நபிகால இஸ்லாமிய ஒற்றுமை!
1. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் – அவன் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை. அல்குர்ஆன் ;112 இஃஹ்லாஸ்-ஏகத்துவம்:1-4)
2. நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (ஆலஇம்ரான்: 3:103)
3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்மாயிதா: 5:3)
4. (மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். (அல்அஃராஃப் 7:3)
தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோர்களின் குறுகிய கண்ணோட்டம்:
தவ்ஹீத் சிந்தனை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் இந்த நாளில் தவ்ஹீதை நிலைநாட்ட, வரிந்து கொண்டு செயல்படுவோரும், தவ்ஹீதைச் சரியாக புரிந்து கொண்டுள்ளனரா? என்பது இன்றளவும் கேள்விக்குறியே? தவறாக புரிந்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுவதாய் எவரும் தவறாய் புரிந்து கொள்ள வேண்டாம். தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைத் தனிமைப்படுத்தி, பீற்றிக் கொள்ளுபவர்கள் பேச்சும், நடைமுறையும் எமது கூற்றை மெய்ப்பிக்கும். இதிலிருந்து விடுபட்டோர் அரிதானவர்களாகவே இருப்பர். அதி தீவிர – தவ்ஹீத்வாதிகள் பேச்சும் நடைமுறையும் நடுநிலைத் தவ்ஹீத்வாதிகள் முகத்தைச் சுளிக்கச் செய்கிறது – என்றால், மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமிருக்கிறதா?
இஸ்லாம், தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும், உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் – இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் – குறுகிய வரையறைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
தவ்ஹீத், குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட – தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்ற மாயத் தோற்றம் – தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பரத் தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.
இஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாயம் முழுமைக்கும், எல்லாக் காலங்களிலும் பொதுவுடைமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக, மிக அழுத்தமாய் இங்கே கோடிட்டுக் காட்ட விழைகிறோம். தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக் கொள்கை – அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப் பெயர் அல்ல.
“தவ்ஹீத்” இஸ்லாத்தின் மூலக் கொள்கை – அன்றி-ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமை அல்ல. ஒரு கொள்கைப் பிரிவார், தங்களைத் தனிமைப்படுத்தி, பிரித்துக் காட்ட, தங்கள் கூட்டமைப்பிற்கு இட்டுக் கொள்ளும் பிரிவுப் பெயருமல்ல. இதை சம்பந்தப்பட்ட அனைவரின் சிந்தனைக்கும் கொண்டு வருகிறோம். தவ்ஹீத்-ஒரு கொள்கைப் பிரிவாருக்கான தனிப் பெயருமல்ல: பிரிவுப் பெயருமல்ல: இது துவக்கத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.
சீரிய சிந்தனையாளர்கள் கூட மற்றவர்களிடமிருந்து, தங்களைத் தவ்ஹீத் வாதிகள் என்றே இனம் பிரித்துக் காட்டினார்கள்.
தங்களின் கூட்டமைப்பு- அஹ்லுஸ் ஸுன்னத் – வல் – ஜமாஅத்தார்களிடமிருந்து பிரத்தியேகப்படுத்தி, பிரித்துக்காட்ட- தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக் கொண்டார்கள். அதில் பெருமைப்பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று, இவர்கள் பங்கிற்கு, இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவைத் தோற்றுவித்து விட்டார்கள். எடுத்துக் காட்டினால், சம்மந்தப்பட்டவர்கள் ஜீரணிப்பது மிக, மிக சிரமமே.. சீறிப்பாய்கிறார்கள். என்ன செய்வது? உண்மை – சத்தியம் கசக்கத் தானே செய்யும்.
எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தபோது, தவ்ஹீதைத் தனிப்படுத்தும் “ஸ்லோகம்;” எங்காவது எப்போதாவது கேட்கும் முனகலாயிருந்தது. அப்போது, பிரிவுப் பெயர் எதிர்ப்பாளர்கள் கூட – இதைப் பொருட்படுத்தவில்லை. அலட்சியப்படுத்திவிட்டார்கள் போலும்” அல்ல அல்ல. இது காலப்போக்கில் கரைந்து விடும் என்று கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள். ஆனால் எண்;ணிக்கையில் இவர்கள் கூடுதலாகியபோது, முனகலாயிருந்தது பரவலான முழக்கமாயிற்று.
பத்து, நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் எ;ன்றோ, அதைவிட கூடுதலாகவோ – பக்தர்கள் கூட்டம் கூடியவுடன் – குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக் கொள்ளவோ – இயக்கங்கள் காணவோ – அமைப்புகள் ஏற்படுத்தவோ – ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்) அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக -ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்:
ஒன்றுபடுத்தப்படவும் வேண்டும் என்ற உன்னத இலட்சியத்திற்காக அல்லாஹ்வால், அருளப்பட்ட அருட்கொடையே – ஓரிறைக் கொள்கை.
