, , No Comments


. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைக்க முடிவு செய்தபோது, தன் வசமுள்ள ஏட்டில், 'என்னுடைய கருணை என்னுடைய கோபத்தை மிகைத்துவிடும் (என்று) தன் மீது கடைமையாக்கி எழுதி தன் வசம் வைத்துக்கொண்டான்'. நூல்:புகாரி,முஸ்லிம்,நஸயீ,இப்னுமாஜா.

2. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய மகன் என்னைப் பொய்ப்பிக்கின்றான். ஆனால் என்னை பொய்ப்பிப்பதற்கு அவனுக்கு அதிகாரமில்லை. அவன் என்னை(தீய சொற்கள் கொண்டு) ஏசுகிறான். ஆனால் என்னை அவ்வாறு ஏசுவதற்கு அவனுக்கு அதிகாரமில்லை.

முதலில் உருவாக்கியது போல் மீண்டும் அல்லாஹ்வால் என்னை கன்டிப்பாக உருவாக்க முடியாது. (அதாவது நான் இறந்தப் பிறகு அல்லாஹ்வால் என்னை உயிர்ப்பிக்க முடியாது.) என்று சொல்லி என்னை பொய்ப்பிக்கின்றான். (ஆனால் அல்லாஹ்வாகிய) எனக்கு அவனை மீண்டும் உருவாக்குவது முதலில் அவனை உருவாக்கியதை விட எளிதானதே.

அல்லாஹ் தனக்கென ஒரு மகனை வைத்துள்ளான், என்று சொல்லி என்னை அவன் நிந்திக்கிறான். ஆனால் (அல்லாஹ்வாகிய) நான் தனித்தவன். யாருடைய தேவையுமற்றவன். நான்(யாரையும்) பெறவுமில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப் படவுமில்லை. மேலும் என்னுடன் (இனையாக) ஒப்பிடப்படக்கூடியவர் யாருமில்லை.' (நூல்: புகாரி, நஸயீ)
3. ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஹுதைபிய்யாவில் மழை பெய்திருந்த ஒரு இரவைத் தொடர்ந்து காலை சுபுஹு தொழுகையைத் தலைமையேற்று நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்தவுடன் மக்களை நோக்கி உங்களுடைய ரப்பு என்ன கூறியுள்ளான் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று வினவினார்கள்.

அதற்கு மக்கள், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மட்டுமே அதனை நன்கு அறிவார்கள் என்று பதிலுரைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் கூறியதாக சொன்னார்கள். 'இன்று காலை என்னுடைய அடியார்களில் ஒருவர் என் மீது நம்பிக்கை கொண்ட முஃமினாகவும், மற்றொருவர் என் மீPது நம்பிக்கை கொள்ளாத காஃபிராகவும் மாறியுள்ளார்கள்.

எவர், அல்லாஹ்வின் பொருட்டாலும் அவனது கருணையாலும் தமக்கு மழை இறக்கப்பட்டது என்று கூறினாரோ, அவர் (என் மீது நம்பிக்கையுள்ள)முஃமினாகவும், (குறிப்பிட்ட) நட்சத்திரத்தால் மழை பெய்தது என்பதை நிராகரித்தவராகவும் விளங்குகிறார். எவர் மழை பொழிவதற்கு இன்னின்ன நட்சத்திரங்களே காரணம் என்று கூறுகிறாரோ (அவர் என் மீது நம்பிக்கையற்ற) காஃபிராகவும், நட்சத்திரங்கள் மீது நம்பிக்கையுள்ளவராகவும் விளங்குகிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், முஅத்தா, நஸயீ)
4. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ் சொன்னான்: ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள்.(ஆனால்) நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன. என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன. (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.

5. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும்போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணைவைக்கும் விவத்தில்; ஒரு செயலைச் செய்தால்,(எனது உதவியின்றி) அவனுடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டு விடுகிறேன். (நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா)

6. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதன் முதலில் இறைவழியில் உயிர் துறந்த ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டுவந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்;கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்;?' என்று கேட்பான்.

அதற்கு அந்த மனிதர், 'நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரையில் போராடினேன்.' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய், வீரன் என்று கூறப்படுவதற்காகவே போரிட்டாய். அவ்வாறே மக்களாலும் பேசப்பட்டு விட்டது.' என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.

பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுத்து, குர்ஆனை ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு தான் அளித்த அருட்கொடைகளையெல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அவ்வருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், 'நான் வழங்கிய அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், 'நான் உனக்காக(இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை(மற்றவர்களுக்கும்)கற்றுக்கொடுத்து, குர்ஆனையும் உனக்காக ஓதிவந்தேன்.' என்று பதில் கூறுவார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய்சொல்கிறாய். அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய அறிவை கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களர்லம்) பேசப்பட்டு விட்டது.' என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி கட்டளையிடப்படும். அதன் பின்னர் செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவரிடம் அல்லாஹ் தான் வழங்கிய அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அவ்வருட்கொடைகள் தமக்கு கிடைத்ததாக ஒப்புக்கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் 'நான் வழங்கிய அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'. என்று கேட்பான்.

அதற்கு அந்த மனிதர் 'நீ எந்த வழிகளில் எல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் உனக்காக செலவு செய்யாமல் நான் விட்டதில்லை.' என்று பதில் கூறுவார்.

அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய். (வள்ளல் தனத்துடன்) வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும். என்பதற்குhகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது.' எனக் கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லுங்கள் என்று கட்டளையிடப்படும். (நூல்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

7. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
'மலை உச்சியில் நின்று, தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து பின்பு தொழுகின்ற இடையனை (ஆடு மேய்ப்பவனை)க் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.' அப்போது அல்லாஹ் கூறுகிறான்: 'என்னுடைய இந்த அடியானை பாருங்கள். அவன் தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து விட்டு, தொழுகிறான். அவன் என்னைப் பற்றி மிக அச்சஉணர்வு கொண்டவனாக விளங்குகிறான். என்னுடைய (இந்த) அடியானின் பாவங்களை நான் மன்னித்து, அவனை சுவர்கத்தினுள் நுழையச் செய்துவிட்டேன்.' (நூல்: நஸயீ, அஹ்மத், அபூதாவுத்)

8. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
திருக்குர்ஆனின் தாய் சூரா பாத்திஹாவை ஓதாமல் ஒருவன் நிறைவேற்றும் தொழுகையானது குறையுள்ளதாகும். (அத்தொழுகை) முழுமை பெறாது. இவ்வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை திரும்பத்திரும்ப சொன்னார்கள்.

ஒருவர் அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், 'நாங்கள் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுதால் கூடவா?.' என்று வினவினார்.

அதற்கு அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், பின்வருமாறு பதிலளித்தார்கள்: 'நீங்கள் உங்கள் மனதிற்குள் அதை ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் சொல்லியதாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன். 'நான் எனக்கும் என்னுடைய அடியானுக்கும் மத்தியில் தொழுகையை இரண்டு பாகங்களாக பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்கு உண்டு.

அடியான், அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். என்று ஓதியவுடன், அல்லாஹ், 'என் அடியான் என்னைப் புகழ்ந்துள்ளான்.' என்று சொல்கிறான்.

அடியான், அர்ரஹ்மானிர்ரஹீம்; என்று ஓதியதும், அல்லாஹ், 'என் அடியான் கண்ணியத்தை எடுத்துரைத்துள்ளான்.' என்று கூறுவான்.

அடியான், மாலிகி யவிமித்தீன் என்று ஓதியதும், அல்லாஹ், என் அடியான் என் மேன்மையை எடுத்துரைத்துள்ளான்.' என்று கூறுவான்.

அடியான், இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தயீன். என்று ஓதியதும், அல்லாஹ், 'இது எனக்கும், எனது அடியானுக்கும் இடையேயுள்ளதாகும். எனது அடியான் கேட்பதை நான் அவனுக்கு கொடுப்பேன்.' என்று கூறுவான்.

அடியான், இஹ்தி நஸ்ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம். கைரில் மக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன். என்று ஓதியதும், அல்லாஹ், 'இது என்னுடைய அடியானுக்கே (உரித்தானது) என்னுடைய அடியான் எதனைக் கேட்கிறானோ, அதனை அவன் பெறுவான்.' என்று பதிலுரைத்து முடிக்கிறான். (நூல்: முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா)

9. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில், அல்லாஹ்விடத்தில், அடியானின் கடமைகளில் முதன் முதலாக அவனுடைய தொழுகை பற்றியே விசாரிக்கப்படும். (தொழுகையை சரியாக நிறைவேற்றி) அவை செவ்வனே அமைந்திருந்தால், அடியான் வெற்றியும் ஜெயமும் பெறுவான். (தொழுகையை சரியாக நிறைவேற்றாது இருந்ததின் காரணமாக) அவைகளில் குறை காணப்பட்டால், அடியான் தோல்வியும், நஷ்டமும் அடைவான். அவனது கடமையான தொழுகையில் ஏதாவது குறையிருப்பின், கட்டாய தொழுகையிலுள்ள பழுதை நீக்கி, அதனை முழுமைபடுத்த, அடியான் உபரி தொழுகைகளை தொழுதுள்ளானா என்று பாருங்கள். என்று அல்லாஹ் கட்டளையிடுவான். பின்னர் (நோன்பு, ஜகாத் போன்ற) அனைத்துக் கடமைகளுக்கும் இதே முறையில் தீர்ப்பளிக்கப்படும். (நூல்: திர்மிதி)

10. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: 'நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். (நோன்பின் போது ஒரு மனிதன்) தனது மன இச்சை, உணவு, குடிப்பு ஆகியவற்றை எனக்காக விட்டு விடுகிறான். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும்;;. நோன்பு நோற்பவன் இரண்டுவித மகிழ்ச்சிக்குள்ளாகிறான். நோன்பைத் துறக்கும் வேளையில் ஒரு மகிழ்ச்சி. தனது ரப்பான அல்லாஹ்வைச் சந்திக்கும் நேரத்தில் ஒரு மகிழ்ச்சி. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் மணம். அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் மணத்தைவிடச் சிறந்ததாகும். (நூல்: முஸ்லிம், திர்மிதி)


11. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய மகனே! நீ (எனக்காக) செலவிடு. நான் உனக்காக செலவு செய்வேன். (நூல்: புகாரீ, முஸ்லிம்)
12. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

உங்களுக்கு முன் சென்றவர்களில் ஒரு மனிதர் விசாரிக்கப்பட்டார். அவர் மக்களுடன் (வணிகத்தில்) கலந்து பழகி வந்தார். அவர் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்ததால்;, வறுமை நிலையில் உள்ளவர்களிடமிருந்து (வர வேண்டிய கடன் தொகையை) விட்டு விடுமாறு தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவதை தவிர அவரிடம் நன்மை ஏதும் காணப்படவில்லை. (தாராளமாக நடந்துக் கொள்ளும்) அந்த விஷயத்தில்; உன்னை விட நான் அதிகத் தகுதியுடையவன். இவருடைய தவருகளை தள்ளுபடி செய்யுங்கள். என்று அல்லாஹ் கூறினான். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்) 13. அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தபோது, அவர்களிடம் இரு மனிதர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் வறுமையைப் பற்றியும், மற்றொருவர் (வழிப்பறி) கொள்ளைகள் பற்றியும் புகார் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்:

வழிப்பறிக் கொள்ளைகளைப் பொருத்தமட்டில் அது சில நாட்கள் வரைதான் நீடிக்கும். மிக விரைவில் காவலாளியின்றி மக்காவை நோக்கி ஒட்டகக்கூட்டங்கள் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். வறுமையை பொருத்த மட்டில் உங்களில் ஒருவர், தருடத்தை எடுத்துக்கொண்டு (ஊரெல்லாம்) சுற்றியும், அதனை பெற்றுக்கொள்வதற்கு ஒருவரும் கிடைக்காத காலத்திற்கு முன்னர் இறுதித் தீர்ப்பு நாள் வராது.

