, , No Comments
மிஃராஜ் தரும் படிப்பினைகள்...! (பகுதி 1)
printEmail
  
இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாத, மறக்கடிக்க முடியாத திரும்பத் திரும்ப நினைவுகூரப்படும் பல்வேறு தருணங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவற்றில் இறைவனின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான இறை அத்தாட்சிகளில், இன்று இஸ்லாமிய உலகம் நினைவு கூரவேண்டிய ஒரு நிகழ்வுதான் இஸ்ரா எனப்படும் மிஃராஜ் நிகழ்ச்சி.
உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் இறைவன் புறத்திலிருந்து தமக்கு வழங்கப்பட்ட அத்தாட்சிகளை தத்தம் சமுதாயத்திற்கு காண்பித்து அவர்களை இறைநம்பிக்கையில் உறுதி படுத்தியது போன்று, அகிலத்தின் அருட்கொடையாகிய பெருமானார் நபி(ஸல்) அவர்களுக்கும் தனது அத்தாட்சியை காண்பிப்பதற்காக இறைவன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் துணையுடன் நபி(ஸல்) அவர்களை விண்ணுலகில் கொண்டு சென்று சுற்றிக் காண்பித்த நிகழ்வுதான் மிஃராஜ் எனப்படுகின்றது.


இஸ்லாம் ஓர் அறிவுப்பூர்வமான மார்க்கமாகும். அதில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும், செய்தியும் இவ்வுலக மக்களை நேர்வழியில் நடத்தவும், இவ்வுலக வாழ்வில் சிறப்பாக எங்ஙனம் செயல்படுவது என்பதை விளக்கவும், நிலையான மறுமை வாழ்வை நல்ல முறையில் அமைத்திட இவ்வுலகில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்தும் மக்களுக்கு போதிப்பதை மட்டுமே முக்கியமான நோக்கமாக கொண்டு உள்ளது. இதன் நிகரற்ற செய்தியைக் கேள்விப்படும் அறியாமையில் உழலும் எவரும் மூடநம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் விட்டொழித்து நிச்சயமாக இந்த அறிவுப்பூர்வமான வழியில் செயல்பட முனைவர்.

ஆனால், காலச் சூழலின் காரணமாக அரபி மொழியில் பதித்து வைக்கப்பட்டுள்ள இஸ்லாத்தின் அனைத்து வழிமுறைகளும் அவரவர் மொழியில் கிடைக்காத காரணத்தினால், சமூக விடுதலை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நேர்மையான அணுகுமுறை போன்ற வெளிப்புறத்தில் தெரியும் பல்வேறு சிறப்புகளைக் கண்டு அவற்றிற்காக இஸ்லாத்தில் இணைந்த அனேக மாற்று கொள்கை, மாற்று மொழி மக்கள், தங்கள் மனதில் இஸ்லாத்தை ஏந்தினரே தவிர தங்கள் வாழ்வில் அதனைச் செயல்படுத்த முறையான இஸ்லாமியத் திட்டங்கள், விளக்கங்கள் அவரவர் மொழியில் இல்லாத காரணத்தினால் தாங்கள் வாழ்ந்த சூழல், கலாச்சாரங்களுக்கேற்ப இஸ்லாத்தில் தாங்கள் கேள்விப்படும் சம்பவங்களையும், நிகழ்வுகளையும் கற்பனையாகப் புனைந்து சில சடங்கு சம்பிரதாயங்களைப் பேண ஆரம்பித்து விட்டனர்.

அதன் ஒரு நீட்சியாக இந்த மிஃராஜ் பயண நிகழ்வு தினங்களிலும் தங்கள் கற்பனைகளில் உதித்தவைகளுக்கு ஏற்ப இஸ்லாம் காண்பித்துத் தராத சில செயல்களைப் புனிதம் எனக்கருதி செயல்படுத்தி வருகின்றனர். மிஃராஜ் தினம் என ஒரு குறிப்பிட்ட தினத்தை நிச்சயித்து அன்றைய தினம் இரவு முழுவதும் வணக்கம் என்ற பெயரில் தஸ்பீஹ் போன்ற நபி(ஸல்) அவர்கள் காண்பித்துத் தராத தொழுகைகளைத் தொழுவதும், நபி(ஸல்) அவர்கள் பயணம் சென்ற புராக் வாகனத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து, அதனைப் புனிதமானது எனக் கருதி வீட்டில் மகிமைப்படுத்தி வைப்பது போன்ற செயல்களை முஸ்லிம்களுள் சிலர் செய்து வருகின்றனர்.

