இளைஞர்களின் சக்தி – பொதுச் சேவையில்

, , No Comments
அன்று, ஒரு நாள் புனித மதீனா நகரில் கலீபா உமர் (ரலி) அவர்கள், அவர்களது தோழர்களுடன் ஒரு வீட்டில் அமர்ந்திருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தோழர்களைப் பார்த்து உங்களது விருப்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்' என்றார்கள். அதற்கு ஒரு தோழர் ' அமீருல் முஃமினீன் அவர்களே..! நான் ஒன்றை விரும்புகிறேன். அது முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பதையும் விரும்புகிறேன் என்றார். உமர் (ரலி) அவர்கள் மீண்டும் உங்களது விருப்பங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்' என்று தன் தோழர்களிடம் கேட்டார். அதைக் கேட்டு மற்றொரு தோழர் 'உமர்; அவர்களே..! நான் ஒன்றை சொல்லவா? எனக் கேட்டு ' இந்த வீடு முழுவதும் முத்துக்கள், வைரங்கள் இரத்தினங்களால் நிரப்பபட்டு அவை அனைத்தையும் அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிக்க நாடுகிறேன்' என்றார். இதைக்கேட்டு உமர் (ரலி) மீண்டும் ' உங்களது விருப்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்' என்றார்கள். இதைக் கேட்ட தோழர்கள் 'இதற்கு மேல் கூறுவதற்கு எங்களுக்கு எதுவும் தெரியவில்லை' என்றார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், 'எனதருமைத் மோழர்களே..! நான் ஒன்றை விரும்புகிறேன். அது இந்த வீட்டில் தங்கங்களும், முத்துக்களும் நிரப்பபட்டு இறை வழியில் செலவழிப்பதை விட சிறந்த ஒன்று.. ஆம்.. தோழர்களே! அது இந்த வீடு முழவதும் அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்(ரலி), முஆத் பின் ஜபல், (அபூ ஹீதைபாவின் அடிமை) சாலிம் (ரலி) போன்ற இளைஞர்கள் இருப்பதையும், இறைவனது தூதை ஓங்கி ஒலிக்கச் செய்வதில் - அந்த இறைப்பணியில் அவர்களது இளமையை செலவிழிப்பதையுமே நான் விரும்புகிறேன்' என்று தெளிவாக கூறினார்கள்!.

அன்புள்ள சகோதர சகோதரிகளே..! மேலே நாம் கண்ட வரலாற்றுச் செய்தி நமக்கு மிகப்பெரும் படிப்பினையை உணர்த்துகிறது. அது இந்த உலகம் சீரானதாகவும், செம்மையாகவும் ஆக வேண்டுமென்றால் அதனை சீர்படுத்திடவும், செம்மைப்படுத்திடவும் ஆளுமை மிக்க சிந்தனைச் திறனும், உள்ளமும், உறுதியான மனோ வலிமையும் கொண்ட இளைஞர்கள் தான் தேவை. மாறாக கனிமவளங்களோ, ஆடை ஆபரங்களோ அல்ல. இதைத்தான் இறை ஞானம் பெற்ற உமர் (ரலி) அவர்கள் தெளிவாகச் சொல்லிச் சென்றார்கள்.

இன்றைக்கும் நீங்கள் பாருங்கள், எந்தெந்த இயங்கங்களெல்லாம், கட்சிகளெல்லாம், தொண்டு நிறுவனங்களெல்லாம் பொதுச்சேவையில் தொண்டுகள் புரிய நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் முதலில் தங்களின் மூலதனமாகத் தேடுவது இளைஞர்களைத்தான்.

ஏனெனில் இளைஞர்கள், அவர்களால் தான் எந்த ஒரு பொதுப்பணிகளிலும் களமிறங்கி தொண்டாற்றிட முடியும். துடிப்புடன் கூடிய இளமைப்பருவம் அதன் மகத்துவத்தை இளைஞர்களை விட அந்த இளமையை தாண்டிச் சென்ற முதியவர்களே நன்கு உணர்வார்கள்.

தினவெடுக்கும் தோள்களை உடைய இளங்கன்றுகள், இளஞ்சிங்கங்கள் பயமறியாது. எச்செயலிலும் துணிந்து தீவிரமாக இறங்கக்கூடிய பருவம்ஃ எதை நினைத்தாலும் உடனே அதனை அடையத்துடித்திடும் பருவம். இதனால் தான் இளைஞர்களின் மகத்துவத்தைப்பற்றி புரிந்துக்கொண்ட தலைவர்கள் தங்களின் தொண்டர்களாக இளைஞர்கள் அதிகம் சேர்வதையே விரும்புகிறார்கள்.

கி.பி 14 ம் நூற்றாண்டில் அறியாமையில் மூழ்கிக் கிடந்த ஸ்பெயினை அறியாமையிலிருந்து மீட்டெடுக்க சென்ற முஸ்லிம்களின் படைக்கு தலைமை தாங்கி சென்று வெற்றியும் பெற்றவர் ஒரு இளைஞர் தான்ஃ அவர் பெயர் தாரிக் பின் ஸியாது. வயது 17.