பின்னர். 'உங்களில் ஒரு மனிதர் கண்டிப்பாக அல்லாஹ்வின் முன் நிற்பார். அம்மனிதருக்கும் அல்லாஹ்விற்கும் இடையே எவ்வித திரையும் இருக்காது. மொழி பெயர்க்கும் உதவியாளரும் இருக்க மாட்டார். பின்பு அல்லாஹ், அம்மனிதரை பார்த்து நான் உனக்கு செல்வத்தை கொடுக்க வில்லையா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதர் ஆம் கொடுத்தாய் என்பார்.

பிறகு அல்லாஹ், நான் உன்னிடம் என்னுடைய தூதரை அனுப்பவில்லையா? என்று கேட்பான். அம்மனிதர்; ஆம் அனுப்பினாய் என்று பதிலலிப்பார். அம்மனிதர் தமது வலப்புரம் பார்ப்பார். அங்கு நரக நெருப்பை தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார். பின்பு இடப்புறம் திரும்பி பார்;ப்பார். அங்கும் நரக நெருப்பைத் தவிர்த்து வேறு ஒன்றையும் காணமாட்டார்.

எனவே, பேரிச்ச பழத்தின் ஒரு பாதியை (தருமம்) செய்தாவது, அதுவும் இல்லையெனில், ஒரு கனிவான சொல்லைப் பயன்படுத்தியாவது உங்களில் ஒவ்வொருவரும் நரகத்தின் நெருப்பிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். (நூல்: புகாரி)

14. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ்விடம் வானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்படும் கூட்டங்களைத் தேடி உலா வருகிறார்கள். அத்தகைய கூட்டத்தாரைக் கண்டால். அவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கும் முதல் வானத்திற்கும் மத்தியிலுள்ள (இடைவெளியை) நிரப்பும் வகையில் தங்களுடைய இறக்கைகளால் ஒருவர் மற்றவரை சூழ்ந்து கொண்டிருப்பார்கள். (கூட்டத்திலுள்ள மககள்) கலைந்து செல்லும் போது (வானவர்கள்) வானத்தின் பால் ஏறி உயர்ந்து விடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் '(அங்கு) அல்லாஹ், இவ்விஷயங்களை நன்கு அறிந்திருந்தாலும் கூட அவ்வானவர்களிடம் கேட்கின்றான்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? அதற்கு வானவர்கள் நாங்கள் பூமியிலிருக்கும் உன்னுடைய சில அடியார்களிடமிருந்து வருகிறோம். அவர்கள் உன் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன் மேன்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன்னைத் தவிர (வேறு) இறைவன் இல்லை என்று சாட்சியம் பகர்ந்து கொண்டிருந்தார்கள். உன்னை புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள். உன்னுடைய அருளை வேண்டியவர்களாக இருந்தார்கள் என பதில் கூறுவார்கள்.' அல்லாஹ் : என்னிடம் அவர்கள் எதனை வேண்டினார்கள்?

வானவர்கள் : உன்னுடைய சுவர்கத்தை உன்னிடம் அவர்கள் வேண்டுகிறார்கள்.

அல்லாஹ் : அவர்கள் என்னுடைய சுவர்க்கத்தைக் கண்டுள்ளார்களா?

வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய சுவர்கத்தைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)

வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.

அல்லாஹ் : எதிலிருந்து அவர்கள் என்னிடம் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.

வானவர்கள் : உன்னுடைய நரக நெருப்பிலிருந்து (பாதுகாப்பு தேடுகிறார்கள்)

அல்லாஹ் : அவர்கள் என்னுடைய நரக நெருப்பை கண்டுள்ளார்களா?

வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய நரக நெருப்பைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)

வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.

அல்லாஹ் : நான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்கள் வேண்டியதை அருளி, அவர்கள் தேடும் பாதுகாப்பையும் அளித்துவிட்டேன்.

வானவர்கள் : யா அல்லாஹ்! அவர்கள் மத்தியில் அதியம் பாவம் செய்து கொண்டிருக்க கூடிய ஒரு அடியானும் இருந்தான், அவன் அவ்வழியே செல்லும்போது அக்கூட்டத்தாருடன் அமர்ந்து விட்டான்.

அல்லாஹ் : அவனுடைய பாவங்களைக் கூட நான் மன்னித்துவிட்டேன். அத்தகைய மக்களுடன் (கூட்டத்தில்) அமர்பவர்களும் வேதனையடையமாட்டார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)

15. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனத்திற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான (வானவர்கள் நிறைந்த) சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன். (நூல்: புகாரி, முஸ்லிம்)

16. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் (மனிதன் புரியும்) நற்செயல்களையும், தீய செயல்களையும் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை விளக்கும் முகமாக (பின்வருமாறு) சொன்னார்கள். 'எவர் நற்செயல் ஒன்று செய்ய வேண்டுமென்று நாடி அதனைச் செய்யவில்லையோ (நற்செயல் புரியவேண்டுமென்ற அம்மனிதரின் எண்ணத்தின் காரணமாக) அதை அல்லாஹ் முழு நற்செயலாக பதிவு செய்து கொள்கிறான். ஆனால் அவர் நற்செயலைச் செய்ய நாடி அதனைச் செய்தும் விட்டால், அல்லாஹ் அதனைப் பத்து நற்செயல்களிலிருந்து எழு நூறு நற்செயல்கள் வரையிலோ அல்லது அதனைவிடப் பன்மடங்கு அதிகமாகவோ பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீய செயலை செய்ய நாடி, அதனைச் செய்யாவிட்டால், அல்லாஹ் அதனை ஒரு நற்செயலாகவே பதிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒரு தீய செயலை செய்ய நாடி அதனை செய்தூம் விட்டால், அல்லாஹ் அதனை ஒரே ஒரு தீய செயலாக மட்டுமே பதிவு செய்து கொள்கிறான். (நூல்: புகாரி, முஸ்லிம்)

17. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் கூறினான்: 'அடியார்களே! அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.

