ஷவ்வால் மாத நோன்பு.
யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.


முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். "இந்நாளின் சிறப்பென்ன?" என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது மகத்தான நாளாகும். இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், "நாங்கள்தாம் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள்" என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் (முஸ்லிம்களை) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய(ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், "நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (இது ஹிஜிரீ 10ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகும்).

மாதத்தில் மூன்று நோன்புகள்.

"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்கவும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

"ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், "வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா?" என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றிவெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

"உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்,(சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்றுவிடட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதற்குத் தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

"அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை" என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?" என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான்(எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன். நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன்"என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

"மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, "இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது" என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத
அஸ்ஸலாமு அலைக்கும்...

மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் அருமையான கட்டுரை.
இது போன்ற செய்திகளை அதிகம் பரப்புங்கள்.
ஏனென்றால் நம்மிடையே ராமகோபாலன்கள் மட்டுமல்ல சுஜாதாக்களும் இருக்கிறார்கள்.
வஸ்ஸலாம்,
அப்துர் ரஹ்மான்.

பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் - திரு.சுஜாதா ரங்கராஜன்

பத்திரிக்கையாளர், பன்னூலாசிரியர்,கணிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட,தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த சுஜாதா என்று அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த திரு.ரங்கராஜன் அவர்கள் எழுதிய ஓரிரு நாவல்களைப் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்துநடை, வியக்கவைக்கும் தகவல், முடிவில் பிரமிப்பு ஆகியவற்றால் தன் எழுத்துப் பணிகளில் தனக்கென தனிஇடத்தையும் தவிர்க்க முடியாத வாசகர் வட்டத்தையும் பெற்று சிறந்து விளங்கினார்.

குர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான் குர்ஆனின் கூப்பாடுகள் சிந்திப்பீராக/சிந்திக்க மாட்டீர்களா? என்று சிந்தனையாளர்களை நோக்கியே இருக்கின்றன. குர்ஆன்-003:058 என்ற திருக்குர்ஆன் வரிகளுக்கேற்ப சுஜாதாவும் திருக்குர்ஆனின் நறுமணத்தை நுகர்ந்தவர்களில் ஒருவர் என்ற தகவல் பலருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.
பொதுவாக அறிவுஜீவிகளாக இருப்பவர்கள் திறந்த மனதுடனே எதையும் அணுகுவார்கள். தமிழ்கூறும் நல்லுலகில் அறிவு ஜீவிகளில் ஒருவராக அறியப்பட்ட எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் திருக்குர்ஆன் பற்றியும் அது மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது (வஹி) குறித்து "வஹி எனும் வேத வெளிப்பாட்டைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது, குர்ஆன் வசனங்களும் அதன் வெளிப்பாடும் தனிமனித சாத்தியமற்றவை" என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் எளிதில் உணர முடியும்" என்று குர்ஆன் வெளிப்பாட்டிற்கு சுஜாதாவும் நிகழ்காலச் சான்று பகர்ந்ததாக நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சுஜாதா ரங்கராஜன் அவர்கள் தினமணி (2003) ரம்ஜான் மலருக்காக குர்ஆன் குறித்து எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். திரு.சுஜாதாவின் நேர்மையான மற்றும் வெளிப்படையான இந்தக் கட்டுரை அவர்மீதான நன்மதிப்பைக் கூட்டுகிறது. அண்ணாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியை தரட்டுமென்று கூறி நன்றியுடன் மீள்பதிவு செய்கிறேன்.
---------
"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.
நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.
'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.
எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.
இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
'சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!'
'திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்' என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!
தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."
சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் - 2003)
நன்றி:திரு.ரவிபிரகாஷ்

