குழந்தைகளா? அவர்கள் புதிதாய் மலர்ந்த புஷ்பங்கள்!
முதுமையும் கலாசாரப் பண்புகளும்ஒருவரது முதுமை அநுபவத்தில் அவர் வாழும் சமூகக் கலாசாரம் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகிறது. முதுமை என்ற எண்ணக் கருவை உள்வாங்கும் தன்மை முதுமையில் தமது பாத்திரம் பற்றிய உணர்வு,
சிறுவர்களா? அவர்கள் தான் சமூகத்தின் எதிர்கால முத்துக்கள் ஆயிற்றே!
இளைஞர்களா? அவர்கள்தான் ஒரு நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!
மத்திய வயதினரா? இளையோரையும் முதியோரையும் தாங்கி வழி நடத்தும் தலைவர்கள் அவர்கள்!
முதியவர்களா? அவர்களால் இனி என்ன பயன்?!
மேலே சொல்லப்பட்டது போன்ற ஒரு சிந்தனை ஓட்டம் உலகமயமாதலோடு சேர்ந்து உலகெங்கும் வேகமாகப் பரவி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவும் முதியோருக்கான பல சலுகைகளை அறிமுகம் செய்திருக்கிற அதே சமயம் பிள்ளைகள் அவர்களோடு சேர்ந்து வாழும் மனப்பாங்கு மிக வேகமாகச் சரிந்து வருவதனால் அவர்கள் தனித்து விடப்பட்ட உணர்வைப் பெறுவதும் மனச்சோர்வுக்கு உட்படுவதும் மிகப் பரவலாக காணப்படும் ஒரு நிலையாக இருக்கிறது.
முதுமையும் கலாசாரப் பண்புகளும்
முதியவர்களின் கடமைகளும் பொறுப்புகளும், தம்மைப்பற்றிய சுயகவனம், ஆதரவு வலைப்பின்னல் போன்ற பல விடயங்களிலும் கலாசாரத்தின் செல்வாக்கு முக்கியமாகின்றது. ஜப்பானில் 75% ஆன முதியவர்கள் தமது பிள்ளைகளுடனேயே வாழ்கின்றனர். ஜப்பானிய கலாசாரத்தில் வயது முதிர்ந்த பெற்றோரைக் கவனிப்பது பிள்ளைகளின் முக்கிய கடமை. அவர்களைத் தவிக்கவிடுவது குடும்பத்திற்கு பெரிய அவமானம். குடும்பத்தினரிடையே உடைகள் பங்கிடப்படும் போது மிகச் சிறந்த உடைகள் முதியவர்களுக்கு வழங்கப்படுதல், மிக மதிப்பான வார்த்தைகளால் அவர்கள் அழைக்கப்படுதல், ஆழ்ந்த வணக்கத்துக்குரியவர்களாக அவர்கள் கருதப்படுதல், குடும்பம் ஒன்றாக நீராடும் சந்தர்ப்பங்களில் முதலில் நீராடுபவர்களாக முதியவர் இருத்தல் போன்ற பழக்க வழக்கங்கள் ஜப்பானில் இன்னும் பேணப்படுகின்றன. குடும்பத்தின் முக்கிய முடிவுகளில் எல்லாம் முதியவர்களின் ஆலோசனை பெறப்படும். எமது நாடு உள்ளிட்ட கீழைத்தேய நாடுகள் பலவற்றிலும் இந்தப் போக்கு இருந்தாயினும் இப்போது மெல்ல மாறி வருகிறது.
அமெரிக்கா போன்ற விருத்தியடைந்த மேலைத்தேய நாடுகள் இன்று முற்று முழுவதாக இளைஞர் மையநாடுகளாக மாறிவிட்டன. ஆகவே அங்கு முதுமை என்பது அழகு, வேகம், வலிமை, வருமானம், மதிப்பு எல்லாமே மெல்ல மெல்ல அற்றுப் போகும் காலம் என்றே பார்க்கப்படுகிறது. இந்த மனப்பாங்கு காரணமாக அமெரிக்காவில் முதியவர்களின் தற்கொலை நூற்றுவீதம் மிக அதிகமாக இருக்கிறது. முதுமையில் வரும் உடற்தொழிலியல் மாற்றங்கள் காரணமாகவும் மனம் தாழ்ந்து போகலாமாயினும் கலாசாரம் செலுத்தும் செல்வாக்கு மிகப் பிரதானமானது. என்றே கருதப்படுகிறது.
