பிறை பார்த்தல்!

, , No Comments
Post image for பிறை பார்த்தல்!

மனிதனைப் படைத்த இறைவன் ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதனுக்கு கொடுத்தது இஸ்லாம்| என்ற சாந்தி, நேர்வழி மார்க்கத்தையே. அந்த இஸ்லாம் மார்க்கம் 1432 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வால் சம்பூரணமாக நிறைவு பெற்றுவிட்டது. அதன் பின்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தில் மேல் அதிகமாகச் சேர்ப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19,85, 33:36, 59:7 இறைவாக்குகளை விளங்குகிறவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக் கொள்வார்கள்.

இறைவனால் நாளை மறுமையில் மார்க்கமாக ஒப்புக் கொள்ளப்படும் இஸ்லாம் என்ற சாந்தி-நேர்வழி மார்க்கத்தில்தான் எவ்வித மாற்றமும் செய்ய யாரும் அனுமதி பெற மாட்டார்களே தவிர, இவ்வுலக வாழ்க்கையில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படும் அனுகூலங்ளை, வசதி வாய்ப்புகளை மனிதன் ஏற்று நடப்பதில் மறுப்போ, ஆட்சேபணையோ இஸ்லாம் மார்க்கத்தில் இல்லவே இல்லை.


உதாரணமாக 1432 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தை வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்து அது மக்களிடையே அல்குர்ஆனாக இருந்து வருகிறது. இது நபி(ஸல்) அவர்களுக்கு ஒலி வடிவில் ஜிப்ரயீல்(அலை) என்ற வானவர் மூலம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. அல்குர்ஆனின் உச்சரிப்பின் அடிப்படையில் அது கூறும் கருத்தின் அடிப்படையில் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அன்றிருந்த வசதிக்கேற்ப தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் அரபியில் பதிவு செய்யப்பட்டது. அன்று அரபி லிபி எவ்வாறு இருந்ததோ அதே அரபி லிபியில் பதியப்பட்டது.

அதன் பின்னர் அரபி லிபியில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப எழுத்து வடிவில் மாற்றம் ஏற்பட்டதே அல்லாமல், அதன் ஒலியில் அதாவது உச்சரிப்பில் அணுவளவும் மாற்றம் ஏற்படவில்லை. கருத்திலும் அணுவளவும் மாற்றம் ஏற்படவில்லை. எழுதிப்பாதுகாக்க தாள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தாளில் அல்குர்ஆன் எழுதிப் பாதுகாக்கப்பட்டது. பின்னர் அச்சடிக்கும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் அல்குர்ஆன் அச்சுப் பதிப்பில் வெளியானது.

இஸ்லாம் உலகளாவிய அளவில் பரவிய பின்னர் அல்குர்ஆன் அந்தந்தப் பகுதி மக்கள் விளங்கிக் கொள்ள வசதியாக அவரவர்களின் மொழியில் அரபி மூலத்துடன் மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்டது. மொழி பெயர்ப்புகளில் சிறிய பெரிய தவறுகள் காணப்பட்டனவே அல்லாமல் அரபி மூலத்தில் யாராலும் எப்படிப்பட்ட திரிபு வேலையையும் செய்ய முடியவில்லை.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று அல்குர்ஆன் அரபி மூலமும், அதன் மொழி பெயர்ப்புகளும் ஒலி, ஒளி நாடாக்களிலும், குறுந்தகடுகளிலும் இன்னும் பல வடிவுகளிலும் வந்துவிட்டன. இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்படலாம். ஆனால் நாம் விளங்க வேண்டியது இப்படிப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல.

அன்று அல்குர்ஆன் எப்படி உச்சரிக்கப்பட்டதோ, எப்பொருள்களைத் தந்ததோ அவற்றில் அணுவளவும் மாற்றம் இல்லவே இல்லை. அவற்றைப் பதிந்து பாதுகாப்பதில்தான் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றை பித்அத்-வழிகேடு-நரகில் கொண்டு சேர்ப்பவை என்று ஒரு போதும் சொல்ல முடியாது.
ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் தங்களின் சுயநலம் கருதி, இப்படிப்பட்ட உலகியல் மாற்றங்களைக் காட்டி, அல்குர்ஆன் கூறும் அசலான கருத்துக்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து பித்அத்களை-வழிகேடுகளை நரகில் சேர்ப்பவைகளை நியாயப்படுத்த முற்படுவர்.

இன்னொரு தந்திரத்தையும் இப்புரோகிதர்கள் கையாள்வர். அதாவது எவை எல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவை இல்லையோ, கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடைபிடிக்கப்பட்டவையோ அவற்றை மார்க்கமாகச் சொல்லி குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பாங்கு சொல்வது,
ஜும்ஆ உரையின்போது கையில் ஒரு தடியையோ, வாளையோ பிடித்துக் கொண்டு நிற்பது,

அரபி மொழி தெரியாத தமிழ் மட்டும் தெரிந்த மக்களை நோக்கி நின்று கொண்டு, அவர்களுக்கு விளங்காத நிலையில் அரபியில் ஜும்ஆ உரை நிகழ்த்துவது,
சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் பார்த்துத்தான் தொழுகை நேரத்தை அறிந்து தொழ வேண்டும் என்று முன்னர் அடம் பிடித்தது,

சந்திரனைப் புறக்கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று இப்போது அடம் பிடிப்பது,

இத்தியாதி, இத்தியாதி பொருள்களில் அதாவது மார்க்கத்திற்கு உட்படாத பொருள்களில் அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அதே சமயம் மார்க்கத்திற்கு உட்பட்டவை -அவற்றில் அணுவளவும் மாற்றத்திற்கு இடமே இல்லை என்று திட்டமாக அல்குர்ஆன் கூறுபவற்றில், மனம் போன போக்கில் மாற்றத்தை உண்டாக்குவதில் புரோகிதர்கள் முன்னணியில் இருக்கின்றனர்.

