மவ்லவி S.முஹம்மது லியாகத் அலீ மன்பஈ
நாளை அருவடை செய்வதற்கு தயாராக இருந்த ஒரு விளைநிலத்தில் திடீரென்று ஓர் ஆட்டு மந்தை திபுதிபுவென நுழைந்தது. அவ்வளவுதான்! இன்றே முழு அருவடையும் செய்யப்பட்டுவிட்டது. ஆம்! அத்தனை பயிர்களும் ஆட்டு மந்தைக்கு உணவாகி விட்டது.
விவசாயி வந்து பார்த்தார். ஆட்டு மந்தையின் உரிமையாளர் மீது வழக்கு தொடுக்கின்றார். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் வழக்கை விசாரித்தார்கள். இறுதியில் தீர்ப்பும் அளித்தார்கள்.
விவசாயியின் பயிர் முழுவதையும் விலை மதிப்பீடு செய்தபோது ஆட்டுமந்தையின் முழு விலைக்கு சமமாக இருந்தது. எனவே ஆட்டுமந்தையை விவசாயிக்கு உரிமையாக்குகிறேன் என்று தீர்ப்பளித்தார்கள்.
ஆடுகளுக்குச் சொந்தக்காரர் அழுதவண்ணம் வெளியே வருகின்றார். எதிரில் தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் நிற்கிறார்கள். விபரம் கேட்கின்றார்கள். விவசாயி சொல்கின்றார்.
‘வாயில்லா பிராணியான எனது ஆடுகள் செய்ய செயலுக்காக நான் எப்படி பொறுப்பாளியாக முடியும்? எவ்வளவோ காலமாக நான் கஷ்டப்பட்டு சேகரித்த சொத்தை ஒரு நொடியில் இழந்து நிற்கின்றேன்’ என அவர் கண்ணீர் விட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் தம் தந்தையிடம் சென்று மறுவிசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குகிறார்கள்.
‘அதாவது ஆடுகளை கவனக் குறைவாக விளைநிலத்தில் மேயவிட்டதன் காரணமாக நீர் உமது ஆடுகளை அந்த விவசாயியிடம் சில காலத்துக்கு விட்டு விட்டு நிலத்தை நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு அவரது பயிர் வளர்ந்திருந்ததோ அந்த அளவுக்கு நீர் அதில் விவசாயம் செய்ய வேண்டும். அது வரையில் உமது ஆடுகளின் பலனை அவர் அனுபவித்துக் கொள்ள வேண்டும். அவரது பயிர் உமது ஆடுகளால் அழிக்கப்பட்டபோது இருந்த நிலைக்கு வரும் வரை நீர் விவசாயம் செய்து அவரிடம் நிலத்தை ஒப்படைத்து விட்டு உமது ஆடுகளை மீட்டிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்கள்.
அற்புதமான இந்த தீர்ப்பைத் தான் வல்ல ரஹ்மான், ‘ஸுலைமானுக்கு நாம் தீர்ப்பின் நுட்பங்களை விளக்கி வைத்தோம். ஆனால் இருவருக்குமே கல்வியையும், ஞானத்தையும் கொடுத்திருந்தோம். (அல்குர்ஆன் 21:79) என்று புகழ்துரைக்கின்றான்.
இறைவனாலேயே தீர்ப்பின் நுட்பங்களைக் கொடுக்கப்பெற்று பாராட்டுப்பெற்ற நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த உலகப்பிரசித்திப் பெற்ற வியக்கத்தக்க இன்னொரு தீர்ப்பையும் பார்ப்போமே!
இரண்டு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தைகள். இந்நிலையில் அங்கே வந்தது ஓநாய் ஒன்று! தாய்மார்கள் அயர்ந்திருந்த வேளையில் ஒரு குழந்தையை அது கவ்விச்சென்று விட்டது. கண் விழித்துப் பார்த்த இருவரும் ஒரு குழந்தையைக் காணாமல் தவித்தபோது தூரத்தில் ஓநாயின் பிடியில் சிக்கி குழந்தை கதறுவதும் சற்று நேரத்தில் அதன் உயிர் பிரிந்து விட்டதும் தெரிகிறது. குழந்தையைப் பறிகொடுத்தவள் உடனே ஒரு தந்திரம் செய்தாள்.
அருகில் கிடந்த மற்றொரு குழந்தையை உடனே கைப்பற்றினாள். ‘உன் குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டதே!’ என்று அடுத்தவளைப் பார்த்து சொன்னாள். அவளோ, ‘என்ன கொடுமை இது? உன் குழந்தையைத் தானே அது கொண்டு சென்றது. இது என் பிள்ளையல்லவா?’ என்று குமுறினாள்.
விவகாரம் நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் சென்றது. அவர்கள் வழக்கை விசாரித்தார்கள். இரு பெண்களில் வயதால் சற்றுப் பெரியவளாக இருந்தவருக்கே அந்த குழந்தை சொந்தம் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். அவர்களின் தீர்ப்பால் அழுது புலம்பிய மற்றொரு பெண் வெளியே வந்து அங்கே நின்று கொண்டிருந்த நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டாள்.
வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விஷயத்தை நன்கு விளங்கிக் கொண்ட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான தாயைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்கள். ‘குழந்தை இருவருக்குமே தேவை. எனவே ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் இக்குழந்தையை இரு கூறுகளாகப்பிளந்து ஆளுக்குப் பாதியாகத் தந்து விடுகின்றேன்’ என்றார்களே பார்க்கலாம்!
தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பின்படி குழந்தையைத் தன்னிடம் வைத்திருந்த பெரியவள் சற்றும் சலனமின்றி வாய் மூடியிருக்க இளையவள் உடனே சொன்னாள், ‘அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக! வேண்டாம், தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தை அவளின் பிள்ளைதான். அதை அவளிடமே கொடுத்துவிடுங்கள்’ என்றாள். இதைக்கேட்டவுடன் ஸ{லைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தச் சின்னவளே உண்மையான தாய்!’ எனத் தீர்ப்பு வழங்கினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸாயீ)
தாயன்பு எத்தகையது என்பதற்கு இந்நிகழ்ச்சி தக்கதொரு சான்றாகும். ஆம்! தம் கண் முன்னால் தான் ஈன்றெடுத்த தன் அன்பு மகனை அறுக்கப் போகிறேன் என்று சொன்னவுடனேயே உண்மைத்தாய் பதறுகிறாள். தனக்குத் தன் குழந்தை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவனை கொன்றுவிடக்கூடாது என்பதற்காக குழந்தை தன் மகனல்ல, அவளின் மகன்தான் எனக் கூறிவிடுகிறாள். இதைத்தான் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களும் எதிர்பார்த்தார்கள்.
நீதியைக் கண்டு பிடிப்பதற்கு சில வேளை இது போன்ற தந்திரங்கள் தேவைப்படுகின்றன. இல்லையெனில் நீதி அநீதியாக மாறிவிடும். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பு வெளிப்படையான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லாஹ்வினால் அளிக்கப்பட்டிருந்த அறிவின் ஒளியாலும் ஆழிய மதி நுட்பத்தினாலும் பிரச்சனையின் ஆழத்துக்கே சென்று ஒரு நொடியில் நீதியை வழங்கி விட்டார்கள்.
நன்றி : மனாருல் ஹுதா, நவம்பர் 2000
www.nidur.info
0 comments:
Post a Comment