ஸலவாத்
நபி அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழிகாட்டுதலை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். அல்லாஹ்வால் தரப்பட்ட பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கூடுதல் குறைவின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். மக்கள் நேர்வழி அடையவேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும் தாங்கிக்கொண்டார்கள். நமது தாய் தந்தை மற்றும் அனைவைரையும் விட அவர்கள் மீது அன்பு வைப்பது நம்மீது கடமையாகும்.
நம்மில் சிலர் ஸலவாத் என்றாலே நபிகள் நாயகத்திடம் நான் எதனையோ கேட்கிறோம் என்று கருதிக்கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல. மாறாக நபி அவரகளுக்காக நாம்தாம் துஆச் செய்கிறோம்.
اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
நபி அவர்கள் இந்த சமுதாயத்திற்காக பாடுபட்டதற்காகவும் அவர்களிம் மூலம் அல்லாஹ் நேர்வழி காட்டினான் என்பதற்காகவும் நாம் அவர்களை நன்றியோடு நினைத்து அவர்களுக்காக துவாச்செய்கிறோம். இனி சலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும் அதன் சிறப்பையும் நாம் காண்போம்.
யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்கு பத்து மடங்கு அருள்புரிகிறான். என்று நபி கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: திர்மிதீ
என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும் என்றும் நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அபூதாவூத்
இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக்கொண்டிருப்பதோ நபி அவர்கள்மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும் என்பதை இந்த ஹதீஸ்மூலம் நாம் உணரலாம்.
என்னைப்பற்றி கூறப்படும்பொழுது எவன் என்மீது ஸலவாத் கூறவில்லையோ அவன் கஞ்சனாவான் என்பதும் நபி அவர்களின் மொழியாகும். அறிவிப்பவர்: அலி(ரழி) நூல்: திர்மிதீ
யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் அவனுக்காக துஆச் செய்கிறார்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆமிர் இப்னு ரபிஆ(ரழி) நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜ்ஜா
அல்லாஹ் கூறுவதாக நபி அவர்கள் கூறினார்கள்: நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு நான் அருள் புரிகிறேன். யார் உன்மீது ஸலவாத் கூறுகிறாரோ அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு(ரழி) நூல்: அஹ்மத்
உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது என்று நபி அவர்கள் கூறியபோது, சில நபித்தோழர்கள் “நீங்கள் மக்கிவிடும்போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக்காட்டப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி அவர்கள் “நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான் (மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ்(ரழி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா
நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எத்திவைக்கப்படுகின்றது என்ற கூற்றிலிருந்து தானாக நபி அவரகள் செவியுறுவதில்லை. மலக்குகள் மூலமாகத்தான் எடுத்துச் சொல்லப்படுகின்றது என்பதையும் நாம் தெரியமுடிகின்றது.
பேராசிரியர் முஹம்மது அலி திருச்சி
thanks to readislam
0 comments:
Post a Comment