இறையன்பு

, , No Comments
ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) பிரயாணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது வழியில் வாடிய வதனத்துடன் சிலர் இறைவனை வணங்கி கொண்டு இருந்தனர். "நீங்கள் யார்? உங்களின் இந்த நிலைக்கு என்ன காரணம்" என்று வினவினர் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள்.

அதற்கு அவர்கள், "நரக நெருப்புக்கு நாங்கள் அஞ்சுகிறோம். அதனால்தான் உடலை வருத்தி இறைவனை வணங்கி கொண்டு உள்ளோம்" என்றனர்.
அதற்கு செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் "நரக நெருப்புக்கு அஞ்சியாவது வணக்கம் புரிகிறீர்களே. அல்லாஹ் உங்களை நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பானாக" என்று பிரார்த்தித்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றனர்.

செல்லும் வழியில் இன்னும் சிலரை கண்டார்கள். அவர்களின் உடல் இளைத்து வெளுத்து காணப்பட்டனர். "நீங்கள் யார்? உங்களின் இந்த நிலைக்கு என்ன காரணம்" என்று வினவினர் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள்.

அதற்கு அவர்கள், "நாங்கள் சுவர்க்கத்தை ஆசை வைக்கிறோம். சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆவலினால் உடலை வருத்தி இறைவனை வணங்கி கொண்டு உள்ளோம்" என்றனர்.
அதற்கு செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள், "வருந்தாதீர்கள், உங்களுக்கு சுவனம் கிடைக்க வேண்டுமாயின் இந்த வணக்கத்தினால்தான் கிடைக்க வேண்டும் என்றில்லை. ஆனாலும் அல்லாஹ் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க போதுமானவன்" என்று பிரார்த்தித்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றனர்.

மீண்டும் நடையை தொடர்ந்தனர். அப்போது இன்னும் சிலரை கண்டனர். அவர்கள் நடைபிணங்களை போன்று காட்சியளித்தனர். "நீங்கள் யார்? உங்களின் இந்த நிலைக்கு என்ன காரணம்" என்று வினவினர் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள்.

அதற்கு அவர்கள், "நாங்கள் நரகத்திற்கு அஞ்சவுமில்லை, சுவர்க்கத்தை விரும்பவும் இல்லை, அல்லாஹ்வின் நாட்டப்படி எது கிடைத்தாலும் அதனை ஏற்றுகொள்கிறோம். ஆனால் அல்லாஹ்வின் அன்பு எங்களின் உள்ளத்தில் ஆட்சி செய்கிறது. அதுவே எங்களை இவ்வாறு மாற்றியமைத்துவிட்டது" என்றனர்.

அதனை கேட்ட செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் மிக்க மகிழ்ந்தார்கள். "நீங்கள்தான் தன்னல நோக்கமின்றி தவம் செய்யும் தூயவர்கள். நீங்கள்தாம் இறையண்மையை எய்தப்பெற்றவர்கள்" என்று மூன்று முறை கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றனர்.

0 comments:

Post a Comment