முதுமையின் சவால்கள்
முதுமையில் பார்த்தல், கேட்டல், சுவைத்தல் போன்ற புலன் சார் தொழிற்பாடுகளில் குறை ஏற்படலாம். இதனால் புலன்கள் சிறப்பாகத் தொழிற்படுகிறவர்களுடனான தொடர்பாடல் திறன் குறையலாம். இது அவர்களின் சுய கணிப்பை பாதிப்பதால் மற்றவர்களிடமிருந்து ஒதுங்க முயற்சி செய்யலாம்.ஆயினும் பல முதியவர்கள் ஒரு புலன் உணர்வில் குறை ஏற்படுகிறபோது ஏனைய புலன்களில் அதிகம் தங்கி இருந்து அந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் இயக்கம் தொடர்பான வேகம் முதுமையில் குறையத்தான் செய்யும். அதே நேரம் புலன் இயக்கக் குறைபாடுகளும் தசை இயக்க வேகத்தைக் குறைக்கலாம். உதாரணமாக கண்பார்வை குறையும் போது நடக்கும் வேகம் குறைவது தவிர்க்க முடியாததாகும். ஆயினும் பல முதியவர்கள் பொருத்தமான உடற் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் இயக்கம் சார் குறைபாடுகளைப் பெருமளவு குறைத்துக்கொள்கின்றனர்.
முதியவர்களில் பெரும்பான்மையினருடைய நுண்மதி ஈவு குறையாதிருப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். சிலரிடத்தில் இது தொடர்ந்து அதிகரித்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. முதுமையில் நுண்மதி ஈவு குறைந்து வருமாயின் அது உடல் நலக் குறைவு, இயங்காதிருத்தல் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டதாகவே அமையும் சிறந்த கல்வி அறிவைப் பெற்ற ஒருவர் தொடர்ந்து வருவாய் ஈட்டக்கூடியவராயும் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் அவரது நுண்மதி குறையும் வாய்ப்பு மிக அரிது.
இத்தகைய முதியவர்கள் தமது மனதுக்கான பயிற்சியைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தனது மூளையை ஒருவர் தொடர்ந்து பாவித்து வருகின்றபோது அவரது அறிவாற்றல் செயற்பாடுகள் குறைந்துபோவது அபூர்வம். இதற்கு மறுதலையாக முதியவர் ஒருவரின் அறிக்கைசார் தொழிற்பாடுகளில் திடீர் வீழ்ச்சி அவதானிக்கப்படுமாயின் அவர் ஒரு பெரிய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதன் விளைவு அது என்றே கொள்ளலாம்.
ஆயினும் அறிக்கைத் தொழிற்பாடு சம்பந்தப்பட்ட விடயங்களில் வேகம் குறையும் தன்மை முதுமையில் மிகச் சாதாரணமாக அவதானிக்கப்படலாம். இது நரம்புத் தொகுதியில் ஏற்படுகின்ற சில மாற்றங்களோடு சம்பந்தப்பட்டது. பல இயக்கங்களின் இணைவும் இசைவாக்கமும் தேவைப்படுகின்ற தொழிற்பாடுகளில் வினைத்திறன் குறைவு எதிர்பார்க்கப்படலாம். உதாரணமாக ஒரு சிக்கலான புதிரை விடுவிப்பது கடினமாகலாம். அதே போல ஏறத்தாழ ஒரே நேரத்தில் பல விடயங்களைக் கையாளுவதிலும் கஷ்டங்கள் இருக்கலாம்.
