சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனாலும்……

, , No Comments
Post image for சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனாலும்……
மனிதன் சபல புத்தியுடையவனாகவும், பலகீனமாகவும் படைக்கப்பட்டுள்ளான். அதே சமயம் அவனது சுய புத்தியில் அபார நம்பிக்கையுடையவனாகவும் இருக்கின்றான். தன் புத்தியில் நல்லவையாகப்படுபவை அனைத்தையும் உறுதியாக நம்பி செயல்பட ஆரம்பித்து விடுகிறான். அவனின் இந்தச் செயல்பாடுகளின் பலனை இந்த உலகில் பார்ப்ப முடிவதில்லையே! நாளை மறுமையில் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றான். 100 வயது கிழவனாக இருந்தாலும் தனது அனுபவத்தின் மூலம் இவ்வுலகில் அச்செயல்பாடுகளின் உண்மை நிலைகளை அறிந்துக் கொள்ள முடியாதே என்பதை எல்லாம் அவன் சிந்திப்பதில்லை. அதனை சிந்தித்துணரும் ஆற்றல் அவனுக்கில்லை. அதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் .
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை விரும்பலாம். ஆனால் அது உனக்கு தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)

எனவே மார்க்க விஷயத்தில் அவனது சுய சிந்தனையைத் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே செயல்படுத்தினால் மட்டுமே அவனுக்கு மறுமையில் வெற்றியுண்டு.
ஆதம்(அலை) அவர்கள் மனித வர்க்கத்தினரிலே ஓரளவு மறு உலக அனுபவம் பெற்றவர்கள், சுவர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் ஷைத்தானின் சேட்டைகளை நேரடியாகக் கண்டு அவற்றின் விளைவுகளையும் அனுபவித்து பெரும் துன்பப்பட்டு சீரழிந்து பின் சீர் பெற்றவர்கள். அப்படிப்பட்ட ஆதம்(அலை) அவர்களைக் கூட இவ்வுலகில் வந்து தன் சுயபுத்தியைக் கொண்டு நல்லது கெட்டதைத் தீர்மானித்து வாழும்படி அல்லாஹ் அனுமதிக்கவில்லை; தனது வழிகாட்டலின்படி மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். அவர்களுக்குப் பயமோ துக்கமோ இல்லை. அதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டலை விட தங்களின் சொந்த புத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வுலகில் வாழ்பவர்கள் தோல்வியடைந்து நரகைச் சேர்வார்கள். அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என அல்லாஹ் தெளிவாகவே அறிவித்து விட்டான். அவ்வசனங்கள் வருமாறு:
(பின்பு) நாம் சொன்னோம்: “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” (2:38)
அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பர். (2:39)
அல்லாஹ்வின் இந்தத் தெளிவான உத்திரவுகளை தலைமேற்கொண்டு ஆதத்தின் சந்ததிகள் செயல்பட்டிருந்தால் அது எவ்வளவோ நல்லதாக அமைந்திருக்கும். இவ்வுலகில் பல மதங்கள் தோன்றியிருக்கா. மனிதரில் பிரிவுகள் ஏற்ப்பட்டிருக்கா ஆனால் அதற்கு மாறாக மார்க்க விஷயத்தில் தனது சொந்த புத்தியைச் செலுத்தி சீரழிந்து வருகிறான் மனிதன். அதன் விளைவு மனிதனை தெய்வமாக்குவதும். தெய்வத்தை மனிதனாக்குவதும் சர்வசாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது மனித வாழ்க்கையில், இக்கைங்கர்யத்தை வெகு சிரத்தையுடன் கடைப்பிடிப்பதோடு மக்களுக்கு அயராது போதித்து வருகிறவர்கள் பூசாரிகள், புரோகிதர்கள், பாதிரிகள், சந்நியாசிகள், மவ்லவிகள் ஆகும். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையில் இடைத்தரகர்களாக இருந்து வயிறு வளர்ப்பதுடன் மக்களை அல்லாஹ்வின் நேரியப் பாதையிலிருந்து வழி கெடுத்து அத்வைதம் என்று சொல்லப்படும் இறைவனையும் மனிதனையும் அதாவது படைத்தவனையும், படைக்கப்பட்டவனையும் ஒன்றாக்கும இணை வைக்கும் மாபாதகச் செயலை செய்ய வைத்து மனித வர்க்கத்தையே நரகில் கொண்டு சேர்த்து நரகை நிரப்பகின்றனர். இவர்கள் அனைவரும் இது விஷயத்தில் ஷைத்தானின் ஏஜண்டுகளாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
