தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது

, , No Comments
ஐயம்: தொழும் பொழுது குர்ஆனைத் திறந்துப் பார்த்து அல்லது கைகளில் ஏந்திக் கொண்டு அதைப் பார்த்து ஓத அனுமதி உள்ளதா?

மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் Mazlan Ameen

தெளிவு:

தொழும்போது குர்ஆனைத் திறந்து பார்ப்பதற்கோ அல்லது கைகளில் ஏந்தி அதைப் பார்த்து ஓதுவதற்கோ நாமறிந்தவரை மார்க்கத்தில் வழிகாட்டல் ஏதும் இல்லை.

(தொழுகையில்) ''உள்ளச்சத்துடன் - கட்டுப்பட்டு - நில்லுங்கள்'' (அல்குர்ஆன், 2:238)

(அவர்கள்) ''தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்'' (அல்குர்ஆன், 23:2)

ஒருவர் தம்மைத் தொழுகைக்குத் ஆயத்தப்படுத்திக்கொண்டு, தொழுகையின் ஆரம்ப நிலையில் நின்று, தொழுகைக்குள் நுழையும் முதல் தக்பீர், ''தக்பீர் தஹ்ரீமா'' எனப்படும். இத்துவக்க தக்பீரைக் கூறியவுடன் தொழுகைக்கு வெளியே செயலாற்றும் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற உலகச் செயல்பாடுகள் விலக்கப் பட்டதாகிவிடும். தொழுகை என்பது வணக்கங்களின் சிகரமாகும். அந்நேரம் தொழுபவர் தன் கவனம் முழுமையும் இயன்றவரை தொழுகையில் மட்டுமே செலுத்த வேண்டும். தொழுகையில் இஸ்லாம் கற்பிக்கும் முறைகளை முடிந்த அளவுக்குக் கடைப்பிடித்து உள்ளச்சத்துடன் தொழ வேண்டும்; மற்றவற்றை ஒதுக்கிவிட வேண்டும்.

'முடிந்த அளவுக்கு' என்பதில் தொழுகையின்போது எதிர்பாராது நாம் எதிர் கொள்ளும் தும்மல், இருமல் போன்ற உபாதைகளின்போது சளியை உமிழ்தல் / துடைத்துக் கொள்ளுதல் ஆகியவையும் மனிதருக்குத் தொல்லை தரும் ஊர்வன / பறப்பனவற்றை அப்புறப் படுத்தலும் தொழுகைக்குக் குறைவை ஏற்படுத்தா என்பதற்கு நபிவழியில் சான்றுகள் உள்ளன.

மேற்சொன்னவை அனைத்தும் தொழுகையில் நமது கவனம் சிதறுவதற்குக் காரணமாக இருந்தாலும் அவை அனைத்தும் நமது விருப்பத்துக்கு மாற்றமாக, நாம் எதிர்பாராமல் நடப்பவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்கள் கேள்வியில் கண்டவாறு தொழும்போது குர்ஆன் பிரதியைக் கையில் வைத்துக் கொண்டு ஓதும்போதும் ஒரு ஸ்டாண்டில் வைத்துப் பார்த்து ஓதும்போதும் அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்காக அடிக்கடி நமது கைகளைப் பயன் படுத்த வேண்டி வரும். அப்போதெல்லாம், "தொழுகையில் நிற்கும்போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் இடக்கையை நெஞ்சில் வைத்து அதற்குமேல் வலக்கையை வைத்திருப்பார்கள்" என்ற நபிவழிக்கு அடிக்கடி மாறு செய்ய வேண்டி வரும்.

[நபித்தோழர் வாஇல் இப்னு ஹுஜ்ரு (ரலி) அவர்களது ஆதாரப் பூர்வமான இந்த அறிவிப்பை இமாம் இப்னு ஹுஸைமா, பஸ்ஸார் ஆகிய இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். நபித்தோழர் ஹல்புத் தாஇ (ரலி) அவர்களின் ஆதாரப் பூர்வமான அறிவிப்பை இமாம் அஹ்மது அவர்கள் தங்களது முஸ்னதில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வனைத்தையும் புகாரீ ஹதீஸ் எண் 698க்கு விரிவுரையாக ஃபத்ஹுல் பாரீயில் இமாம் அஸ்கலானீ அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார்கள்.]

மேலும், கைகளிலோ ஸ்டாண்டிலோ குர் ஆன் பிரதிகளை வைத்துக் கொண்டு, அதில் பார்வையைச் செலுத்தி ஓதும்போது நமது கவனம் முழுவதும் காற்றடித்தால் குர்ஆனின் பக்கங்கள் மாறிவிடுமோ என்ற எண்ணத்திலும் அது கீழே விழுந்து விடாமல் இருப்பதிலும் குவிக்கப்படும். இதுவும் தொழுகையின் ஒழுங்குகளுக்கு மாற்றமானதாகும்.

"நல்லது, நன்மையானது" என்று நாமாக நினைத்துக் கொண்டு, வணக்க-வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத எதையும் புகுத்தி விடக் கூடாது. "நீண்ட குர்ஆன் வசனங்கள் மனப்பாடம் இல்லையென்றால் குர்ஆன் பிரதிகளைப் பார்த்துத்தான் ஓதியாக வேண்டும்" என்று இஸ்லாம் நம்மைக் கட்டாயப் படுத்தவே இல்லை. மேலும் நீண்ட குர்ஆன் வசனங்கள் ஓதித்தான் தொழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மாறாக, ஒரு இஷாத் தொழுகையில் நீண்ட அத்தியாயமான சூரத்துல் பகரா முழுவதையும் ஓதித் தொழ வைத்த முஆத் இபுனு ஜபல் (ரலி) அவர்களைப் பற்றி "தொழுகையை அளவுக்கதிகம் நீட்டுகிறார்" என்று புகார் சொல்லப் பட்டவேளை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களைக் கடிந்து கொண்டார்கள். மேலும், "அவ்வாறு நீட்ட வேண்டாம்; அஷ்ஷம்ஸு, அல்-லைல், அல்-அஃலா, ஆகிய அத்தியாயங்களை ஓதிப் போதுமாக்கிக் கொள்க" என்று அறிவுரை கூறினார்கள். [புகாரீ ஹதீஸ் எண் 660] எனும்போது, இஸ்லாத்தில் இல்லாத வழிகளை நாமாக ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் நமக்கு நாமே தொல்லைகளைச் சுமக்க வேண்டுவதில்லை.

"மார்க்கம் எளிமையானது; அதை (உங்களுக்கு நீங்களே) கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்" [புகாரீ ஹதீஸ் எண் 38] என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி, தொழும்போது குர்ஆன் பிரதிகளைப் பார்த்து ஓதுவதற்குக் கட்டாயப் படுத்தும் இஸ்லாமிய வழிகாட்டல் ஏதுமில்லாததால் அதைத் தவிர்த்துக் கொண்டு, எளிமையான இஸ்லாத்தைக் கடினமாக்காமல் நடைமுறைப் படுத்துவதே சரியான நபிவழியாகும்.

முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!
satyamargam.com

0 comments:

Post a Comment