பெண்கள் தனிமையில் காரோட்டலாமா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது கீழ்கண்ட கேள்விக்கு சத்தியமார்க்கம்.காம் மூலம் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு பெண் தனியாக கார் ஓட்டிக் கொண்டு செல்ல இஸ்லாம் அனுமதிக்கிறதா? (மின்னஞ்சல் வழியாக சகோதரி, ஜியா சிதாரா)
தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...
அடிப்படை மனித உரிமைகளைப் பொறுத்தவரை இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுபோல் அடிப்படைக் கொள்கையிலும் ஆணும், பெண்ணும் சம உரிமை பெற்றுள்ளனர். அதாவது, பெரும்பாலான விஷயங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சுதந்திரம் உள்ளது.
மாதவிலக்கு, பிரசவம், மற்றும் குழந்தைக்குப் பாலூட்டும் காலங்களில் பெண்ணுக்கு இபாதத் - வணக்க வழிபாடுகளில் இஸ்லாம் சலுகைகள் வழங்கியுள்ளது. மற்றபடி,
''ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்'' (அல்குர்ஆன் 016:097).
''ஒவ்வொரு மனிதனும் தான் செய்தவற்றுக்குப் பிணையாக்கப்பட்டுள்ளான்'' (அல்குர்ஆன் 074:038).
இன்னும், ''ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார்'' என்ற கருத்தைத் திருமறையின் பல வசனங்கள் உரைக்கின்றன. நற்செயல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருப்பது போல், தற்பெருமை, அகம்பாவம், தீய நடத்தைகள் போன்ற குணங்களும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே கருதப்படும்.
வாகனம் ஓட்டுவது
வாகனம் செலுத்துவதில் ஓர் ஆணுக்கு உரிமையுள்ளது போல, ஒரு பெண்ணுக்கும் வாகனத்தை ஓட்டிச் செல்லும் உரிமையுள்ளது. வாகனம் ஓட்டுவதில் ஆண்களுக்கு அனுமதியை வழங்கி, பெண்களுக்கு அனுமதியை மறுப்பதற்கு இஸ்லாமிய அடிப்படையில் எந்த ஆதாரமுமில்லை. உலகக் காரியங்களில் தனக்குத் தேவையான விஷயங்களில் ஆண் இயங்குவதுபோல் பெண்ணும் இயங்கிக்கொள்ள சம உரிமை படைத்தவள்.
சர்க்கரை நோயாளி ஒருவர், தன் மனைவியுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு நெடும்பயணத்தில் இருந்தார். பயணத்தில் அவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிப்போய் வாகனத்தை ஓட்டுவதில் நிதானமிழந்தார். ஏறக்குறைய ஒரு விபத்து நிகழவிருந்து, அல்லாஹ்வின் உதவியால் அது தவிர்க்கப் பட்டது. உடனே அவரின் மனைவி வாகனத்தைக் கட்டுப்படுத்தி ஓரங்கட்டி, தன் கணவரை ஓட்டுனர் இருக்கையிலிருந்து மாற்றி, வாகனத்தை விரைவாக ஓட்டிச் சென்று அருகிலிருந்த ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் நிறுத்தி, முதலுதவி செய்து, அல்லாஹ்வின் அருளால் தன் கணவரைக் காப்பாற்றினார். "பெண்கள் கார் ஓட்டக் கூடாது" என்ற தடையை விதிப் படுத்தி வைத்துள்ள சவூதி அரேபியாவில், கடந்த 23 மார்ச் 2005இல், ரியாத்-தாயிஃப் நெடுஞ்சாலையில் இந்நிகழ்வு நடந்தது.
இதுபோன்ற அவசர வேலைகள், கணவரால் இயலாதபோது பிள்ளைகளைப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்வது, திரும்ப அழைத்து வருவது போன்ற கட்டாய வேளைகளில் பெண்கள் வாகனம் ஓட்டத் தெரிந்திருப்பது எவ்வளவு நன்மை பயக்கத்தக்கது என்பதற்குத் தனி விளக்கம் தேவையில்லை.
வாகனத்தில் பயணிப்பது
"(மஹ்ரமல்லாத) ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் அவர்களோடு மூன்றாமவனாகச் சேர்ந்து கொள்வான்" என்ற நபிமொழிக்கு மாற்றமாக, மஹ்ரமல்லாத ஓட்டுனரைச் சம்பளத்திற்கு அமர்த்தி, அவருடன் தனிமையில் பயணம் செய்யும் முஸ்லிம் செல்வச் சீமாட்டிகளை அனுமதிப்பதும் பெண்கள் தனியாக வாகனம் ஓட்டிச் செல்வதற்கு அனுமதி மறுப்பதும் ஓரிரு முஸ்லிம் நாடுகளில் வழக்கிலுள்ள விசித்திரங்களேயன்றி அது, இஸ்லாத்தின் மறுதலிப்பன்று. தந்தை / கணவன் போன்ற பொறுப்பாளர்களின் அனுமதியோடு ஒரு முஸ்லிம் பெண் தனியாக வாகனத்தில் பயணிப்பதற்கு இஸ்லாத்தில் எவ்விதத் தடையுமில்லை. ஆனால், கால வரையறையுண்டு. "உரிய துணை (மஹ்ரம்) இன்றி ஒரு பெண், ஒரு பகல் ஓரிரவுக்குக் கூடுதலாகப் பயணிக்க வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் வரையறை செய்திருக்கிறார்கள் (திர்மிதீ 1089, புகாரி 1088, முஸ்லிம் 2608) என்பதைக் கருத்தில் கொண்டால் போதும்.
தனிமை
''தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கின்ற சிரமங்களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்ய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 2998).
இது ஆண், பெண் என இரு பாலருக்கும் பொதுவான அறிவிப்பு. இரவில் தனியாகப் பயணம் செய்வதில் கொலை, கொள்ளை போன்ற அபாயங்களைச் சந்திக்கவும், இருட்டு போன்ற சிரமங்களையும் மேற்கொள்ளவும் நேரும். எனவே தனிமைப் பயணம் சிரமங்கள் அடங்கிய ஆபத்தானது என்பதை மேற்கண்ட அறிவிப்பு உணர்த்துகின்றது.
அதுவே தனிமையில் செல்லும் பெண்ணென்றால் ஒரு படி மேலே, கயவர்கள் அவளின் பெண்மையை சூறையாடும் ஆபத்திற்கான சாத்தியம் உண்டு. எனவே, உலக வாழ்க்கையில் பெண்கள் சுதந்திரமாக இயங்குவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஒரு பெண் தனியாக வாகனத்தை ஓட்டிச் செல்லலாம். அந்தத் தனிமை தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதை அந்தப் பெண் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தீமையைத் தாமாகத் தேடிக்கொள்ளும் தன்மை, பெண்கள் தனிமையை ஏற்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இருக்கிறது. மற்றபடி ஆண்களுக்கு நிகரான பெண்களின் சுதந்திரத்தில் இஸ்லாம் எவ்வித குறைபாடும் வைத்துவிடவில்லை.
பெண்களின் மீதான தனிப்பட்ட அக்கறையால் அபாயத்தைச் சந்திக்கும் அளவுக்கான தனிமையைத் தவிர்த்துக்கொள்ளும்படி இஸ்லாம் அறிவுரை கூறுகிறது.
(இறைவன் மிக்க அறிந்தவன்).
satyamargam.com
0 comments:
Post a Comment