என் அடியார்களே! உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.

என் அடியார்களே! உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.

என் அடியார்களே! நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்ப தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.

என் அடியார்களே! எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.

என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.

என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.

என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்ப ஏற்படாது.

என் அடியார்களே! நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும். (நூல்: முஸ்லிம்)

18. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில் பின்வருமாறு அல்லாஹ் கூறுவான்.

ஆதமுடைய மகனே! நான் நேயுற்று இருந்தேன், ஆனால் நீ என்னை விசாரிக்க வரவில்லை.

மனிதன் : என் ரப்பே! அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாக நீ இருக்கும்போது நான் எவ்வாறு உன்னை நலம் விசாரிப்பேன்?

அல்லாஹ் : என்னுடைய இன்ன அடியான் நோயுற்று இருந்தது உனக்குத் தெரியாதா? அவனை நீ நலம் விசாரிக்க செல்லவில்லை. நீ அவனை விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடம் நீ என்னைப் பெற்றிருப்பாய். ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் உணவுக் கேட்டேன். ஆனால் எனக்கு நீ உணவளிக்கவில்;லை.

மனிதன் : என் ரப்பே! அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாக நீ இருக்கும்போது நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும்?

அல்லாஹ் : என்;னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவுகேட்டு, நீ அவனுக்கு உணவளிக்காதது உனக்குத்; தெரியாதா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் நிச்சயமாக அதனை (உணவளித்தமைக்கான சன்மானத்தை) என்னிடம் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியுமா?

அல்லாஹ் : ஆதமுடைய மகனே! நான் குடிப்பதற்கு (தண்ணீர்) கேட்டேன். ஆனால் குடிப்பதற்கு நீ ஒன்றும் எனக்குத் தரவில்லை.

மனிதன் : என் ரப்பே! நீ இப்பிரபஞ்சம் முழுமைக்கும் அதிபதியாக இருக்க நான் எப்படி உனக்குக் குடிப்பதற்கு (தண்ணீர்) கொடுக்க முடியும்.

அல்லாஹ் : என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் குடிப்பதற்கு (தண்ணீர்) கேட்டான். ஆனால் நீ அவனுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்திருந்தால் அதனை (சன்மானத்தை) நிச்சயமாக என்னிடம் கண்டிருப்பாய். (நூல்: முஸ்லிம்)

19. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை எனது அங்கியாகவும் உள்ளன. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுவானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன். (நூல்: முஸ்லிம்)

20. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சுவர்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் திறந்து வைக்கப்படும். தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப் பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்). அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும் வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். (நூல்: முஸ்லிம், திர்மிதி)
21. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் கூறினான் : இறுதித் தீர்ப்பு நாளில் மூன்று நபர்களுக்கு நான் எதிராளியாக (பகைவனாக) இருப்பேன். ஒருவன் என் பெயரைச் சொல்லி கொடுத்த வாக்கை முறித்தவன். சுதந்திர மனிதனை விற்று, அத்தொகையை விழுங்கியவன். மற்றொருவன். வேலையாளை அமர்த்தி, அவனிடம் முழு வேலையையும் வாங்;கியபின், அவனுக்குரிய கூலியைக் கொடுக்காதவன். (நூல்: புகாரி)

22. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உங்களில் ஒருவன் தன்னை இழிவாகக் கருதவேண்டாம். ஸஹாபாக்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன்னை எவ்வாறு இழிவாகக் கருத முடியும்?. அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். 'அல்லாஹ் எது குறித்து விசாரிப்பானோ அத்தகைய காரியத்தை காண்கிறான். ஆனால் ஆதுபற்றி ஒன்றும் கூறாமல் இருக்கின்றான். எனவே அல்லாஹ், இருதித் தீர்ப்பு நாளில் அந்த மனிதரிடம் இன்ன இன்ன விஷயத்தைக் குறித்து நீ (உன் கருத்தை) சொல்வதிலிருந்து உன்னை தடுத்தது எது? (என கேட்பான்) மக்கள் மீதிருந்த பயம்தான் என்று மனிதன் விடையளிப்பான். பின்னர் அல்லாஹ், நீ பயப்பட மிகவும் தகுதி வாய்ந்தவன் நான் மட்டுமே என்பான். (நூல் : இப்னுமாஜா, அஹ்மத்)

23. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் கூறுவான்: என்னுடைய மேன்மையினால் (மனிதர்களில்) ஒருவருக்கொருவர் நேசம் வைத்து இருப்பவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழலில்லாத இந்நாளில், என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் நிழல் அளிப்பேன். (நூல் : முஸ்லிம்)

24. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் (தனது) ஒரு அடியானை நேசித்தால், அவன் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து நான் இன்ன மனிதரை நேசிக்கின்றேன். எனவே நீயும் அவரை நேசிப்பீராக என்று கூறுவான். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவ்வாறே நேசிப்பார். பின்பு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ் இன்ன மனிதரை நிச்சயமாக நேசிக்கிறான். எனவே அவரை நேசியுங்கள். என்று வானலோகத்தில் அறிவிப்பார். (பின்னர்) வானவர்களும் அம்மனிதரை நேசிப்பார்கள். பின் பூமியில் அவர் அங்கீகரிக்கப்படுவார். என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

