ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
குழந்தை பிறந்ததால், அதன் முடியை மழித்து, முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?
மின்னஞ்சல் வழியாக சகோதரர் முஹம்மது ரஃபீக்
தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...
குழந்தை பிறந்ததும், குழந்தைக்காக மார்க்க ரீதியாகச் செய்ய வேண்டியவை, குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஓர் ஆட்டை அறுத்து (விரும்பியவர் ஈராடுகளை அறுக்கலாம்) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவனுக்காகப் பலியிடுதல் 'அகீகா' எனப்படும். இது கட்டாயமில்லை; விரும்பியவர் கொடுக்கலாம்.
அன்றே குழந்தையின் முடியை மழிக்க வேண்டும்.
முடியை மழித்த பின், "முடியின் எடைக்குச் சமமாக வெள்ளியைத் தர்மம் செய்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஓர் அறிவிப்பு திர்மிதி நூலில் 1439ஆவதாக இடம்பெற்றுள்ளது. தொடர்பறுந்த பலவீனமான அச்செய்தி:
''நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களுக்காக ஓர் ஆட்டை அகீகா கொடுத்தனர். மேலும் "ஃபாத்திமா! இவரது தலையை மழித்து அந்த முடியின் எடைக்கு வெள்ளியைத் தர்மம் செய்'' என்று கூறினார்கள். நான் அம்முடியை எடை போட்டபோது அதன் எடை ஒரு திர்ஹம் அல்லது அதைவிடக் குறைவாகவே இருந்தது - அறிவிப்பவர்: அலீ (ரலி).
இது ஹஸன் கரீப் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். (இரண்டாவது அறிவிப்பாளர்) முஹம்மது பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களின் காலத்தில் பிறக்கவில்லை என்பதால் இது தொடர்பறுந்த ஹதீஸாகும் என்று திர்மிதி இமாம் கூறுகிறார்கள்.
அடுத்து, ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களையும் ஹுஸைன் (ரலி) அவர்களையும் பெற்றடுத்தபோது அவர்தம் தலைமுடியை மழித்து அதற்கான எடைக்கு வெள்ளியை வறியவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதரை அண்டி வாழும் திண்ணைத் தோழர்களுக்கும் தர்மம் செய்ததாக அபூ ராஃபிஉ அவர்கள் அறிவிக்கும் செய்தியை இமாம் அஹ்மது தமது முஸ்னதில் 25930ஆவதாகப் பதிந்திருக்கிறார்கள். ஆனால், அதிலும் யாருடைய வழிகாட்டலின்படி அவ்வாறு செய்தார்கள் என்று தெளிவு ஏதுமில்லை.
எனவே, குழந்தைகளுக்கு முடிமழித்து, முடியின் எடைக்கு எடை வெள்ளியைத் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஹதீஸ்களில் ஒன்று அறிவிப்பாளர் தொடர்பறுந்ததாகவும், மற்றொன்று நபியவர்கள் சொன்னார்களா? என்ற சந்தேகத்திற்கிடமாகவும் இருப்பதால், அகீகா கொடுக்கும்போது முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற வலுவான ஆதாரங்கள் இல்லை.
சந்தேகமானவற்றை விட்டு உறுதியானதையே எடுத்துக்கொள்வோம்.
இறைவன் மிக்க அறிந்தவன்.
satyamargam.com
0 comments:
Post a Comment