ஆக.. இது போல் பொதுச் சேவையில் தங்கள் இளமைச் சக்தியை செலவழித்து வெற்றி பெற்றவர்கள் ஏராளம். ஆனால் இன்றைய சூழ்நிலையிலோ.. நமது இளைஞர்களும், அவர்களது சக்தியும் வீணடிக்கப்பட்டு கொண்டிருக்கப்படுகின்றன. நாசமாகப் போன சினிமா நடிகர்களுக்குப் பின்னாலும், வீணாய்ப்போன அரசியல் வாதிகளின் பின்னாலும் 'பொதுச்சேவை' என்கின்ற பெயரால் இளைஞர் சக்தி வீணடிக்கப்ட்டுக் கொண்டு தானிருக்கின்றன.

இந்த அவல நிலைகள் நீங்க வேண்டும், இளைஞர்கள் தங்களது சக்தியை உணர வேண்டும். துருப்பிடித்துப் போன இந்த உலகத்தையும், அதன் மீது இளைஞர்களை வைத்து பிழைப்பு நடத்திவரும் நாடகத் தலைவர்களையும் புரட்டிப் போட வேண்டும். களையெடுக்க வேண்டும். ஆம்..! இளைஞர்களே.. மனிதம் அழிந்து மிருகம் வளர்க்கும் இந்த ஓநாய்க்கூட்டங்களை ஓட ஓட விரட்ட வேண்டும். அறிவுக் கோடரி கொண்டு ஆணவச் பயிர்களை வெட்டி வீழ்த்த வேண்டும்;. ஆம்.. இங்கு மனித வடிவில் நாடகமாடும் மிருகங்கள் வேட்டையாடப்பட வேண்டும்.

இளைஞர்களே..! விழித்தெழுங்கள்..! உங்களை இளமை உங்களை விட்டு போகும் முன்பே..!

இந்திய விடுதலைக்கு தன் கவிதைகளால் வித்துக்களை வீசிய அல்லாமா இக்பால்(ரஹ்) அவர்கள் ஒரு முறை கூறினார்கள். 'இந்த உலகம் ஒரு கப்பலைப் போன்றது, இந்த கப்பலை வழி நடத்தும் மாலுமிகள் - இளைஞர்கள் தான் என்றார்கள். 'எந்த ஒரு சமுதாயத்தின் இளைஞர்களின் நெஞ்சம் எஃக்கைப் போன்று உறுதியாக உள்ளதோ அந்த சமுதாயத்திற்கு வாள் எடுத்துப் போராடும் மனிதர்களே தேவையில்லை' என்றார்கள்.

மனித சமுதாயம் ஒரு காலத்தில் ஏக இறைவனை மறந்து கற் சிலைகளை வழிபட்டு வந்த நாட்களில் அந்த சமுதாயத்தில் ஏகத்துவ புரட்சியை ஏற்படுத்தி

அந்த மக்களை வென்றெடுத்த 'இறைவனின் தோழர்' இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு இளைஞராகத்தான் இருந்தார்கள் என்று அருள் மறை அல்குர்ஆன் கூறுகிறது.

மீண்டும் ஒரு சம்பவத்தை அருள் மறைக்குர்ஆன் 18 வது அத்தியாயம் சூரா அல் கஹ்ஃபுவில் அழகாகச் சொல்கிறது. அன்று ஒரு நாள் ஈஸா (அலை) அவர்களின் போதனையை மறந்த கிறுஸ்தவ அரசன் தானும் வழி கேட்டு தன் மக்களையும் வழிகெடுத்து வந்தான். அன்று அவன் செய்து வந்த கொடுமைகளை எதிர்த்து போராடியவர்கள் ஒரு சில இளைஞர்கள் தான்.

இன்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரண வேளையில் ஒரு நாட்டிற்கு ஏதிராக படையெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது அங்கே அந்த இறைவனின் படைக்கு தளபதியாக ஒஸாமா பின் ஜைது (ரலி) என்ற 17 வயது இளைஞரைத் தான் நியமித்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
'மறுமை நாளில் ஓர் அடியான் கீழக்கண்ட நான்கு வினாக்களுக்கு அல்லாஹ்வினடம் பதிலளிக்காத வரை ஒரு அடி கூட நகர முடியாது.

1. உனது வாழ்க்கை எந்த வழிகளில் செலவிட்டாய்?
2. உனது இளமைப் பருவத்தை எந்த வழிகளில் செலவிட்டாய்?
3. எவ்வழிகளில் சம்பாதித்தாய்? எவ்வழிகளில் அதை செலவிட்டாய்?
4. பெற்ற கல்வியின் மூலம் என்ன செய்தாய்?
அறிவிப்பாளர்: முஆத் பின் ஜபல் (ரலி) - ஆதாரம்: ஃதபரானீ

இளைஞர்களின் சக்தியை இப்போது உணரலாமே..!

0 comments:

Post a Comment