இறைவனிடமிருந்து நன்மையை மட்டுமே எதிர்பார்த்து சகோதரர்களால் அறியாமையில் செய்யப்படும் இச்செயல்கள், நபி(ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஒரே காரணத்திற்காக இஸ்லாத்தின் பார்வையில் மிகப்பெரும் தண்டனைக்குரியவை என்பதை இதனைச் செய்து வருபவர்கள் அறிந்து கொள்ளாத அளவிற்கு அறியாமையில் இருக்கின்றனர். நன்மையை எதிர்பார்த்து செய்யப்படும் செயலுக்கு நன்மை கிடைக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை; அதனால் தீமை விளைவது என்பது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை இபாதத்-வணக்கம் என்ற முறையில் எச்செயலை செய்வதற்கும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மிக்க அவசியமாகும். நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் புதிதாகப் புனைந்து இஸ்லாத்தில் நுழைக்கப்படும் எந்த ஒரு செயலும் இறைவனால் அங்கீகரிக்கப்படாது. இது இஸ்லாத்தின் சாதாரண அடிப்படையாகும்.

மேலும், இஸ்லாமிய வரலாற்றில் பதிந்துள்ள ஒவ்வொரு நிகழ்வும் இவ்வுலக மக்களுக்கு மிகப்பெரிய படிப்பினைகளை கொடுக்கும் விதத்தில் இறைவனால் நிகழ்த்தப்பட்ட அத்தாட்சிகளாகும். அவற்றை உற்று நோக்கும் பொழுது இதனை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். மிஃராஜ் என்ற இந்த விண்ணுலகப் பயண நிகழ்விலும் இறைவன் இவ்வுலக மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்குப் பல்வேறு படிப்பினைகளையும் அத்தாட்சிகளையும் வழங்கியுள்ளான்.

இந்நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் கூறும் பொழுது,

“(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான்(அல்குர்ஆன் 17:1).

என்று தெரிவிக்கிறது. இவ்வசனத்திலும் வல்ல நாயன் மிகத் தெளிவாக இந்நிகழ்வு இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பிப்பதற்காகவே நிகழ்த்தப்பட்டது எனக் குறிப்பிடுகின்றான்.

எனவே, இந்நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாம் தரும் படிப்பினைகள் என்ன என்பதையும், இச்சமூகம் இந்நாட்களில் செய்யும் செயல்களை இஸ்லாம் வலியுறுத்துகின்றதா என்பதையும் இஸ்லாமிய ஒளியில் ஆய்வு செய்து அறிந்து கொள்வது அவசியமாகும்.

மிஃராஜ் சம்பவத்தைக் குறித்துக் குறிப்பிடும் பொழுது இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

1. மிராஜ் நிகழ்ந்த தினம்.
2. மிராஜ் தரும் படிப்பினை.

ஒவ்வோர் ஆண்டும் ரஜப் மாதம் 27ஆம் தேதி இரவை மிஃராஜ் தினமாகக் கருதி முஸ்லிம்கள் பல்வேறு செயல்களைச் செய்து வருகின்றனர்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை, கொண்டாடப்படும் விதத்தில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள தினங்கள் ரமலான் நோன்பை அடுத்து வரும் ஈகைப் பெருநாள் எனும் ஈத்-அல்-ஃபித்ரு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் அல்லது தியாகத் திருநாள் எனும் ஈத்-அல்-அழ்ஹா (பக்ரீத்) ஆகிய இரு தினங்கள் மட்டுமே. இதைத் தவிர வேறு ஒருநாளைக் கொண்டாட வேண்டுமெனில் குறிப்பிடப்படும் அந்த நாள் சரியானதுதானா என்பதற்கு முதலில் ஆதாரம் வேண்டும்.

மிஃராஜ் தினமாக அனுஷ்டிக்கப்படும் இந்த ரஜப் 27 அன்றுதான் மிஃராஜ் சம்பவம் நிகழ்ந்தது என்பதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை.

இதனைக் குறித்து விரிவாக....

பகுதி 2 காணலாம்

நன்றி:சத்யமார்க்கம்

0 comments:

Post a Comment