முதுமை வரும்போது நீண்டகால ஞாபகத்தில் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இந்தப் பாதிப்பிற்கும் கல்வித் தகைமைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. புதிய விடயங்களைக் கற்று ஞாபகம் வைத்துக்கொள்வதிலும் ஒப்பீட்டளவில் குறை காணப்படவே செய்யும். முன்பு தெரிந்து வைத்திருந்த விடயங்களை மூளையில் இருந்து மீட்டெடுப்பதும் பல சமயங்களில் கடினமாக இருக்கலாம். சில விடயங்கள் முற்றாகவே மறக்கப்பட்டுப் போகலாம். ஒரு காலத்தில் நன்றாகத் தெரிந்த பெயர்களும் முகங்களும் கூட எழுபது வயதில் மறக்கப்பட்டுப் போவதை மிகச் சாதாரணமாக அவதானிக்க முடியும்.
குறுங்கால ஞாபகத்திலும் பாதிப்புகள் இருக்கும். ஒரு சினிமாப் படத்தில் இறுதிக் காட்சியில் கதாநாயகி அணிந்திருந்த உடையின் நிறம் என்னவென்பது பெரும்பாலும் படம் முடிந்த கையோடு இவர்களுக்கு மறந்து போய்விடும்.
முதுமையின் இலாபங்கள்
ஒருவர் பெற்றிருந்த மொழி அறிவும், கணித அறிவும் முதுமையிலும் குறைந்து போவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே முதியவர்கள் பலர் எழுதும் நூல்கள் மிகச் சிறப்பாகவே அமைவதைப் பார்க்கலாம்.அதேபோல ஒருவரின் வாழ்நாளில் இயல்பாகப் பெற்றுக்கொள்ளும் திறன்கள் முதுமையில் குறைந்து போவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நன்றாகச் சமையல் செய்யக்கூடிய அம்மா, முதுமையிலும் ருசியாகச் சமைப்பார். அழகாக ஓவியம் செய்யக்கூடியவரின் திறன் முதுமையில் சரிந்து போவதில்லை.
புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வது முதுமையிலும் சாத்தியமானதாகவே இருக்கிறது. எண்பது வயதிலும் புதிய பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவோரை இன்று முன்னரை விட அதிகமாகவே காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, அவர்களுக்கு மிக ஆர்வமான ஒரு துறையில் கற்கிறபோது கற்றலில் அவர்கள் சங்கடப்படுவதில்லை.
ஆக்கத்திறனுடன் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை முதுமை காரணமாக எவ்வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. இதனால், குடும்பப் பிரச்சினைகள், நிறுவனப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பதில் முதியவர்கள் மிகக் கணிசமான பங்களிப்பை நல்கக்கூடியவர்கள். ஆலோசனை வழங்கும் தொழில்களில் அவர்கள் உன்னதம் பெறுவதற்கு இந்த விளக்கம் போதுமானது.
ஒருவருடைய கற்பனைத் திறனும், கலையாக்கத் திறனும் முதுமையில் குறைவதில்லை. அதனால் தான் கலைஞர்கள் முதுமையிலும் போற்றப்படத்தக்கவர்களாகவே இருக்கிறார்கள்.
செய்யத்தக்கவை எவை?
முதியவர்கள் ஒரு சமூகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது ஒரு சமூகத்தின் கட்டாய தேவை.முதியவர்கள் தமது பிள்ளைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழும் சமூக அமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். அவர்களைத் தனித்து வாழ அனுமதிப்பது நல்லதில்லை.
முதியவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வாழ்வு முறைச் சட்டத்திற்குள் தம்மை அடைத்துக் கொள்வதால் அவர்களுக்கு எல்லா நாளும் ஒரேநாள் போலத் தோன்றலாம். வெளியே நின்று பார்ப்பவர்களுக்கும் அங்கே வளர்ச்சி எதுவும் நடைபெறாத ஒரு தோற்றமே தெரியும். ஆனால், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளரத்தக்க ஒரு இடத்தில் தான் அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் என்ற விழிப்புணர்வு அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.
வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மனச்சோர்வு ஏற்படுவதில்லை.