மேலும், அல்லாஹ் (தனது) ஒரு அடியான் மீது கோபம் கொண்டால், ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து நான் இன்ன மனிதர் மீது கோபம் கொண்டுள்ளேன். எனவே நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக என்று கூறுவான். பின் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர் மீது கோபம் கொள்வார். பின் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானவர்களை அழைத்து அல்லாஹ் இன்ன மனிதர் மீது நிச்சயமாக கோபம்கொண்டுள்ளான். எனவே நீங்கள் அவர் மீது கோபம்கொள்ளுங்கள். என்று அறிவிப்பார். எனவே வானவர்களும் அவர் மீது கோபம் கொள்வார்கள். இவ்வுலகிலும் அவர்மீது கோபம் நிலை நாட்டப்படும். என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)

25. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறினான்: என்மீது நேசம் வைத்துள்ளவர்மீது எவர் பகைமை கொண்டுள்ளாரோ, அவருக்கு எதிராக நான் போர் தொடுப்பேன். என்னால் அதிகமாக விரும்பப்படும் எந்த அடியானும், நான் அவன் மீது கடைமையாக்கியுள்ளதை விட வேறு விருப்பமான எந்தக் காரியத்தின் மூலமும் என்னை நெருங்க முடியாது. நான் அவனை நேசிக்க வேண்டும் என்பதற்குhக மேலதிகமான உபரி வணக்கங்கள் செய்வதின் மூலம்;; என் அடியான் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான்.

நான் அவனை நேசிக்கும்;போது, நான்; அவன் கேட்கும் கேள்வியாளவும், பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கரமாகவும், நடக்கும் காலாகவும் ஆகிவிடுகிறேன். என்னிடம் (எதனையாவது) அவன் வேண்டினால் நான் நிச்சயமாக அதனை அவனுக்குக்; கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாப்புத் தேடினால்;, நிச்சயமாக நான் அவனைப் பாதுகாக்கின்றேன்.

விசுவாசியான என் அடியானுடைய ஆன்மாவைக் கைப்பற்றுவதற்கு நான் காட்டும் தயக்கத்தைப்போல் வேறு எதனையும் செய்வதற்கு நான் தயக்கம் காட்டுவதில்லை. அவன் மரணத்தை வெறுக்கிறான். நான் அவனுக்குத் துன்பம் ஏற்படுத்துவதை வெறுக்கிறேன். (நூல் : புகாரி)

26. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : என் மீது நேசம் கொண்டுள்ள அடியார்களில் குறைந்த செல்வமுள்ள, நிறைந்த தொழுகையுள்ள, அதிபதியான என்னை வழிபடுபதில் மிகவும் கவணம் செலுத்திய, மறைமுகமாக எனக்கு அடிபனிந்து, மக்கள் மத்தியில் அறிமுகமில்லாத, விரலால் சுட்டிக்காட்டி புகழ்ந்து பேசப்படாத, தமது தேவைகளை நிறைவேற்ற (அளவுக்கு அதிகமில்லாமல்) போதுமான அளவு மட்டும் செல்வத்தை பெற்றிருந்தும் அதனைப் பொருமையுடன் தாங்கிக் கொண்டிருந்தவரே என்னிடத்தில் மிகவும் விரும்பத்தக்கவர். பிறகு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; 'மரணம் அவருக்கு விரைவில் வந்திருக்கும், அவருக்காக துக்கப்படுவோர் குறைந்திருப்பார்கள். அவர் விட்டுச்சென்ற சொத்து சொற்பமாக இருக்கும்.' (நூல் : தித்மிதி)

27. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜுந்துப் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

உங்களுக்கு முன் சென்றவர்களில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு காயம் ஏற்பட்டது. (காயத்தினால்) அவன் துயரமடைந்தான். வேதனையால் கத்தியைக் கொண்டு தன் கரத்தைத் துண்டித்தான். இதனால் இரத்தம் இடைவிடாமல்; கொட்டியதால் இறப்பெய்தினான். அல்லாஹ் கூறினான்: என் அடியான் (தனது செயலின் மூலம்) எனக்கு முன்னதாகவே நடவடிக்கை எடுத்துக் கொண்டான். நான் அவனுக்கு சுவர்க்;கத்தை ஹராமாக்கி (தடைசெய்து) விட்டேன். (நூல் : புகாரி, முஸ்லிம்)

28. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : உலகிலுள்ளவர்களில் என்னுடைய முஃமினான அடியானுக்குப் பிரியமான நண்பன் ஒருவரின் உயிரை நான் பறித்துக்கொள்ளும்; போது, அதனை எனக்காக அவ்வடியான் பொருமையாக தாங்கிக் கொண்டிருந்தால் அத்தகைய விசுவாசமுடைய எனது அடியானுக்கு சுவர்க்கத்தை தவிர என்னிடத்தில் வேறு சன்மானம் இல்லை. (நூல் : புகாரி)

29. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் : என் அடியான் என் சந்திப்பை விரும்பினால், நான் அவன் சந்திப்பை விரும்புகிறேன். அவன் என் சந்திப்பை வெறுத்தால் நானும் அவன் சந்திப்பை வெறுக்கிறேன். (நூல் : புகாரி, முஸ்லிம்)

30. ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் மீது (ஆணையாக) அல்லாஹ் இன்னாரை மன்னிக்கமாட்டான். என்று சத்தியம் செய்தார். அதற்கு அல்லாஹ் கூறினான், நான் இன்னாரை மன்னிக்க மாட்டேன் என்று என் மீது ஆணையிட்டு கூற இந்த மனிதன் யார்? நிச்சயமாக நான் (சாபமிடப்பட்ட) அந்த மனிதனின் பாவங்களை மன்னித்து விட்டேன். (சத்தியமிட்ட) உன்னுடைய நற்செயல்களை அழித்துவிட்டேன். (நூல் : முஸ்லிம்)

31. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மன்னிக்கப்படுவார்கள் (முன் சமுதாயத்தில்) ஒரு மனிதன் தன் மீது அநீதி இழைத்தவனாக பெரும் பாவங்கள் செய்து கொண்டிருந்தான். மரணம் அவனை நெருங்கிய போது, தனது மக்களை அழைத்து, நான் மரணமுற்றவுடன் என்னை எரித்து தூளாக்கி, பின்பு எனது சாம்பலை கடலிலே பரவலாக வீசி விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது அதிபதியிடம் நான் சிக்கினால் அவன் வேறு யாரையும் தண்டிக்காத அளவிற்கு என்னை தண்டித்து விடுவான். என கூறினான். அவனது மக்களும் அவ்வாறே செய்தனர்.

பின்பு அல்லாஹ் பூமியிடம் நீ விழுங்கியதை வெளிக்கொணர்ந்து விடு எனக் கட்டளையிட்டான். அம்மனிதன் மீண்டும் உருவாகி நின்றான். அல்லாஹ் அம்மனிதரிடம் கேட்டான், நீ செய்த அச்செயலை செய்யும்படி உன்னை தூண்டியது எது? அதற்கு அம்மனிதன்; அதிபதியே! உன்மீது எனக்குப் பயம் இருந்ததினால் (அவ்வாறு நான் செய்தேன்) என்று பதிலளித்தான். இதன் காரணமாக அல்லாஹ் அம்மனிதனுக்கு மன்னிப்பளித்தான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

32. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : (அல்லாஹ்வின்) அடியான் ஒருவன் பாவம் செய்துவிட்டு, அல்லாஹ்வே! என் பாவத்தை மன்னிப்பாயாக, என்று வேண்டினான்.

அல்லாஹ் : என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

பிறகு அவன் மீண்டும் பாவம் செய்துவிட்டு என் அதிபதியே! என் பாவத்தை மன்னிப்பாயாக என வேண்டினான்.அல்லாஹ் என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

பிறகு அவன் மீண்டும் பாவம் செய்துவிட்டு என் அதிபதியே! என் பாவத்தை மன்னிப்பாயாக என வேண்டினான்.அல்லாஹ் என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். நீ விரும்பியதைச் செய் ஏனெனில் நான் உன்னை மன்னித்துவிட்டேன். எனக் கூறினான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

33. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறினான் : ஆதமுடைய மகனே! என்னை அழைத்து என்மீது ஆதரவு வைத்து (பாவமன்னிப்பு) கேட்கும்போதெல்லாம் நீ செய்தவற்றை நான் பொருட்படுத்தாமல் உன்னை மன்னிப்பேன்.

ஆதமுடைய மகனே! உன்னுடைய பாவங்கள் வானிலுள்ள மேகங்களை அடையும்; அளவுக்கு அதிகமாக இருந்தாலும் என்னிடம் பாவமன்னிப்பை வேண்டினால்; நான் உன்னை மன்னிப்பேன்.

ஆதமுடைய மகனே! பூமியளவிற்கும் பெரும் பாவங்களைச் செய்து எனக்கு இணைவைக்காமல் இருக்கும் நிலையில் என்னை நீ சந்தித்தால் அதே அளவுக்கு நிச்சயமாக நான் உன்னை மன்னிப்பேன். (நூல் : முஸ்லிம்).

34. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நமது அதிபதி அல்லாஹ் ஒவ்வொரு (நாள்) இரவும், இரவில் இறுதியான மூன்றாவது பகுதி எஞ்சியிருக்கும் போது உலகத்தின் வானத்திற்கு இறங்கி சொல்கிறான்: என்னிடம் பிரார்த்தனை புரிபவர் யார்? நான் அவர் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறேன். என்னிடம் கேட்பவர் யார்? நான் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் பிழைபொறுக்கத் தேடுபவர் யார்? நான் அவரை மன்னிக்கின்றேன். (நூல் : புகாரி, முஸ்லிம்)

35. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் சுவர்க்க வாசிகளை நோக்கி, சுவர்க்க வாசிகளே! என்றழைப்பான். அவர்கள், எங்கள் அதிபதியே! (இதோ) நாங்கள் வந்து விட்டோம். உனது திருப்திக்காகவே நாங்கள் உள்ளோம். நன்மைகள் யாவும் உந்தன் கரங்களிலேயே உள்ளன. என பதிலளிப்பார்கள். அல்லாஹ் நீங்கள் திருப்தியுடன் உள்ளீர்களா? என்று கேட்பான். அதற்கு சுவர்க்க வாசிகள்: உன்னுடைய படைப்புகளிலேயே யாருக்கும் கொடுக்காத ஒன்றை நீ எங்களுக்குத் தந்திருக்கும் போது, நாங்கள் எவ்வாறு திருப்தி கொள்ளாமல் இருக்க முடியும்.? என்று பதிலளிப்பார்கள்.

அல்லாஹ், இதனைவிட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு கொடுக்கட்டுமா? என்று கேட்பான். அதற்கு சுவர்க்க வாசிகள்: அதிபதியே இதனைவிட சிறந்தது எது? என வினவுவார்கள். இதற்கு அல்லாஹ் நான் உங்கள் மீது என் திருப்பொருத்ததை இறக்குகிறேன். இதற்கு பிறகு என்றென்றும் உங்கள் மீது நான் கோபப்படவே மாட்டேன் என்று பதிலளித்தான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

36. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

சுவர்க்கமும், நரகமும் (ஒரு விஷயத்தில்) வாதித்துக் கொண்டன.