- இதை நாமாகக் கூறவில்லை. இறை நெறிநூலும், இறை தூதர்(ஸல்) அவர்கள் வாழ்க்கை வழிகாட்டுதலும் நமக்கிதை ஐயத்திற்கிடமின்றி உணர்த்திக் காட்டுகின்றன. மாதிரிக்கு சில இறைவாக்குகளை மட்டும் தலைப்பில் முகப்புரையாக அன்பர்கள் சிந்தனைக்கு விருந்தாக்கியுள்ளோம். நெறிநூல் அல்குர்ஆனை உற்று நோக்கி இதை உணர்ந்து கொள்ளலாம். இல்லையெனில் மேலோட்டமாய் நோட்ட மிட்டாலே புரிந்து கொள்ளலாம்.
மனித சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஓரிறைக்கொள்கை – இறை ஒருமை!
பல தெய்வ வழிகேடுகளை – வழிபாடுகளாகவும், ஒழுக்கக் கேடுகள் அனைத்தையும் உயர் நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதைப் பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்களையும், குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக் கொண்டும், அனைத்து அநாகரிகங்களையும் நன்மைகளாகவும்;, புண்ணியங்களாகவும், விலங்கினும் கீழாய் வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க வைத்த இலட்சிய வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது? ஓரிறைக் கொள்கை! இறை ஒருமை!
இஸ்லாமிய வாழ்க்கை நெறியின்; மூலக் கொள்கை, இறைவன், ஏகன், அநேகன் அல்லன்” இறைவனை-இறைவனாகவும், மனிதனை மனிதனாகவும் வேறுபடுத்தி இனங்காட்டும் ஒப்பற்றக் கொள்கை! இறைவனை மனிதனோடும், மனிதனையும், மனிதர்களையும் இறைவனோடும் இரண்டறக் கலக்கும் இரு (வழிகே)ட்டில் மூழ்கிக் கெட்டழிந்த மனித சமுதாயம் மீட்சிப் பெறச் செய்த கொள்கை ஓரிறைக் கொள்கை! (அல்குர்ஆன் 112;:1-4)
இவ்வற்புதம், இறுதி நெறிநூல் யாருக்கருளப்பட்டதோ – அந்த இறுதி இறைத் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், 23 ஆண்டுகளில், அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது.இந்த பேருண்மை இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது.
ஆச்சரியத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் ஜீரணிப்பதும் மிகமிக (எளிதாய் இல்லை) கஷ்டமாயிருக்கிறது. ஏன்?
ஒற்றுமையின் எதிர்ப்பதங்கள்:
இவர்கள் வாழ்வு – ஒற்றுமைக்கு எதிர்ப்பதமாகவே அமைந்திருக்கிறது.பிரிந்து வாழ்வதிலும் பிளவுபடுவதிலும் இன்புறும் இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு, இஸ்லாம், ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில், முஸ்லிம்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் மலைப்பாயிருக்கிறது. இன்றைய பெயர் தாங்கிகள்-ஒற்றுமை ஒற்றுமை என்று பிதற்றுவதெல்லாம் வெறும் பிரிவினைவாதங்களே! உண்மை ஒற்றுமையல்ல!
இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்கள் குழு மனப்பான்மைக் கொண்டவர்களே! அன்றி சமுதாய உணர்வு உள்ளவர்கள் அல்ல. ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கலாம். விதிவிலக்கு பொது நியதியல்ல.
தற்காலிகமாய் பல குழுக்கள் ஏதோ தவிர்க்க இயலாத காரணங்களால் அல்லது ஏதேனும் விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறும் முன் அல்லது நிறைவுற்றதும் மீண்டும் பிரிந்து விடுவதும் சமுதாயமாகுமா? உலகியல் நியதிப்படி இதை ஒற்றுமை என்று வாதிடலாம். இஸ்லாமிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு, அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்க முடியுமா? ஒருக்காலும் ஏற்க முடியாது.
பிரிவுகளும், பிளவுண்ட குரூப்பிஸ போக்குகளும் (எப்படி ஒற்றுமையாக முடியும்? ஒருக்காலும் அது ஒற்றுமையாகாது) அணி மனப்பான்மையும், அவற்றிற்கு இவர்கள் சுய வாழ்வு அனுபவங்களும் மிகப் பெரிய சாட்சியங்களாகும்.
