நோன்புப் பெருநாள் தர்மம்

, , No Comments
Post image for நோன்புப் பெருநாள் தர்மம்
புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை கடமையாக்கியுள்ளான்.
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு
உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கடமையாக்கினார்கள்.என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் அபூதாவுத்)
முஸ்லிமான அடிமைகள், அடிமை அல்லாதவர்கள் ஆண்கள், பெண்கள் அனைவர் மீதும் ஸகாதுல்
பித்ர் கடமையாகும். தனக்கும் தனது குடும்பத்தினருடைய தேவைக்கும் இருப்பதை விட ஒரு
ஸாவு மேலதிகமாக ஒரு முஸ்லிம் வைத்திருந்தால் அவரின் மீது ஸகாதுல் பித்ர் கடமையாகும்.
அடிமைகள்,அடிமைகள் அல்லாதவர்கள், ஆண்கள் பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து
முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் கடமையாக்கினார்கள்.
பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு “ஸாவு” எனவும் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள்
புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கி விட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டார்கள்.


அறிவிப்பாளர் இப்னு உமர் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
உணவிலிருந்து அல்லது பேரீச்சம் பழம், கோதுமை பாலாடைக் கட்டி, போன்றவற்றிலிருந்து ஒரு
ஸாவு நோன்புப் பெருநாள் தர்மமாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கொடுத்து வந்தோம்.
இன்னுமொரு அறிவிப்பில் அன்றைய உணவு கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி,
பேரீச்சம் பழம் ஆகியவையாகும்.
மேற்குறிப்பிட்ட உணவு வகைகளில் சிறந்த பிரயோசனமுள்ள உணவுகளை ஏழை, எளியோர்க்கு
கொடுப்பது ஒரு முஸ்லிமின் கடமையாகும்.
நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மையடைய
மாட்டீர்கள். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை
நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அபீ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் கூறப்பட்ட உணவு வகைகள்
அல்லாமல் இன்று மக்கள் உணவாக கருதக் கூடிய அரிசி போன்றவற்றை ஸகாதுல் பித்ராக
கொடுத்தால் அது ஆகுமானது என சில மார்க்க அறிஞர்கள் இப்னு தைமியா, இப்னுல் கையும்
போன்றோர் கூறுகின்றனர்.
ஸகாதுல் பித்ர் விடயத்தில் “ஸாவு” என்பது நான்கு முத்துகளாகும். முத்து என்றால்
நடுத்தரமான ஒரு மனிதனின் இரண்டு கைகளை இணைத்து சிறந்த கோதுமை போன்றவைகளை நிறைத்து
எடுப்பதாகும்.
நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்க இரண்டு நேரங்கள் உள்ளன:
1- பெருநாள் இரவு சூரியன் மறைந்ததிலிருந்து ஆரம்பமாகின்றது. அதிலே மிகச் சிறந்தது
பஜ்ர் தொழுகைக்கும், பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம். இப்னு உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஸகாதுல் பித்ரை
கடமையாக்கினார்கள். மேலும் பெருநாள் தொழுகைக்கு மக்கள் செல்வதற்கு முன் அதை கொடுத்து
விடுமாறும் ஏவினார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் புகாரி)
2- அனுமதிக்கப்பட்ட நேரம்: இந்த நேரம் பெருநாள் தினத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு
நாட்களுக்கு முன்பாகும்.
ஸகாதுல் பித்ரை பெறத் தகுதியானவர்களுக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கொடுத்தார்கள்.
மேலும் பெருநாள் தினத்திற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பும்
கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு யார் அதை வழங்கிவிடுகிறாரோ அது ஏற்றுக் கொள்ளப்பட்ட
தர்மமாகும். யார் அதை தொழுகைக்குப் பின் வழங்கிறாரோ அது பொதுவான ஸதகாவாகும். என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்
(ஆதாரம்:அபு தாவுத்)
பெருநாள் தொழுகை முடியும் வரை பிற்படுத்தினால் அது களாவாகும். அதாவது அதை மீண்டும்
திருப்பிக் கொடுக்க வேண்டும். நேரம் முடிந்து விட்டதனால் அந்தக் கடமை அவரை விட்டும்
நீங்கி விடாது. மேலும் பிற்படுத்தியதனால் அவர் பாவியாவார் என ஷைகுல் இஸ்லாம் இப்னு
தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஏழை, எளியோர்க்கு இந்த தர்மம் கொடுக்கப்பட வேண்டும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் இது ஏழைகளின் உணவு என
குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தர்மத்தை ஒரு ஜமாஅத்தினரிடமோ அல்லது
குடும்பத்தில் உள்ள அனைவருடைய பங்கையும் ஒரு ஏழைக்கு வழங்குவதோ
அனுமதிக்கப்பட்டுள்ளதாகும். தேவை ஏற்படின் ஒரு ஏழையின் பங்கை பிரித்து பலருக்கு
கொடுப்பதும் ஆகுமானதாகும்.
ஆனால் இந்த தர்மத்தை பணமாக கொடுப்பது ஆகுமானதல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பணம்
கொடுப்பதற்கு வசதி இருந்த போதும் உணவு வகைகளையே நபி (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். உணவின் பெறுமதியை கொடுப்பது ஆகுமானதாக இருந்தால் நபி (ஸல்)
அவர்கள் அதை தெளிவுபடுத்தியிருப்பார்கள். காரணம் சட்டங்களை தெளிவு படுத்துவது
அவர்களின் காலத்தில் அவசியமாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த
நபித்தோழர்கள் தன்னிடம் வசதி இருந்த போதும் எவரும் இந்த தர்மத்தை பணமாக கொடுத்ததாக
அறியப்படவில்லை. மேலும் பணத்தைக் கொடுப்பது கண்ணியமான இந்த அமலை மறைப்பதாகவும்,
இந்த சட்டங்களை மனிதர்கள் மறந்து போவதாகவும் ஆகிவிடுகிறது.
பெருநாள் தினத்தன்று எந்த ஊரில் இருக்கிறாரோ அங்குள்ள ஏழைகளுக்கு இந்த தர்மத்தை
வழங்க வேண்டும் என்பது அடிப்படையாகும். தர்மம் வழங்கக்கூடியவருடைய ஊரில் இருக்கும் ஏழைகளை விட மிகவும் கஷ்ட நிலையில் அடுத்த ஊரில் இருப்பின் அங்கு கொடுப்பது ஆகுமானதாகும்.

அஷ்ஷேக் அமீன் பின் அப்தல்லாஹ் அஷ்ஷகாவி
தமிழில்: மவ்லவி முஹம்மத் இம்ரான் கபூரி
(அபூ அப்துல் பாசித்)

0 comments:

Post a Comment