 
அல் குர்ஆனின் வழியில் அறிவியல்…
இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து,
இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  அல்குர்ஆன். 30:9
இவ்வசனமானது  1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு மக்களை நோக்கி இறங்கியது என்றாலும் இன்றுள்ள நமக்கும் சொல்லப்பட்ட செய்திதான். குறிப்பாக அல்லாஹ் நம்மிடம் கூருவது, “உங்களை நீங்களே பலசாலிகளாக நினைத்துக்கொள்ளாதீர்கள், நிலத்தை பண்படுத்தி விவசாயம் அதிகளவில் செய்வது நீங்கள் மட்டும்தான் என்று எண்ணாதீர்கள். உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் உங்களை விட பலசாலிகளாகவும், பூமியில் அதிகளவில் விவசாயம் செய்தவர்கள்.”
இது உண்மைதான், இன்றைய தொழில்நுட்ப அறிவு, மின்சாரம் எதுவும் இன்றி, தன உடல் பலத்தைக்கொண்டு பெரும் கட்டிடங்களையும், பிரமிடு போன்ற அதிசயங்களையும், மலைகளை குடைந்து மாளிகைகளையும் கட்டியவர்கள் முன்னோர்கள். அல்குர்ஆன்-26:128,129 – 26:149

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் அந்த நாட்டில் தான் வாழும் சூழலை ஒட்டிய நிலப்பரபிலேயே விவசாயம் செய்வார்கள். உதாரணமாக, காவேரி டெல்டா பகுதியில் பாசனம் செய்யும் தஞ்சை விவசாயி வட நாட்டிற்கு சென்று கங்கை டெல்டா பகுதியில் விவசாயம் செய்வதில்லை, அவர்கள் சார்ந்த ஊர்களை ஒட்டியே உள்ள விளைநிலங்களில் மட்டும் பயிறிடுவார்கள். இது தான் எங்கும் உள்ள நிலை.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அவ்வப்போது அனுப்பியுள்ளான். பல்வேறு கால கட்டங்களில் அவர்கள் வந்து நேர்வழி காட்டினர். குறிப்பாக யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் என மூன்று மார்க்கங்களில் குறிப்பிடப்படும் பெரும்பாலான அறியப்பட்ட நபிமார்கள் அனைவரும், மத்திய கிழக்கு நாடுகளான  சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக், அரேபியா போன்ற இடங்களில் வாழ்ந்த மக்களிடையே சத்தியத்தை எடுத்துரைத்தனர். இந்த நபிமார்களை பொய்ப்பித்து தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்த மக்களை பற்றியே அல்லாஹ் இவ்வசனத்தில் (அல்குர்ஆன் 30:9) கூறுகிறான்.

