மனிதன் பொதுவாகவே ஒரு கஷ்டமான காரியத்தை முடித்த மற்றொருவனைப் பார்த்து இந்த வேலையை இவன் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்திருக்கிறான். அதனால் அவனுக்குப் பலன் அதிகம். அவன் நிச்சயமாக உழைப்பாளிதான். அவன் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் நடந்திருக்கிறான். வாகனம் இருந்தும் அவன் நன்மை நாடி நடந்துள்ளான். நடந்து செய்யும் இவ்வமலில் தான் கஷ்டத்தை உணரவேண்டும் என்பதற்காக நோன்பில்லா விட்டாலும் உண்ணாமலும், நீரருந்தாமலும் பசியுடன் நடந்துள்ளான். நிழலில் நடக்காது வெய்யிலில் தலைதிறந்து நடந்துள்ளான். அவனது பக்தி எங்களுக்கு வருமா!? ஆச்சரியத்தோடு கேள்வி கேட்கும் மக்கள் கூட்டத்தை இந்த 21ம் நூற்றாண்டிலேயும் பார்க்கிறோம்.
இதுமட்டுமல்ல, இன்னும் பலர் அதிகமாகக் கஷ்டப்பட்ட அளவிற்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்து அல்லாஹ் எங்களுக்கு அளித்திருக்கக் கூடிய சலுகைகளைக் கூட ஒதுக்கி விடுபவர்களைப் பார்க்கிறோம். வாகன வசதியிருக்கும்போது வேண்டுமென்றே நடந்து செல்வது. நடந்து செல்வதற்கும் தூர வழியைத் தெரிவு செய்வது. தங்குமிட வசதிகளில் கஷ்டமானதைத் தெரிவு செய்வது. இப்படி எந்தவொரு செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் கஷ்டமானதையே செய்ய முன்வருவது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு காரியத்தைச் செய்யும் போது அந்தக் காரியம் எளிதான முறையில் செய்வதற்கு முடியுமானதாக இருந்தால் அந்த வழியையே தெரிவு செய்தார்கள். ஹஜ்ஜின் போது அவர்கள் ஒட்டகை மீதே பயணம் செய்திருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுவதைப் பின்பற்றுபவர்கள் வழிதவறி விட மாட்டார்கள்:
நீர் கஷ்டப்படுவதற்காக குர்ஆனை உம்மீது நாம் இறக்கவில்லை. (அல்-குர்ஆன் 20:1)
அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான், அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை. (அல்-குர்ஆன் 2:185 வசனத்தின் ஒரு பகுதி)
இந்தக் குர்ஆன் வசனங்களுடன் நாம் கவனத்திற்கெடுக்க வேண்டிய ஒரு ஹதீஸைப் பார்ப்போம்:
ஒரு முதியவர் தமது இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். ''(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!'' என்று மக்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ''இவர் தம்மை இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!'' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு. நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
நம்மைப் படைத்து நமது வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் நமக்கு வசமாக்கித் தந்திருக்கிறான். அப்படி வசமாக்கித் தந்திருப்பது ஏன் என்ற சிந்தனை கூட இல்லாமல் இன்று நாம் நடந்து கொண்டிருக்கிறோம்.
ஹஜ்ஜுடைய காலம் நெருங்கி வரும்போது நமது சமூகத்திலே இப்போதெல்லாம் விளம்பரங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகின்றன.
முன்பெல்லாம் ரமளான் நெருங்கும்போது ரமளான் கலண்டர்கள் வந்து விடும். இப்போதோ அதையும் முந்திக் கொண்டு ஹஜ் விளம்பரங்கள். குளிரூட்டப்பட்ட வாகன வசதி, கட்டில்களோடு குளிரூட்டப்பட்ட அறை வசதி இப்படி வசதிகள் எல்லாம் விளம்பரத்திலே இருக்கும்.
ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் ஜித்தா விமான நிலையத்தை அடைந்த பின் அவர்களுக்கு 'பயான்' நிகழ்ச்சி நடைபெறும்.