எண்ணற்ற அல்குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுத்து, மார்க்கத்தைப் பிழைப்புக்குரிய வழியாக அவர்கள் கொண்டிருப்பதால்தான் அவர்களுக்கு இப்படிப்பட்ட கேடுகெட்ட புத்தி ஏற்படுகிறது. விஞ்ஞான வளர்ச்சி இல்லாத 1432 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் இருந்த நிலையில், சூரியனின் ஓட்டத்தைப் பார்த்து நேரத்தை அறியும் கட்டாய நிலை இருந்தது.
சந்திரனின் ஓட்டத்தைப் பார்த்து மாதத்தை அறியும் கட்டாய நிலை இருந்தது. தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் செல்லும் கட்டாய நிலை இருந்தது.

தொலைவில் ஏற்படும் மரணம் போன்ற முக்கிய சம்பவத்தையும் காலம் தாழ்ந்த நிலையில் ஆள் நேரில் வந்து சொல்லி அறியும் கட்டாய நிலை இருந்தது. அன்றைக்கு இவை தவிர வேறு மாற்று வழி இல்லை. மேலும் இவை அனைத்தும் மார்க்கத்தின் சில கடமைகளை நிறைவேற்ற உதவும் வழிகளாக இருந்தனவே அல்லாமல் மார்க்கத்திற்கு உட்பட்டவையாக இருக்கவில்லை.
அதனால்தான் அன்று சூரிய ஓட்டத்தைப் பார்த்து நேரத்தை அறிந்து தொழுதவர்கள், இன்று கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை அறியும் வகையில் விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டதால் சூரியனைப் பார்ப்பதை விட்டு விட்டார்கள்.

அன்று தொலைவிலிருந்து ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குப் போனவர்கள், நவீன வாகன வசதிகள் ஏற்பட்டுவிட்டதால், ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குச் செல்வதை விட்டுவிட்டார்கள்.

அன்று மரண செய்தியை காலம் தாழ்ந்து நேரில் ஆள் வந்து சொல்வதன் மூலம் அறிந்து செயல்பட்ட நிலை மாறி, தொலை தகவல்கள் மூலம் கிடைப்பதால், ஆளை எதிர் பார்த்துக் காத்திருப்பதில்லை.

அதேபோல் அன்று மாதம் பிறந்ததை முதல் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்ததற்கு மாறாக இன்று கணினி கணக்கீட்டின் மூலம் எதிர்வரும் நூறு ஆண்டுகளின் 12 மாதங்களின் தலைப் பிறையை இன்றே மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறும் அளவில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டு விட்டதால், இன்று பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் காத்திருக்கத் தேவையே இல்லை.

சில நடுநிலை அறிஞர்கள் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) போன்ற பேரறிஞர்கள் கணிப்பின் அடிப்படையில் மாதம் பிறப்பதை அறிவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி இருப்பதை பெரிய ஆதாரமாகக் கொண்டு நிலை தடுமாறுகிறார்கள். உண்மை இதுதான். அந்த அறிஞர்கள் காலத்தில் கணினி(Computer) கண்டுபிடிக்கப் படவில்லை. துல்லியமாகக் கணக்கிடும் கணக்கு முறையும் இருக்கவில்லை. நபி(ஸல்) காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வரும் கணிப்பு முறையைத்தான் அந்த அறிஞர்கள் மறுத்துள்ளனர். தோராய கணிப்பிற்கும் துல்லிய கணக்கீட்டு முறைக்குமுள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டால் இப்படி தடுமாற்றம் நடுநிலை அறிஞர்களுக்கு ஏற்படாது.

ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள், தங்களின் தொழிலுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு விஞ்ஞான கண்டு பிடிப்பின்போதும் அதை மறுத்து அலறுவது வாடிக்கை. காலப்போக்கில் வேறு வழியின்றி அவர்களும் அந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சூரியனைப் பார்த்து நேரம் அறிந்து தொழும் நிலை முதன் முதலாக மாறி கடிகாரத்தைப் பார்த்து தொழும் நிலை ஏற்பட்டவுடன் இப்படி அலறினார்கள். பின்னர் அதை ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

அதேபோல் ஒட்டகத்தில் பிரயாணம் செய்யும் நிலை முதன் முதலாக மாறி நவீன வாகனத்தில் ஹஜ்ஜுக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் இவ்வாறே அலறினார்கள். பின்னர் அதை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
மரணச் செய்தியை ஆள் நேரில் வந்து சொன்ன நிலை முதன் முதலாக மாறி தகவல் தொடர்பு மூலம் உடனடியாக அறிந்து செயல்பட முற்பட்ட போதும் இவ்வாறே அலறினார்கள். பின்னர் அதை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

அதேபோல் இன்று கணினி கணக்கீட்டின் மூலம் முன்கூட்டியே மாதம் பிறப்பதை துல்லியமாக அறிவிக்கும் நிலையை மறுத்து அலறுகிறார்கள்.
காலம் போக போக அவர்களே இக்கணக்கீட்டை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே இந்த சுயநலப் புரோகிதர்களின் வெற்றுக் கூச்சலை முஸ்லிம்கள் பொருட்படுத்த வேண்டியதே இல்லை.

0 comments:

Post a Comment