மக்களில் பெரும்பான்மையினர் செம்மறியாட்டுக் கூட்டம் போல் இந்தக் கயவர்களின் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு சென்று நரகப் படுகுழியில் வீழ்ந்து தங்களை அழித்துக் கொள்கின்றனர். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறி நம்மை எச்சரிக்கின்றான்.
“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத் ) தடுக்கிறார்கள். (9:34)
இந்த வசனத்தில் பாதிரிகளைப் பற்றியும் சந்நியாசிகளைப் பற்றியும் மட்டும் கூறி இருந்தாலும் இடைத்தரகர்கள் அனைவரது நிலையும் அப்படித்தான் என்பது சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும். இந்த அடிப்படையில் அதிகமான மக்கள் வழிகேட்டில் தான் இருப்பார்கள். இதற்கு குர்ஆன் கூறும் சான்று இதோ
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிக்கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் பொய்யான கற்பனையிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். (6:116)
மக்களில் பெரும்பாலோர் வழிகேட்டில் இருக்கும் நிலையில் அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் எப்படிப்பட்ட தவறான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை இனி ஆராய்வோம்.
அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் அசல் நோக்கம் மறுமையாக அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதாக இருந்தால் மக்கள் சத்தியத்தை மறுப்பதைக் கொண்டு விசனப்படாமல், அவர்கள் ஏற்றுக் கொள்ளும வகையில் நாம் செயல்பட வேண்டும் என்ற தப்பான முடிவுக்கு வராமல் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மக்கள் அனைவரும் அவர்களை ஒதுக்கித் தள்ளினாலும் அதனால் கவலைப்பட மாட்டார்கள். தங்களைப் பின்பற்றும் ஒரு நபர் கூட இல்லாத நிலையிலும் தனது பணியை செவ்வனே செய்த பல நபிமார்கள் அல்லாஹ்வின் திருப்தியுடன் சுவர்க்கம் நுழைவார்கள் என்ற நபிமொழியின் கருத்தை மனதில் கொண்டு உறுதியுடன் சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள்.
ஆனால் அதற்கு மாறாக மறுமையை குறிக்கோளாக கொள்ளாமல் இவ்வுலகில் பதவிகளையோ புகழையோ, பொன்னையோ பொருளையோ குறிக்கோளாகக் கொண்டு மார்க்க பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற மக்களின் திருப்தியைப் பெறவே குறியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. இது மனித இயல்பு. இதனை விட்டும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் தப்ப முடியாது. இதுப் பற்றி நபி(ஸல்) அவர்களையே அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கின்றான்.
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சர்யப் படுத்தியபொழுதிலும் “தீயதும், நல்லதும் சமமாகா; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.” என்று நீர் கூறுவீராக” (5:100)
மேலும் மனிதர்களின் சில விருப்பங்களை ஏற்றுக் கொள்ளும் போது அவர்கள் நம்மை தங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்வார்கள். மக்களின் ஆதரவு அமோகமாக கிடைக்கம். அதே சமயம் அதன் பின் விளைவு மகா பயங்கரமானது என்பதை அழைப்புப் பணியாளர்கள் உணர வேண்டும். அது குறித்து அல்லாஹ் நபி(ஸல்) அவர்களையே எச்சரித்துள்ள வசனங்கள் வருமாறு:
(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டி கூறும்படி உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லை எனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.
