விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல!

, , No Comments
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம், விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல!
தலைப்பிறை கணக்கு ஓர் அறிமுகம்
அன்பிற்குரிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நாம் ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வருகிறதென்றால் இன்று நோன்பு வைப்பதா? நாளை நோன்பு வைப்பதா? என்று மக்கள் குழம்பித் தவிப்பதை பார்க்க முடிகிறது. விஞ்ஞான மார்க்கத்தில் இருந்து கொண்டு இவ்வளவு குழப்பம் தேவையில்லாதது. பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள். அது மறைவாக இருந்தால் அந்த மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் என்கிற ஒரு ஹதீஸை வைத்துக் கொண்டு மக்கள் படாத பாடுபடுகின்றனர். ரஸுல்(ஸல்) அவர்கள் ஏன் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஆதாரமாக புகாரி,  1913ம் ஹதீஸ் நபி(ஸல்) கூறியதாக இப்னு உமர்(ரழி) அறிவிக்கிறார்கள்.

நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறியமாட்டோம். விண் கலையையும் அறியமாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும் சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வானவியல் கணக்கை அறியாததன் காரணமே பிறை பார்க்கக் கூறியது என்பதை இந்த ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.
* வானவியல் கணக்கை துல்லியமாக அறியக்கூடிய இந்நாட்களில்,
* தொழுகைக்கான நேரங்களை முன் கூட்டியே தீர்மானிக்கக்கூடிய  இந்நாட்களில்,
* சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் எப்பொழுது ஏற்படும் என்பதை துல்லியமாக அறியக்கூடிய இந்நாட்களில்,
* இஸ்லாம் விஞ்ஞானப்பூர்வமான மார்க்கம் என்று மிகப்பெரிய மேதைகளெல்லாம் அறிவிக்கக்கூடிய இந்நாட்களில்
நாங்கள் பிறையை கண்ணால் பார்த்துத் தான் அறிந்து கொள்வோம் என்று மூன்றாம் பிறையைப் பார்த்து அமல்களை அமைத்துக் கொள்கின்றனர். மாதத்தின் ஆரம்பத்தை முன் கூட்டியே தீர்மானிக்கும் திறனைப் பெற்ற நாம் அதை ஏற்றுக் கொள்ளாததால் சரியான நேரத்தில் நமது அமல்களை அமைத்து உரிய நன்மையைப் பெற முடியாதவர்களாக ஆகிறோம் என்பதை உணர வேண்டும்;. சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் கட்டளைப்படி எந்தவித மாறுதலும் இல்லாமல் இயங்குகின்றன என்பதற்கு அல்குர்ஆன் கூறும் வசனங்களைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்
சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே உள்ளன – திருகுர்ஆன் 55:05
சூரியனை ஒளி அளிப்பதாகவும் நிலவை ஒளியைப் பிரதிபலிப்பதாகவும் அவனே ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறியும் பொருட்டு அதற்கு பல படித்தரங்களை உண்டாக்கினான். தக்க காரணங்கள் இன்றி ஏக இறைவன் இவற்றைப் படைக்கவில்லை. அறிவுள்ள மக்களுக்கு தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். திருகுர்ஆன் 10:05
இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாய் ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். உங்கள் இரட்சகனிடமிருந்து நீங்கள் அருளைத் தேடிக் கொள்வதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கை மற்றும் கணக்கை நீங்கள் அறிவதற்காகவும் பகலின் அத்தாட்சியை பார்ப்பதற்குரியதாகவும் ஆக்கினோம். (இவ்வாறே) ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்தோம். திருகுர்ஆன் 17:12
வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்விடம் அவனது பதிவுப்புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டே@ அவற்றில் நான்கு புனிதமானவை. இதுவே நேரான மார்க்கம். எனவே, அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். (தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். அவை மக்களுக்கு காலங் காட்டியாகவும், ஹஜ்ஜின் காலத்தை அறிவிப்பவையாகவும் உள்ளன என தூதரே கூறும். அல்குர்ஆன் 9:36, 2:189
