கனவு இல்லம் - சில ஆலோசனைகள்

, , No Comments
கனவு இல்லம்! சில ஆலோசனைகள்.

மனிதன் கனவுக் காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் கனவிலும், நினைவிலும் தவழ்வது ஒரு அழகான வீடு.

தனக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது அவனது லட்சியமாகின்றது. அதற்காக முயற்சிக்கிறான். வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை செய்துப் பார் என்று தமிழில் ஒரு வழக்கு வாக்கியம் உண்டு. இரண்டும் கஷ்டமானது என்பதை மட்டும் இந்த வாக்கியம் உணர்த்தவில்லை. இந்த இரண்டிற்கான முயற்சியிலும் அதிக கவனம் தேவை என்பதையும் உணர்த்துகின்றது.

நமக்கென்று ஒரு சொந்த வீட்டுக்கான லட்சியத்தின் முன்னேற்றமாக நாம் வீடு கட்ட துவங்கும் போது நமது லட்சிய வீட்டிற்கு பல விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீடு கட்ட துவங்கும் முன்,
1) கூட்டு ஆலோசனை.

கூட்டு ஆலோசனை என்பது வாழ்வின் எல்லா நிலையிலும் பலனளிக்கக் கூடியதாகும் என்பதால் நம் வீட்டிற்காக அவ்வப்போது கூட்டு ஆலோசனையை நாம் நடத்திக் கொள்ள வேண்டும். இதில் நம் குடும்பத்தின் முக்கிய நபர்கள், மனைவிப் போன்ற குடும்பத்தலைவிகள், நண்பர்கள், குறிப்பாக நம் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் அக்கறையுள்ளவர்கள் இவர்களோடு ஆலோசனையில் ஈடுபடுதல். இந்த ஆலோசனை நம் வீட்டில் நமக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் பற்றி இருக்க வேண்டும்.

2) விசாரணை.

நாம் வீட்டு வேலையைத் துவங்குமுன் முடிந்த அளவு இடம் உட்பட, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் - அதன் விலைகள், வீடுகட்ட பொறுப்பேற்கும் நபர்கள் பற்றி விசாரணையில் ஈடுபடுவது முக்கியமாகும்.

3) முன்னேற்பாடு.

வீடு கட்டத் துவங்கு முன் தேவையான முன்னேற்பாடுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் இதர தகவல்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.

1) இடத்திற்கான வரைப்படம்.

இடம் வாங்கும் போது அந்த இடத்திற்கான வரைப்படம் மிக முக்கியமாகும். அந்த இடத்தின் முழுஅமைப்பையும், நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் அளவையும், உங்கள் இடத்திற்கு முன், பின், இட, வலப் புறங்களின் நிலவரத்தையும், அகல நீளங்களையும் உங்கள் பார்வைக்கு வைப்பது அந்த இடத்தின் லேஅவுட் என்று சொல்லப்படும் இடத்தின் வரைப்படமாகும்.

சாலை வசதி, மின்சாரம், தண்ணீர் வசதி, மருத்துவமனை, விளையாட்டுத் திடல், பள்ளிவாசல், அருகில் உள்ள - வரவிருக்கின்ற தொழிற்சாலைகள் போன்றவைக் குறித்து விபரம் அறிதல். இவை வரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கின்றதா என்று அறிதல்.

நாம் வாங்கும் இடம் பற்றிய அறிவு மிக முக்கியம். நம் இடம் தாழ்வான பகுதியில் இருக்கின்றதா... மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குமா என்று அறிதலும் அவசியம்.

இந்த இடத்திற்கான அரசாங்க அனுமதி (விற்க - வாங்க) பெறப்பட்டுள்ளதா என்று பார்ப்பதும் நம் இடத்திற்கான சாலை வசதி (வீடு சாலையை ஒட்டி இருக்கின்றதா - தூரமா) எப்படியுள்ளது என்று கவனிப்பதும் அவசியமாகும்.

தண்ணீர் வசதி நம் இடத்தில் இருந்தாலும் அரசாங்கம் வழங்கும் தண்ணீர் வசதி இருக்கின்றதா... இல்லையென்றால் அது கிடைக்கும் வாய்ப்புள்ளதா.. என்று அறிதல்.

லீகல் ஒப்பீனியன்.

வழக்குறைஞர் மூலம் பெறப்படும் தகவல் (நாம் வாங்கும் இடம் விற்பவரின் சொந்த சொத்தா என்று அறிதல்).

அரசாங்கத்திலிருந்து பெறப்படவேண்டியத் தகவல் (அரசின் எதிர்காலத்திட்டங்களில் நம் இடம் இடம்பெறுகின்றதா..? உதாரணமாக அரசின் சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் நம் இடமும் அடங்குமா என்றத் தகவல்)

வீடு கட்டுதல்.

வீடு கட்டத்துவங்கும் முன் நம் குடும்பத்தாருடன் ஆலோசனையில் ஈடுபடுதல். இது மிக முக்கியமாகும். இந்த ஆலோசனை நம் பொருளாதார சக்திகுறித்தும் அதற்கேற்ப நம் தேவைகளை எப்படி பூர்த்தி செய்துக் கொள்வது என்பது குறித்தும் இருக்க வேண்டும். கட்டிடத்தின் அளவு தேவையானதாகவும் போதுமானதாகவும் இருக்க வேண்டும். தேவைக்கதிகமாக கட்டிடத்தைக் கட்டி உபயோகமில்லாமல் போட்டு வைப்பதென்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அதிகப்படியான கட்டுமானத்தில் முடங்கும் நம் பொருளாதாரம் பற்றி நாம் அக்கறைக் கொள்ள வேண்டும்.