(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உதவியாளர் எவரையம் நீர் காணமாட்டீர். (17:73-75)
ஆக குர்ஆனின் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் கூர்ந்து அவதானித்து செயல்படும் சத்திய பிரச்சாரங்கள் எந்த நிலையிலும் மக்கள் கோபப்படுகிறார்கள், தனது சொல்லை செவிமடுக்க மறுக்கிறார்கள். என்ற காரணத்திற்காக உள்ளதை உள்ளபடி சொல்லுவதிலிருந்தும் பின்வாங்க முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிலதை விட்டு சிலதை சொல்லும் ஷைத்தானின் துர்போதனைக்கு ஆளாக மாட்டார்கள். இவர்கள் புத்தியில் சிறிய விஷயங்களாக படுபவற்றையெல்லாம் சொல்லாமல் விட்டு, இவர்கள் புத்தியில் பெரிய விஷயமாகப் படுபவற்றை மட்டும் சொல்லும் குற்ற செயல்களுக்கு ஆளாக மாட்டார்கள். அதாவது மார்க்கப் பிரசாரத்தில் தங்கள் மனித புத்தியை நுழைக்க மாட்டார்கள். விளைவுகள் தங்களின் சொந்த முயற்சிகளிலும் தங்களின் அனுமானங்களிலும் தங்கி இருக்கின்றன என தப்புக் கணக்குப் போடமாட்டார்கள். விளைவைப் பற்றி அக்கறைப்படாமல் அல்லாஹ்வின் உத்திரவுகளை எடுத்து வைப்பதே எமது கடமை என்பதை செவ்வனே உணர்ந்து செயல்படுவார்கள்.
“இன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (36:17)
இந்த அல்லாஹ்வின் தெளிவான கட்டளையை சிரமேற்கொண்டு குர்ஆனிலும் ஹதீஸிலும் இருப்பதை மக்கள் முன் எடுத்து வைப்பதை விட வேறு அதிகாரம் தங்களுக்கில்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள். தங்கள் மனிதப் புத்தியைக் கொண்டும், அனுமானங்களைக் கொண்டும் மார்க்கப் பிரசாரத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்ற அல்லாஹ்வை மறந்த எண்ணத்தை அதிக பிரசிங்கித் தனத்தை ஒரு போதும் மேற்க்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்களால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்.
இது விஷயத்தில் யார் அல்லாஹ்வின் அருளைப் பெறவில்லையோ அவர்கள் மட்டும் அல்லாஹ்வை மறந்து தங்கள் சொந்த புத்தியைக் கொண்டும் மக்களின் ஆதரவைக் கொண்டும் சாதித்து விட முடியும் என்ற நச்சுக் கருத்துக்கு ஆளாவார்கள். தங்கள் சொந்த புத்தியில் உதித்ததை செயல்படுத்துவது கொண்டு மக்களில் ஒரு கூட்டம் அவர்களை நம்பி, அவர்கள் பின்னால் வர ஆரம்பித்து விட்டால், அவர்கள் தாங்கள் பெரிதாக சாதித்து விட்டதாக மனப்பால் குடிப்பார்கள். நேர்வழியில் இருக்கும் வரை கூட்டம் குறைவாக இருக்கும் நிலைமாறி, வழிதவறி விட்டால், பெருங்கூட்டம் பின்னால் வர ஆரம்பித்து விடும் என்ற உண்மையை 6:116 வசனத்தின் பொருளை உணரத்தவறி விடுகிறார்கள்.
மக்கள் நமது கருத்துக்களை ஆர்வமாகக் கேட்டு ஏற்றுக் கொள்கிறார்கள். கூட்டம் கூட்டமாக நம் பின்னால் வருகிறார்கள் என்பதெல்லாம் நாம் நேர்வழியில் நடக்கின்றோம் என்பதற்கு உரைகல் அல்ல. பயித்தியக்காரன் பின்னாலும் ஒரு கூட்டம் செல்லத்தான் செய்யும். இன்று வழிகேட்டின் உச்சக் கட்டத்தில் இருப்பவர்களின் பின்னால் தான் பெருங் கூட்டங்கள் இருக்கின்றன. நாம் நேர்வழியில் இருக்கிறோம் என்பதற்கு சரியான அளவுகோல் குர்ஆனும், ஹதீஸும் ஆகும். அவை எடுத்துச் சொல்லுபவை சிறிய விஷயங்களாக இருந்தாலும் பெரிய விஷயங்களாக இருந்தாலும் சிறிது பெரிது என நாமாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் முன் எடுத்து வைப்பதே பிரசாரகனின் கடமையாகும். நமது கடமைகளைச் செவ்வனே செய்யும் உண்மை பிரசாரர்களாக அல்லாஹ் நம்மை ஏற்று அருள் புரிவானாக.

 அந்நஜாத்

0 comments:

Post a Comment