பத்தினித்தனம் காத்த பட்டினி அபூஹுரைரா (ரழி)

, , No Comments

அனுப்பியவர்:அன்ஸார்


பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்குதான் (தான, தர்மங்கள்) உரியன. (பிறரிடம் யாசிக்காத அவர்களுடைய பேணுதலைக் கண்டு,) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார்கள். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.



தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (பகரா-273274)



அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளிவாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.



பிறகு அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, 'அபூ ஹிர்ரே! (அபூ ஹ¤ரைராவே!) என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். '(என்னைப்) பின்தொடர்ந்து வா!' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) 'இந்தப் பால் எங்கிருந்து வந்தது?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இன்ன 'ஆண்' அல்லது 'பெண்' தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹ¤ர்' என அழைத்தார்கள். நான் 'இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள்' என்றார்கள்.


திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸ¤ஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள்.



இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. '(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருக என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது' என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.


பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்' என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார்.


பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு 'அபூ ஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)' என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்' என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். 'இன்னும் பருகுங்கள்' என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் 'பருகுங்கள்' பருகுங்கள்' என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன். இறுதியில் 'இல்லை; சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை' என்றேன். நபி(ஸல்) அவர்கள் '(சரி) அதை எனக்குக் கொடுங்கள் என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள்.(புஹாரி-6452)




நன்றி
அன்ஸார்

0 comments:

Post a Comment