நரகம் : என்னிடமே அடக்கு முறையாளர்களும், ஆணவமுள்ளவர்களும் உள்ளனர்.

சுவர்க்கம் : என்னிடமே மக்களில் நலிந்தவர்களும், எளியவர்களும் உள்ளனர்.

அல்லாஹ் அவைகள் மத்தியில் (பின்வருமாறு) தீர்ப்பு வழங்கினான்.

மன்னிக்கப்படுவார்கள் (சுவர்க்கமே) நீ எனது கருனையின் வடிவான சுவர்க்கமாகும். உன் மூலமாக, நான் விரும்பியவர்களுக்கு இரக்கம் காட்டுகிறேன். (நரகமே) நீ எனது தன்டனiயின் வடிவமாகும். உன் மூலமாக நான் விரும்பியவர்களுக்கு தண்டனை விதிக்கிறேன். உங்கள் இருவரையும் நிரப்புவது எனது கடமையாகும். (நூல் : புகாரி, முஸ்லிம்)
37. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் சுவர்க்கத்தையும், நரகத்தையும் படைத்த போது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுவர்கத்திற்கு அனுப்பி சுவர்க்கவாசிகளுக்காக நான் என்ன தயாரித்து வைத்துள்ளேன் என்று பாரும் என்று கூறினான். எனவே ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; சுவர்க்கத்தையும், அதில் வசிப்பவர்களுக்காக அல்லாஹ் தயாரித்துள்ளதையும் கண்டார்கள். சுவணத்தை கண்டபின் அல்லாஹ்விடம் திரும்பிச் சென்று உனது மேன்மையின் மீது ஆணையாக! இதைப்பற்றிக் கேள்விப்படும் யாரும் அதில் நுழையாமல் இருக்க மாட்டார்கள். என்று கூறினார்கள்.

உடனே அல்லாஹ் சுவனத்தை சுற்றி முட்டுகட்டைகளைப் போட்டான். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மீண்டும் திரும்பிச் சென்று சுவர்க்க வாசிகளுக்கு நான் சித்தப்படுத்தி இருப்பதை பார்ப்பீராக என்றான். அவர் திரும்பிச் சென்றார். ஏராளமான முட்டுகட்டைகள் போடப்பட்டுள்ளதை கண்டு அவர் திரும்பினார். பின்பு அல்லாஹ்விடம். உனது கண்ணியத்தின் மீது ஆணையாக இதில் யாரும் நுழையமாட்டார்கள். என்று கூறினார். பின்பு அல்லாஹ் நரகத்தையும், அதில் நரகவாசிகளுக்காக தான் தயாரித்து வைத்துள்ளதையும் கண்டுவருமாறு கூறினான். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நரகம் அடுக்கடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டார்கள். பிறகு அல்லாஹ்விடம் திரும்பி வந்து, உனது மேன்மையின் மீது ஆனையாக நரகைப் பற்றி கேள்விபடும் எவரும் அதில் நுழைய மாட்டார்கள். என்று கூறினார்கள். பின்பு அல்லாஹ் நரகை மன இ;ச்சைகளினால் சூழப்படுமாறு உத்தரவிட்டான். பிறகு அவன் ஜிப்ரயீலே அங்கு மீண்டும் செல்வீராக என்று சொன்னான். அவர் அங்கு திரும்பி சென்று வந்து, உனது மேன்மையின் மீது ஆணையாக அதில் நுழைவதிலிருந்து யாரும் தப்ப முடியாது என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். (நூல் : திர்மிதி)

38. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்: எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக்; காதும் கேட்டிராத, எந்த மனித இருதயமும் எண்ணிப் பார்த்திராத (ஒன்றை) எனது நேரிய அடியார்களுக்கு நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்.

நீங்கள் விரும்பினால் கீழ்கண்ட வசனத்தை ஓதுவீராக: '(சுவனவாசிகளுக்கு) கண்களைக் குளிரச்செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை எந்த ஆத்மாவும் அறியாது. (அல் குர்ஆன்-32:17)

மன்னிக்கப்படுவார்கள் (குறிப்பு-நீங்கள் விரும்பினால் என்ற வார்த்தை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உரியதாகும்.)

39. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், இறை நம்பிக்கையாளர்கள் ஒன்று திரண்டு, நமக்காக நமது அதிபதியிடம் பரிந்துரைக்க (யாரிடமாவது) நாம் கேட்க வேண்டாமா? என்று கூறுவார்கள். எனவே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து, நீங்கள் மனித இனத்தின் தந்தையாக உள்ளீர்கள். அல்லாஹ், உங்களை அவனது கரத்தினாலேயே படைத்து, அவனது வானவர்களை உங்களுக்கு தலைசாய்க்க வைத்;து, அனைத்து பொருட்களின் பெயர்களையும் உங்களுக்கு கற்றுக் கொடுத்தான். எனவே, நாங்கள் இருக்கும் இந்த இடத்தில் இருந்து எங்களை விடுவிப்பதற்காக, நீங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுங்கள் என சொல்வார்கள். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் உங்களுக்காக பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை. என்று சொல்லிவிட்டு, தாம் செய்த தவறுகளைக் கூறி அதற்காக வெட்கப்பட்டு விட்டு நூஹ்விடம் செல்லுங்கள். ஏனெனில் உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட முதல் இறைத்தூதராக அவர் விளங்குகிறார். என்று அறிவுறுத்துவார்.

எனவே மக்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து முறையிடுவார்கள். அவர் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை என்று சொல்லி விட்டு, தாம் தமது அதிபதியிடம் தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி வேண்டுகோள் வைத்ததை கூறி அதற்காக வெட்கப்பட்டு, கருணையாளனின் நண்பர் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள். என்று கூறுவார்கள்.

