நகைகளுக்குரிய ஸகாத்தை யார் கொடுப்பது?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உங்கள் தளத்தில் அனைத்து பகுதிகளும் சிறப்பாக உள்ளது. அதிலும் இறைமறை நபிமொழி அடிப்படையில் அழகாக பதில் தரும் ஐயமும் - தெளிவும் பகுதி அருமை.
எனது கேள்வி:
கணவர் அன்பளிப்பாக வாங்கிக்கொடுத்து விட்ட நகைகளுக்கு உரிய ஜக்காத்தை மனைவிதான் கொடுக்க வேண்டுமா? (நகைகள் மீதான உரிமை மனைவி மீது இருப்பதால்)
மின்னஞ்சல் வழியாக சகோதரி, திருமதி ஜஹ்ரா - Mrs.Jahra
தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...
ஒருவருக்குச் வழங்கும் அன்பளிப்பு என்பது, வழங்கியவுடன் முடிவுக்கு வந்து விடுகிறது, அன்பளிப்பு வழங்கியவருக்கு அப்பொருளின் மீது எவ்வித உரிமையும் இல்லை. அன்பளிப்பு வழங்கியப் பொருளைத் திரும்பப் பெறுவது மிக இழிவான செயலாக இஸ்லாம் கூறுகிறது.
தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தின் குடும்ப முறையில் ஒரு கணவன், தன் மனைவிக்கு அளிக்கும் எப்பொருளும் அது அவளின் கணவனுக்கு உரியதாகவேக் கருதப்படுவது வழக்கத்தில் உள்ளது. இது கணவன்-மனைவியரிடையே மட்டுமில்லை வீடு, நிலம், நகைகள் எனக் குடும்பத்துப் பெண்களுக்கென்று சொத்துக்கள் கொடுத்தாலும் அந்தச் சொத்துக்களின் மீது பெரும்பாலும் அக்குடும்பத்து ஆண்களின் ஆதிக்கம் இருக்கும். இது பரவலாக எல்லாச் சமூகத்தினரிடமும் உள்ள நடைமுறையாக இருந்து வருவதை வருத்தத்துடன் ஒப்புக்கொண்டேயாக வேண்டும், இந்த நடைமுறை மாற வேண்டும்.
அன்பளிப்பாகக் கொடுத்தப் பொருள், அன்பளிப்பைப் பெற்றவருக்கே சொந்தமாகும். பொருளுக்கான முழு உரிமையும் அவருக்குரியது. தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி, கணவன், மனைவி என எவர் அன்புளிப்பு வழங்கினாலும் அது வழங்கப்பட்டவருக்கே உரியதாகும்.
ஒரு கணவன், தன் மனைவிக்கு அன்பளிப்பாக வழங்கிய நகைகள் மனைவிக்குரியன. அந்நகைகளுக்கான ஸகாத்தை மனைவியே கொடுக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை! ஆனாலும் ஒரு பெண்ணுக்குச் சொந்தமான நகைகளுக்கு அந்தப் பெண்தான் ஸகாத் கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழக் காரணிகள், பொதுவாக நம் சமுதாயப் பெண்கள் பொருளீட்டுவதில் ஈடுபடுவதில்லை என்பதாலும் குடும்பத்தை நிர்வகிக்கும் மனைவியின் முழுப்பராமரிப்பை கணவன் மீது இஸ்லாம் சுமத்தியுள்ளதாலும் தமக்குச் சொந்தமான நகைகளுக்கும் கணவரே ஸகாத் வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இதற்கான தீர்வை நபிவழிச் செய்தி வழியே அணுகுவோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''பெண்களே! உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் சென்று 'நீங்களோ கையில் காசில்லாதவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெண்களாகிய) எங்களைத் தர்மம் செய்யுமாறு பணித்தார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (வறுமையில் வாழும்) உங்களுக்கே அதை நான் வழங்கலாமா எனக் கேளுங்கள். அதுவே எனக்குப் போதுமாகும் என்றால் (நான் உங்களுக்கே வழங்கி விடுவேன்) இல்லை (கணவனுக்கு மனைவி வழங்குவது தர்மமாகக் கருதப்படாது) என்றால் அதை நான் பிறருக்குக் கொடுத்து விடுவேன்' என்று கூறினேன்.
அப்போது (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் '' நீயே அவர்களிடம் சென்று கேள்'' என்று கூறி விட்டார். எனவே நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலில் (ஏற்கனவே) ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது.
பிலால் (ரலி) அவர்கள் எங்களை நோக்கி வந்தபோது, ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இரு பெண்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு, தம் கணவன்மார்களுக்கும் தமது அரவணைப்பில் வளரும் அநாதைக் குழந்தைகளுக்கும் தம்மீது கடமையான தர்மத்தை வழங்கலாமா என வினவுகின்றார்கள் என்று கேளுங்கள். ஆனால் நாங்கள் யார் என்று அவர்களிடம் சொல்ல வேண்டாம்'' என்று நாங்கள் கூறினோம். பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவ்விருவரும் யாவர்?'' என்று பிலாலிடம் கேட்டார்கள். அதற்கு ''ஓர் அன்சாரிப் பெண்ணும், ஸைனபும்'' என்று பிலால் பதிலளித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''எந்த ஸைனப்?'' என்று கேட்டார்கள். ''அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் துணைவியார்'' என்று பிலால் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவ்விருவருக்கும் இரு நன்மைகள் உண்டு, ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது, மற்றொன்று தர்மத்திற்குரியது'' என்று கூறினார்கள். (புகாரி, 1466. முஸ்லிம், 1824)
பெண்களுக்குரிய நகைகளுக்குப் பெண்களே ஸகாத் வழங்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட நபிமொழி சான்றாக உள்ளது. ஸகாத் எனும் கடமையான தர்மத்தை யாருக்கு வழங்குவது என்பதை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டிய நபித்தோழியர், தமது மார்க்கத் தீர்வை நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள். இறைவன் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.
''நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்'' (திருமறை, 066:006)
(இறைவன் மிக்க அறிந்தவன்)
satyamrgam.com
0 comments:
Post a Comment