அதிலே விசேடமாகச் சொல்லப்படுவது அந்த விளம்பரத்திலிருந்ததற்கு நேர்மாற்றமான செய்திகள்தான். கஷ்டப்பட்ட அளவிற்கு நன்மைகள் கிடைக்கும் என்பதுதான் அதன் சாரமாகவிருக்கும். குறைபாடுகளைப் பற்றிப் பேசக்கூடாது. அவற்றைப் பற்றித் தர்க்கிக்கக் கூடாது இப்படி அறிவுரைகள்.
இவற்றைக் கேட்கக் கூடியவர்களிலே சிலர் அதை அப்படியே நம்பி தாம் தங்கியிருக்கக் கூடிய இடம்; எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதை அப்படியே ஏற்று அந்தத் தூரத்தை நடந்தே செல்வார்கள். கொழுத்த இலாபத்தை நோக்காகக் கொண்ட முகவர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
எந்த எந்த வசதிகளைப் பொருந்திக் கொண்டு முகவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்பவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டார்களோ அந்தந்த வசதிகளைக் கட்டாயமாகச் செய்து கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். ஏனென்றால், அதுதான் நடந்து முடிந்த வியாபாரத்தின் நிபந்தனை. அப்படியல்லாது, அவர்கள் புதுப் போதனைகள் செய்து, முடிந்து விட்ட வியாபார ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவார்களானால் அவர்கள் இரண்டு பிழைகளைச் செய்கிறார்கள்:
1. 'பக்தி'வசப்பட்டுள்ளவர்களின் மனோ நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு மார்க்கம் என்ற போர்வையில் உபதேசம் செய்வதன் மூலம் மார்க்கத்தைச் சொற்பக் கிரயத்திற்கு விற்கிறார்கள். (தமது குறைபாடுகளை சுட்டிக்காட்டி புதிய வியாபார ஒப்பந்தத்திற்குப் பதிலாக கஷ்டத்தினால் ஏற்படக் கூடிய நஷ்டம் வாங்கியவருக்குத் திணிக்கப்படுகிறது.)
2. வியாபார ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை விற்பவர் மீறுகிறார்.
இந்த வியாபாரத்தினால் கிடைக்கும் இலாபம் ஹலாலானதா அல்லது ஹராமானதா என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு சாதாரண முஸ்லிமுக்கு இருக்கக் கூடிய அறிவு போதுமானது.
இனி தலைப்புக்கு வருவோம்.
உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தீர்ப்புப் பெறும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அவர் (சிறிது தூரம்) நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்,'' என்றார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)
இந்த சம்பவங்களிலிருந்து முஸ்லிம்கள் படிக்க வேண்டிய பாடம் என்ன என்பது மிகவும் தெளிவானது. அல்லாஹ் தேவையற்றவன். அவனுடைய திருப்தியைப் பெறுவதற்காக கஷ்டப்படக் கூடிய நேர்ச்சைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாம் மனிதனுக்கு எளிமையான வாழ்க்கையையும் இலகுவான நடைமுறைகளையும் வகுத்துத் தந்திருக்கிறது. இஸ்லாம் நடுநிலைமையான அமைப்பில் இருந்து கொண்டுதான் நற்செயல்களைக் கூடச் செய்ய வேண்டும் என்பதை எப்போதும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
தொழுகை என்ற கடமையில் அல்லாஹ் தந்திருக்கக் கூடிய சலுகைகளைக் கவனிக்கும் போது கஷ்டப்பட்டுத்தான் நல்லமல்களைச் செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை.
வுளுவுக்குப் பதிலாக தயம்மும் செய்வது.
வுளுவின் போது காலுறைக்கு மேல் மஸ்ஹு செய்வது.
பெருமழையின் போது பள்ளியில் மஃரிப் தொழுகையுடன் இஷாத் தொழுகையையும் சேர்த்துத் தொழுவது.
பெருமழையின் போது வீடுகளிலேயே தொழுது கொள்ளும்படி அறிவித்ததன் மூலம் அனுமதியளித்தது.
