செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களும் எறும்பும்
ஒரு நாள் செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் படுத்திருக்கும்போது அவர்களின் உடம்பில் எறும்பு ஒன்று ஊர்ந்து திரிந்ததை கண்ட அவர்கள் அதனை பிடித்து வீசி எறிந்தார்கள். அப்போது அந்த எறும்பு அவர்களை நோக்கி, "நெறி நீதி மன்னனாகிய அல்லாஹ்க்கு நீரும் நானும் அடிமைகள்தான் என்பதை உணராது என்னை நீர் அகங்காரத்துடன் பிடித்து வீசி எறிந்தீர். உமக்கு வல்லமை உள்ளது என்று எண்ணி பெருமையுற்று வரும் துன்பம் பற்றி உணராது எனக்கு துன்பம் இளைத்தீர். இது பற்றி நான் மறுமையில் அல்லாஹ்வின் முன் வழக்காடுவேன்" என்றது.
அதுகேட்டு செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் திடுக்குற்றவர்களாய் அவ்வெறும்பினை நோக்கி, "எறும்பே! நான் என்ன அவ்வளவு பெரிய தீங்கு செய்து விட்டேன்? என பரிவோடு கேட்டார்கள். அதற்கு அந்த எறும்பு அவர்களை நோக்கி, "என்னுடைய உடலோ மென்மையானது. அதனினும் மேன்மையானது அதன் மேல் போர்த்தப்பட்டுள்ள தோல். அப்படி இருக்க நீர் என்னை வெளியே தூக்கி எறிந்தீர். இதை விட பெரும் தீங்கு வேறொன்று இருக்கிறதா? வலியவர் எளியவர்களை மதித்திடாது, அவர்களுக்கு தீங்கு இழைப்பது பண்பு என்றால் கடலானது அலைஎரிந்து அவனி முழுவதையும் அழித்திடாமல் இருக்க காரணம்தான் என்ன? அதனுடைய இயலாத்தன்மைதானா? நீங்களோ அவனி புரக்க வந்த அரசர் மட்டுமல்ல மக்களை நேர வழி நடத்த வந்த நபியும் ஆவீர்கள். நீங்களே இவ்வாறு செய்தால் மற்றவர்களை பற்றி என்ன சொல்வது? என்று இடித்துரைத்தது.
எறும்பின் இந்த இடிமொழி செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களை ஒரு குலுக்கு குலுக்கியது. அவர்கள் எறும்பை நோக்கி, "எறும்பே! நான் வேண்டுமென்றே உனக்கு துன்பம் இழைக்கவில்லை. நீ என் மீது ஊர்ந்து செல்வதை உணர்ந்து நான் அறியாமலேயே உன்னை பிடித்து வீசி எரிந்து விட்டேன். எனினும் பிழை பிழைதான். அதிலிருந்து தப்ப முடியாது. எனினும் என் பிழையை பொறுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்கள்.
அப்போது அவ்வெறும்பு "நீர் எனக்கு மூன்று வாக்குறுதிகளை அளிப்பின் நான் உம் பிழையை பொறுப்பேன். இல்லையென்றால் பிழை பொறுக்க மாட்டேன்" என்று கூறியது.
செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களும் "அவ்விதமே அவற்றை அளிக்கிறேன்" என்று கூறினார்கள். அப்போது அவ்வெறும்பு "தாவூதின் மகனாரே! நீர் உலக ஆசாபாசங்களில் உழலாதீர். அதிகமாக சிரிக்காதீர். உம்மிடம் ஒருவர் உதவி தேடிவரின் அவரை வெறுமனே திருப்பி அனுப்பாதீர்" என்று கூறியது. "வாக்குறுதி காக்கிறேன்" என்றார்கள் செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள். அது கேட்டு அகமகிழ்ந்து அவ்வெறும்பு நான் உம் பிழை பொறுத்தேன்" என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்றது.
0 comments:
Post a Comment