இரவைப் பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் வசப்படுத்தி இருக்கிறான். ஒவ்வொன் றும் (அதற்கு) குறிப்பிட்ட தவணையின்படி செல்கிறது…… திருகுர்ஆன் 35:13
பழைய பேரித்தம் குலையின் பாளையைப் போல் ஆகும் வரை சந்திரனுக்கு பல படித் தரங்களை ஏற்படுத்தியுள்ளோம். அல்குர்ஆன் 36:39
வானத்தில் கோள்களை உண்டாக்கி அவற்றிடையே ஒரு விளக்கையும் (சூரியனை) பிரதிபலிக்கும் சந்திரனையும் உண்டாக்கியவன் பாக்கியமிக்கவன். திருகுர்ஆன் 25:61
சூரியனையும், சந்திரனையும் தம் வழிகளில் (முறையாக) செல்லுமாறு இரவையும் பகலையும் அவனே உங்களுக்காக வசப்படுத்திக் கொடுத்தான். திருகுர்ஆன் 14:33
இரவையும், பகலையும், சூரியனையும், சந் திரனையும் உங்களுக்கு அவன் வசப்படுத்திக் கொடுத்தான். நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன. ஆய்ந்தறியக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதிலும் சான்றுகள் உள்ளன. திருகுர்ஆன் 16:12
அவனே விடியச் செய்பவன்” நீங்கள் அமைதிபெற இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காக சூரியனையும் நிலவையும், உண்டாக்கினான். இவையாவும், வல்லமை யால் மிகைத்த அனைத்தையும் அறிந்தவனின் ஏற்பாடாகும். அல்குர்ஆன் 6:96
இரவையும், பகலையும், சூரியனையும் நிலவையும் அவனே படைத்தான். அவை ஒவ்வொன்றும் வானில் நீந்துகின்றன. திருகுர்ஆன் 21:33
இவ்வாறு அல்லாஹ்(ஜல்) தனது திருகுர் ஆனில் கணக்குகள் பற்றியும் பிறை சந்திரன் பற்றியும் ஏராளமாக கூறியிருந்தும், நம் முடைய சகோதரர்கள் திருகுர்ஆனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து, பிறையைப் பார்த்து நோன்பு நோற்பதற்கு தம்மை உம்மி சமுதாயம் என்று கூறி அன்றைய சூழ் நிலையில் இதைத்தவிர வேறு வழியில்லை என்கிற காலத்தை இப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்று கூறி மாதத்தை முன் பின் ஆக்கி தங்களுடைய அமல்களைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் மக்கள் திருகுர்ஆனை சிந்திக்க வேண்டும்.
ஒரு காலத்தில் சூரிய ஓட்டத்தைப் பார்த்து நாம் தொழுகை நேரங்களை அறிந்து தொழுது வந்தோம். இன்று கடிகாரத்தைப் பார்த்து தொழுகை நேரத்தை அறியும் விதத் தில் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதால் சூரிய னைப் பார்ப்பதை விட்டு விட்டோம். அன்று தொழுகை நேர கால அட்டவணையை எதிர்த்தவர்கள் அனைவரும் இன்று ஏற்றுக் கொண்டு விட்டனர்.
அதேபோல் அன்று மாதம் பிறந்ததை பிறையை கண்ணால் பார்த்து முடிவு செய்த தற்கு மாறாக இன்று கணிணி கணக்கீட்டின் மூலம் எதிர்வரும் நூறு ஆண்டுகளின் 12 மாதங்களின் தலைப்பிறையை இன்றே மிகத் துல்லியமாக கணக்கிட்டுக் கூறும் அளவில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டு விட்டதால் இன்று பிறையைப் பார்க்க காத்திருக்கத் தேவையில்லை.
குறிப்பாக விண்ணியல் பற்றி அல்குர் ஆனில் பல வசனங்கள் இருந்தும் அவற்றைக் கணக்கில் கொள்ளாமல், நபி(ஸல்) காலத்தின் சூழ்நிலைக்கேட்ப அறிவித்த ஹதீஸ்களை தவறாகப் பொருள் கொண்டு பின்பற்றுகிறார்கள். பிறையை கண்ணால் பார்த்துத் தான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று வாதாடுபவர்கள் இது விஷயத்தில் குர்ஆன் வசனங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கணக்கிட்டு சொல்லும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையில் நாம் இஸ்லாத்திற்கு முரண்படாத கணக்கீட்டு முறையை அறியாதிருப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே சகோதரர்களே! கணக்கீட்டின்படி பிறையை அறிவது அல்லாஹ்வின் நெறிநூலாகிய திருகுர்ஆனுக்கோ நபிவழிக்கோ மாற்றமானதல்ல என்பதை அனைவரும் அறிந்து பின்பற்றி நம்முடைய அமல்களை நிறைவான அமல்களாக ஆக்குவோமாக.
வஸ்ஸலாம்.
வெளியீடு: மஸ்ஜிதுர் ரஹ்மான்
பழனி – 624 601.

0 comments:

Post a Comment