பிரயாணத்தின் போது சேர்த்து, சுருக்கித் தொழுவதற்குள்ள அனுமதி.
இப்படி எத்தனையோ சலுகைகளை இஸ்லாம் எந்தக் கடமையை எடுத்துக் கொண்டாலும் அக்கடமையில் தந்திருக்கிறது. இவற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்று சிந்தித்தால் தெளிவு வரும்.
இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பக்தி என்ற போர்வையில் பெரியார்கள் என்ற ஊர், பெயர் தெரியாத சந்நியாசிகளைப் பற்றிய கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கஷ்டப்பட்ட அளவிற்கு பலன் உண்டு என்பதைப் போதிக்கத்தான் இந்தக் கதைகள். அப்படிப்பட்ட போதனைகள்தான் மற்றவனைச் சுரண்டி வாழ்வதற்கு பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கதைகளுக்கும் நம்மைச் சூழவுள்ள மாற்றுமதத்தவர்களிடையே உள்ள அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் வித்தியாசம் இல்லை.
அவர்கள் ஒரு நம்பிக்கையைத் தம் கடவுளோடு சம்பந்தப்படுத்திக் கூறும் போது, முஸ்லிம்களிலும் பலர் அதற்குப் போட்டியாகக் கதைகளை எழுதிப் பள்ளிபள்ளியாக விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கஷ்டப்பட்டால்தான் இறைவனை நெருங்க முடியும் என்பதுதான் அவர்களின் சித்தாந்தம். அதனால்தான், அவர்களின் கதைப்புத்தகங்களிலே:
ஒவ்வொரு நாளும் 1000 ரக்அத்கள் ஸுன்னத்தான தொழுகை தொழுத பெரியார்.
40 வருடங்கள் ஒரே வுளுவில் இஷாவையும் ஸுப்ஹையும் தொழுத பெரியார்.
தஸ்பீஹ் செய்யும் காலணியைக் கனவில் கண்ட பிரபல சூஃபி.
அல்லாஹ்வின் மீதிருந்த பேரின்பக் காதலில் மூழ்கி அறுபது வருடமாக அழுத பெரியார்.
எல்லா மாதங்களும் ரமளானே என்று வரித்த பெண் பெரியார்.
15 ஆண்டுகள் படுக்காத பெரியார்.
கப்ரில் தொழுத பெரியார்.
போன்ற பெரும் பெரும் கப்ஸாக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதைச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கதைகளை குர்ஆன், ஹதீஸைவிட மதிப்புக் கொடுத்துப் பின்பற்றுபவர்கள்தான் இன்று அதிகம்.
குர்ஆன், ஹதீஸை விட்டு விட்டுக் கொஞ்சக் காலம் மத்ஹபுகளைப் பின்பற்றினார்கள். இன்று மத்ஹபுகளோடு இந்த கப்ஸாக்களையும் சேர்த்து புதிய மத்ஹபொன்றை ஆரம்பித்துப் பள்ளி பள்ளியாகப் போதித்து அங்கேயே பள்ளி கொள்கிறார்கள்.
எல்லாவற்றையும் அல்லாஹ் பார்;த்துக் கொள்வான். முஸ்லிம் என்று சொல்பவன் தன்னைத் தானே வருத்திக் கொண்டு அவனை வணங்கிக் கொண்டிருக்க வேண்டும். எவ்வளவு கஷ்டப்பட முடியுமோ அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் அதிகமான நன்மை.
அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதில் எந்தத் தர்க்கமும் இல்லை. அவன் பார்த்துக் கொண்டிருப்பதற்கு மட்டுமுள்ளவனல்ல. கேள்வி கணக்குக் கேட்பதிலும் மிகவும் கண்டிப்பானவன். அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக உமதிரட்சகன், மனிதர்களுக்கு அவர்களின் அக்கிரமங்களுக்காக மன்னிப்பை உடையவன், (அவ்வாறே) நிச்சயமாக உமதிரட்சகன் தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன். (அல்-குர்ஆன் 13:6)
மார்க்கத்தில் அவன் எங்களுக்குக் கஷ்டத்தை வைக்கவில்லை. அவன் எங்களுக்குக் கூறுவதெல்லாம் அவன் ஆகுமாக்கியவற்றை ஏற்றுத் தடுத்தவற்றிலிருந்து விலகி நடக்கும்படிதான்.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் அவன் இட்டிருக்கும் கட்டளைதான்.
