தாடி வைத்திருப்பதால் ஆண்களுக்குத் தொடர் நன்மையா?

, , No Comments
ஐயம்: சகோதரி திருமதி. ஜஹ்ரா அவர்களின் இன்னொரு கேள்வி



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்



ஆண்கள் தாடி வைத்திருப்பது என்பது 24 மணி நேரமும் ஒரு சுன்னத்தை ஹயாத் ஆக வைத்திருப்பதால் அதன் நன்மை ஒவ்வொரு நொடியும் பொழிந்து கொண்டிருக்கும் என்பது உண்மையா? எனில் பெண்களுக்கு அதுபோன்ற தொடர் நன்மை பெற்றுத் தரும் செயல் எது?


தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...



ஆண்கள் தாடி வைத்திருப்பதால் 24 மணி நேரமும் நன்மைகள் பொழிந்து கொண்டிருக்கும் என்ற அறிவிப்பு எதையும் நாம் அறியவில்லை. ஆண்கள் தாடி வைப்பது சுன்னத் என்றாலும் தாடி மட்டும் வளர்த்துக்கொண்டால் போதாது. முஸ்லிமல்லாத ஆண்களும் தாடி வைத்திருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் ஒவ்வொரு நொடியும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும் என்று கருதுவதற்கில்லை!



ஆண்கள் தாடி வைத்துக்கொண்டாலும் மற்ற சுன்னத்துகளைப் பேணி - நபிவழி நடக்கும் போதுதான் முஸ்லிம் என்று பரிணாமம் பெறுகின்றனர்.



''மீசையைக் குறைத்து தாடியை (வளர) விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)



ஒரு முஸ்லிம் புறத்தோற்றத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அளவுகோலாகத் தாடியைக் குறிப்பிடுகிறது இஸ்லாம்.



அதேவேளை தாடி வைக்கும் நோக்கத்தைப் பொறுத்தும் நன்மையின் அளவு வேறுபடும். புற அழகிற்காகவோ அல்லது பிறர் தம்மை மதிப்புடன் நோக்கவேண்டும் என்பதற்காகவோ வைக்கப்படும் தாடியினால் கிடைக்கும் நன்மை நபியவர்களின் வழிமுறையை நிலைநிறுத்துவதற்காக வைக்கப்படும் தாடியினால் கிடைக்கும் நன்மைக்கு முன் மிகச் சிறிய அளவினதாகும்.



"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன; ஒவ்வொரு மனிதரும் அவர் எண்ணியதையே அடைந்துகொள்வார்....." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள், நூல்: புகாரி, 6689)


பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் சிறப்புத் தகுதிகளை விரிவஞ்சி மிகச் சுருக்கமாகக் காண்போமெனில்,



குடும்பத்திற்காக ஆண்கள் என்னதான் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்தாலும் பிள்ளைகளுக்கு மிகவும் நெருக்கமானவர் யார்? என்று கேட்டால் தாய் என்று - திரும்பத் திரும்ப தாய் என்றே இஸ்லாம் கை காட்டுகிறது. இதுவே பெண்மைக்கும், தாய்மைக்கும் இஸ்லாம் வழங்கும் மிகப்பெரும் நன்மைகளல்லவா!



''முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும் உண்மை பேசும் ஆண்களும் பெண்களும் பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும் அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும் தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்து வைத்துள்ளான்'' (அல்குர்ஆன் 033:035)



முஸ்லிமான ஆண்கள், பெண்களுக்கான நற்கூலிகளில் எக்குறையும் ஏற்படுத்தி விடமாட்டேன் என இறைவன் வாக்களித்திருக்கிறான்.



(இறைவன் மிக்க அறிந்தவன்)

satyamargam.com

0 comments:

Post a Comment