பகரமாக மறு ஆண்டு கட்டாயமாக ஹஜ்ஜைக் களா செய்ய வேண்டும். மேலும் ஓர் ஒட்டகத்தை பலியிட வேண்டும். இது முதல் விடுபடுதலுக்குப் பின்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறிவிடும். ஆனால் ஓர் ஆட்டைப் பலியிட வேண்டும்.



பலியிடுதல்:



பலியிடப்படுமிடம்:

மினா, மக்கா மற்றும் ஹரம் எல்லைக்குட்பட்ட பகுதி.



பலியிடப்படும் காலம்:

பெருநாள் தினம், மற்றும் அதைத் தொடர்ந்த மூன்று தினங்கள்.



பலிப்பிராணிகள்:

ஒட்டகம், மாடு, ஆடு (கம்பளி, செம்பறி)



பிராணிகளின் வயது:

கம்பளி ஆட்டிற்கு ஆறு மாதம் ஆகியிருக்க வேண்டும். செம்மறி ஆட்டிற்கு ஓர் ஆண்டு ஆகியிருக்க வேண்டும். மாட்டிற்கு இரண்டு ஆண்டுகள். ஒட்டகத்திற்கு ஐந்தாண்டுகள். ஓர் ஆடு ஒருவர் சார்பாக மட்டும் தான் நிறைவேறும். ஒரு மாடு அல்லது ஓர் ஒட்டகம் ஏழு நபர்கள் சார்பாக நிறைவேறும். யாருக்கு பலிப்பிராணி கிடைக்கவில்லையோ அல்லது வாங்குவதற்கான வசதியில்லையோ அவர் ஹஜ்ஜின் நாட்களில்

மூன்று, ஊருக்குத் திரும்பியதும் ஏழு என்ற கணக்கில் மொத்தம் பத்து நோன்புகள் தொடர்ந்தோ விடுபட்டோ நோற்க வேண்டும்.



பலிப்பிராணிகளில் கூடாதவை: அதிகக்குருடு, அதிக நொண்டி, அதிக வியாதியுள்ளது, அதிகம் மெலிந்தது,

அதிகமான அளவுக்கு கொம்பு உடைந்தது, அதிகமான அளவுக்கு காது அறுபட்டது.

0 comments:

Post a Comment