தேவைக்கதிகமாக கட்டப்படும் கட்டிடங்களை பராமரிக்க ஒரு பெரும் தொகை ஒதுக்கும் நிலை ஏற்படும். அல்லது பராமரிக்கப்படாமல் அவை பொலிவிழந்து போகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிபுணர்களின் ஆலோசனை.

நம் வீட்டுக்குத் தேவையான கட்டுமான இதர பொருட்களை வாங்குமுன் அன்றைய மார்க்கட் நிலவரம் என்னவென்பதை அறிவதும் அதற்கு அத்துறையின் நிபுணர்களை அனுகுவதும் முக்கியமாகும். வீட்டில் நமக்கு தேவை என்னவென்பதையும் நமது பொருளாதார நிலைமையையும் மறைக்காமல் நிபுணர்களிடம் சொல்ல வேண்டும். அது பலவகையில் நமக்கு உதவியாக இருக்கும். தாழ்வான பகுதி என்றால் வீட்டை உயர்த்திக் கட்டும் நிபுணரின் ஆலோசனையை ஏற்க வேண்டும். அது நம் வீட்டுக்கு தக்கப் பாதுகாப்பை ஏற்படுத்தும். அவர்களின் ஆலோசனையில் முறையான திட்டங்கள், வீட்டு அமைப்புப்பற்றிய விபரமான வரைப்படம் ஆகியவற்றை வேலையைத் துவங்குமுன் தயாரித்துக் கொள்வது சிறந்தது.

கவனிக்க வேண்டியவை.

கட்டிட வேலைத்துவங்கியப் பிறகு 'பிளானை' மாற்றக் கூடாது. அப்படி மாற்றிக் கொண்டிருந்தால் அது நமது பொருளாதாரத்தையும் பொழுதையும் ஏராளமாக வீண்விரயம் செய்து விடும்.

கட்டிட வேலையைத் துவங்குதல்.

அடித்தளத்திற்காக திட்டமிடுதலும் தேவையான -போதுமான அளவு மட்டும் இரும்பை பயன்படுத்துதலும் முக்கியம். ஒவ்வொரு கட்டத்திலும் ஆலோசனைகள் முக்கியம் அது நம் தேவைக்கதிகமான செலவுகளை குறைக்கும்.

பொருட்கள் வாங்குதல்.

சிமண்ட் - ஸ்டில் போன்றவற்றை தரம் பார்த்து ஐஎஸ்ஐ முத்திரையுடன் வாங்க வேண்டும். ஒன்றுக்கு நான்கு இடங்களில் விலைப்பட்டியல் வாங்கி விலைகளை சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம். மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட - நல்லப் பெயருடன் விற்பனை செய்யும் டீலர்களிடம் தான் பொருட்களை வாங்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் சிமெண்ட்டை ஸ்டோர் பண்ணக் கூடாது. அதிகப்பட்சமாக நாம் வாங்கும் சிமண்ட் மூட்டைகளை தொண்ணூறு நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். இந்த அவகாசத்தை கடந்தால் அதன் இறுக்கம் குறைந்து விடும்.

எல்லா சிமெண்ட்களுக்கும் நல்லவைதான் முறையான கலவை கலந்து பயன்படுத்தும் போது.

ஸ்டில்.

தேவையான அளவுகளை குறித்துக் கொண்டு அந்த அளவுக்கு மட்டுமே ஸ்டில் வாங்க வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைக்கதிகமாக நாமாக வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது.

மரம்.

உலர்ந்த மரமாக பார்த்து - சிறந்த மரத்தை தேர்வு செய்து தேவையான அளவுகளில் வேலைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.

செங்கற்கள்.

பெரிய அளவாகவும், அழுத்தமான கல்லாகவும் பார்த்து வாங்குதல் முக்கியம். இவ்வாறான கற்கள் செங்கற்களின் எண்ணிக்கையையும், சிமெண்டையும், கட்டுமான கூலியையும், நம் நேரத்தையும் கனிசமான அளவு மிச்சப்படுத்திக் கொடுக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஒயர்.

ஐஎஸ்ஐ முத்திரை கவனித்து வாங்க வேண்டும்.

கட்டிடம் கட்ட நாடுபவர்கள் கவனத்திற்கு.

நேர்மையான, அனுபவமுள்ள, தான் செய்யும் தொழிலில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் பண்புள்ள, ஆர்வத்துடனும் எல்லாத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த லேபர் ஒப்பந்தக்காரர்களை தேர்வு செய்வது மிக முக்கியம். நீங்கள் எவ்வளவு சிறந்த பொருட்களை வாங்கினாலும் அதை முறையாக பயன்படுத்தினால் தான் அதன் பயன்பாடு சிறப்பாக இருக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.

விரயமும் - சேமிப்பும்.

எந்தப் பொருளையும் தேவைக்கு மட்டும் வாங்குவதும், வாங்கும் பொருட்களை அந்தந்த நேரத்தில் முறையாக பயன்படுத்துவதும், ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்துவதும் நமது மொத்த செலவீனங்களிலிருந்து ஐந்து சதவிகிதத்தை மிச்சப்படுத்தி நமக்கு கொடுக்கும் என்பதை இறுதியாக கூறிக் கொள்கிறோம்.


--------------------------------------------------------------------------------

وَاللّهُ جَعَلَ لَكُم مِّن بُيُوتِكُمْ سَكَنًا

அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளில் அமைதியை ஏற்படுத்தியுள்ளான் (அல்குர்ஆன் - 16:80)

0 comments:

Post a Comment