இன்னும் (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தனர். ஆகவே அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; எனினும் அவர்கள்(அந்நபிமார்களை
பொய்யாக்கி) தங்களுக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர். – அல்குர்ஆன்-30:9
நபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் குறிப்பாக சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் வாழ்ந்த அரேபியர்கள்தான் உலகில் அதிகமான பரப்பளவில் நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்ததாக அல்லாஹ் கூறுகிறான். எப்படி என பார்ப்போம்.?
ஐரோப்பா கண்டத்தின் அன்றைய நிலை
சுமார் 8 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாவில் வாழ்ந்த பூர்வகுடி ஐரோப்பியர்கள், காட்டு மிருகங்களை வேட்டையாடி உண்ணும் நாடோடிகளாக (Hunter &Gatherer) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியப் பயிர், விவசாய விளைபொருள் உற்பத்தி முறை தெரிந்திருக்கவில்லை. மிருகங்களை வேட்டையாடி மிருகங்கள் போல் வாழ்ந்து வந்தனர். ஆனால் 7500 வருடங்களில் அதாவது 500 வருடங்களில் வேளாண் உற்பத்தி முறை அறிந்து பயிர்த்தொழில் சாகுபடி செய்து விவசாயிகளாக மாறிய நிகழ்ச்சி, மானிட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
விலங்கோடு விலங்காக வாழ்ந்த ஐரோப்பியர்கள் எப்படி விவசாயத்தை அறிந்தனர். ஒரு 500 வருடங்களுக்கு முன்பு பசுமைப்புரட்சி ஏற்பட காரணம் என்ன? விவசாயத்தை கற்றுக்கொடுத்தவர்கள் யார்? என்ற கேள்வி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நீடித்து வந்தது. இன்றைய நவீன (GENETIC) மரபியல் சோதனை முடிவுகள் இக்கேள்விகளுக்கு உரிய பதிலை சமீபத்தில் வெளிப்படுத்தின.
ஆஸ்திரேலியா அடிலெய்டு பல்கலைக்கழகமும் மற்றும் (Australian Centre for Ancient DNA-ACAD) ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் எஸ்தோனியா நாட்டு ஆய்வாளர்கள் குழு ஒன்றிணைந்து ஜெர்மனி, ஹங்கேரி, இங்கிலாந்து நாட்டிலுள்ள பழம்பெரும் புதைகுழிகளை கல்லறைகளை ஆராய்தனர். அங்கு அடக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளை சோதித்து அதன் DNA மூலக்கூறுகளை பிரித்தெடுத்தனர்.
இதே போல, இன்றுள்ள ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள் வியப்பளிப்பதாக இருந்தது. ஏனெனில் சுமார் 7100 ஆண்டுகளுக்கு முன் இறந்த புராதன புதை குழிகளிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளின் DNA மூலக்கூறு, இன்றைய ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுடன் ஒத்துப்போகவில்லை. இருவரும் வேறு வேறு இனம் என்று DNA அடையாளம் காட்டியது. குறிப்பாக ஐரோப்பாவில் பல பாகங்களில் சுமார் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழம் புதை குழி எலும்புகள் DNA பூர்வீக ஐரோப்பியர்களின் DNA உடன் பொருந்தவில்லை.
ஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் உள்ள டிரன்பர்க் என்ற கிராமத்தில் இருந்த பழமை வாய்ந்த புதைகுழியிலிருந்து 22 எலும்புக்கூட்டை ஆராய்ந்தனர். இந்த எலும்புகளின் DNA எல்லாம் மைட்டோ காண்ரியல் (Y குரோமோஸோம் HAPLOTYPE) வகையாக இருந்தது. இந்த YY குரோமோஸோம்கள், பூர்வ குடி ஐரோப்பியர்களிடம் மிக அரிதாகவே இருந்தது. தற்போது ஐரோப்பா முழுவதும் வசிக்கும் 36 பிரதேச மக்களின் DNA க்களுடன் புராதன எலும்புகளின் DNA க்கள் ஒத்துப்போகவில்லை. இது மட்டும் அல்லாமல், இந்த எலும்புகளில் இருந்த ஸ்டிரோசியம், கால்சியம் விகிதாச்சாரமும் வேறுபட்டு இருந்தது.
பொதுவாக ஸ்டிரோசியம் ( Sr) என்ற தனிமம் Element நமது எலும்பில் உள்ளடங்கி உள்ளது. நீரில் உள்ள Sr ‘Sr’ ஆனது நாம் நீர் உட்கொள்ளும்போது உடம்பில் உள்ள எலும்பில் படிந்து விடும். இதுபோல் நீரருந்தும் விலங்குகள் தாவரங்களிலும் இந்த ஸ்டிரோசியம் படிவதுண்டு. தாவரங்களை உண்ணும ஆடு, மாடு போன்ற கால்நடைகளிலும் ஸ்டிரோசியம் படியும். ஆனால் கால்நடைகளின் கழிவில் பெரும்பாலான ஸ்டிரோசியம் வெளியேறிவிடும். எனவே இந்த விலங்குகளை வேட்டையாடி உண்ணும பழக்கமுள்ள ஐரோப்பிய பூர்வகுடி மனிதர்களின் எலும்புகளில் இந்த ஸ்டிரோசியத்தின் அளவு மிகக்குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் அதே சமயம் ஐரோப்பா முழுவதும் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புராதன புதைகுழி எலும்புகளில் இந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரம் மிக அதிக அளவில் இருந்தது. காரணம் இம்மக்களது உணவுப்பழக்கம் தானியங்களாக இருந்ததுதான். ஆகவே இவர்கள் தான் ஐரோப்பாவிற்கு முதன் முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவர்கள் என்று அறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.
ஐரோப்பிய உள்ளூர் மக்களிடம் குறைவாக இருந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரமும், Y குரோமஸோம்ஸ் DNA ( YY CHROMOSOMES HAPLOTYPE) மாதிரிகளும் பூர்வ புதைகுழி எலும்புகளின் மாதிரியுடன் ஒத்துபோகாமல் புதிய இனமாக அடையாளம் காட்டியது. யார் இவர்கள்? எங்கிருந்து வந்தனர் என்பதை ஆராய்வதற்காக, உலகம் முழுவதும் உள்ள மக்களின் DNA க்களை ஆய்வு செய்தனர்.(Genographic Consortium) என்ற அமைப்பின் மூலம் உலக மக்களின் DNA DNA க்களை ஆராய்தனர்.
நமது இந்திய மக்களின் DNA  பிரிவை, மதுரை காமராஜ் பல்கலை கழகம் ஆய்வு செய்தது.
இறுதியில் ஐரோப்பாவில் விவசாயம் செய்த முதல் விவசாயியின் DNA மாதிரிகளின் தொடர்ச்சி பிரான்ஸ், ஹங்கேரி, துருக்கி, சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் முடிந்தது. ஐரோப்பாவிற்கு விவசாயத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் மத்திய கிழக்கு அரபு மக்களே என்று அறிவியல் உலகம் ஒப்புகொண்டது.
நாடோடி ஐரோப்பியர்களுக்கு பயிர் செய்யும் முறையை கற்றுக்கொடுத்து, சமூக பொருளாதார, அறிவியல் வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பை மத்திய கிழக்கு அரேபியர்களே செய்துள்ளனர் என்பதை நவீன அறிவியல் ஆய்வு நீறுபித்துள்ளது.

