தற்கொலையாளிக்கு ஜனாஸாத் தொழுகை உண்டா?

, , No Comments
கேள்வி: ''நபிகளாரின் காலத்தில் ஸஹாபாக்கள் தொழுதிருக்கின்றார்கள்'' எனக் கூறி தற்கொலையாளிக்கு தொழவைக்க முடியுமென வெளிநாட்டில் படித்து முடித்த ஆலிம் சொல்கிறார், இது சரியா?
பதில்: தற்கொலையாளிக்கு ஜனாஸாத் தொழுகை தொழ வைக்க முடியாது. இதனை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

''ஒரு மனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ''அவர் இறந்து விட்டார்'' என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள்.

''நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்'' என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''அவர் இறக்கவில்லை'' என்று சொன்னார்கள்.
பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ''அவர் இறந்து விட்டார்'' என்று தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

''அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மனிதர் ''அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்.'' என்றார்.

''நீ பார்த்தாயா?'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க அவர் ஆம் என்றார். ''அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்க மாட்டேன்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா ரலியல்லாஹு அன்ஹு நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1779 அபூதாவூத் 3185)
மேற்குறித்த ஹதீதிலிருந்து தற்கொலை செய்தவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடாத்தவில்லை என்பது தெளிவாகின்றது. அத்தோடு ''நான் தொழ வைக்கவும் மாட்டேன்'' என்று வேறு கூறுகின்றார்கள். மார்க்கத்தை மக்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப வளைக்கும் சில உலமாக்கள் தெளிவான இந்த சட்டத்திற்கு மாற்றமாக நடந்து கொள்கின்றார்கள்.

''மார்க்க சட்டங்களை விளக்குகின்றோம்'' எனும் பெயரில் நபிகளார் மீதும் அவர்களது கண்னியமான தோழர்கள் மீதும் வீண் அபாண்டங்களை கூறுகின்றார்கள். ''நபிகளார் காலத்தில் தற்கொலையாளிக்கு ஸஹாபாக்கள் தொழுகை நடாத்தியதாகவோ அல்லது நபிகளார்தான் தொழுகை நடத்தாமல் மற்றவர்களை தொழுமாறு பணித்ததாகவோ ஹதீத் கிரந்தங்களில் எவ்வித ஆதாரங்களையும் காண முடியவில்லை.
ஒரு மார்க்க அறிஞர் அவர் வெளிநாட்டில் படித்து முடித்தவர் என்பதால் அவர் சொல்லும் ஃபத்வாக்கள் அனைத்தும் சரி என்று ஆகிவிடாது. மாறாக அவர் எங்கு படித்திருந்தாலும் பரவாயில்லை சொல்லும் சட்டம் அல்குர்ஆனிலிருந்தும் ஆதார பூர்வமான ஹதீஸ்களிலிருந்தும் மாத்திரம் முன்வைக்கப் பட்டாலே அதை முஸ்லிம்கள் அங்கீகரிக்க வேண்டும்.

ஒருவரின் பட்டம் பதவிகள் சத்தியத்தை தீர்மானிப்பவையல்ல. வெளிநாடுகளில் படித்து முடித்த எத்தனையோ மார்க்க அறிஞர்கள் ''தெள்ளத் தெளிவாக ஹராமாக்கப்பட்ட வரதட்சனையை வாங்க வில்லையா?'' சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகளார் காலத்தில் தற்கொலையாளிக்கு நபித்தோழர்கள் தொழுகை நடத்தினார்கள் என்பது அப்பட்டமான பொய்யாகும். கொஞ்சம் கூட அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் தான் அந்த மௌலவி இப்படியொரு பொய்யை கூறியிருக்க வேண்டும்.

இவ்வாறான தவறான ஃபத்வாக்களைச் சொல்லும் ஆலிம்கள் இது தொடர்பில் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஹதீஸ்களை ஒரு முறை பரிசீலித்து விட்டு தீர்ப்புக்களைச் சொன்னால் முஸ்லிம் சமூகத்திற்கு அது ஆரோக்கியமாக இருக்கும்.

சட்டங்களை அவர்கள் வெளியிடும்போது ஆதாரங்களை அவற்றுக்கு சமர்ப்பிக்கின்றார்களா? என கூர்ந்து கவனியுங்கள்.

''Jazaakallaahu khairan'' dharulathar.com

0 comments:

Post a Comment