இஸ்லாத்தின் முதல் இரு கலீபாக்களான அபுபக்ரு(ரழி), உமர்(ரழி) இருவரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நபிவழிகளைத் தங்கள் நெஞ்சங்களில் பாதுகாத்து வைத்திருந்தனர். அக்காலத்தில் நபிமொழிகள் பல பாகங்கலிலும் பரவாமலேயே இருந்தன. காரணம், மிக மிக்கியமான நபித்தோழர்களைத் தவிர மற்ற நபித்தோழர்களை மதினாவின் வெளியே செல்வதை உமர்(ரழி) அவர்கள் தடை செய்திருந்தனர்.
    கலீபா உதுமான்(ரழி) அவர்களுடைய காலத்தில் நபித்தோழர்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்காங்குள்ள மக்கள் நபிவழியைத் தெரிந்துகொள்ள இளைய நபித்தோழர்கள் பால் தேவைப்பட்டனர். காரணம், மூத்த நபித்தோழர்கள் இவ்வுலகைப் பிரிந்து கொண்டே இருந்தார்கள்.
    நபிவழிகள் எதிர்கால மக்களுடைய பார்வைக்கு கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சிய இளைய நபித்தோழர்கள் பல சிரமங்களை மேற்கொண்டும், பல ஊர்களுக்கும் பிரயாணம் செய்தும் முதிய நபித்தோழர்களிடமிருந்து நபிவழியைத் திரட்டினார்கள்.
    நபித்தோழர்களில் ஒருவரான ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) கூறுகிறார்கள்:
நபி அவர்களிடமிருந்து நான் கேட்காத ஹதீஸ் ஷாம் நாட்டில் இருக்கும் அப்துல்லாஹ் இப்னு அனீஸ் அல்அன்ஸாரி என்ற நபித்தோழரிடம் இருப்பதாக அறிந்தேன். எனவே அந்த ஹதீஸைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக சுமார் ஒரு மாதகாலம் பிரயாணம் செய்து ஷாம் நாட்டிற்குச் சென்று அந்த ஹதீஸை அறிந்து வந்தேன் என்று கூறினார்கள். நூல்: புகாரி இமாமிம் 'அல்அதபுல் மஃப்ரத்'
    எகிப்தில் இருந்த உக்பத் இப்னு ஆமிர் அல்ஜுஹனி என்ற நபித்தோழரிடம் நபி அவர்களுடைய ஒரு ஹதீஸ் இருப்பதாக அறிந்த அபூ அய்யுபு அல் அன்ஸாரி என்ற நபித்தோழர் ஹதீஸை அறிய வேண்டுமென்பதற்காக பல மாதங்கள் பிரயாணம் செய்து அந்த ஹதீஸைப் பெற்று வந்ததாகக் கூறினார்கள். நூல்: ஜாமிவு பயானில் இல்ம்
    இவ்வாறாக நபிவழி அறிவிப்புகள் நாலா பாகங்களிலும் பரவ ஆரம்பித்தது. காலம் செல்லச் செல்ல எஞ்சி இருந்த நபித்தோழர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தாபியீன்கள் அவர்களைத் தேடிச் சென்று அவர்களிடத்திலுள்ள ஹதீஸ்களைச் சேகரித்தார்கள் ஒரு நபித்தோழர் ஏதேனும் ஒரு நகருக்குச் சென்றால், அவர்களைச் சூழ அந்நகர வாசிகள் ஒன்று திரண்டு மிக்க கண்ணியத்தோடும், மரியாதையோடும் நபி அவர்களுடைய அன்புத் தோழர் வந்திருக்கிறார் என்ற ஆவலோடு அவர் வாயிலாக நபிவழிகளைக் காது தாழ்த்திக் கேட்டுத் தெரியலானார்கள்.
    சில நபித்தோழர்கள் அதிகமான நபிவழிகளை அறிவித்திருக்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரழி) என்பவர் இவர்களில் ஒருவாராவர். காரணம், அவர்களுக்கு நபி அவர்களுடன் ஏற்பட்ட தோழமை பழமையானதாகும். அனஸ் இப்னு மாலிக்(ரழி) அதிகமான ஹதீஸ்ளை அறிவிக்கக் காரணம், இல்லற வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளையும் அறியும் வாய்ப்புப் பெற்றவர்களாக இருந்தார்கள்.
    அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), அபூஹுரைரா(ரழி) போன்ற நபித்தோழர்கள் நபிவழியைத் தெரிவதிலும், அதைப் பிறருக்கு அறிவிப்பதிலும் பேரார்வம் கொண்டவர்களாக இருந்தமையால் அதிகமான நபிவழிகளை அறிவிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்கள்.
    நபித்தோழர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை எந்த சந்தேகமும் இல்லாமல் மக்கள் அப்படியே நம்பி ஏற்று வந்தனர். நபித்தோழர்களில் சிலர் வேறு சிலரிடமிருந்து, நபிவழியைப் பெற்று கொள்வார்கள். அவர்கள் எவ்வித பொய்யையும் நுழைப்பதில்லை. முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது தான் நபிவழி அறிவிப்புகளில் பொய்கள் நுழைய ஆரம்பித்தன.
 
0 comments:
Post a Comment