ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
என் பாட்டனாருக்கு இரண்டு மனைவியர். பாட்டனாருக்கு என் தந்தை முதல் மனைவியின் மகன். என் சிறிய தந்தை இரண்டாம் மனைவியின் மகன். நான் என் சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்யலாமா? தயவு செய்து எனக்கு பதில் அனுப்பவும்.
மின்னஞ்சல் வழியாக சகோதரர் அஜீஸ் ஜாஃபர்.
தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
ஒருவர் தனது சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்ய மார்க்கத்தில் தடை இல்லை.
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும் உங்கள் புதல்வியரும் உங்கள் சகோதரிகளும் உங்கள் தந்தையின் சகோதரிகளும் உங்கள் தாயின் சகோதரிகளும் உங்கள் சகோதரனின் புதல்வியரும் உங்கள் சகோதரியின் புதல்வியரும் உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும் உங்கள் பால்குடிச் சகோதரிகளும் உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:23)
உடன் பிறந்த அண்ணன்-தம்பிகளுக்குப் பிறந்த ஆண்-பெண் மக்கள் ஒருவரையொருவர், "அண்ணன்", "தங்கை", "அக்கா", "தம்பி" என்ற உறவுமுறையில் அழைத்துக் கொண்டாலும் ஒரே தந்தைக்குப் பிறந்த ஆண்-பெண் மக்களிடையே ஏற்படும் சகோதர, சகோதரி இரத்த உறவு போன்று, பெரிய தந்தை-சிறிய தந்தை மக்களிடையே சகோதர-சகோதரி உறவை இறைவன் ஏற்படுத்தவில்லை.
மேற்கண்ட திருமறை (4:23வது) வசனத்தில் திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களில் ''உங்கள் சகோதரிகளும்'' என்பதில் ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த பெண் மக்களும் ஒரு தந்தை இரு அன்னையருக்குப் பிறந்த பெண் மக்களும் சகோதரிகள் என்ற இரத்த உறவு வட்டத்திற்குள் வந்துவிடுவர்.
அதுபோல் ஒரு பெண்ணுக்கு முந்திய கணவன், பிந்திய கணவன் என இரு கணவருக்குப் பிறந்த ஆண்-பெண் மக்களாக இருந்தாலும், இருவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதால் இவர்களும் உடன் பிறந்த சகோதர-சகோதரியாவர்.
"உங்கள் சகோதரிகளை மணமுடிக்காதீர்கள்" என இறைவன் விலக்குவது இந்த உறவுகளைத்தான்! கூடுதலாக, ஒரே தாயிடம் பால் குடித்தவர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளலாகாது.
மற்றபடி ஓர் ஆண், தன் பெரியப்பா-சித்தப்பா மகள், அல்லது பெரியம்மா-சின்னம்மா மகளைத் திருமணம் செய்துகொள்வதை இறைவன் தடை செய்யவில்லை.
(இறைவன் மிக்க அறிந்தவன்)
satyamargam.com
0 comments:
Post a Comment