ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பிறந்தநாள், திருமணநாள் போன்ற வைபவங்களை வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் எளிமையாகக் கொண்டாடி மகிழ இஸ்லாம் அனுமதிக்கிறதா? இத்தகைய வைபவங்களை மனதில் கொண்டு உணவு சமைத்து குடும்பத்தினர் ஒன்று கூடி உண்டு மகிழ்வது மட்டுமே எங்கள் நிய்யத் ஆக உள்ளது. குர் ஆன் ஹதீஸ் ஒளியில் தெளிவுறுத்தவும். நன்றி!
ஜஸாக்கல்லாஹ் கைரன்.
மின்னஞ்சல் வழியாக சகோதரி ரஹ்மத்.
தெளிவு:
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...
பிறந்த நாள், திருமண நாள் வைபவங்களைச் சிறப்பித்துக் கொண்டாடுவது ஒருவரைப் பார்த்து மற்றவர் காப்பியடித்து, வழக்கமாக்கிக் கொண்டாதாகும். பிறந்த நாள், திருமண நாள் மட்டுமல்ல இன்னும் மே தினம், காதலர் தினம், மகளிர் தினம் என உலகில் கொண்டாடப்படும் பல தினங்கள் மனிதனாக ஏற்படுத்திக் கொண்டவை! இதற்கும் குர்ஆன், சுன்னாவுக்கும் எந்த ஒட்டுமில்லை! - அதாவது அவை இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத கொண்டாட்டங்கள்.
ஒரு குழந்தை பிறந்து விட்டதால் அது பிறந்த நாளுக்கு எந்தச் சிறப்பும் இல்லை! அந்த நாளில் பிறந்ததால் அக்குழந்தைக்கும் எவ்வித சிறப்பும் ஏற்பட்டு விடுவதில்லை! இவ்வகையில் மண நாளுக்கும் எச்சிறப்பும் இல்லை! இவை காலச் சுழற்சியில், காலத்தின் ஒரு நேரத்தில் நிகழும் சம்பவமாகும். ஒவ்வொரு வருடமும் இந்நாட்களை வைபவங்களாகக் கொண்டாடுவதற்கு மார்க்க அங்கீகாரம் எதுவுமில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
படிப்பினை
''எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் 'இப்ராஹீம்' என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டார்கள்.'' அறிவிப்பாளர் அபூமூஸா (ரலி) (நூல்கள்: புகாரி, 5467. முஸ்லிம் 4342 )
குழந்தை பிறந்தவுடன் அதன் வாயில் இனிப்பை ஊட்டவேண்டும் என்ற கருத்தில் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரி 5469. முஸ்லிம் 4343, 4344 இடம்பெற்றுள்ளன. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி: புகாரி 5470. முஸ்லிம் 4340.
''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பிறந்த) குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது அவற்றுக்காக (பரகத்) அருள்வளம் வேண்டி பிரார்த்திப்பார்கள். பேரீச்சம் பழத்தை மென்று அதைக் குழந்தையின் வாயில் தடவுவார்கள்.'' அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்: முஸ்லிம் 4345).
குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்காக அருள்வளம் வேண்டிப் பிராத்திப்பதும் இனிப்பு ஊட்டுவதும் (பின்னர் அகீகா கொடுப்பதும்) இவை நபிவழியாகும். வருடா வருடம் பிறந்த நாளை குறிப்பிட்டு அதைச் சிறப்பிக்கவோ அந்நாட்களைக் கொண்டாடவோ நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை. திருமணம் முடிந்து வலீமா - விருந்து அதுவும் ஒருமுறை கொடுப்பதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன. மண நாளையும் வருடா வருடம் வைபவமாகக் கொண்டாட மார்க்கத்தில் எந்தச் சான்றுமில்லை!
பிறந்த நாள், திருமண நாள் வைபவங்களை ஊரறியக் கொண்டாடவும் அல்லது வீட்டிற்குள் மட்டும் கொண்டாடவும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மனிதர்களால் உண்டாக்கப்பட்ட இந்த வைபவங்களை நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்களோ அது போன்று உங்களிடமிருந்து உங்கள் சந்ததிகளும் கற்று, நாளை இவ்வைபவங்களை வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். அதனால் இதை நீங்களும் தவிர்த்து உங்கள் சந்ததியினரையும் தவிர்க்கும்படித் தூண்டுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.
மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே என்று பெற்றோருக்குக் கூட "ஒரு நாள்" குறித்து அன்பை பரிமாறிக் கொள்வதன் மூலம் சமூக சீர்கேட்டை விளைவிக்கும் மேலை நாட்டு மோகம் நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு அந்நாளில் அன்பை (!) பரிமாறிவிட்டு மற்ற தினங்களில் மறந்து போகும் ஃபார்மாலிட்டி சித்தாந்தத்தை இஸ்லாம் ஏற்பதில்லை. வருடா வருடம் பிறந்த நாள், திருமண நாள் விருந்து என்று இல்லாமல், உறவினர்கள் அனைவரும் பங்கு கொள்ளும் 'கெட் டு கெதர்' போன்று பொதுவான விருந்து என்பது நமக்கு வசதிப்படும் எந்த நாளிலும் கொடுக்கலாம்.
(இறைவன் மிக்க அறிந்தவன்)
satyamargam.com
0 comments:
Post a Comment