“நிராகரிப்பவர்களை சிதறடித்துப் பிரித்துவிட்டோம்”!
மத்திய கிழக்கில் வாழ்ந்த அரேபியர்கள் ஐரோப்பாவிற்கு செல்ல காரணம் என்ன?
மக்கள் இடப்பெயர்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கான காரணங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். உதாரணமாக, தோப்புவாசிகளைப்பற்றிக் கூறும்போது நல்ல முறையில் விவசாயம் செய்த மக்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணித்ததன் காரணமாக ‘ம ஆரிப்’ எனும் அணையை உடைக்கக்கூடிய பெரு வெள்ளத்தை அனுப்பி அங்கு வேளாண்மை செய்ய முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு சோதிக்கப்பட்டதாக அல்குர்ஆன் 34:15,16  கூறுகிறது. இவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தேடி இடம் பெயர்ந்திருக்கலாம்.

மேலும்
நிராகரிப்பவர்களை சிதரடித்ததற்கு காரணம், “இன்னும், அவர்களுக்கிடையேயும், நாம் பரக்கத் (அருள்) செய்திருந்த ஊர்களுக்கிடையேயும் வெளிப்படையாகத் தென்படக்கூடிய பல ஊர்களையும்  ஆக்கி, அவைகளில் பிரயாணத்தை நாம் அமைத்தோம்”.
“இரவுகளிலும், பகல்களிலும் அவற்றில் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள் (என்று கூறினோம்)”

“ஆனால் அவர்கள், எங்கள் இரட்சகனே! எங்கள் யாத்திரைகளை நெடுந்தூரமாகும்படி செய்வாயாக! என்று கூறி தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர்; ஆகவே அவர்களை செய்திகளாக்கிவிட்டோம், இன்னும் அவர்களை பல ஊர்களில் சிதறடித்துப்(பிரித்து) விட்டோம்.” அல்குர்ஆன் 34:19
அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்ததன் காரணமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மத்திய கிழக்கு அரேபியர்கள், தங்கள் வாழ்வாதாரங்களை தேடியும், தாங்கள் விரும்பியபடியும் நெடுந்தூர பயணத்தை தொடங்கினர். சிரியா, துருக்கி, பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பறந்த பயணத்தை மேற்கொண்டனர். தானிய விதைகளை தங்களுடன் கொண்டு சென்று நதிக்கரையோரம் விவசாயம் செய்தனர். குறுகிய 500 வருடங்களுக்குள் முழு ஐரோப்பாவிலும் விவசாயம் பெருந்தொழிலாக மாறியது.
ஆறாம் நூற்றாண்டில் இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில், முழு அறிவியல் புரட்சி ஏற்பட அடித்தளமாக இருந்தவர்கள் அரபு முஸ்லிம்கள், என்று சரித்திரம் சான்று பகர்வதை அனைவரும் அறிவோம். அறிவியல் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட அரேபியர்களே 8000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பசுமை புரட்சிக்கும் விதையிட்டவர்கள் என்ற உண்மையை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இன்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் அல்லாஹ் கூறிவிட்டான்.
“இவர்கள் எவ்வளவு பூமியைப் பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாகப் (ஐரோப்பா முழுவதும்) பண்படுத்தி அபிவிருத்தி
செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.” அல்குர்ஆன் 30:9

