ஜிஹாதை விடவும் சிறந்தது! உலவி

, , No Comments
இறைவழியில் அறப்போர் செய்வதை விடவும் பெற்றோருக்கு நன்மை செய்வதே மிக உயர்ந்த செயலாகும். இதுவே, இறைவனுக்கும், இறைதூதருக்கும் விருப்ப மானதாகும் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் (இறைவழியில்) அறப்போர் செய்(ய நாடு)கிறேன் என்று கூற உனக்கு பெற்றோர் உண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று அவர் கூற (அப்படி என்றால்) அவ்விருவரிடமும் (நல்லவிதமாக நடப்பது மூலம்) ஜிஹாத் செய்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) புகாரி)

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நான் அல்லாஹ்விடம் கூலியை எதிர் நோக்கி அறப்போர் செய்யவும், ஹிஜ்ரத் செய்யவும் உங்களிடம் உடன்படிக்கை செய்து தருகிறேன்! என்று கூற உமது பெற்றோரில் எவராவது ஒருவர் உயிருடன் உள்ளனரா? எனக் கேட்டதும், ஆம் இருவரும் (உயிருடன் உள்ளனர்) என்று அம்மனிதர் கூறினார். நீர் இறைவனிடம் கூலியை எதிர்பார்கின்றீரா? என நபி (ஸல்) அவர்கள் கேட்க ஆம் என்று அவர் கூறியதும் அப்படியானால் நீர் உன் பெற்றோரிடம் சென்று அவ்விருவருக்கும் நன்மை செய்யவும் (இறைவன் கூலி தருவான்) என்று கூறினார்கள்.

ஜிஹாத் என்ற நிலை வரும்போது; அவனைத் தவிர, அவனது பெற்றோரை கவனிக்க வேறு ஆள் உண்டு என்று இருந்தால், ஜிஹாத் செய்ய செல்வதற்கே முதலிடம் தர வேண்டும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! எனது அழகிய நட்புக்கு அதிக தகுதியுடையவர் யார்? என்று கேட்டார். உனது தாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு யார் என்று அவர் கேட்க உனது தாய் தான் என்று கூறினார்கள். பிறகு யார்? என்று கேட்டார். உனது தாய்! பிறகு யார்? என்று அவர் கேட்டதும் உனது தந்தை! என்றார்கள்.(அபூஹுரைரா(ரழி) புஹாரி)

(உனக்கு) அல்லாஹ்வின் திருப்தி (வேண்டுமானால் உன்) தாய், தந்தை (உன்மீது கொள்ளும்) திருப்தியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம், தாய் தந்தையின் கோபத்தில் உள்ளது என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரழி) திர்மிதீ,ஹாகிம்,இப்னுஹிப்பான்)

நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத் செய்தோம். அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக கர்ப்பத்தில் அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால்குடி மறத்தல் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே, நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே உன்னுடைய மீளுதல் உள்ளது.(அல்குர்ஆன் 31:14)

காலடியில் சொர்க்கம்

ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)

ஒரு சிலர் தன் பெற்றோருக்கு உதவி செய்வதே இல்லை. மிகக் கடுமையான முறையில் தொல்லையும் கொடுப்பர். கொச்சையான அசிங்கமான வார்த்தைகளால் ஏசுவர் பேசுவர். இது போன்று செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

அவர்களில் ஒருவரோ, அல்லது இருவரோ வயோதிகம் அடைந்துவிட்டால், அவ்விருவரையும் சீ என்று சொல்ல வேண்டாம். மேலும் அவ்விருவரையும் விரட்ட வேண்டாம். (அல்குர்ஆன் 17:23)

இந்த இறைவசனம் மற்றும் நபிமொழிகளும் பெற்றோர் மனம் புண்படும்படி பேசவோ, நடக்கவோ கூடாது. மீறினால் அது மாபெரும் குற்றம் என்பதை தெளிவாக அறிவிக்கின்றன.

0 comments:

Post a Comment