கேள்வி: பெண்ணுக்குத் தெரியாத மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளைக்குத் தெரியாத பெண்ணுக்கும்; இடையே மணமுடித்து வைக்கின்றனர். வாழ வேண்டியது நாங்களா? மணமுடித்து வைப்பவர்களா? இருவரையும் பழக விட்டு ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு பிறகு ஏன் திருமணம் நிச்சயிக்கப் படக்கூடாது?
பதில்: பெண்ணும் ஆணும் பார்த்துக் கொள்ளாமல் திருமணம் முடிப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
ஒருவர் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறியபோது ‘மணப்பெண்ணைப் பார்த்துவிட்டாயா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டனர். அவர் ‘இல்லை’ என்றார். ‘முதலில் பெண்ணைப் பார். இதுதான் உங்களிடையே அன்பை ஏற்படுத்தும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒருவரை மற்றவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. மார்க்கம் அறியாதவர்கள் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் இஸ்லாத்தின் நிலை இதுதான்.
அதுபோல் திருமணம் செய்து வைக்கும் பொருப்பாளர் பெண்ணின் பரிபூரண சம்மதத்தை பெறாமல் திருமணம் நடத்தி வைக்க முடியாது. இவ்வாறு நடத்தி வைக்கப்பட்டால் அதை ரத்து செய்யும் அதிகாரம் தலைவருக்கு உண்டு.
தனக்கு விருப்பமில்லாத ஒருவருக்கு தன்னை தன் தந்தை மணமுடித்து வைத்துவிட்டதாக ஒரு பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டார். இத் திருமணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரத்து செய்வதாகக் கூறினார்கள். பெண்களுக்கு மணவாளனை தேர்வு செய்வதில் உள்ள உரிமையை வெளிப்படுத்தவே இவ்வாறு கூறினேன். நான் அவருடனேயே வாழ்ந்து கொள்றேன் என்று அந்த பெண் கூறினார். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)
ஆணையும் பெண்ணையும் பழகவிட்டு ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்;லை. பழகும்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிட்டால் அடுத்த நிமிடமே ஆண்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். 90 சதவீதம் பேர்களின் நிலை இதுதான்.
அசம்பாவிதம் நடந்த பின் சம்பத்தப் பட்டவனையே அடைய வேண்டும் என்று விரும்புவது பெண்களின் இயல்பு. ஆண்களின் இயல்போ இதற்கு நேர் முரணானது.
எத்தனையோ பெண்கள் ஆண்களால் ஏமாற்றப்பட்டு வாழ்விழந்து நிற்கிறார்கள் என்பதை நாம் அன்றாடம் அறிந்து வருகிறோம். எனவேதான், பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்ள இஸ்லாம் கட்டளையிடுகிறது.
மேலும் பழகிப் புரிந்து கொண்டு விட்டதாகக் கூறிக்கொள்வோரின் திருமணம்தான் விவாகரத்தில் முடிகின்றது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்காத இனக்கவர்ச்சி மட்டுமே மேலோங்கி நிற்கின்ற பருவத்தில் யாரும் யரையும் சரியாக புரிந்து கொள்ள முடியாது. உடலைப்பற்றித்தான் புரிந்து கொள்ள முடியுமே தவிர உள்ளத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பெண்களைப் பாதுகாக்கவே இஸ்லாம் பழகிப் புரிந்து கொள்வதை அனுமதிக்க மறுக்கின்றது.
நன்றி: சொர்க்கத்தோழி
www.nidur.info
0 comments:
Post a Comment