அரேபியர்கள் எந்தளவு விவசாயத்தில் ஆர்வம உடையவர்கள் என்றால், சொர்க்கம் சென்றாலும் கூட, அங்கும் விவசாயம் செய்ய விரும்புவார்கள் என்பதை நபிமொழி நன்கு உணர்த்துகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
சுவனவாசிகளில் உள்ள ஒருவர், ‘என் இறைவனே! நான் விவசாயம் செய்ய விரும்புகிறேன்,’ என்று கேட்பார். அதற்கு அல்லாஹ்,  ‘நீ விரும்பிய இன்பமெல்லாம் இங்கு கிடைக்கவில்லையா’? என்று கேட்பான். “எல்லாம் கிடைக்கிறது ஆனாலும் என் மனம் விரும்புகிறது” என்று அவர் கூறுவார். அல்லாஹ் அனுமதி கொடுத்தவுடன் விதையை போடுவார், அது உடனடியாக பயிராக வளர்ந்து தயாராகிவிடும். அல்லாஹ் கூறுவான், “ஆதமுடைய மகனே! எடுத்துக்கொள்! எதிலும் நீ திருப்தியடையமாட்டாய்!”
இதைக் கேட்ட ஒரு நபித்தோழர் கூறுவார் “அந்த சுவனவாசி
குறைஷிகளில்
ஒருவராகத்தான் இருப்பார்! நபி(ஸல்) அவர்கள் உடனே புன்முறுவல் செய்தார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரீ
S.ஹலரத் அலி,
ஜித்தா.
நாம் ஹிஜ்ரி 1433 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம்.
இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள், அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர். முக்கியமான பல நிகழ்ச்சிகள் நடந்திருப்பினும், அவற்றில் நபி(ஸல்) அவர்கள், முதன் முதலாக, மக்காவை விட்டு, வெளியேறிய நிகழ்ச்சியையே, இஸ்லாமிய ஆண்டின் துவக்கக் காலமாகக் காலக்கட்டமாகக் கொள்ளலாமெனத் தீர்மானித்தனர்.

