1591. நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) – அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! – கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி), ‘அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்று சேராது” என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) ஃபாத்திமா (ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். – அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை – (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) – அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். ‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது” என்று கூறினார்கள்.
புஹாரி :3110 அலி பின் ஹூஸைன் (ரலி).
1592. அலீ (ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.
புஹாரி : 3729 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).
1593. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தம் ‘வலப்பக்கத்தில்’ அல்லது ‘இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவரின் துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ, இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், ‘எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!” என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், ‘உங்களின் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, ‘சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார். முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். எனவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்று விடுவேன். எனவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். என்னுடைய பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, ‘ஃபாத்திமா! ‘இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?’ என்று இரகசியமாகக் கேட்டார்கள். (எனவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)
புஹாரி : 6285 ஆயிஷா (ரலி).
0 comments:
Post a Comment