ஒரு விடயத்தில் நீங்கள் தர்க்கித்துக் கொண்டால் அவ்விடயத்தை அல்லாஹ்வின் பக்கமும் அவன் திருத்தூதரின் பக்கமும் திருப்புங்கள். (அல்-குர்ஆன் 4:59)
இப்படித் தெளிவான மார்க்கத்தை அல்லாஹ் தந்திருக்கும் போது இன்று பலர் மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பகுதியினரைக் குறை சொல்வதை விட பலர் தாமாகவே வழிகேட்டிலாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சரியான விளக்கமாகும்.
இன்று சந்தையில் வரக்கூடிய எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதை இயக்கும் விதத்தைத் தனது பெயரைக் கூட எழுதத் தெரியாதவர்களெல்லாம் படித்துக் கொள்கிறார்கள்.
மறுமையின் வெற்றியைத் தரக்கூடிய மார்க்கத்தை மட்டும் படிக்கவோ அதன் அறிவுரைகள் பற்றிச் சிந்திக்கவோ அவர்கள் முற்படுவதில்லை. காரணங்கள் இல்லாமலில்லை:
ஒன்று, ஏற்கனவே மௌலவிப் பட்டம் பெற்ற பலர், குர்ஆனை எல்லாருக்கும் விளங்க முடியாது என்று பிரச்சாரம் செய்வது.
இரண்டு, அப்படிப் பிரச்சாரம் செய்பவர்கள் மற்றவர்கள் குர்ஆனைப் படித்து விடக்கூடாது என்பதற்காக வியூகம் அமைத்து படிக்க முடியும் என்று சொல்பவர்களை பகிரங்கமாக மானபங்கப் படுத்தவும் தயாரான நிலையிலே இருந்து கொண்டிருப்பது.
மூன்று, அப்படியும் அவர்கள் குர்ஆனைப் படிக்க முற்படும் பட்சத்தில், அதற்காக மக்களை ஏவும் பட்சத்தில், அவர்களின் சொத்துக்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பயம் காட்டுவது.
நான்கு, இப்படிப்பட்ட இருட்டடி மஸ்தான் வேலை செய்யும் சிலர் இன்று சமூகத்திலே உலமாக்களாகவும், பள்ளி நிருவாகிகளாகவும் இருப்பதுதான் இன்று நமது சமூக அமைப்பின் இலட்சணமாகிக் கொண்டு வருவது.
இஸ்லாம் எளிமையானது. அதன் சட்டங்கள் அல்லாஹ்வினால் ஆக்கப்பட்டவை. அந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதற்கு மிகவும் இலகுவானவை. இதை முஸ்லிம்கள் மறந்து செயல்பட எத்தனிக்கக் கூடாது. அப்படியிருந்தால்தான் அவன் எங்களுக்கு நேர்வழியைக் காட்டுவான். அப்படியல்லாமல், அவனுடைய சட்டங்களில் இடைச்செருகல்களைப் புகுத்த நாம் முற்பட்டால் அவன் மிகவும் கோபக்காரன் மட்டுமல்ல, அவனுடைய அதிகார எல்லைக்குள் புகுந்தவர்களை அவன் சும்மா விடமாட்டான்.
இவற்றைக் கவனமாக, உன்னிப்பாக உணர்ந்து அவனுக்குக் கீழ்ப்படிவோமாக. அவன் கட்டளையிட்டபடி அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி மறுமையில் நமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வோமாக. அப்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அந்தப் பெருநெருப்பினாலான நரகிலிருந்து பாதுகாப்புப் பெற ஒரு காரணியாக அமையும்.
இந்த ஆக்கத்தின் கருத்துக்கள் சரியானதுதானா... உங்கள் கருத்தைப் பதியுங்கள்.
0 comments:
Post a Comment