இஸ்லாமிய வரலாற்றில் , பல முக்கிய போர்கள் நிகழ்ந்துள்ளன. பல உடன்படிக்கைகள் நடந்துள்ளன. இவற்றிலொன்றை நினைவு கூர்ந்து, அதையே இஸ்லாமிய ஆண்டிற்குப் பெயராகவும், துவக்க கால கட்டமாகவும் வைத்திருக்கலாம். ஆனால், நபித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்றத்தையே (ஹிஜ்ரத்தையே) நமது ஆண்டின் துவக்க காலமாகவும், பெயராகவும் வைக்கத் தீர்மானித்தனர்.
நபி(ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர்(ரழி) ஆகிய இருவர் மட்டுமே, மக்காவை விட்டு வெளியேறினர். மதீனாவுக்கு வந்த பின்பு தான், பத்ரு, உஹது மற்றும் பல தற்காப்புப் போர்கள் நடந்தன. இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. பல உயிர்த் தியாகங்கள், சிறப்புமிக்க உடன்படிக்கைகள் நிகழ்ந்தன. இறுதியாக சுமார் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மக்கா நகர் சென்று, அங்கும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது.
இவ்வனைத்து நிகழ்ச்சிகளுக்கும் துவக்கமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்ற நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி நடந்திராவிடில், மேற்காணும் நிகழ்ச்சிகளுக்கு இடமேது? அன்று நபி(ஸல்) அவர்களின் உயிருக்கே ஆபத்து வந்த போது, உயிர், உடமை உறவு அனைத்தையும் துறந்து , பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக, வேறெந்தச் செயலையும், வேறெவர் தியாகத்தையும், அருமை நபித் தோழர்கள், உயர்வாகக் கருதவில்லை.
அம்மாநபியின் தியாக, புனித வெளியேற்றமே இஸ்லாமிய மறு மலர்ச்சிக்காகவும், அதன் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது, அத்தகைய ஹிஜ்ரத் நிகழ்ச்சியை இஸ்லாமிய ஆண்டுக்கு துவக்க காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லையே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் வைத்தனர். இவ்வெளியேற்ற நிகழ்ச்சியின் சில கட்டங்களில் நபி(ஸல்) அவர்களின் நற்பண்பையும், நம்பிக்கை, உறுதியையும், இந்த ஹிஜ்ரி புத்தாண்டில் நினைவு கூர்வோம்.
நபி(ஸல்) அவர்களின் நேர்மையெனும் நற்பண்பு:-
நபி(ஸல்) அவர்களின் இல்லத்தை மக்கத்து காபிர்கள் முற்றுகையிட்டு, அவர்களைக் கொல்ல வாளேந்தி நிற்கின்றனர். வீட்டின் உள்ளே இருப்பவர்களின் நிலை எவ்வளவு பதட்டமாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இறைவனது கட்டளைக் கிணங்க வெளியேறும் அந்த பதட்டமான, இக்கட்டான நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை அழைக்கிறார்கள். தாம் பிறரிடமிருந்து பெற்று, பாதுகாத்து வரும் அமானிதப் பொருட்களின் விபரத்தைக் கூறி அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கிறார்கள்.
எத்தகைய ஆபத்தான மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் தமது நேர்மை நிலையைப் பொறுப்புக்களை ஒப்படைக்கும் வகையில் கடைப்பிடித்திருக்கிறார்கள். மக்கா நகரில் தரம் அங்கிருந்த போது மட்டுமின்றி, தாம் வெளியேறிய பின்னரும் அஸ்ஸாதிக், அல் அமீன் எனும் தமது அருந்தகுதிக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் செய்து காட்டியதையுணர்ந்து அவ்வுன்னத நடைமுறையை நமது வாழ்வில் கடைபிடித் தொழுக வேண்டும்.
ஆனால் இன்று அமானிதப் பொருளை மோசடி செய்வதும், அமானித நிலையில் தமது பொறுப்பிலுள்ள அநாதைகள், விதவைகள் முதலியோரின் சொத்துக்களை விழுங்குவதும், பிறருக்குக் கடன் பட்டதை, தீர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வின்றி, தமக்கு வியாபாரத்தில் ஏற்பட்டதோர் கஷ்டத்தைக் காரணம் காட்டி கொடுத்தவரின் பொருட்களை கபளீகரம் செய்துவிடும் ஏமாற்றுச் செயல்களையும் நாம் காண முடிகிறது.
இவ்வாறு அமானிதப் பொருட்களை பேணிக் காக்காமல் இருக்கும் பொறுப்பில்லாத தன்மையை, செயலை வல்ல அல்லாஹ் குர்ஆனில் எச்சரிப்பதைப் பார்ப்போம்.
“(விசுவாசிகளே! நிச்சயமாக நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும்” என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.(4:58)
“தவிர நீங்கள் (செய்வது அக்கிரமம் என) அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.” (8 : 27)
“நீங்கள் அநாதைகளின் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்,(அவற்றிலுள்ள) நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் (சேர்ந்து) விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது மாபெரும் பாவமாகும்.” ( 4:2)
இன்னும் எவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும், வாக்குறுதிகளையும் பேணி, சாட்சியத்தில் தவறிழைக்காமலும், தொழுகையைப் பேணியும் வருகிறார்களோ, இத்தகையோர் தாம் சுவனபதியில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள். (70:32-35)
அல்லாஹ்வின் வல்லமையும் , அவனது தூதர் நபி(ஸல்) அவர்களின் ஈமான் உறுதியும்
