ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் என்பவர்கள் யார்?

, , No Comments
"இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிந்தார்கள். எனக்குப் பின் என்னுடைய உம்மத்துகள் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். அதில் ஒரு கூட்டத்தார் மாத்திரம் சுவர்க்கவாசிகள். மற்றைய எழுபத்திரண்டு கூட்டத்தினரும் வழி தவறியவர்களாவார்கள்" என நபிகள் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அருளிய போது, அண்மையில் இருந்த சஹாபாக்கள், " யா ரசூலல்லாஹ் !! அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்" எனக் கேட்க, நபிகள் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், "நானும் என்னுடைய சஹாபாக்களும் நடக்கின்ற வழியை பின்பற்றி நடப்பவர்கள்தான் அந்தக் கூட்டத்தினர்" எனக் கூறினார்கள். இந்தக் கூட்டத்தினரையே நாம் ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரோடு அழைக்கின்றோம்.



இவர்களின் உறுதியான கொள்கைகளாவன:


நபிகள் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் சொல், செயல், பழக்கவழக்கங்களை பின்பற்றியும், அவர்கள் சமூகத்தில் தங்களது அதிகமான காலத்தை கழித்த அவர்களின் தோழர்களான நான்கு கலிபாக்கள், சுவனபதியை கொண்டு நன்மாராயம் பெற்ற அஷ்ரத்துல் முபஷ்ஷிரீன்கள், சஹாபாக்கள், தீனுக்காக உயிர் தியாகம் செய்த ஷுஹதாக்கள், இன்னும் பன்னிரண்டு இமாம்கள் அவர்கள்: இமாம் அலி, இமாம் ஹசன், இமாம் ஹுசைன், இமாம் ஸெய்னுல் ஆப்தீன், இமாம் முஹம்மத் பாகிர், இமாம் ஜஃபர் ஸாதிக், இமாம் மூஸல் காஸிம், இமாம் மூஸர் ரிளா , இமாம் ஜவாதுத்தகிய்யி, இமாம் நஸியி, இமாம் அஸ்கரியி, இமாம் மஹ்தி (ரலியல்லாஹு அன்ஹுமா) இந்த பன்னிருவரை மட்டும் ஷியாக்கள் கொண்டாடுகின்றனர்.


மத்ஹபுக்குரிய இமாம்கள் அவர்கள்: இமாம் ஹனபி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஹன்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி.


இமாம் மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மாணவராக இருந்தார்கள். அது போலவே இமாம் ஹன்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கல்வி பயின்று இருக்கிறார்கள்.


"அஇம்மத்துல் முஜ்தஹதீன்" எனப்படுவோர் நான்கு இமாம்களும், அவர்களுக்கு அடுத்து வந்த சுயமாகச் சட்டம் இயற்றும் மார்க்க நிபுணர்களான கல்விக் கடல், இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் இமாம்களை போன்ற மேதைகள், அடுத்து விலாயத் பெற்ற கெளது, குதுபு, வலிமார்கள் இவர்கள் போன்று பெண் வலிமார்கள், இன்னும் இறையருள் பெற்ற ஞானவான்கள், உலமாக்கள், ஸித்தீக்கீன்கள், ஸாலிஹீன்கள், ஆரிபுகள், முதலானோர்ர்களும், அவர்கள் பின்பற்றிய வழியை பின்பற்றியும், அவர்களின் போதனைகளுக்கு உட்பட்டு, குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் ஆகிய இந்த நான்கு நியமனங்களை ஏற்றும் நேர்மையாக நடப்பவர்களே ஸுன்னத் வல் ஜமாஅத் எனப்படுபவர்கள்.


அல்லாஹ் நம்மை மகத்துவமிக்க இந்த சத்தியப் பாதையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலேயே இறுதி வரை இருக்கும் நஸீபை தந்தருவானாக! ஆமீன்!






0 comments:

Post a Comment