தங்களுடைய நீண்டகால அனுபவத்தின் ஊடாக ஒரு முதிர்ச்சியும் நிறைவும் கொண்ட ஆளுமையை அவர்கள் பெற்றிருப்பர். இந்த ஆளுமையோடும் அவர்களிடமுள்ள ஆற்றல்களோடும் அவர்கள் தொடர்ந்து பயனுள்ள பணிகளைச் செய்து கொண்டிருப்பதைச் சமூகம் உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு சும்மா இருப்பதற்கு அவர்கள் விடப்படக்கூடாது. பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்வது கூட ஒரு பயனுள்ள, மிகப் பயனுள்ள பணி என்பதை நாம் மறந்துவிடலாகாது.நியண்டத்தால் மனிதன் காலத்தில் மனிதனது சராசரி வாழ்வுக் காலம் 33 வருடங்களாக இருந்தது. விஞ்ஞான, கல்வி, மருத்துவ வளர்ச்சியுடன் இன்று சராசரியாக 75 வருடங்களுக்கு மனிதன் வாழ்கிறான்.
சில சமூகங்களில் குறிப்பாக இந்த வாழ்வுக் காலம் அதிகமாக இருக்கிறது. அங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மன நெருக்கீடுகள் குறைவான கிராமிய வாழ்வு முறையும். மொத்தக் கலோரி அளவும் விலங்குக் கொழுப்பும் குறைந்த உணவுப்பழக்கமும், மாசடையாத சூழலும், வயது முதிர்ந்தோருக்கு மரியாதை கொடுக்கும் கலாசாரம் அங்கு இருப்பதை வரையறை செய்துள்ளன. ஆகவே, எமது நாட்டிலும் அத்தகைய ஒரு சூழலில் முதியோரை வாழச் செய்தல் நன்று.
மறுதலையாக, புகைத்தல், மது பாவனைப் பழக்கம், போதைப் பொருள் பாவனைப் பழக்கம், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளல், அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொள்ளல் அல்லது மருத்துவரின் அறிவுறுத்தல் இன்றித் தாமாக மருந்துகளைப் பெற்றுக் குடித்தல், பதற்றம் நிறைந்த சூழலில் வாழ்தல் போன்றன முதியோருக்குக் கேடு விளைவிக்கும். அவர்களின் வாழ்வுக் காலத்தைக் குறைக்கும் என்ற விழிப்புணர்வு சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
முதுமையின் பெரிய வளமாக இருக்கக் கூடியது நல்ல மனித உறவுகளைச் சேர்த்துக்கொள்வதாகும். குடும்பத்திலும் சரி, நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் சரி நிறைந்த அன்பைக் கொடுத்து நல்ல உறவுகளைக் கட்டி வளர்த்துக் கொள்வது முதுமையின் சலிப்பைப் போக்க உதவும் சிறந்த மருந்தாகும். அதனால், ஏற்படும் பயன்களும் எண்ணற்கரியவை.
எதிர்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்வுக் காலம் இன்னும் அதிகரிக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது. உடலின் ஒவ்வொரு கலத்தையும் நல்ல நிலையில் வைத்திருந்து அதனைச் சிறப்புற செயற்பட வைக்கும் வளர்ச்சி ஓமோனை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்கும் போது அவர்கள் இளமையூட்டப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.இப்போதே அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஓமோன் வியாபார ஸ்தலங்களில் விற்பனைக்கு உள்ளது. ரெக்சாஸ் நகரில் உள்ள நல மையத்தின் பேராசிரியர் ஜான் விக் (Jan Vig) என்பவர் முதுமையைத் தடுப்பது என்பது வெறும் கற்பனை நிலையில் இருந்து இப்போது யதார்த்த நிலைக்கு வந்துவிட்டது என்று கூறுகிறார். ஆகவே, எதிர்காலத்தில் ஒரு நாட்டின் மொத்தச் சனத்தொகையில் முதியவர்கள் கணிசமான நூற்று வீதத்தைப் பிடிக்கப் போகிறார்கள். அவர்களின் நலன் பற்றி அக்கறை கொள்வது நாட்டின் மொத்த நலனுக்கு மிக அவசியம் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது.
- கோகிலா மகேந்திரன் (தினக்குரல்)
source: http://tamilnenjamhifs.blogspot.com/நன்றி:nidur.in
0 comments:
Post a Comment