நபி(ஸல்) அவர்கள் தமது இல்லத்திலிருந்து வெளியேறி விட்டதை உணர்ந்து கொண்டவுடன், அந்த மக்கா காபிர்கள், அவர்கள் சென்ற பாதையைப் பின் தொடர்கின்றனர். நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரழி) அவர்களும் மக்காவின் அருகிலுள்ள ஒரு குகையில் மறைந்திருக்கின்றனர். குகையின் மேற்புறத்தில் நடமாடும் காபிர்கள் தற்செயலாகக் குனிந்தாலும் இருவரும் தென்பட்டு விடும் அமைப்பில் மிக அபாய நிலையில் இருவரும் உள்ளே அமர்ந்திருந்தார்கள்.
தோழர் அபூபக்கர்(ரழி) அவர்கள் நபி அவர்களே! நாம் இப்போது இருவர் மட்டுமே இவ்விடத்திலிருக்கிறோம், அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே என கலக்கமுற்றார்கள்.
இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வல்லமையால், தனது தூதர் நபி(ஸல்) அவர்களையும், அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களையும் மிக அற்புதமாகக் காப்பாற்றிய நிலையை வெகு அழகாகச் சொல்லிக் காட்டுகிறான்.
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அவருக்கு யாதொரு இழப்பும் இல்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கிறான். குகையில் (அவனது நபி), இருவரில் ஒருவராக இருந்தபோது தமது தோழரிடம் “கவலைப்படாதீர் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.” என்று கூறினார் (அப்போது) அவர் மீது அல்லாஹ் தம் சாந்தியை இறக்கி வைத்தான். மேலும் நீங்கள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். (ஏனெனில்) அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும். அல்லாஹ் யாவற்றையும் மிகைப்போனும், ஞானமிக்கோனுமாவான். (9:40)
நபி(ஸல்) அவர்கள் இத்தகைய பேராபத்தான நிலையிலும் தமது நிலை தடுமாறி விடாது, வல்ல அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர்களாக, அவன் ஒருவனே அன்றி தமக்கு பாதுகாவலர் வேறு யாருமில்லை எனும் நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தவர்களாக, அருமை நண்பர் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களுக்கு பயப்படாதீர்! அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல நாயன் நலமுடன் இருக்கும் பொழுது நாம் கவலைப்படுவானேன்? என்று அல்லாஹ்வைக் கூறி ஆறுதல் செய்ததை அனைவரும் உணர்ந்து படிப்பினை பெறுவோமாக.
ஆனால் இன்றைக்கு மக்கள் தமக்கேற்படும் துன்பம் துயரங்களை அகற்ற, வல்லமைமிக்க அல்லாஹ்வின் அபார சக்திகளை மறந்துவிட்டு, அவனது படைப்பினங்களிடம் பாதுகாப்புத் தேடியலையும் பரிதாப நிலையைப் பார்க்கிறோம். அவ்வாறு செய்வது பெருங்குற்றமான இணை வைத்தலில் சேர்க்கும் என்பதையும், இணைவைத்தல் ஒரு போதும் மன்னிக்கபடுவதில்லை என்பதையும் அவர்கள் உணர்வதில்லை.
இதோ வல்ல அல்லாஹ் தனது சிறிதும் ஐயமில்லாத சிறப்புமிகு வேதத்தில் அறிவிக்கின்றான்.
“இணை வைத்தல் மன்னிப்பில்லாக் குற்றம்”
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை அறவே மன்னிக்க மாட்டான்; அதல்லாதவற்றை தான் நாடியோருக்கு மன்னிப்பான், யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்கள். (4 : 48)
உதவியும், பாதுகாப்பும் :-
நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சி வானங்களிலும், பூமியிலும் உள்ளது. அவனைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ துணை செய்பவனோ வேறு எவருமில்லை. இதை நீங்கள் அறியவில்லையா? (2 : 107)
எனினும், நீங்கள் அவனையே அழைப்பீர்கள், அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ, அத்துன்பத்தை தான் நாடினால் நீக்கி விடுவான். ( 6 : 41)
(நபியே!) நீர் கூறும் அல்லாஹ்வையன்றி நீங்கள் (பாதுகாவலர் என) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களை உங்கள் கஷ்டங்களை நீக்க அழைத்துப் பாருங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவர்கள் உங்களது யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ, அல்லது திருப்பி விடவோ சக்தி அற்றவர்கள் (என்பதை உணர்வீர்கள்) (17 : 56)
நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் 1408 ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட நமது சமுதாயத்தில் உண்மையான இஸ்லாமியத் தன்மை உருவாக்கியுள்ளதா? அதன் தூய வாழ்வு துவங்கியிருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்து இப்புத்தாண்டில் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக! ஆமீன்.
இப்னு ஷேக்
Post image for BLACK HOLE – கருந்துளை மர்மங்கள்
அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…
அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.
மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நாள் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான்.


நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தானது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.அல்குர்ஆன் 56:75, 76
(ஒளி இழந்து) விழுந்து மறையும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!” அல்குர்ஆன் 53:1
“”நிச்சயமாக நாம் தாழ்வாக உள்ள வானத்தைச் சுடரிடும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்துள்ளோம்” என்று 37:6ல் அல்லாஹ் கூறுகிறான்.
 இரவில் வானத்தைப் பார்த்தால் கோடானு கோடி நட்சத்திரங்கள் நம்மை பார்த்து கண்சிமிட்டுகின்றன. இதற்குக் காரணம் நட்சத்திரங்களில் ஏற்படும் அணுப் பிளவின் காரணமாக வெப்பமும் ஒளியும் உண் டாகிறது. நமது சூரியனும் ஒரு சிறிய நட்சத்திரமாகும். நமது சூரியனை விட கோடானு கோடி மடங்கு மிகப் பிரமாண்டமான நட்சத் திரங்கள் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி அதிகரிக்கும்; அத்துடன் அதன் உள் ஈர்ப்பு விசை ஆற்றல் பன்மடங்காக பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அழிந்து மறையும் நட்சத்திரம் கருந்துளையாக மாறுகிறது.
கருந்துளை எனும் மர்மக் குகை:

20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகள் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருந்துளைகள், மிகப் பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்கு கன அளவோ மேற் பரப்போ கிடையாது. கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது.
கருந்துளையின் எல்லைக்குச் செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. இவற்றின் ஈர்ப்பு ஆற்றலைக் கணக்கிட ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
பொதுவாக நமது பூமிக்கும் புவியீர்ப்பு ஆற்றல் உள்ளது. எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். இந்த புவியீர்ப்பு விசையை மீறிச் செல்ல வேண்டுமாயின் ஒரு வினாடிக்கு 11 கிலோ மீட்டர் வேகம் வேண்டும். (மணிக்கு 40,000வது-24000 மைல்) பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் செயற்கை கோள் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11வது வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகம்தான். ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் (3,00000km) செல்கிறது. நமது கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் 1,86000 மைல்/ வினாடியில் உள்ளது. எனவே கருந்துளைக்குள் செல்லும் ஒளி மீண்டு வருவதில்லை. கருந்துளை எனும் குகைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் புரியாத புதிர். நட்சத்திரங்கள் மறைந்து அழிந்து தோன்றும் கருந்துளையின் மீது அல்லாஹ் மகத்தான சத்தியம் செய்வதிலிருந்து இதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம்.
கடந்த 2008 மார்ச் 18ல், நமது பிரபஞ்சத்திலேயே மிகப் பிரமாண்டமான “”கலாக்ஸி கிளாசிக்” (Galaxy Classic)) எனும் கருந்துளையை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.
இந்த கருந்துளையின் பரிமாணம் மிகப் பிரமாண்டமானது. நமது சூரியன் விட்டம் 1,39,0000 வது. இதைவிட 1800 கோடி மடங்கு மிகப் பெரியது. நமது பூமியில் இருந்து 3.5 பில்லியன் அதாவது 350 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் தூரம் செல்லும் இந்த வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அதுவே ஒரு ஒளி ஆண்டு தூரம். சொற்ப அறிவு கொடுக்கப்பட்ட நமக்கு இதன் பிரமாண்டம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று.
கருந்துளைகளை நம் கண்களால் காண முடியாது என்றாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon)அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.
வானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் ஏராளமான கருந்துளை உள்ளன. மற்ற நட்சத்திரங்கள், அல்லாஹ் கூறும் (கியாமத் நாள்) இறுதி நாளில் ஒளி இழந்து உதிரும். நமது சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே. அல்லாஹ் அறிந்தவன்!
“நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது, மேலும் வானம் பிளக்கப்படும் போது, அன்றியும் மலைகள் (தூசுகளைப் போல்) பறக்கப்படும்போது” 77:8,9
(அந்நாளில்) சந்திரன் ஒளி மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும். அல்குர்ஆன் 75:4,9

S.ஹலரத் அலி, ஜித்தா
Post image for குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்
குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.
ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.
ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம்.
இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.

நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.
இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.
மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.
இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.
எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
(ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் ‘நீ ஒன்றுமே செய்யவில்லை’ எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து ‘நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்’ என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.
மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! ‘அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரலி), நூல்: அஹ்மத்
அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)
அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.
மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)
குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.
அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.
ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.
தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.
மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி), நூல்கள்: அஹ்மத், புகாரி
பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.
இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.
தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம்.
இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.
நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)
ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்.

இஸ்லாமிய‌தாவா.காம