எனவே இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மக்கள் வருவார்கள். அப்போது இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலையில் இல்லை. என்று சொல்லிவிட்டு, அல்லாஹ்விடம் உரையாடி, அல்லாஹ்வால் தவ்ராத் வேதம் கொடுக்கப்;பட்ட அடியார் மூஸாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

எனவே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மக்கள் வருவார்கள். அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை. என்று சொல்லி விட்டு, எந்த உயிரையும் கொலை செய்யாத, ஒரு உயிரை தாம் தவறாகக் கொன்றுவிட்டதை நினைவு கூர்ந்து அதற்காக அதிபதி முன் வெட்கப்படுவதாக சொல்லிவிட்டு,

அல்லாஹ்வின் தூதராகவும், அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது வார்த்தையாகவும், ரூஹாகவும் விளங்கும் ஈஸாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள். எனவே மக்கள் ஈஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்களிடம்; வருவார்கள்.

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை. என்று சொல்லி விட்டு, முன்பின் பாவங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் மண்ணிக்கப்பட்ட அடியாரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறுவார்கள்.

எனவே மக்கள் என்னிடம் வருவார்கள். நான் எனது அதிபதியைச் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அனுமதியும் வழங்கப்படும். நான் என் அதிபதியைக் காணும்போது, அவன் முன் ஸஜ்தாவில் விழுந்துவிடுவேன். அவன் விரும்பும் நேரம் வரை என்னை அப்படியே விட்டுவிடுவான்.

பிறகு என்னிடம், உங்கள் தலையை உயர்த்துங்கள், உங்கள் வேண்டுகோளை முன் வையுங்கள். அது வழங்கப்படும். சொல்லுங்கள். அந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். என்று சொல்லப்படும். அப்பொழுது நான் தலையை உயர்த்துவேன். அவன் எனக்கு கற்றுக் கொடுத்த புகழும் முறைப்படி அல்லாஹ்வை புகழ்;வேன். பின் நான் மக்களுக்காக பரிந்து பேசுவேன். எத்தனை மக்கள் மன்னிக்கப்படுவார்கள்; என்பதற்கான வரம்பை அல்லாஹ் எனக்கு நிர்னயிப்பான். எனவே அவர்களை நான் சுவனத்தினுல் நுழைவிப்பேன்.

மீண்டும் நான் என் அதிபதியைக் கண்டு, முன்னர் செய்தது போல்; ஸஜ்தா செய்வேன். பின்பு நான் மக்களுக்காக பரிந்து பேசுவேன்.எத்தனை மக்கள் மன்னிக்கப்படுவார்கள்; என்பதற்கான வரம்பை அல்லாஹ் எனக்கு நிர்னயிப்பான். எனவே அவர்களை நான் சுவனத்தினுல் நுழைவிப்பேன்.

பின்பு நான் மூன்றாம் முறையாகவும், நான்காம் முறையாகவும் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வேன். இப்போது நரக நெருப்பில், குர்ஆன் யாரை சுவர்க்கத்தை விட்டும் தடுத்து விட்டதோ, எவர் மீது நரகத்தில் தங்குவது நிரந்தரமாகி விட்டதோ, அவர்களைத் தவிர வேறு யாரும்; தங்கியிருக்க மாட்டார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)

40. மஸ்ரூக் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதிடம் இந்த திருக்குர்ஆன் வசனத்தை பற்றிக் கேட்டோம்.

மன்னிக்கப்படுவார்கள் (விசுவாசிகளே!) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். அல்லாஹ்வின் புரத்திலிருந்து அவர்களுக்கு உணவும் அளிக்கப்;பட்டு வருகிறது. (அல்குர்ஆன் 3:169)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் பின் வருமாறு விளக்கம் சொன்னார்கள்.

நாங்கள் இந்த வசனத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டோம். அவர்கள் சொன்னார்கள் இறைவழியில் வீர மரணமடைந்தவர்களின் ஆன்மாக்கள், பச்சைப் பறவைகளினுள் இருக்கும். அப்பறவைகளின் கூடுகள் அர்ஷில் தொங்கவிடப்பட்டுள்ளன. சுவாக்கமெங்கும் அப்பறவைகள் சுதந்திரமாக பறந்து திரிகின்றன. பின்னர் தங்கள் கூடுகளில் தஞ்சமடைகின்றன.

இறை வழியில் வீர மரணமடைந்த அவர்களின் பக்கம் அல்லாஹ் தன் பார்வையை செலுத்தி, நீங்கள் எதையாவது விரும்புகிறீர்களா? என்று கேட்பான். இதற்கு ஷஹீதுகளாகிய அவர்களின் ஆன்மாக்கள், சுவர்கத்தில் எங்கள் விருப்பம்போல் எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாக பறந்து செல்லும் நாங்கள் (இதனைவிட) வேறு எதனை விரும்புவோம்.? என்று பதிலுரைப்பார்கள். அல்லாஹ் இவ்வாறு மூன்று முறை அவர்களிடம் கேட்பான். (மீண்டும் ஒருமுறை) இவ்வாறு கேட்கப்படுவதிலிருந்து தாங்கள் தப்பிக்க இயலாது என்று உணர்ந்த ஷஹீதுகள், 'எங்கள் அதிபதியே! நாங்கள் மீண்டும் போராடி வீர மரணமடைவதற்காக எங்கள் ஆன்மாக்களை, பூத உடலுக்குள் செலுத்திவிடு. என்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஒன்றும் தேவைப்படவில்லை என்பதைக் கண்டு அவர்களை (பறவைகளாகவே) விட்டுவிடுவான்.' (நூல் : முஸ்லிம்)

0 comments:

Post a Comment