சவூதி அரேபியாவில் வாகனம் செலுத்திய பெண்ணுக்கு 10 கசையடிகள்

, , No Comments
சவூதி அரேபியாவில் வாகனம் செலுத்திய 'குற்றத்திற்காக' பெண்ணொருவருக்கு பத்து கசையடி விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு நீண்டகாலமாக தடை உள்ளது. இத்தடையை மீறியமைக்காக நீதிமன்றமொன்றின் மூலம் தண்டனை அளிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
சைமா ஜஸ்டைனா எனும் 30-40 வயதுக்கிடைப்பட்ட பெண்ணொருவருக்கே அனுமதியின்றி வாகனம் செலுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவதை பொலிஸார் நிறுத்தி விசாரிப்பர். இனிமேல் 'அத் தவறை' செய்யமாட்டோம் என உறுதியளித்தால் அவர்களை செல்ல அனுமதிப்பது இதுவரை வழக்கமாக இருந்தது. எனினும் இத்தகைய தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிக எண்ணிக்கையான பெண்கள் வீதிகளில் வாகனம் செலுத்துவது கடந்த ஜுன் மாதம் முதல் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் வாகனம் செலுத்துவதை தடுக்கும் ஒரே நாடாக சவூதி அரேபியா உள்ளது. பெண்களுக்கு உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்குவதாக அந்நாட்டு மன்னர் அப்துல்லா அறிவித்து இரு தினங்களில், பெண்ணொருவர் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக கசையடித்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தீர்ப்பு குறித்து தொலைபேசி செவ்வியொன்றை வழங்கிய சவூதி அரேபியாவின் மனித உரிமைகளுக்கான தேசிய சமூகத்தைச் சேர்ந்த சோஹிலா ஸெய்ன் எல் அபைதீன் முபாரக் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
'இத்தீர்ப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் இவ்வாறான பிரதிபலிப்பை நாம் எதிர்பார்த்தோம்' என அவர் கூறினார்.
அதேவேளை 'போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்கு அபராதம்தான் அதிகபட்சமாக விதிக்கப்படும். கசையடி அல்ல.
நபிகளாரின் மனைவிமார்கூட ஒட்டகங்கள், குதிரைகளை செலுத்தினர். ஏனெனில் அக்காலத்தில் அவை மாத்திரமே போக்குவரத்துக்கான வழியாக இருந்தன' என அவர் கூறியுள்ளார்.
-TamilMirror.LK

0 comments:

Post a Comment