இவர்கள் நடைமுறைக்கும், சொந்த அனுபவத்திற்கும், பரம்பரை வழக்கத்திற்கும், மூதாதையர்கள், பெரும்பான்மையோர் முடிவிற்கும் மாற்றமான ஒன்றை – ஏற்பது மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் கடினமே! சாத்தியமே இல்லாத விஷயமாய் தெரிகிறது. இது மனிதன் அல்லது மனிதர்கள், மனித இயல்பின் அடிப்படையில் கண்ட முடிவு. ஆனால் மார்க்க முடிவோ – இதற்கு முரணாயிருக்கிறது. நெறிநூலிலிருந்தும், நபி வழி காட்டுதல்களிலிருந்து நேரடியாக அல்லது அவைகளுக்கு ஒத்ததாக இருக்கக் கூடியவைகள் மட்டும் மார்க்க முடிவுகளாகும்.
அல்லாஹ்வும், இறைத்தூதரும் ஒரு கருத்து அல்லது கொள்கை குறித்து, இறுதி முடிவெடுத்து விட்டால், அதில் எக்கார ணத்தை முன்னிட்டும் வேறு அபிப்பிராயம் அல்லது மாற்றுக் கருத்து ஏற்படுத்திக் கொள்ள எந்த முஃமினான ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரமில்லை. மாற்றுக் கருத்து கொள்பவர் வழிகேட்டில் நிலைத்திருப்பவராவர். (அல்குர்ஆன்: 33:36 இறைவாக்கின் சாரம்சம்)
மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியுமா?
உலகெங்கும், பரவலாய், பிளவுண்டு, சிதறிக்கிடக்கும் மனிதர்களை ஒன்றிணைத்து ஒரே சமுதாயமயமாக்கும் உயர் இலட்சியம், நீண்ட நெடுங்காலமாய் வெறும் கற்பனையான தோற்றமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மனித சக்திக்கு உட்பட்டு, மனிதர்கள் சாதிக்க முடியாத ஒன்று உண்டென்றால், அது மனித சமுதாயம் முழுமையும் ஒன்றிணைப்பதே! அறிஞர் முதல் பாமரர் வரை இதில் அனைவரும் கருத்தொருமிக்கின்றனர்.
மொழி, இனம், நாடு, நிறம், பல்வேறுபட்ட தத்துவங்கள், அரசியல்,
பொருளாதாரம், ஆத்திக மதங்களால், நாத்திக சித்தாத்தந்தங்களால் ஏற்பட்டு வரும் வழிகேடுகள், விபரீதங்கள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் ஒழுக்க கேடுகள் போன்றவைகளால் கணக் கிலடங்கா பிரிவுகளிலும், பிளவுகளிலும் சிக்கி நாளுக்கு நாள், எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அகில உலக மாந்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட மனித சமுதாய (மய)மாக்கும் சாத்தியக் கூறுகள் – வெற்றுக் கனவுகளே! இது, சில காலம் முன்பு வரை அஞ்ஞானிகள் கண்ட தவறான முடிவு. ஆனால், இன்று, அல்ஹம்துலில்லாஹ், அந்த அவல நிலை மாறி அதற்குரிய சாத்தியக் கூறுகள் உண்டு. இஸ்லாம் மட்டுமே இதைச் சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாடுடைய சமூக இயல் ஆய்வாளர்களும் உதயமாகி இருக்கிறார்கள். இந்த வியப்பிற்குரிய உண்மையை, ஜீரணிக்கு முன், இதை எடுத்துக் காட்டியவர், ஒரு முஸ்லிம் அல்ல என்பது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகிறது. (காண்க நூல்: இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம். பக்கங்கள் 256 முதல் 269 வரை) ஆம்! இஸ்லாத்தை அதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியும் வேட்கையுடன், ஆய்வு செய்வோருக்கே இந்த பேருண்மை புலப்படும், பரம்பரை பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு இது புலப்படாமல் போனதில் வியப்பில்லை.
ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்: அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்-வ-அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு – என்ற இஸ்லாமிய கொள்கை முழக்கத்தோடு, இறைத் தூதர் (ஸல்) அவர்களின், இஸ்லாமிய அழைப்புப் பணித் துவங்கியது. இருபத்து மூன்றாம் ஆண்டு, ஹஜ்ஜத்துல் விதாவுவில், இஸ்லாம் நிறைவுற்றது (இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்;.5:3) என்ற இனிய இறைவாக்கு அருளப்படும்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை, முஸ்லிம்களின் ஜமாஅத்தை உருவாக்கிக் காட்டினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ். இப்படிப்பட்ட உன்னதமான ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அடிகோலியது எது?
இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அவர்களைப் பின் தொடர்ந்தவர்களும் 7:3, இறை வாக்கின் அடிப்படையில், இறையருளியதை மட்டுமே பின்பற்றி இந்த அற்புத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். அன்று பிரிவுக்கும், பிளவுக்கும் வித்திடும் அனைத்து வழிகேடுகளும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டன. 3:103, இறைவாக்கின் அடியொற்றி, இஸ்லாமிய ஒற்றுமை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டப்பட்டது. முஸ்லிம்கள் ஒன்றுபடுவதையும், அதில் நிலைத்திருந்ததையும் 5:3 இறைவாக்கு இஸ்லாம் நிறைவுற்றது என்று உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த இறைவாக்கை மூச்சுக்கு முன்னூறு தடவை என்றல்ல, இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலை நாட்டுகிறோம் என் போர் பேச்சிலும், எழுத்திலும் முழங்கி வரும் நம்மவர்கள் – அதிலிருந்து படிப்பினை பெறத் தவறியது ஏன்?
இஸ்லாம் நிறைவு பெறும்போது (5:3) ஓரிறைக் கொள்கை – தவ்ஹீத் – முஸ்லிம்கள் அனைவர்களது வாழ்க்கை நடைமுறையால் பிரதிபலித்துக் காட்டப்பட்டதேயன்றி, தங்களைத் தனிமைப்படுத்திக் காட்ட பயன்படுத்தப் படவேயில்லை. தவ்ஹீத்வாதிகள் என்று யாரும் தங்களைத் தனிமைப்படுத்திக் காட்டவில்லை. தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று எதுவும் உருவாகவில்லை. பிற்காலத்தில் அப்படி உருவாக்கும் எந்த முகாந்திரத்தையும் இஸ்லாம் விட்டு வைக்கவில்லை. தவ்ஹீத் இஸ்லாத்தின் உள்ளடக்கம். அதைத் தனிமைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை என்பதை அன்றைய உண்மை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தார்கள். கொள்கை சகோதரர்கள் இன்றைய வழிகேடர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திட தவ்ஹீதைப் பயன்படுத்துவது சரிதானா? தவ்ஹீதைப் பிரிவினைவாதத்துக்கும் பிளவுபடுவதற்கும் துணைக்கழைப்பது
இஸ்லாத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.
தவ்ஹீத்வாதிகள் – நேர்வழி பெற்றவர்கள் உயர்ந்தவர்கள்
அனாச்சாரவாதிகள்- வழிகேடர்கள்-தாழ்ந்தவர்கள். இதை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுகிறோம் என்போர் எழுதவில்லை. பேசவில்லை. உண்மை, அவர்களின் நடைமுறை இதை மெய்ப்பிக்கிறது” விதிவிலக்கு வெகு சொற்பம். மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க அல்லாஹ்வால் அருளப்பட்ட ஓரிறைக் கொள்கை! இன்று நம்மவர்களால் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க பயன்படுத்தப்படுகிறதென்றால்… இதைவிட, ஓரிறைக் கொள்கைக்கு இழைக்கப்படும் கொடுமை வேறெதுவும் இருக்க முடியுமா?
சம்பந்தப்பட்டவர்கள் ஆத்திரம் அடைய வேண்டாம். ஆழ்ந்து சிந்தித்து – தவறிலிருந்து விடுபட அன்போடு அழைக்கிறோம். மற்றப் பிரிவுப் பெயர்கள்: ஹனபி, ஷாஃபி என்றும் மத்ஹபுகள் பெயரால், தரீக்காக்கள் பெயரால், மன்றங்கள் பெயரால், ஜமாஅத்கள் பெயரால், அரசியல் கட்சிகள் பெயரால் இன்னும் எழுத்தில் வடிக்க இயலாத பிரிவிலும் பிளவிலும் சிக்கி, சிதறி, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்களை,
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.7:3 இறையருளியதைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் (3:103)
இறை நெறிநூலோடு ஐக்கியமாகி ஒன்றுபட்ட உண்மை முஸ்லிம்களாக அழைப்பு விடுக்கும் மகத்தான சேவையில் ஈடுபட வேண்டிய நாம் தவ்ஹீத்வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம், ~ஜாக்ஹ், அஹ்ல ஹதீஃது, ஸலஃபி, இவையன்றி, அந்தந்த குழுக்கள் சரிகண்ட தனித்தனி பெயர்களில், அமைப்புகள், இயக்கங்கள், ஜமாஅத்கள், மன்றங்கள், அழைப்பு மையங்கள் என்று முன்னரே பல்வேறு பெயர்களில் பிளவுண்டோரை மீண்டும் பிரிக்காமல், முஸ்லிம்கள் என்று நம்மை நாமே தனிமைப்படுத்தி பிரிந்து செல்லாமல், முஸ்லிம்கள் என்ற நிலையில் உம்மத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைக்கும் தொலை நோக்கிற்கு – நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு அனைவரையும் கேட்டுக்கொண்டு, அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்து இந்த ஆய்வை நிறைவு செய்கிறோம். வஸ்ஸலாம்.
முஹிப்புல் இஸ்லாம்
நன்றி:readislam.com
0 comments:
Post a Comment