'ஜாலி' கணவன் - மனைவி

, , No Comments
திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு.

ஜாலி கணவன் மனைவியாக வாழ்க்கை சிறக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதுவே இந்தக் கட்டுரை.

திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)

''திருமணம் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்'' என நபி (ஸல்) அவர்களும் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

''இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மனிதனின் வாழ்க்கையில் மிக அவசியமான இத்திருமணத்தை வசதியில்லாத ஜோடிகளுக்கு வசதியுள்ளவர்கள் முடித்து வைக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

மனிதனின் வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் இந்தத் திருமணம், பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் புரிந்த பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு, அது தொடர்கதையாக மாறி விடுகிறது. பலரின் வாழ்க்கையே தொடர்பு அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது.

மனித வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத இந்தத் திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்குகிறது? இதற்குக் காரணம் என்ன? இன்பமான வாழ்க்கை அமைய என்ன வழி வகைகள் இருக்கின்றன? என்பன குறித்து மார்க்கம் என்ன சொல்கிறது? என்று பார்ப்போம்.

இல் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் தவறு செய்பவர்களே! என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

தாம் எதிர் பார்த்த அளவிற்கு முழுமையாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர் பார்த்த அளவிற்கு இருப்பது மிகக் கஷ்டம் தான். அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம். அப்போது நாம் பொறுத்துக் கொண்டு அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ள வேண்டும். அப்பெண்ணிடம் இருக்கும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத் தரலாம்.

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)

தான் விரும்பியபடி நடக்கவில்லை, என் விருப்பதிற்கு மாற்றமாக நடக்கிறாள் என்ற எண்ணம் தான் பெரும்பாலும் கணவன், மனைவியிடம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணத்திற்கு முதலில் முட்டுக்கட்டை போட வேண்டும்.

திருமணம் வாழ்க்கை சிக்கலாக அமைவதற்கு இன்னொரு காரணம் மணப்பெண்ணை மார்க்கத்தின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் பணத்தையும் அழகையும் மட்டும் பார்த்து தேர்வு செய்வது தான்.

''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மார்க்கம் தெரிந்து, அதன் படி நடக்கக் கூடிய பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளை முழுமையாக புறக்கணிக்கப்படுவது குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது.

கணவன், மனைவிக்கு மத்தியில் சிக்கல் ஏற்படும் போது, அவர்களைச் சேர்த்து வைக்கும் நல்ல நோக்கத்தில் அவர்களை அழைத்து, மார்க்கம் கூறும் அறிவுரைகளைச் சொல்லும் போது, மார்க்கத்தைப் பற்றி தெரிந்திருந்தால் அந்த அறிவுரைகளை மதித்து சேர்ந்து வாழ முயற்சிப்பார்கள். மார்க்கத்தின் அடிப்படையே தெரியாதவர்களாக அந்தத் தம்பதி இருந்தால் எப்படி மார்க்கத்தின் போதனைகளை செவி சாய்த்துக் கேட்பார்கள்?

எனவே மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்யும் போது இஸ்லாத்தின் அடிப்படை பற்றித் தெரியுமா? தொழும் பழக்கம் இருக்கிறதா? திருக்குர்ஆன் ஓதத் தெரியுமா? நற்பண்புகள் இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்து இதற்கு முதலிடம் கொடுத்துத் தேர்வு செய்யுங்கள்.

''இவ்வுலகம் இன்பங்களாகும். இவ்வுலக இன்பங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம்

''அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய, அன்பு செலுத்தக் கூடியவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஃகல் பின் யஸார் (ரலி), நூல்: நஸயீ.

''அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! என்ற வசனம் இறங்கிய போது முஸ்லிம்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அப்போது உமர் (ரலி) அவர்கள், ''நான் உங்கள் கவலையை நீக்குகிறேன்'' என்று கூறி விட்டு (நபியவர்களிடம்) சென்று ''அல்லாஹ்வின் தூதரே! தங்களின் தோழர்களுக்கு இந்த வசனம் பெரும் கவலையை ஏற்படுத்தி விட்டது'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உங்களில் மீதமுள்ள செல்வங்களை தூய்மைப் படுத்துவதற்குத் தான் அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். வாரிசுரிமையை உங்களுக்குப் பிறகு வருபவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்'' என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹு அக்பர்'' என்று கூறினார்கள். பின்னர் ''மனிதன் சேமிப்பதிலேயே சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டு விட்டு ''கணவன் பார்க்கும் போது மகிழ்ச்சியூட்டுவாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் இல்லாத போது கற்பைப் பாதுகாப்பாளே அப்படிப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்மணி'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

மேற்கூறிய நபிமொழிகளின் படி மணமக்களைத் தேர்வு செய்திருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைச் சரி செய்து விடலாம்.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இன்பமாக இருக்க மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ன?

சிறு சிறு உதவிகளைச் செய்தல்
கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பு அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவளுக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும். காய்கறி நறுக்கும் போது, ரொட்டி சுடும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதுள்ள அன்பு மேலும் அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் நூல்: புகாரி.

''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா?'' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ''தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா நூல்: அஹ்மத்.

அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் ஆட்டின் பாலைக் கறப்பார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் தம் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது. இறைத்தூதர் அவர்களே இவ்வாறு நடந்திருந்தால் நாம் எந்தளவிற்கு நடக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சிறு சிறு உதவிகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பையும் பாசத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்.

ஊட்டி விடுதல்
சாப்பிடும் போது மனைவிக்கு ஒரு கவள உணவையாவது ஊட்டி விட்டால் கணவனின் மீது உள்ள அன்பை அதிகரிக்கச் செய்வதோடு இறையருளையும் பெற்றுத் தரும்.

''உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதவிடாய் நேரத்தில்...
பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்று கூறி யூதர்கள் அவர்களைத் தனி அறையில் அடைத்து வைத்தனர். பொதுவாக இந்த நேரத்தில் அனைவரும் பெண்களை ஒதுக்கியே வைப்பார்கள். எனவே இதைப் போன்ற நேரங்களில் அவர்களிடம் அன்புடன் நடந்து கொண்டால் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ''நபியே! அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்'' என்று தொடங்கும் (2:222வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து நபி (ஸல்) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள நேரத்தில் உடலுறவைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களையும் செய்து கொள்ளலாம். அவர்களுடன் பேசுவது, அவர்கள் சமைத்ததைச் சாப்பிடுவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யலாம். இதற்கு நபி (ஸல்) அவர்களே சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவிவிடுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது எனது மடியில் சாய்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் அவர்களது தலையைக் கழுவுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தை) பருகி விட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதவிடாய் என்று கூறி மற்றவர்கள் பெண்களை ஒதுக்கி வைக்கும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் அனைத்து உதவிகளையும் பெற்று வந்துள்ளார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் தண்ணீரை வாய் வைத்துக் குடித்து விட்டுத் தரும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த இடத்தில் வாய் வைத்து குடித்தார்கள் என்பதைக் கவனித்து, அதே இடத்தில் வாய் வைத்து குடித்துள்ளார்கள். இறைச்சியைக் கொடுக்கும் போதும் ஆயிஷா (ரலி) அவர்கள் கடித்த அதே இடத்தில் கடித்து, மாதவிடாய் நேரத்தில் பெண்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்துகின்றார்கள்.

இந்த நேரம் மட்டுமல்ல! ஒரு பெண் கவலையோடு இருக்கும் போதும், தனக்கு உறுதுணையாக யாரும் இல்லை என்று அவள் எண்ணும் போதும் அவளிடம் கணவன் இது போன்று நடந்து கொண்டால் நிச்சயம் கணவனிடம் மனைவி மதிப்பும் மரியாதையும் வைப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.

இல்லற வாழ்க்கை இனிக்க மார்க்கம் தடை செய்யாத விஷயங்களில் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் விரும்பியதைச் செயல் படுத்த வேண்டும்.

இவ்வாறு செயல் படுத்தும் போது அவர்களின் ஆசை நிறைவேறுவதுடன் கணவன் மீதும் மதிப்பும் மாரியாதையும் உயரும்.
உதாரணமாக எதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னால் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். முடியவில்லையானால் இன்னொரு நாளில் அழைத்துச் செல்வதாகக் கூறி அதன்படி நடக்கவேண்டும்.

இவ்வாறு செய்வதால் கணவன் மனைவி உறவு சீர்படும்; சிறப்பாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே நடந்து கொண்டார்கள்.

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ''நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?'' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.

(பிறகு அவர்களை நோக்கி) ''அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ''உனக்கு போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ''அப்படியானால் (உள்ளே) போ!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை.

மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தன் தோளை விளையாட்டை பார்க்கும் சாதனமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள்.

இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை; தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களின் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.

இதைப் போன்று மனைவியின் தோழிகளைப் பார்ப்பதற்கு அவர்களுடன் பேசுவதற்கு அனுமதி கேட்டால் கணவன்மார்கள் அனுமதி அளிக்க வேண்டும். பெற்றோர்களிடம் கூட பேசுவதற்கும் பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கும் கணவன்மார்கள் நபிகளாரின் இந்த முன்மாதிரியை சிந்திக்க வேண்டும்.

விளையாடுதல்

திருமணம் முடிப்பவர்கள் கணவன் மனைவி அன்புடனும் பாசத்துடனும் இருக்க, தாங்கள் அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் சிரித்து விளையாடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது; ஆர்வப் படுத்தப்பட்டுள்ளது.

''கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே! நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி.

கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் விளையாடு வதற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போது நான் இளம் வயதுப் பெண்ணாக இருந்தேன். எனக்கு சதை போட்டு உடல் கனத்திருக்க வில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள். என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். அவர்களை முந்திச் சென்று (இறுதியில்) நானே முந்தினேன். நபி (ஸல்) அவர்கள் அமைதியானார்கள்.

எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்டேன். (ஓட்டப் பந்தயம் விஷயத்தையும்) நான் மறந்து விட்டேன். இன்னொரு முறை அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போதும் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள்.

பின்னர் என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். நான் அவர்களுடன் ஓடினேன். (இறுதியில்) என்னை நபிகளார் முந்தி விட்டார்கள். சிரித்துக் கொண்டு ''அதற்கு இது சரியாகி விட்டது'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.

எந்தப் பயணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்ற விவரம் இல்லை. எனினும் குறைந்த பட்சம் நபிகளாரின் வயது என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் கலந்து கொண்ட பயணங்கள் மதீனா வாழ்க்கையில் தான் நடந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் போகும் போது வயது 53. மதீனா சென்றவுடனே இந்த நிகழ்ச்சி நடந்திருந்தாலும் அவர்களின் வயது 53 ஆக இருக்க வேண்டும்.

நபிகளாரின் வயது (குறைந்த பட்சம்) 53 ஆக இருக்கும் போது தன் மனைவியிடம் ஓட்டப் பந்தயம் வைத்து தோற்றுப் போய், பல வருடங்கள் கழித்து அதை நினைவில் வைத்து வெற்றிக் கொண்டது, மனைவியிடம் கணவன் வயது வரம்பின்றி இதுபோன்று விளையாடி மகிழ்விக்கலாம் என்பதை மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது.

இவ்வாறு நடப்பதும் கணவன், மனைவியிடம் அன்பை அதிகரிக்க உதவும் என்பதை அறியலாம்.

0 comments:

Post a Comment